Thursday, March 31, 2016

சுதந்திரமாக உணர வைப்பதே தலை சிறந்த கல்வி

Elango Kallanai
via Facebook
2016-Mar-31

என் நண்பன் பிரபுக்கண்ணன் கடந்த பதினைந்து வருடங்களாக கிரீஸ் டென்மார்க் நார்வே என்று ஐரோப்பாவில் மென் பொருள் தயாரிக்கும் யூத நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். அவரிடம் ஐரோப்பியக் கல்வியில் என்ன சிறப்பு? என்று அவ்வப்போது கேட்பேன். அவரது பிள்ளை நார்வேயில் பள்ளியில் படிக்கிறான்.

பிரபுக்கண்ணன் சொல்வது இது தான். ஐரோப்பாவில் கல்விக்கூடங்கள் இந்தியாவில் உள்ள அரசுப் பள்ளிகள் போல சுதந்திரமானவை. அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் தான் பிரபுக்கண்ணனும் படித்தார்.  என்பது அவருடைய கூற்று.


எங்களுடைய தலைமுறையில் கிட்டத்தட்ட தொண்ணூறு சதவீதம் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியே கற்றவர்கள். இதில் முந்தய தலைமுறையை விட சிறப்பாக பல இடங்களில் நல்ல பணிகளில் இருக்கிறார்கள் என்பது தான் வித்தியாசம். தனியார்பள்ளிகளில் படித்து அதிகம் செலவு செய்து கல்வி கற்று என்ன சிறப்பான வெளியீடுகளை கொண்டு வந்துள்ளோம்.
எப்போதெல்லாம் தனியார் பள்ளிகளில் மதிப்பெண் எடுக்க மாணவர்களுக்கு நெருக்கடி ஏற்படுகிறதோ அப்போது தான் நாம் மாற்றுக் கல்வியைப் பற்றி சிந்திக்கிறோம். அதிலும் மாற்று என்று இன்னொரு மூலைக்கு தள்ளுவார்கள். ஜித்து கிருஷ்ணமூர்த்தி பள்ளிகள் போன்றவற்றிற்கு. கல்வி என்பது சில தேர்வுகளை வெல்வது என்று சொல்லி நாம் பல நல்ல மூளைகளை வீணடித்திருக்கிறோம்.

ஐரோப்பாவில் தாய்மொழி வழிக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது என்பது நிதர்சனம். எதில் தரமான  கல்வி? என்பதை இந்தத் திசையில் இருந்து வேண்டுமென்றே சிலர் மாற்ற முயல்கின்றனர். வீட்டில் இருந்து ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் மட்டுமே புத்தகம் படித்த  இரு மாணவர்கள் ஹார்வர்ட் பல்கலைத் தேர்வில் முன்னணியில் வந்திருக்கிறார்கள்.

நாம் இப்போது பெற்றிருக்கும் தனியார் பள்ளிகள் வெற்று டப்பாக்கள். இதுவரை நிரூபிக்கும்படியான எந்த மாற்றத்தையும் அவர்களின் கல்விச் சாதனையாக சொல்ல முடியாது. Home Schooling இப்போது கொஞ்சம் அதிகமாக விவாதிக்கப்படுகிறது.

நான் நீயா நானாவில் பேசிவிட்டு வெளியே வந்த போது ஒரு கேமரா இயக்குனர் என்னிடம் தனியாக பேச விரும்புவதாகச் சொன்னார். அவருடைய மகனை அதிகக் கட்டணம் காரணமாக பள்ளியில் இருந்து நிறுத்திவிட்டாராம். ?என்னங்க இந்தக் காலத்தில்? என்று எல்லோரும் கேட்டார்களாம். வீட்டில் இருந்து பையன் நன்றாக படிக்கிறார் என்கிறார்.

சென்னையில் இது போன்று பள்ளிகளின் நெருக்கடியால் பள்ளிக் கல்வியை துண்டித்துக் கொண்ட 2500 பெற்றோர்கள் ஒன்றாக சந்திக்கிறார்களாம். பிள்ளைகளின் செயல்பாடுகளைப் பற்றி பகிர்கிறார்கள். அவர்கள் ஆரோக்கியமாகவே சிந்திக்கிறார்கள். Institutional credibility தேவைப்படாத காலம் விரைவில் வரும் என்றே நினைக்கிறேன்.

என் மகனை அரசுப் பள்ளியில் சேர்க்க விரும்பிய போது  மனைவி ஒத்துக் கொள்ளவில்லை. அதில் எனக்கு வேறு ஒரு வசதி. மகனை முதலில் ஊரில் வைத்துக் கொண்டுவிட்டோமே, அப்பால பார்க்கலாம்" என்று ஒரு சமாதானம். எல்லாம் கொடுத்து வாங்குவது தானே.

தாய்மொழியில் தராமான சுதந்திரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பது தான் மாற்றுக் கல்வி.  இதில் சிலபஸ் பற்றி சிலாகிக்கும் கேனைத்தனம் உலகின் எந்த மூலையிலும்இல்லை. நமது நாட்டில் NCERT வழிகாட்டுதலின் குறிக்கோள்களைத் தான் எல்லா வாரியங்களும் பின்பற்றுகின்றன. புத்தகங்களை மாற்றுவது தரமான கல்வி என்று நம்புவது கல்வியின் லட்சியத்திற்கே எதிரானது.

கல்வியை கல்விக்காக என்று சொல்வது வாழ்க்கையை விரயம் செய்வதாகும். நாம் தொழிலையும் கல்வியையும் குழப்பிக் கொண்ட அரசியலில் இருக்கிறோம். கடைசியா, இந்தி படிச்சா வேலை கிடைக்காது.

No comments:

Post a Comment