மனாஸிர் ஸரூக்
2019-03-30
முஸ்லிம் சமூகமும், 'குப்ர்' சிந்தனைக் கட்டமைப்பும்...
.
நூற்றாண்டு கால முஸ்லிம் உளவியலைத் தீர்மானித்ததில் பிக்ஹ் கண்ணோட்டத்துக்கு பாரியதொரு இடமுண்டு. முஸ்லிம் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் பல விடயங்களுக்கும், பிரச்சினைகளுக்கும், சவால்களுக்கும் பிக்ஹ் கண்ணோட்டம் பதிலளித்து / தீர்வுகளை முன்வைத்து, முஸ்லிமின் அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாகவே எமது பிக்ஹ்(சட்டவியல்) பாரம்பரியம் வளர்ந்து வந்தது. சட்டவியல் பாரம்பரியம் முஸ்லிமின் அன்றாட வாழ்வுடன் ஊடாடி வளர்ச்சியுற்ற கலை என்ற வகையில் அது பெரிதும் சூழல்சார் தாக்கங்களுக்கு உட்பட்டே தன்னை வளப்படுத்திக் கொண்டன.
.
ஆனால், பிக்ஹ் கண்ணோட்டம் பிரசவித்த பிக்ஹ் நிலைப்பாடுகள் அனைத்தும் அல்குர்ஆனிய உலகக் கண்ணோட்டத்திற்கு உடன்பட்ட வகையில் அமையும் என்று குறிப்பிட முடியாது. பிக்ஹ் கலைசார் இமாம்களின் பிக்ஹ் நிலைப்பாடுகளில் / இஜ்திஹாத்களில் அவர்களின் சூழமைவு சார்ந்த தாக்கம் நிச்சயமாக அவதானிக்கத் தக்கவை. இவ்வகையில், அல்குர்ஆனிய உலகக் கண்ணோட்டத்துக்கும், எமது சட்டவியல் பாரம்பரியத்தின் அடியான பிக்ஹ் கண்ணோட்டத்துக்குமிடையில் முரண்கள் எழுகையில் நாம் எதனைத் தேர்வு செய்கிறோம் என்பது முக்கியமானது.
.
எடுத்துக்காட்டாக, 'முஸ்லிம் - காபிர்' என்ற பிக்ஹ் சிந்தனைக் கட்டமைப்பு. முஸ்லிமல்லாத அனைவரையும் 'காபிர்' என்ற வகைமையினுள் பிக்ஹ் கண்ணோட்டம் வரையறுத்தது. முஸ்லிம்களின் அன்றாட வாழ்வில் முஸ்லிம் அல்லாதவர்களுடனான உறவாடல் சார்ந்து எழுந்த கேள்விகளுக்கு பதிலாகவும், நாடுகளுக்கிடையிலான உறவில் யுத்தத்தை அடிப்படையாகக் கொண்ட அன்றைய உலக ஒழுங்கின் 'தாருல் இஸ்லாம் - தாருல் குப்ர்' சிந்தனை சார்ந்தும் அமைந்தன 'காபிர்' பற்றிய சட்டவியல் பார்வை. அதாவது, திருமண பந்தம், உணவில் ஹலால் - ஹராம் பேணல் போன்ற முஸ்லிமின் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் சட்டவியல் நிலைப்பாடுகள் தொடங்கி நாடுகளுக்கிடையிலான உறவினை முகாமை செய்தல் வரை முஸ்லிம் அல்லாதவர்களை ஒரு வகைமையினுள் உள்ளடக்கும் தேவை சட்டவியல் அறிஞர்களுக்கு ஏற்பட்டது. 'காபிர்' என்ற பிரயோகத்தின் மூலம் முஸ்லிம் அல்லாதவர்களை அவர்கள் குறித்தனர் / வரையறுத்தனர்.
.
ஆனால், 'காபிர்' என்ற சொற்பதத்தினை அல்குர்ஆன் வேறு அர்த்தத்தில் பிரயோகித்தன, வரையறுத்தன. முஸ்லிம் அல்லாத அனைவரையும் அச்சொற்பிரயோகம் அல்குர்ஆனில் குறித்து நிற்கவில்லை. பிரச்சினை என்னவென்றால், முஸ்லிம் சமூகம் பிக்ஹ் நிலைப்பாடு சார்ந்த 'காபிர்' என்ற பிரயோகத்தினை (அதாவது, முஸ்லிம் அல்லாத அனைவரையும் குறிக்கும் 'காபிர்' என்ற சட்டவியல் சார்ந்த சொற்பிரயோகத்தினை,) அல்குர்ஆன் 'காபிர்' என்று பயன்படுத்தும் வகையினரின் மேல் பிரயோகித்து பொருள்கோடல் செய்தனர். அல்குர்ஆன் 'காபிர்' என்ற சொற்பதத்தினை அசத்தியத்தை, அநீதியை உலகில் வளர்ப்பவர்களாகவும், மனிதர்களிடம் வரம்பு மீறுபவர்களாகவுமே வர்ணிக்கின்றன. எனவே, அல்குர்ஆன் 'காபிர்' என்பதனை கடுமையாக சாடவும், இகழ்ச்சியாக வரையறுக்கவும் செய்கின்றன. விளைவாக, அல்குர்ஆனின் 'காபிர்' என்ற பிரயோகத்திற்கான பிக்ஹ் கண்ணோட்டம் சார் பொருள்கோடலானது முஸ்லிம் அல்லாத அனைவரையும் கடுமையாக எதிர்கொள்ள வேண்டியவர்களாக முஸ்லிம் உளவியலில் முன்னிறுத்தின. முஸ்லிம் சமூகம் தனது வாழ்வியலை மூடூண்ட சமூகக் கட்டமைப்பினுள் சுருக்கிக் கொள்ளவும் இது காரணமாயமைந்தன.
.
அல்குர்ஆன் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டவர்களினை எவ்வாறு நோக்குகிறது?
.
நாம் பொதுவில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களைக் குறிக்க 'முஸ்லிம்' என்ற சொற்பதத்தினை பயன்படுத்துகின்றோம். ஆயினும், அல்குர்ஆன் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டவர்களின் படிதரங்களையும் பிரித்தே நோக்குகின்றது.
.
"“நாங்களும் ஈமான் கொண்டோம்” என்று (நபியே! உம்மிடம்) நாட்டுப் புறத்து அரபிகள் கூறுகிறார்கள், “நீங்கள் ஈமான் கொள்ளவில்லை. எனினும் “நாங்கள் வழிபட்டோம்” (இஸ்லாத்தைத் தழுவினோம்) என்று (வேண்டுமானால்) கூறுங்கள் (என நபியே! அவர்களிடம்) கூறுவீராக. “ஏனெனில் உங்களுடைய இதயங்களில் (உண்மையான) ஈமான் நுழையவில்லை; மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிப்பட்டு நடப்பீர்களாயின் அவன் உங்களுடைய நற்செய்கைகளில், எதையும் உங்களுக்குக் குறைக்க மாட்டான்” நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்."(49:14).
.
இவ்வசனம் 'ஈமான்' கொள்ளலை, 'கீழ்ப்படிதல்' / 'வழிப்படுதல்' என்ற கருத்தைக் கொடுக்கும் 'முஸ்லிம்' பிரயோகத்திலிருந்து பிரித்தே நோக்குகிறது. நாட்டுப் புறத்து அரபிகளிடம் இஸ்லாத்தினை ஏற்ற 'முஸ்லிம்' என்று வேண்டுமானால் கூறுங்கள், விசுவாசம் கொண்ட 'முஃமீன்' ஆக நீங்கள் மாறவில்லை என்கிறது. எனவே தான், முஸ்லிமாக இருக்கும் படி ஏவுகின்ற அல்குர்ஆனின் வேறு வசனங்கள் ஈமான்(விசுவாசம்) கொண்ட முஸ்லிமாக இருக்கும் படி ஈமானையும் இணைத்தே கூறுகின்றன.
.
இவ்வகையில் அல்குர்ஆன் இஸ்லாத்தினை மார்க்கமாக ஏற்றவர்களை முஸ்லிம்கள்(இஸ்லாத்துக்கு கீழ்ப்படிந்தவர்கள் / வழிப்பட்டவர்கள்), முஃமீன்கள்(ஈமான் கொண்டவர்கள்), முத்தகி(தக்வா உடையவர்கள்) போன்ற பிரயோகங்கள் மூலம் தரப்படுத்தல் செய்கிறது. உள நிலையின் அடிப்படையிலும் நப்ஸுல் அம்மாரா, நப்ஸுல் அவ்வாமா, நப்ஸுல் முத்மயின்னா என்றும் வகைப்படுத்துகின்றது. மனிதர்கள் என்ற வகையில் அனைவரையும் ஒரே சட்டகத்தினுள் அடைக்க முடியாது என்பது யதார்த்தம். இதனையே அல்குர்ஆனும் மனிதர்களை வகைப்படுத்தும் போது கையாள்கிறது. இவ்வாறே இஸ்லாத்தினை ஏற்காதவர்களையும் அல்குர்ஆன் வேறுபட்ட வகையிலேயே பிரித்து நோக்குகிறது.
.
அல்குர்ஆன் முஸ்லிம் அல்லாதவர்களை / இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்ளாதவர்களை எவ்வாறு நோக்குகிறது?!
.
இஸ்லாத்தினை தனது மார்க்கமாக ஏற்காதவர்கள் அல்குர்ஆன் பல வகைகளில் வகைப்படுத்துகிறது. 'காபிர்' என்பது அதில் ஒன்றே. காபிர்கள்(நிராகரிப்போர்), முஷ்ரிக்கள்(இணைவைப்போர்), முனாஃபிக்கள்(இஸ்லாத்தினை ஏற்றதைப் போன்று நடிக்கும், முஸ்லிம் சமூகத்தினுள்ளேயே இருக்கும் நயவஞ்சகர்கள்), அஹ்லுல் கிதாப்(வேதம் வழங்கப்பட்டோர்), முஸ்லிம்களுக்கு உபத்திரம் செய்யாதோர், அநீதி இழைக்காதோர் அல்லது நல்ல முறையில் நடந்து கொள்வோர் என்று பலவாராக அல்குர்ஆன் வகைப்படுத்துகின்றன. பின்வரும் அல்குர்ஆன் வசனத்தை அவதானியுங்கள்:
.
"(நம்பிக்கையாளர்களே!) மார்க்க விஷயத்தில் உங்களுடன் எதிர்த்து போர் புரியாதவர்களுக்கும், உங்கள் இல்லத்திலிருந்து உங்களை வெளியேற்றாதவர்களுக்கும், நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுடன் நீங்கள் நீதமாக நடந்து கொள்வதையும் அல்லாஹ் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதிவான்களை நேசிப்பவனாகவே இருக்கின்றான்.
.
அல்லாஹ் உங்களைத் தடுப்பதெல்லாம், மார்க்க விஷயத்தில் உங்களுடன் போர் புரிந்தவர்களையும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றியவர்களையும், வெளியேற்றுவதில் (எதிரிகளுக்கு) உதவி செய்தவர்களையும் நீங்கள் நண்பர்களாக ஆக்கிக்கொள்வதைத்தான். (ஆகவே,) எவர்கள் அவர்களுடன் நட்பு பாராட்டுகின்றார்களோ, அவர்கள் அநியாயக்காரர்கள்தாம்."(60: 8-9).
.
அதாவது, முஸ்லிம் அல்லாதவர்கள் என்பதற்காக நல்லுறவு பேணுவதை, நன்மை செய்வதை, நீதமாக நடப்பதை தவிர்ந்து கொள்வது நீதவான்களில் செயல் அல்ல என்கிறது.
.
இவை தவிர, அல்குர்ஆன் 'மனிதர்களே'(நாஸ்) என்று விழித்து பல விடயங்களினைப் பேசுகின்றன. மனித சமூகம் என்ற வகையில் ஒருமைப்பாட்டையும், ஒருமித்து அனைவரும் உடன்பட வேண்டிய விடயங்களினையும் பேசுகின்றன.
.
"மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரே ஆண், ஒரே பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால், உங்களில் ஒருவர் மற்றவரைவிட மேலென்று பெருமை பாராட்டிக் கொள்வதற்கில்லை.) எனினும், உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கின்றாரோ, அவர்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் நன்கு தெரிந்தவனாகவும் இருக்கின்றான்."(49:13).
.
அல்குர்ஆன் ஜிஹாத் செய்ய அனுமதித்த முதலாவது வசனமே, மத வெளிப்பாட்டு சுதந்திரத்தை அல்லது விசுவாச சுதந்திரத்தை முன்னிறுத்துகின்றன. (நவீன பரிபாஷையில் சொவதென்றால், கருத்து வெளிப்பாட்டு உரிமையை, மனித உரிமையை வலியுறுத்துகின்றன.):
.
"இவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; “எங்களுடைய இறைவன் ஒருவன்தான்” என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் கிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்."(22:40).
.
இறுதியாக, நபிகளார் அநியாயத்துக்கு எதிராக அல்லது ஒருவருக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதில் மனிதர்கள் என்ற வகையில் அனைவரும் ஒன்றுபட்டு உழைப்பதை எவ்வளவு விரும்பினார் என்பதை ‘ஹில்ஃபுல் ஃபுழூல்’ ஒப்பந்தம் பற்றிய அவருடைய மனப்பதிவு காட்டுகின்றது. இஸ்லாத்துக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்ட ஓர் ஒப்பந்தம் இது:
.
