Saturday, March 16, 2019

கையறு நிலையில் தவித்து மீண்டவளின் பாதத்தில் இந்த சொற்களை வைக்கிறேன் - கார்ல்

கார்ல் மார்க்ஸ் கணபதி
2019-03-12

ஒரு பண்பட்ட நாகரீக சமூகம், மிக மோசமான குற்றங்களை எவ்வாறு எதிர்கொள்ளும் என்பதற்கு உலகளாவிய உதாரணங்கள் உண்டு. இன்று அவையெல்லாம் நம் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கின்றன. கொஞ்சம் திறந்த மனதோடு நாம் புரிந்துகொள்ள, எதிர்வினையாற்ற முயலவேண்டும். மேலும் எல்லாவகையிலும் நாம் இன்று சமூக ஊடகங்களோடு பிணைக்கப்பட்டிருக்கிறோம். இத்தகைய குற்றங்களின் தோற்றுவாயாகவும் சமூக ஊடகங்கள் இருக்கிறபோது, அதில் செயல்படுகிறவர்களின் பொறுப்பும் கூடுகிறது.

எனது சில புரிதல்கள் நண்பர்களது பார்வைக்கு!

ஒரு சக உயிராக, (ஆண் அல்லது பெண் எனும் தன்னிலையை சில வினாடிகள் தள்ளிவைத்துவிட்டு) நிகழ்ந்திருக்கும் துயரத்தை நமது இதயத்திற்குள் அனுமதிப்போம். அது அங்கேயே சற்று நேரம் இருக்க விடுவோம். அது வினைபடட்டும். என்ன செய்யவேண்டும் என்பது நமக்குள் செரிக்கட்டும். பொங்கி வரும் வார்த்தைகளை சற்றாவது அடக்கிக்கொள்வோம்.

பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் எந்த நிபந்தனையும் அற்று நிற்போம். அவள் அந்தக் காரில் ஏறியது, ஒரு சமூகமாக நானும் நீங்களும் அவளுக்குப் பாதுகாப்பாக இருப்போம் என்ற நம்பிக்கையில்தான். நமது அறிவுரைகள் எதுவும் இப்போது அவளுக்குத் தேவையில்லை. நமது அறிவின் எல்லை நெருங்க முடியாத, நமது அறிவுரைக்குப் பொருளற்ற வன்முறையை அவள் எதிர்கொண்டிருக்கிறாள். நம் இதயத்தின் துடிப்பு அவளுடன் கலந்துவிட நாம் அவளைத் தழுவிக்கொள்வோம். அவளது கண்ணீரை நமது கண்ணீரால் மட்டுமே துடைக்க முடியும்.

நமக்கு கோபம் இருக்கிறது. ஆத்திரம் வருகிறது. தடுமாறுகிறோம். நம்மிடம் - பொது சமூகமாக – ஒரு ஊடகம் இருக்கிறது. அங்கு நமது கருத்தைப் பதிவு செய்கிறோம். அதற்கு ஒரு நிபந்தனை இருக்கிறது. நமக்கு இந்த விவகாரத்தில் கருத்து சொல்ல தகுதி இருக்கிறதா என்பது முதலில். நமது பார்வைக்கு வரும் செய்தியில், உண்மையாவது இருக்கிறதா என்பதை ஆராயும் பொறுமை நமக்கு வேண்டும் எனும் சுயபரிசீலனை. அதுவே முக்கியம்.

உங்களுக்கு ஒரு அரசியல் பார்வை இருக்கிறது. தவறில்லை. அதே சமயம் கட்சி சார்ந்த அரசியல் பார்வைக்கும், பொதுவான அரசியல் பார்வைக்கும் வேறுபாடு இருக்கிறது. பிடிபட்ட குற்றவாளிகளில், எனது அபிமானக் கட்சியின் ஆட்கள் யாராவது இருக்கிறார்களா என்று மனது வேகமாக ஆராய்ந்தால், மிகவும் நோய்மையான மனநிலையில் இருக்கிறீர்கள் என்று பொருள். கருத்துதிர்க்கும் தகுதியை நீங்கள் இழக்கிறீர்கள். அமைதியாக இருங்கள்.

பீதியூட்டாதீர்கள். இனி பெண் சமூகம் ஆண்களை நம்பவே முடியாது என்று கோடு கிழிக்காதீர்கள். அவ்வாறு பொதுமைப்படுத்தும்போது நீங்கள் குற்றாவளிகளுக்கே உதவுகிறீர்கள். பாதிக்கப்பட்டவளிடம், உனக்கு யாருமே இல்லை என்று சொல்வது எந்த வகையில் பொருத்தமானது? ஒரு குற்றத்தை அதன் பிரத்யேக தன்மையை ஒட்டி, பொதுவான குற்றங்களில் இருந்து பிரித்து புரிந்துகொள்ள முயலுங்கள். உங்கள் வீட்டு முற்றத்தில், பால் பேதம் இல்லாமல் இந்த விவகாரம் குறித்து விவாதித்து விட்டு, மாற்றி மாற்றி தோள்களில் சாய்ந்து ஆறுதல் தேடிவிட்டு, சமூக ஊடகத்திற்கு வந்தவுடன் மிகவும் போலியாக ஆண் X பெண் எனும் கணக்கீடாக மாற்றி எழுதாதீர்கள். முதலில் உங்களுக்கு நேர்மையாக இருங்கள்.
உங்களது கட்சி அபிமானத்தை சற்று ஓரமாக வையுங்கள். இதன் பொருள் உங்களது அரசியல் பார்வையைக் கைவிட வேண்டும் என்பதல்ல. ஒரு துயரம், அற்ப அரசியல் யுக்தியாக மாறும் அபத்தத்திற்குத் துணை போகாதீர்கள். ஒரு துயரத்திற்குக் கண்ணீர் சிந்துவதாலேயே நமது மூடத்தனத்திற்கு நியாயம் வந்துவிடாது.

யார் சொல்வதை நம்புவது என்பதில் கவனமாக இருங்கள். அந்தரங்கமாக சில ஆளுமைகளின் மீது மரியாதை கொள்ளுங்கள். அவர்களது சொற்களைப் பின்தொடருங்கள். உணர்வுப்பூர்வமான நேரங்களில், உங்களது குரலை அப்படியே வெளிப்படுத்தாமல், கொஞ்ச நேரம் காத்திருக்க முயலுங்கள். உங்களுக்காக அவர்கள் பேசுவதை மனப்பூர்வமாக அனுமதியுங்கள். அதில் பிழை ஒன்றும் இல்லை. கும்பலுடன் இருப்பதை விட தனித்திருப்பது சில நேரங்களில் நேர்மறையானது.

சந்தேகப்படுவது நன்மையே. ஆனால் நம்பிக்கை இழப்பது ஆபத்தானது. எல்லாருமே அயோக்கியர்கள், எல்லா நிறுவனங்களுமே சுரண்டல் தன்மையைக் கொண்டவை, அரசியல் என்பதே ரேப்பிஸ்ட்களின் கூடாரம் போன்ற சொற்களை உதிர்க்கும் மன நோயாளிகளிடமிருந்து விலகியிருங்கள்.

இத்தகைய விவகாரத்தை மிகவும் provoking ஆக எழுதும் ஆட்களிடம் இருந்து தற்காலிகமாக விலகியிருங்கள். நிஜமாகவே இதில் பங்களிக்க விரும்பினால், இதற்காகத் தெருவில் இறங்கிப் போராடும் எந்த இயக்கத்துடனாவது உங்களை மனப்பூர்வமாக பிணைத்துக்கொள்ளுங்கள். அவர்களுடன் போய் நில்லுங்கள். அச்சமடைந்தால் விலகி வந்து அவர்களைப் பற்றி மதிப்புடன் எழுதுங்கள். வெற்று இரக்கம் கொள்ளாதீர்கள். நோய்மையை அல்லது தன்னிரக்கத்தை, பொது ஊடகங்களில் புலம்பி அப்படி ஒன்று உங்களிடம் இல்லை என்று உங்களையே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள்.

நீங்கள் பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும் ஆணாதிக்கப் பண்பு எனும் வன்முறை அலகு உங்களிடம் இருந்தால், அதை மனப்பூர்வமாக மறுபரிசீலனை செய்யுங்கள். இதை நான் மாற்றிக்கொள்வேன் என்று உங்கள் தனியறையில் அதை வாய்விட்டு சொல்லுங்கள். அவள் பெண் என்பதால் என்னை விடத் தாழ்ந்தவள் என்று நம்புவதை நிறுத்துவேன், எனது குழந்தைகளுக்கு அங்ஙனம் பயிற்றுவிப்பதை நிறுத்துவேன், அவர்கள் தாமாகவே பயின்று வந்தால் அதில் குறுக்கிடுவேன் என்று சிறிய உறுதிமொழியை எடுத்துக்கொள்ளுங்கள்.

நாம் உயரிய பாரம்பரியம் உள்ளவர்கள், ஜனநாயகவாதிகள், எல்லாரையும் சமமாக மதிப்பவர்கள் போன்ற கற்பிதங்களைத் தயக்கமின்றி உதறுங்கள். அது அப்பட்டமான பொய். அளவுகள் வேண்டுமானால் சிறிதும் பெரிதுமாக இருக்கலாம். அடிப்படையில் இந்தியர்களாக நாம் ஒரு விதத்தில் சபிக்கப்பட்டவர்கள். முதலில் ஆண் அதிகார சிந்தனையின் தோலை உரிக்கவேண்டும். அதை விட இறுக்கமான இருக்கும் சாதியத் தோலையும் சேர்த்தே உரிக்கவேண்டும். இது ஒரு அரசியல் செயல்பாடு. இதற்கு ஒரே வழி சுயபரிசோதனை மட்டுமே.

இறுதியாக, ஒவ்வொருவரும் மற்றவர்களைப் பார்த்து கைகாட்டிக்கொண்டே இருந்தால் யார்தான் தொடங்குவது. காதலுக்கு குறைந்தது இரண்டு பேர் வேண்டும். என்னால் காதலிக்காமல் இருக்கமுடியாது. அதனால்தான் உங்களை சகித்துக்கொள்கிறேன். என்னை சகித்துக்கொள்ளும் உங்களுக்கும் சேர்த்தே இதைச் சொல்கிறேன். எனது குரலும் உங்களது குரலும் வேறு வேறல்ல என்கிறபோது அது கமறுவதை என்னால் தவிர்க்கவே முடியவில்லை.

கையறு நிலையில் தவித்து மீண்டவளின் பாதத்தில் இந்த சொற்களை வைக்கிறேன். பெரிய மனதோடு அவள் இதை ஏற்றுக்கொள்ளட்டும். என்னிடம் வேறொன்றும் இல்லை தருவதற்கு!

https://m.facebook.com/story.php?story_fbid=2384459658254210&id=100000705985759

No comments:

Post a Comment