Thursday, March 31, 2016

திமுக என்றால் என்ன ?? கலைஞர் கருணாநிதி என்பவர் எப்படி பட்ட தலைவர்

திமுக என்றால் என்ன ?? கலைஞர் கருணாநிதி என்பவர் எப்படி பட்ட உன்னதமான தலைவர் என்பதை மாற்று கட்சிகளில் உள்ள இன்றைய இளைய தலைமுறை தெரிந்து கொள்ள இந்த செய்தியை முழுமையாக படிக்க வேண்டும் .
மன்னிக்கனும் கொஞ்சம் நீளமானதுதான் .

‪#‎கலைஞா்‬
அவருடைய அரசியல் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய துரதிர்ஷ்டம் இருக் கிறது. அவருடைய காலத்தில் அவருக்கு சமமாக அரசியல் செய்யக்கூடியவர்கள் யாரும் இல்லை என்பதுதான் அது.
மனுஷ்யபுத்திரன்



""தமிழ் நாட்டில் எந்தப் பிரச்சினை நடந்தாலும் அதை தன்னைச் சுற்றி நடக்கும் பிரச்சினையாக மாற்றி விடுகிறாரே கலைஞர்?''’என்று ஒரு முறை ஒரு பத்திரி கையாளர் என்னிடம் ஆச்சரியத்துடன் குறிப்பிட்டார். எனக்கு அதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை. தமிழகத்தின் எந்த அரசியல் நிகழ்வும் இந்த மனிதரைத் தாண்டிச் செல்ல முடியாது என்பதற்கு கடந்த காலத்தில் எண்ணற்ற உதாரணங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு அரசியல் பிரச்சினையிலும் கலைஞர் என்ன நிலைப்பாடு எடுக்கிறார் என்பதுதான் அந்த பிரச்சினையின் திசையையே தீர்மானிப்பதாக இருந்து வந்திருக்கிறது. அவர் அதிகாரத்தில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி அவர்தான் தமிழக அரசியலின் மைய நீரோட்டமாக இருந்திருக்கிறார். இந்திய அரசியலிலேயே இப்படி ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த அரசியல் நீரோட்டத்தையும் தன் கையில் வைத்துக் கொண்டிருக்கக்கூடிய இன்னொரு தலைவரை பார்க்க முடியாது. இந்திய அரசியலில் கோலோச்சிய பல தலைவர்களுக்கு அரசியல் செய்வதற்கு ஒரு காலம் இருக்கிறது. அந்தக் காலம் முடிந்ததும் அரசியலில் அவர்கள் இடம் காணாமல் போய்விடும். வி.பி.சிங்., மொரார்ஜி தேசாய் போன்ற தேசிய தலைவர்கள் அவர்கள் வாழ்நாளிலேயே அரசியலிலிருந்து மறைந்து போனார்கள். பத்தாண்டுகளுக்கு முன்பு இந்திய அரசியலின் மிகப்பெரிய சக்திகளாக விளங்கிய வாஜ்பேயி, எல்.கே.அத்வானி போன்றவர்கள் இன்று அரசியலிலிருந்து மங்கி விட்டாா்கள்.

கிட்டத்தட்ட எழுபதாண்டு பொது வாழ்க்கையில் நாற்பது வருடங்கள் தமிழக அரசியலில் ஒருபோதும் ஒளி இழக்காத நட்சத்திரமாக கலைஞர் இருக்கிறார். ஒரு மனிதருக்கு இது எங்கிருந்து சாத்தியப்படுகிறது? கலைஞர் அதிகாரத்திற்கு மட்டும் அரசியலில் இருந்திருந்தால் அதிகாரத்தை இழக்கும் போதும் அவர் தளர்ச்சியடைந்திருப்பார், ஆனால் கலைஞரின் அரசியல் என்பது இலட்சியவாதத்தின்பாற்பட்டது. அவர் ஒரு கட்சி நிர்வாகியோ மேடைப் பேச்சாளரோ அல்ல. சமூகத்தின் ஒவ்வொரு பிரச்சினைகளைப் பற்றியும் அவருக்குத் திட்ட வட்டமான கருத்துக்கள் இருந்து வந் திருக்கின்றன. அந்தக் கருத்துக்களுக் காகவும் கொள்கைகளுக்காகவும் அவர் இடையறாது போராடி வந்திருக்கிறார். அந்தக் கொள்கையும் போராட்டமும்தான் அவரை என்றும் ஒரு உயிர்ப்புள்ள வலிமையுள்ள சக்தியாக வைத்திருக் கிறது. அவரது அபிப்ராயங்களையும் எதிர்வினைகளையும் அடிப்படையாகக் கொண்டே தமிழகத்தில் ஒவ்வொருவரும் அரசியல் செய்தாக வேண்டும் என்கிற நிலையை கலைஞர் உருவாக்கினார்.

இந்த கருத்தியல் போராட்டம்தான் அவரை எமெர்ஜன்சியை எதிர்த்து அதி காரத்தை இழக்க வைத்தது. மத்தியிலும் மாநிலத்திலும் தி.மு.க. அதிகாரத்தில் இருந்தபோதுகூட தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகள் தலைவர் தமிழ்ச்செல்வனின் மரணத்திற் காக கண்ணீர் கவிதை எழுத வைத்தது. ராமர் பாலம் தொடர்பான விவகாரத்தில் பொதுஜன உணர்வுகளைப் பொருட்படுத்தாமல் பகுத்தறிவு சார்ந்த கருத்துக்களை துணிச்சலாக கூறவைத்தது. இவ்வளவு ஏன் இன்று இந்தியாவிலேயே மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று குரல்கொடுத்து வரும் ஒரே பெரிய அரசியல் தலைவர் ‪#‎கலைஞர்‬ மட்டுமே.

ஆனால் கலைஞருடைய அரசியல் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய துரதிர்ஷ்டம் இருக்கிறது. அவருயை காலத்தில் அவருக்கு சமமாக அரசியல் செய்யக்கூடியவர்கள் யாரும் இல்லை என்பதுதான் அது. அனுபவத்தாலும் சிந்தனைத் திறனாலும் செயல்திறனாலும் மொழி ஆற்றலினாலும் அவரது தகுதிக்கு இணையில்லாத பலரோடும் அவர் வழக்காட நேர்ந்ததுதான் தமிழக அரசியலில் அவர் அடைந்த மிகப்பெரிய துயரம். ஆனால் அந்தத் துயரத்தையும் கலைஞர் மிகவும் வெற்றிகரமாக கடந்து சென்றார். வெவ்வேறு காலகட்டத்தில் கலைஞரோடு அரசியல் செய்த பலரும் காலத்தின் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டபோதும் கலைஞர் தமிழக அரசியலின் மைய விசையாக நிலைத்து நின்றார்.

ஐந்து முறை தமிழக முதல்வர், 11 முறை தொடர்ச்சியாக சட்டமன்ற உறுப்பினர், 44 ஆண்டுகள் ஒரு கட்சியின் தனிப்பெரும் தலைவர் என்ற சாதனையை தக்க வைத்துக்கொள்வது அவ்வளவு எளிதல்ல. தி.மு.க. தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்ட காலங்களில்கூட யாராலும் வெல்ல முடியாத மனிதராக கலைஞர் இருந்து வந்திருக்கிறார்.

அவரது 70 ஆண்டுகால அரசியல் வரலாறு என்பது அவருடைய வரலாறு மட்டுமல்ல, தி.மு.க.வின் வரலாறு மட்டுமல்ல, தமிழக அரசியல் வரலாறும் அதுதான். அவர் தன் வாழ்வில் அடைந்த அத்தனை சிகரங்களையும் கடும் போராட்டத்தினாலும் உழைப்பினாலும் அடைந்தார். சினிமாவின் வெளிச்சமோ சாதி அரசியலின் குறுக்குவழிகளோ கலைஞரின் அரசியல் வாழ்க்கையைத் தீர்மானிக்கவில்லை. மாறாக, தனது கொள்கை சார்ந்த அரசியலை மக்களிடம் கொண்டு சென்றார். கடும் அர்ப்பணிப்பினாலும் இடையறாத பணியினாலும் கட்சிக்குள் தனது இடத்தை உருவாக்கினார். இந்த அரசியலில் நிலைத்து நிற்பதற்காக அவரும் தி.மு.க.வும் எதிர்கொண்ட போராட்டங்கள் சாதாரணமானவை அல்ல. எத்தனையோ ஒடுக்கு முறைகளுக்கும் வீழ்ச்சிகளுக்குப் பிறகும் அந்த இயக்கம் உருக்குக் கோட்டையைப் போல நின்றது.

இவ்வளவு சோதனைகளையும் சவால்களையும் சந்தித்த வேறெந்த இயக்கமும் கலகலத்துப் போயிருக்கும். அதன் தொண்டர்கள் தங்கள் பற்றுறுதியை இழந்திருப்பார்கள். ஆனால் கலைஞர் புயல் நடுவினிலே ஒரு தோணியைப் போல தி.மு.க.வை ஒரு மனத்திண்மை படைத்த மாலுமியாக கொண்டு செலுத்தி யிருக்கிறார். தனது உற்சாகத்தின் ரத்தநாளங்களை அடிமட்டத் தொண்டனின் இதயத்தின் அடிஆழம் வரை அவர் எப்போதும் இணைத்து வைத்திருந்தார். அந்த உற்சாகத்தின் வலிமைதான் ஒவ்வொரு முறையும் ஃபீனிக்ஸ் பறவையைப் போல தி.மு.க.வை உயிர்த்தெழ வைத்திருந்திருக்கிறது.

இந்திய தேசிய அரசியலில் ஒரு பிராந்திய கட்சி ஆட்சியதிகாரத்தை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்க முடியும் என்பதை முதலில் நிரூபித்துக் காட்டியவர் கலைஞர்தான். கடந்த 15 ஆண்டு களுக்கும் மேலாக மத்தியில் யார் ஆட்சியில் இருக்கிறார்கள் என்பதை தி.மு.க.தான் தீர்மானித்து வந்திருக்கிறது. இந்தியாவில் எந்த ஒரு மாநில கட்சியும் இவ்வளவு நீண்டகாலம் இத்தகைய ஒரு பாத்திரத்தை வகித்ததில்லை. மத்தியில் ஒற்றைக் கட்சியதிகாரத்தை தகர்த்து எறிந்து மாநிலக் கட்சிகளின் கூட்டு அதிகாரத்தை சாதித்துக் காட்டியவர் கலைஞரே. அவர் விரும்பியிருந் தால் எப்போதோ மாநில அரசியலை விட்டு தேசிய அரசியலை நோக்கி தன்னை முன்னிறுத்திக் கொண்டிருக்க முடியும். ஆனால் அவரது இதயம் எப்போதும் தமிழோடும் தமிழகத்தோடும் மட்டுமே பிணைக்கப்பட்டி ருந்தது. கலைஞர் நேரடியாக தேசிய அரசியலில் தன்னை முன்னிறுத்திக் கொள்ளா விட்டால்கூட இன்று தி.மு.க. தேசிய அரசியலின் மிகப்பெரிய சக்தி என்பதை யாரும் புறக்கணிக்க முடியாது.

கலைஞர் விமர்சனங்களைக் கண்டு ஒருபோதும் அஞ்சியவரல்ல. அவற்றை மிகுந்த மனத்தெளிவுடன் அவர் எதிர்கொண்டிருக்கிறார். அரசியல்ரீதியாக மட்டுமல்ல, அவருடைய தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை, அவரது உடல்நலம் என அனைத்தும் மிக அநாகரிகமான குரூரமான முறையில் விமர்சிக்கப்பட்டிருக்கின்றன. இந்த விமர்சனங்கள் எழுதுகிற யாரும் கலைஞ ரிடம் எடுத்துக்கொண்ட இந்த சுதந்திரத்தை வேறு எந்தத் தலைவரிடமும் எடுத்துக்கொண்டதில்லை. ஏனென்றால் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். தன்மீதான விமர்சனங் களுக்காக கலைஞர் பொய் வழக்கு போடமாட்டார், தினம் ஒரு மானநஷ்ட வழக்கு போட மாட்டார், பத்திரிகை அலுவலகத்தின் மின்சாரத்தை துண்டிக்க மாட்டார், பத்திரிகையாளர்களை போலீஸைவிட்டு ஓட ஓட துரத்த மாட்டார், பத்திரிகை அலுவலகங்களை ரவுடிகளை அனுப்பி சூறையாட மாட்டார் என்று அவர்களுக்குத் தெரியும்.

மாறாக, தன்மீது செய்யப்பட்ட அவதூறுகள், அவமதிப்புகள் அத்தனைக்கும் அவர் பொறுமையாக முரசொலியில் பதில் எழுதுவார். தனது நியாயங்களை மக்கள் முன்னால் எடுத்து வைப்பார். அவர் அதி காரத்திலிருந்தபோதும், அதிகாரத்தில் இல்லாதபோதும் இதைத்தான் செய்து வந்திருக்கிறார். தன்மீதான தனிப்பட்ட விமர்சனங்களுக்காக ஒருவர் மீது வன்முறையை ஏவினார் என்று கலைஞரின் வரலாற்றில் எந்த ஒரு சம்பவமும் இல்லை.

கூட்டணி கட்சிகளோடு அவர் மிக இணக்கமான உறவுகளைப் பாராட்டி வந்திருக்கிறார். அவர்கள் முரண்பட்டு நின்ற காலத்தில்கூட அவர்களை அவர் அவமதித்ததில்லை. அதே சமயம் அவரது நிலைப்பாடுகள் எப்போதும் உறுதியானதாக இருந்திருக்கின்றன. இந்திரா காந்தி ஒருமுறை குறிப்பிட்டதுபோல ‘கலைஞர் ஆதரிப்பது என்றால் உறுதியாக ஆதரிப்பார், எதிர்ப்பது என்றால் உறுதி யாக எதிர்ப்பார்‘ இந்த நம்பகத்தன்மைதான் தி.மு.க.வை தேசிய அரசியலில் இவ்வளவு காலம் நிலைத்து நிற்க வைத்தது.

கலைஞர் ஒவ்வொரு நாளும் தனது கட்சிக் காரர்களோடும் மக்களோடும் உரையாடிக்கொண்டே இருந்திருக்கிறார். கட்சியினுடைய பிரச்சினைகள், பொது மக்களுடைய பிரச்சினைகள், தேசிய பிரச்சினைகள், சர்வதேசப் பிரச்சினைகள் என்று அவர் எழுதாத, பேசாத விஷயங்களே இல்லை. இந்திய வரலாற்றில் காந்திக்குப் பிறகு மக்களிடம் அதிகமாக பேசிய, எழுதிய அரசியல் தலைவர் கலைஞர் மட்டுமே. இன்று இந்தியாவில் அரசியல் செய்யும் பல தலைவர்கள், பல முக்கியமான பிரச் சினைகளில் என்ன நிலைப்பாடு எடுத்தார்கள் என்பதற்கு எந்தப் பதிவும் இல்லை. பல பிரச்சினைகளில் யாருக்கும் எந்தக் கருத்தும் இல்லையென்பதுதான் உண்மை. ஆனால் கலைஞர் ஒவ்வொரு பிரச்சினையிலும் என்ன நிலைப்பாடு எடுத்தார் என்பதற்கு தெளிவான ஆதாரங்கள் இருக்கின்றன. மிகத் துல்லியமாக அவர் அதைப் பதிவு செய்திருக்கிறார்.

நிலைப்பாடும் கோட்பாடும் உள்ள ஒரு மனிதரைத்தானே மற்றவர்களால் விமர்சிக்க முடியும். இது எதுவுமே இல்லாதவர்கள் கலைஞரைப்போல விமர்சிக்கப் படாததில் ஆச்சரியம் எதுவும் இல்லை

