அப்பான் அப்துல் ஹலீம்
2019-03-30
பகுத்தறிவா வஹீயறிவா? எது சிறந்தது?
வானங்களும், பூமியும், மலைகளும் பொறுப்பேற்க மறுத்த வஹி எனும் அறிவை அல்லாஹு தஆலா பகுத்தறிவுள்ள மனிதனுக்குத்தான் கொடுத்திருக்கிறான். எனவே மனித அறிவால் வஹீயைப் புரிந்துகொள்ள முடியாது என்ற வாதமானது வஹியின் முழுமுதல் நோக்கத்துக்கே எதிரான வாதமாகும். அறிவை ஒரு புறம் வைத்துவிட்டு வேறொரு புலனால் வஹியைப் புரிந்துகொள்ளும் படி அல்குர்ஆன் ஏவவில்லை. மாற்றமாக ‘அறிவைப் பயன்படுத்தாமல், தர்க்கத்துக்குட்படுத்தாமல் அல்லாஹ்வின் வசனங்களை கண்மூடித்தனமாக பின்பற்றுவது இறையடியார்களின் பண்புக்கு விரோதமானது’ என்றே அல்குர்ஆன் (25:73) கூறுகிறது.
அசத்தியத்துக்கெதிரான பகுத்தறிவின் நோயெதிர்ப்புச் சக்தியை மென்மேலும் வலுப்படுத்துவதுதான் பகுத்தறிவுக்கு வஹீ செய்யும் பங்களிப்பாகும். வஹீயின் துணை கொண்டு முழு வீச்சில் சிந்தித்துணர்வதுதான் பகுத்தறிவு வஹியிற்கு செய்யும் கைமாறாகும்.
அனுபவமுள்ள ஒருவர் அனுபவமற்ற ஒருவனுக்கு செய்யும் உபதேசத்தை பெரும்பாலும் அனுபவமற்றவன் பெரிதாக கவனத்தில் எடுத்துக்கொள்ள மாட்டான். ஆனால் அவனது சொந்த அனுபவத்தில் குறித்த விஷயத்தை அவன் புரிந்துகொள்ளும் கட்டம் வரும் போது ஏற்கனவே தனக்கு அந்த உபதேசத்தை செய்தவரின் அறிவையும் அனுபவத்தையும் அங்கீகரிக்கின்ற, அதனை மெச்சுகின்ற ஒரு நிலைக்கு அவன் வந்து விடுகிறான். எதிர்காலத்தில் குறித்த நபரிடமிருந்து கிடைக்கும் வழிகாட்டல்களை சீரியஸாக எடுத்துக்கொள்வான்.
இதுபோலத்தான் இறைவனுக்கும் மனிதனுக்குமுள்ள உறவும். இறைவன் தனது அப்பழுக்கற்ற அறிவின் மூலமாக மனிதனுக்கு சொல்கின்ற வழிகாட்டல்களை மனிதன் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் காலவோட்டத்தில் அவனது அறிவை அவன் பிரயோகித்து இறையறிவின் வழிகாட்டல்களை தர்க்கத்துக்கும், சவாலுக்கும் உட்படுத்துகின்ற போது, ஏற்கனவே அவனது அறிவால் புரிந்துகொள்ள முடியாமலிருந்தவற்றை புரிந்துகொள்ளத் தலைப்படுகிறான். இதன் விளைவாக இறையறிவின் மகத்துவத்தையும் அதனூடாக இறைவனின் மகோன்னதத்தையும் அவன் புரிந்துகொள்கிறான். விளைவாக இறைவழிகாட்டலின் பால் தனக்குள்ள தேவையை உணர்ந்து மெல்ல மெல்ல அதன் பக்கம் திரும்ப ஆரம்பிப்பான்.
எங்கு இறைவழிகாட்டல் தர்க்கத்துக்கும் சவாலுக்கும் உட்படுத்தப்படுவதற்கு தடை விதிக்கப்படுகிறதோ அங்கு ஐயங்களுக்கான வாசல் திறக்கப்படுகிறது. பதிலற்ற ஐயங்கள் தெளிவின்மையையும் நிரந்தர சந்தேகத்தையும் பிரசவிக்கின்றன. அந்த சந்தேகம் நிராகரிப்பை நோக்கி இட்டுச் செல்லும். சிந்தனையை, அறிவை பிரயோகித்தல் பற்றி அல்குர்ஆன் அதிகம் வலியுறுத்தியிருப்பதன் நோக்கமும் அதன் பிரயோசனத்தை சிலாகித்திருப்பதன் பின்னணியும் நிராகரிப்பிலிருந்தும் அவனைக் காப்பாற்றுவதன்றி வேறு எதுவாகத்தான் இருக்க முடியும்?!
பகுத்தறிவா வஹீயறிவா? எது சிறந்தது? என்பன போன்ற வாதங்கள் தேவையற்றவை. ஏனெனில் இவ்விரண்டு அறிவுகளினதும் உள்ளீடுகள் முற்றிலும் வேறுபட்டவை. வஹியானது வழிகாட்டல் தத்துவங்களையும், அடிப்படைகளையும் உள்ளீடுகளாகக் கொண்ட அறிவாகும். பகுத்தறிவோ புரிந்துகொள்ளலையும், முறைமைகளைப் பிரசவிக்கும் தன்மையையும், நடைமுறைப்படுத்தல் கருவிகளையும் உள்ளீடுகளாகக் கொண்ட அறிவாகும். இதில் ஒன்றில்லா விட்டால் அடுத்தது இருந்து பிரயோசனமில்லை. அறிவின் நோக்கமான ‘சத்தியத்தை அறிந்துகொள்ளல்’ என்பதை சாத்தியப்படுத்தும் வகையில் ஒன்றையொன்று பூரணப்படுத்துகின்ற பரஸ்பரம் ஒன்றின் பால் இன்னொன்றுக்குத் தேவையுள்ள கூறுகளைத்தான் இவ்விரண்டும் உள்ளடக்கியிருக்கின்றன.
வஹியின் சிறப்பம்சம் அதன் தத்துவார்த்த அடிப்படைகள் என்றும் பகுத்தறிவின் சிறப்பம்சம் அதன் புரிந்துகொள்ளல் செயற்பாடு என்றும் கூறலாம். மனித அறிவால் வஹியின் தத்துவார்த்த ரீதியான அடிப்படைகள் புரிந்துகொள்ளப்படும் செயற்பாட்டுக்குப் பெயர்தான் இஜ்திஹாத். அந்தப் புரிதல் சிலபோது தவறான புரிதலாக அமைந்துவிட்டாலும் கூட அது நன்மையொன்றைப் பெற்றுத்தரும் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதானது முக்கிய செய்தியொன்றைச் சொல்லித்தருகிறது. வஹியின் மீது அதனைப் புரிந்துகொள்வதற்காகவும் நடைமுறைப்படுத்துவதற்காகவும் மனித அறிவைப் பிரயோகிப்பது இபாதத்தாகும். அந்த இபாதத் எந்தளவு ஏற்றமானதென்றால், உங்கள் இலக்கு தவறினாலும் கூட ