Thursday, March 31, 2016

திராவிடத்தால் மிகப்பெரிய வீழ்ச்சி நிகழ்ந்திருக்கிறது

கடந்த ஐம்பது ஆண்டுகளில் "திராவிடத்தால் மிகப்பெரிய வீழ்ச்சி நிகழ்ந்திருக்கிறது" என்று பல்வேறு அரசியல் கட்சிகள் ஒரு குற்றச்சாட்டை வைக்கிறார்களே இது உண்மையா???

மேம்போக்காகப் பார்த்தால் இந்தக் குற்றச்சாட்டு அப்படியே உண்மையைப் போலத் தோற்றமளிக்கும், ஊடகங்களில் தோன்றும் நிலைய வித்துவான்களாகிய நடுநிலை அம்பிகளில் துவங்கி நாம் தமிழர் கட்சியின் சீமான், புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் தலைமையிலான மக்கள் நலக் கூட்டணி, பாரதீய ஜனதா, பாட்டாளி மக்கள் கட்சி வரை இன்று வெகு இயல்பாகப் பயன்படுத்துகிற ஒரு சொல்லாடல்,

"கடந்த ஐம்பது ஆண்டுகளில் திராவிடம் தமிழக மக்களைச் சுரண்டிக் கொள்ளையடித்து விட்டது".

உண்மையில் மேற்சொன்ன அரசியல் இயக்கங்கள் எல்லாம் தமிழக அரசியலில் வேரூன்றக் காரணமாக இருந்ததே திராவிடம் என்கிற கோட்பாடுதான். ஒருவகையில் இன்றைய திராவிடக் கோட்பாட்டுக்கு எதிரான அரசியல் செய்யும் இந்த அரசியல் கட்சிகளை திராவிடச் சிந்தனைகளை கூறேற்றும் ஒரு இயற்கையான அரசியல் இயங்கியலாகத் தான் பார்க்க முடியும். திராவிடம் ஒரு சமூக இயக்கமாக, இயங்கியலாக தமிழ்ச் சமூகத்தில் ஊடுருவித் தாக்கங்களை உருவாக்கிய அரசியல் பயணம்.

திராவிடம் முதலில் சமூக நீதியை வென்று காட்டியது, பிறகு கல்வியையும், வளர்ச்சியையும் வளர்த்து எடுத்தது, பின்பு பொருளாதாரச் சிந்தனைகளை, பண்பாட்டுக் களத்தில் மாற்றங்களை உருவாக்க முனைந்து அதில் ஒரளவுக்கு வெற்றியும் பெற்றது, சமூகவியல் மற்றும் பொருளியலில் இருக்கிற முரண்களைக் கொண்டே இங்கே ஏனைய அரசியல் இயக்கங்கள் உருவாகின, புதிதாக இந்த நூற்றாண்டில் உருவாகிய எந்த ஒரு தமிழக அரசியல் இயக்கமும் பெரியாரின் கருத்தியலை அல்லது திராவிடத்தின் கருத்தியலை ஒரு புள்ளியில் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டிய சூழலும், தாக்கமும் இருப்பதை யாரும் மறுதலிக்க இயலாது.

பாட்டாளி மக்கள் கட்சியாகட்டும், விடுதலைச் சிறுத்தைகள் ஆகட்டும், நாம் தமிழர் ஆகட்டும், வியப்புரிய கோட்பாட்டு முரணாக ஒரு புள்ளியில் தந்தை பெரியாரை எந்த முரண்பாடுகளும் இல்லாமல் அப்படியே ஏற்றுக் கொள்வார்கள். அரசியல் அங்கீகாரம் ஆகட்டும், அதிகாரம் ஆகட்டும், கூட்டணி ஆட்சி என்கிற முழக்கங்கள் ஆகட்டும் எல்லாமே அவர்கள் வேண்டுவதும், கேட்பதும் திராவிடம் என்கிற மூல வேரிடத்தில் இருந்துதான் என்பதை கவனமாகப் பார்க்க வேண்டும்.