கலைஞரின் பேச்சுவன்மையும் மொழித் திறனும் தி.மு.க.வை மிக சவாலான காலங் களிலெல்லாம் தூக்கி நிறுத்தியிருக்கிறது. அவரது மொழிப் பிரவாகம் மிகவும் அபாரமானது. எந்தக் குழப்பமும் தடுமாற்றமும் இல்லாத மொழி ஆளுமையை அவர் மிக இளம் வயதிலிருந்தே கொண்டு வந்திருந்தார். இன்றளவும் அவர் எழுதிய திரைப்பட வசனங்கள் தமிழ்த் திரையுலக வரலாற்றில் ஒரு தனித்த இடத்தை வகிக்கின்றன. ஒருமுறை நான் திருக்குறளுக்கு எழுதப்பட்ட பல்வேறு உரைகளை ஒப்பிட்டுப் பார்த்து ஒரு சிறிய ஆய்வில் ஈடுபட்டிருந்தேன். அப்போது தான் எனக்கு ஒரு ஆச்சரியமான மிகப் பெரிய உண்மை தெரிந்தது. திருக்குறளுக்கு இதுவரை எழுதப்பட்ட உரைகளிலேயே கலைஞரின் உரை நவீனத்துவமானது, மூலத்திற்கு மிக நெருக்கமானது, சொந்த கைச்சரக்கு எதையும் சேர்க்காமல் முழுக்க முழுக்க ஆய்வுரீதியாக எழுதப்பட்ட உரை அது. கலைஞரை அரசியல் ஆக்கிரமிக் காமல் இருந்திருந்தால் தமிழின் பல்வேறு மகத்தான இலக்கியங்களுக்கும் காப்பியங்களுக்கும் அவர் இதுபோன்ற நவீனத்துவமான உரைகளை எழுதியிருக்கக் கூடும்.

தி.மு.க. அதிகாரத்திலிருந்த காலங்களில் அரசுத் துறைகள் பெருமளவு சுதந்திரமாக செயல்பட்டன. அரசியல் தலையீடுகள் மிகக் குறைவான, அதிகாரிகள் பயமின்றி பணியாற்றிய காலங்கள் அவை. அரசின் முடிவுகளில் தவறுகள் இருந்தால் அதை கலைஞரிடமே நேரடியாக சுட்டிக்காட்டி மாற்றுவதற்கான சுதந்திரம் தங்களுக்கு இருந்தது என்பதை பல உயரதிகாரிகள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அமைச்சர்களுக்கும் இந்த சுயேச்சையான அதிகாரம் இருந்தது. கலைஞர் அவருடைய வெவ்வேறு ஆட்சி காலங்களில் நிறைவேற்றிய முக்கியமான மக்கள்நலத் திட்டங்களைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அந்தப் பட்டியல் மிக நீண்டது. ஆனால் கடந்த தி.மு.க. ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட இரண்டு திட்டங்கள் அடித்தட்டு மக்களுடைய வாழ்வின் மிக முக்கியமான செயல்பாடாகும். முதலாவதாக, இலவச வண்ணத் தொலைக்காட்சித் திட்டம். தமிழகத்தின் மூலைமுடுக்கிலிருந்த மக்கள் அனைவரையும் வெளிஉலகோடு இணைத்த மிகப்பெரிய ஊடகப் புரட்சித் திட்டம் இது. அடுத்ததாக, அவசர மருத்துவ வசதிக்கான இலவச ஆம்புலன்ஸ் திட்டம். அடித்தட்டு மக்களின் உயிர் காக்கும் திட்டமாகவே இது இருந்தது. கலைஞரின் அரசியல் வாழ்க் கையில் மிக முக்கியமான ஒரு பங்களிப்பு, மிகபிற்படுத்தப்பட்டவர்களுக்கு அவா் கொண்டுவந்த 20 சதவிகித இடஒதுக்கீடு. ‪#‎சமூகநீதிக்காகவும்‬ அடித்தட்டு மக்களின் நலன்களுக்காகவும் கலைஞர் தன் ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற பல உயரிய திட்டங்களைச் செயல்படுத்தி யிருக்கிறார்.

இந்த 92-வது வயதில் உலகத் தமிழர்களின் தமிழ் அடையாளத்தின் மிகப்பெரிய ஆலமரமாக கலைஞர் கிளை பரப்பி நிற்கிறார். இந்த விருட்சத்தின் நிழலில்தான் தமிழர்களின் நிகழ்கால அரசியல் சரித்திரத்தின் ஒவ்வொரு இயக்கமும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment