Thursday, March 31, 2016

வைகோ அவர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை!

திராவிடப் புரட்சி
via Facebook
2016-Mar-27

வைகோ அவர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை!

திராவிட இயக்கத்தை அழிக்க விட மாட்டேன் என சூளுரைத்தவர் இப்போது அதை நிறைவேற்றிக் காட்டியிருக்கிறார்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரை தனது இயக்கத்திற்கு வைத்தவர், இன்று பெயருக்கு ஏற்றவாறு திராவிட முன்னேற்றக் கழகத்தின் மறுமலர்ச்சிக்கு உறுதுணையாக செயலாற்றியிருக்கிறார்!

திராவிடர் இயக்கம் ஒரு நூற்றாண்டை கடந்து அடுத்த நூற்றாண்டில் காலடி எடுத்து வைக்கும் நேரத்தில், திராவிட இயக்கத்தை ஒழித்தே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு சிலர் களமிறங்கிய சூழலில், திராவிட இயக்கத்தை காக்கும் பெரும் பணியில் வைகோ வெற்றி பெற்றிருக்கிறார்!
விடுதலைப் புலிகள் அமைப்பில் தற்கொலைப் படை என்றொன்றிருந்தது அதை கரும்புலிகள் என்றழைப்பார்கள். அதையொத்த அரசியல் தற்கொலைப் படையாக, படையின் தன்னிகரற்ற தலைவராக வைகோ அவர்கள் ஆற்றியிருக்கிற பணியினை, தியாகத்தை வரலாறு போற்றும்!

ஆம் தோழர்களே! வைகோ அவர்கள் ஒருங்கிணைப்பில் உருவாகியிருக்கும் தேர்தல் அரசியல் கூட்டணி என்பது சாதாரணமான ஒன்றல்ல. அதை திராவிட இயக்கத்தை காக்கும் கூட்டணி என்றழைத்தால் மிகையாகாது!
சமீப கால அரசியல் நகர்வுகளை கூட்டிக் கழித்துப் பார்த்தால் வைகோ அவர்களின் சாமர்த்தியமான அரசியல் புரியவரும்!

அறிஞர் அண்ணா, கலைஞர் வரிசையில் திராவிட இயக்கத்தின் இராஜதந்திரியாக தற்போது தோற்றமளிக்கிறார் வைகோ அவர்கள்!
இதை படிக்கும்போது அப்படி என்ன செய்துவிட்டார் வைகோ? என்ற கேள்வி அவரது ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் மனதில் நிச்சயமாக எழும். அதற்கான விடைதான் அடுத்து வருவது.

வைகோ அவர்கள் ஒரே கல்லில் பல மாங்காய்களை வீழ்த்தியிருக்கிறார். முக்கிய மூன்று பின்வருமாறு.

தமிழக அரசியலில் ஓரளவிற்கு வாக்கு வங்கியை கொண்டிருந்த கட்சிகளோடு கூட்டணி அமைத்து அதன் மூலமாக தங்களை வலுவானவர்களாக காட்டிக்கொண்டு இருந்த ஹிந்துத்துவா அமைப்பான பிஜேபி கட்சி, பல தொலைக்காட்சி விவாதங்களில் தங்கள் பெயரில் ஒருவரையும், பினாமி பெயரில் ஒருவரையும் அனுப்பி தங்களது இருப்பை போலியாக காட்டிக்கொண்டிருந்தது. தமிழகத்தில் இரண்டு சதவீத வாக்குகள் கூட இல்லாத பிஜேபி, மேலும் தங்களது ஆட்டத்தை ஆடாமல் தடுக்கும் வண்ணம் செயலாற்றியுள்ளார் வைகோ அவர்கள்.

திமுக, பிஜேபி ஆகிய இரு கட்சிகளோடு கூட்டணி அமைக்க வாய்ப்புகளை பெற்றிருந்த விஜயகாந்த் திமுகவோடு கூட்டனி அமைக்க சாத்தியமில்லை என்ற நிலையில், அவரை பிஜேபி இழுக்க வாய்ப்பளிக்காமல் சாதுரியமாக மநகூவோடு கூட்டணி அமைக்க வைத்து. பிஜேபியை தனிமைப்படுத்தியிருக்கிறார் வைகோ அவர்கள். பிஜேபியோடு கூட்டனி அமைத்தால் சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர்களின் வாக்குகள் கிடைக்காது என்ற அச்சத்தினால் அதிமுகவே பிஜேபியோடு கூட்டனி அமைக்க தயங்கும் நிலையில், சேர வாய்பிருந்த விஜயகாந்தை பிரித்து, பிஜேபியை அநாதையாக்கியிருக்கிறார் தமிழக தேர்தல் அரசியல் களத்தில்.

அடுத்து, ஏற்கனவே அதிமுகவோடு கூட்டணி அமைத்திருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் மீண்டும் அதிமுகவோடு சேரும் வாய்ப்பை தடுத்திருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல், பாமக அதிமுகவோடு கூட்டணி அமைக்காமல் இருக்கும் நிலையில், விசிக்கள் அதிமுகவோடு கூட்டணி அமைக்க இருந்த வாய்ப்பை தடுத்திருக்கிறார். இதன் மூலம் அதிமுகவின் பலம் குறைக்கப்பட்டிருக்கிறது.

மூன்றாவது, ஈழ பிரச்சனையை மட்டும் முன்னிறுத்தி அரசியல் அடையாளத்தை பெற்ற சிலரை ஒன்றிணைத்து, தமிழ் தேசிய அரசியல் கூட்டனி என்ற பெயரில், சில பல சில்லறை கட்சிகளை ஒன்றினைத்து கூட்டணியை உருவாக்க வாய்பிருந்த நிலையை முற்றிலுமாக தவிர்த்து சில சில்லறைகளை தனித்து தேர்தலில் போட்டியிடும் சூழலை ஏற்படுத்தியிருக்கிறார்.

இவைகள் அனைத்திற்கும் முத்தாய்பாக, மநகூ விஜயகாந்தோடு கூட்டனி வைத்த போது, விஜயகாந்தை முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்ததன் மூலமாக, தான் இருக்கும் மூன்றாவது அணியை முற்றிலுமாக நிர்மூலமாக்கியிருக்கிறார். இது ஒரு அரசியல் தற்கொலை என்பதை தெரியாதவர் அல்ல வைகோ அவர்கள். இருப்பினும், திராவிட இயக்கத்தை காப்பதற்காக வைகோ அவர்கள் தியாக உணர்வோடு எடுத்த முடிவாகவே இதை காண முடிகிறது.

எனவே, திராவிட இயக்கம் அடுத்த நூற்றாண்டில் வெற்றிகரமாக நகர மிக முக்கிய பங்காற்றியுள்ளார் வைகோ அவர்கள்!

வைகோ அவர்களுக்கு உளமார்ந்த பாராட்டுகள்! வரலாறு உங்களை வாழ்த்தும்!

No comments:

Post a Comment