திராவிடம் என்பது இவர்கள் கற்பிதம் செய்வதைப் போல வேற்று மொழியினத்தவர் சார்ந்த அல்லது ஒருங்கிணைந்த ஒரு அரசியல் தத்துவம் அல்ல, திராவிடக் கோட்பாடு உருவாக்கப்பட்ட போது இருந்த நிலவியல் மற்றும் அரசியல் சூழல் என்பது ஏனைய தென்னிந்திய மாநிலங்களையும் உள்ளடக்கிய ஒன்றாக இருந்தது, படிப்படியாகப் நீதிக் கட்சியும், பெரியாரின் சுயமரியாதை இயக்கமும் அந்த நிலைப்பாட்டில் இருந்து விலகி முழுக்க முழுக்க தமிழக அரசியல் என்கிற எல்லைக்குள் வீரியம் பெற்றது என்கிற வரலாற்றுப் புரிந்துணர்வு இங்கே திராவிடத்தை எதிர்க்கிற யாருக்கும் இல்லை என்பது உண்மையில் அதிர்ச்சியும், வியப்பும் தருவதாகவே இருக்கிறது.

கர்நாடகத்திலோ, ஆந்திராவிலோ, கேரளாவிலோ திராவிட இயக்கங்களின் தாக்கம் முற்றிலுமாக இல்லை என்பதை இவர்களில் யாரும் புரிந்து கொள்வதில்லை. ஆக, வளர்ச்சி அடைந்த இன்றைய திராவிடம் என்பது தமிழக அரசியல் மற்றும் சமூகவியலில் மாற்றங்களையும், மேம்பாடுகளையும் கொண்டு வருவதற்கான ஒரு கருவியாகவே அடையாளம் காணப்படுகிறது.

தெலுங்கர்களும்,கன்னடர்களும், மலையாளிகளும் ஏதோ தமிழர்களுக்கு அநீதி இழைப்பதைப் போலவும், தெலுங்கு பேசுகிற மக்கள் இங்கே தமிழக அரசியல் களத்தை ஆட்கொண்டு விட்டதாகவும், ஆதித் தமிழ்க் குடிகளின் அரசியல் கனவுகள் மற்றும் அடிப்படை உரிமைகளை அவர்கள் பறித்துக் கொண்டதாகவும் கற்பனை செய்து கொண்டு கூக்குரலிடும் ஒரு அரசியல் என்பது வெகு மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒரு தேவையற்ற குழப்ப அரசியல் என்பதை இந்தத் தேர்தல் இந்தக் கட்சிகள் அனைத்துக்கும் உணர்த்தக் கூடும்.

பெரியாரையும், திராவிட இயக்கச் சிந்தனை மற்றும் அரசியலை வெவ்வேறாகப் பிரித்துப் பார்க்க முடியாது, பெரியாரை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றால் உறுதியாக அவர்கள் திராவிட இயக்கக் கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டவர்களாகவே புரிந்து கொள்ளப்படுவார்கள், ஏனெனில் திராவிடம் என்கிற கோட்பாட்டை தமிழக அரசியலில் ஒரு வெகுமக்கள் இயக்கமாக மாற்றிக் காட்டியதே பெரியாரின் சாதனை, ஆக திராவிடம் என்கிற கோட்பாட்டையும், பெரியாரையும் பிரித்துப் பார்ப்பது முதலில் மிகப்பெரிய முரண்.

திராவிடம் முதலில் பாசிச இந்துத்துவ ஆற்றல்களிடம் இருந்து விடுதலை பெற்றுக் கொடுத்தது, பிறகு மொழி சார்ந்த முன்னேற்றங்களை முன்னெடுக்கத் துவங்கியது, பிறகு சமூக நீதியை அரசியல் மயப்படுத்தியது, பிறகு அந்த அரசியல் மயப்படுத்தலின் மூலம் பல்வேறு வாய்ப்புகளையும், உரிமைகளையும் சட்ட வடிவமாக்கியது, பிறகு மறுக்கப்பட்ட கல்வியையும், வேலைவாய்ப்புகளையும் இயல்பான அடிப்படை சட்ட உரிமையாக்கியது.
பிறகு பொருளாதார மேம்பாடுகளை வழங்கியது, பிறகு உள்கட்டமைப்பு வசதிகளை வழங்கியது, சமூக அரசியல் தளங்களில் எல்லாத் தரப்புக்குமான அங்கீகாரத்தையும், தேடலையும் அதுவே உருவாக்கியது, இறுதியாக இன்று பெரியார் படத்தை வைத்துக் கொண்டு திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று முழக்கமிடும் ஒரு உள்முரண்பாட்டு அரசியல் எழுச்சியையும் அதுவே உருவாக்கி இருக்கிறது. இந்த உள்முரண்பாடு ஒரு மிகப்பெரிய வெற்றி அடைந்த கோட்பாட்டின் பரிணாம வளர்ச்சி என்றே பின்பு வரலாற்றில் குறிக்கப்படும்.

திராவிடம் மூன்று மிக முக்கியக் காரணங்களுக்காக உருவாக்கப்பட்டது, சமூக நீதி, மொழி வளர்ச்சி மற்றும் சமூக மேம்பாடு, இந்த மூன்றும் திராவிட இயக்கங்களால் தமிழக அரசியல் பண்பாட்டுத் தளங்களை வென்று விட்டிருக்கிறது, இலக்குகளை அடைந்து விட்ட எந்த ஒரு கோட்பாட்டுக்கும் நிகழ்கிற ஒரு தொய்வான நெகிழ்வான சூழலே திராவிட இயக்கங்களின் மீது இன்று சுமத்தப்படுகிற குற்றச்சாட்டுக்களின் மூலம்.

திமுகவின் அடிப்படை உறுப்பினராக இருந்த அண்ணன் திருமாவளவனைப் போன்றவர்களும், திமுகவின் சார்பில் நாடாளுமன்றத்துக்குப் போட்டியிட்ட டாக்டர் கிருஷ்ணசாமி போன்றவர்களும் இன்று தனி இயக்கங்கள் கண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் ஆற்றலாக மாறி இருப்பதும் திராவிட இயக்கங்களின், திராவிட இயக்கச் சிந்தனைகளின் நீட்சி என்றே பொருள் கொள்ளப்படும்,

உலகளாவிய ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக் குரலோடு இசைந்து செல்கிற ஒரு பாதையாகவே தலித் அரசியல் இயக்கங்களின் பாதை இன்று முன்னகர்கிறது. திராவிடம் மற்றும் தலித்தியம் என்பது முற்றிலும் மாறுபட்ட வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு இலக்குகளை நோக்கிச் செல்லும் பாதை அல்ல, மாறாக ஒரே இலக்கை நோக்கிச் செல்கிற வெவ்வேறு இணைப் பாதைகள்.

ஆனால், தமிழ் தேசியம் என்கிற பெயரில் திராவிட அரசியல் மற்றும் சிந்தனைகளை எதிர்க்கிற அதிகார வேட்கையும், குழப்பவாத அரசியல் சிந்தனைகளும் கொண்ட சீமானைப் போன்றவர்களை இங்கே களைகளாகவே நாம் பார்க்க வேண்டும், அதிகார போதையில் வாய்க்கு வந்ததைப் பேசிக் கொண்டு, மேடை கிடைத்தால் போதும், "அவனை விரட்டுவேன், இவனை விரட்டுவேன், அம்மாவுக்குப் பிறந்தானா, அப்பாவுக்குப் பிறந்தானா, அவனைப் பிடித்துக் கஞ்சா வழக்குப் போடுவேன், பொம்பளை வழக்குப் போடுவேன்" என்று பினாத்திக் கொண்டு "தமிழ், தமிழ்" என்று ஒருபக்கம் கூவிக் கொண்டே தேர்தல் அறிக்கையைக் கொண்டு போய் சமஸ்க்ருத அரச்சனைத் தட்டில் அடகு வைக்கும் ஒரு அக்மார்க் பாசிச இந்துத்துவ முகமாக மாறி இருக்கும் சீமானைப் போன்ற அரைவேக்காட்டு அரசியல்வாதிகளின் திராவிட எதிர்ப்பை ஒரு பொருட்டாகக் கருதி விவாதிப்பதே திராவிட இயக்கங்களுக்கும், தந்தை பெரியாரின் சமூக நீதிக் கனவுகளுக்கும் செய்கிற துரோகம் என்பதால் அவரையும் அவரது கட்சியையும் நாம் புறக்கணிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

கடும் கோடையைப் போல அச்சுறுத்திய பார்ப்பனீய வெம்மையின் தாக்குதல்களில் இருந்து தமிழ்ச் சமூகத்தைத் தனது படர் நிழலால் அழிந்து விடாமல் காத்து வளர்த்த பெருமரம் போன்ற திராவிடத்தின் நிழலில் வசதியாக அமர்ந்து கொண்டு அந்த மரத்தை வேரோடு வீழ்த்துவது எப்படி என்று ஆளாளுக்குப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இனி இழக்க ஏதுமில்லை என்கிற வெற்றியின் களிப்போடு திராவிடம் அவர்களை வேடிக்கை பார்க்கிறது.

# # # சோதனைப் பயணத்துக்கே இவ்வளவு பேச்சுன்னா, தெரியுதா பவரு.....என் டொங்குகளா....... # # #

No comments:

Post a Comment