"சிறப்புமிகு ஒப்பந்தம்.
சங்கைமிக்க மாதமான துல் கஃதாவில் ‘ஹில்ஃபுல் ஃபுழூல்’ எனும் சிறப்புமிகு ஒப்பந்தம் ஏற்பட்டது. குறைஷி கோத்திரத்தைச் சேர்ந்த ஹாஷிம், முத்தலிப், அஸத் இப்னு அப்துல் உஜ்ஜா, ஜுஹ்ரா இப்னு கிலாப், தைம் இப்னு முர்ரா ஆகிய குடும்பத்தார் இதற்கான ஏற்பாட்டைச் செய்தனர். இவர்களில் அப்துல்லாஹ் இப்னு ஜத்ஆன் அத்தைமீ வயது முதிர்ந்தவராகவும் மதிப்புமிக்கவராகவும் இருந்ததால் அவர் வீட்டில் அனைவரும் ஒன்று கூடினர். மக்காவாசிகளாயினும் வெளியூர்வாசிகளாயினும் அவர்களில் எவருக்கேனும் அநீதி இழைக்கப் பட்டால் அவருக்கு முழுமையாக உதவி செய்து நீதி கிடைக்கச் செய்வதில் அனைவரும் இணைந்து முயற்சிக்க வேண்டும் என உடன்படிக்கை செய்து கொண்டனர். இவ்வுடன்படிக்கையில் நபி (ஸல்) அவர்களும் கலந்து கொண்டார்கள். இவ்வுடன்படிக்கையில் கலந்து கொண்டது பற்றி நபித்துவம் கிடைத்ததற்குப் பின் நபி (ஸல்) இவ்வாறு கூறினார்கள்: அப்துல்லாஹ் இப்னு ஜத்ஆன் வீட்டில் நடந்த ஒப்பந்தத்தில் நான் கலந்து கொண்டேன். எனக்கு செந்நிற ஒட்டகைகள் கிடைப்பதைவிட அந்த ஒப்பந்தத்தில் கலந்துகொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இஸ்லாமின் வருகைக்குப் பின்பும் எனக்கு (அதுபோன்ற) ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டால் அதை நான் ஒப்புக் கொள்வேன்." (இப்னு ஹிஷாம்).
"இந்த உடன்படிக்கையின் அடிப்படைத் தத்துவம் அறியாமைக் காலத்தில் இனவெறியினால் ஏற்பட்ட அநீதங்களை முடிவுக்குக் கொண்டு வருவதாகும். இவ்வுடன்படிக்கை ஏற்படக் காரணம்: ஜுபைத் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் தனது வணிகப் பொருட்களுடன் மக்கா வந்தார். ஸஹ்மாவைச் சேர்ந்த ஆஸ் இப்னு வாயில் அவரிடமிருந்து சரக்குகளை வாங்கிக் கொண்டு அதற்கான விலையைக் கொடுக்க மறுத்துவிட்டார். பறிகொடுத்தவர் தனது நேச கோத்திரங்களாகிய அப்துத் தார், மக்ஜூம், ஸஹ்ம் ஆகியோரிடம் சென்று உதவி கேட்டபோது எவரும் அவரது கோரிக்கையை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. உடனே அவர் அபூ குபைஸ் மலையில் ஏறிக்கொண்டு தனக்கிழைக்கப்பட்ட அநீதத்தை உரத்த குரலில் கவிதையாகக் கூறினார். அதைக் கேட்ட ஜுபைர் “இப்னு அப்துல் முத்தலிப் ஏன் இவ்வாறு இவர் கைவிடப்பட்டார்” என வினவினார்கள். அப்போதுதான் மேற்கூறப்பட்ட கோத்திரத்தார் இணைந்து இச்சிறப்புமிகு ஒப்பந்தத்தை நிறைவேற்றினர். அதன் பின் அனைவரும் ஆஸ் இப்னு வாயிலிடமிருந்து அந்த பாதிக்கப்பட்டவருக்கு அவரது உரிமையை பெற்றுத் தந்தனர்." (தபகாத் இப்னு ஸஅது).
.
"ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது; மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்."(2:62).
.
அல்லாஹூ அஃலம்!
.
https://m.facebook.com/story.php?story_fbid=2367033466663229&id=723418241024768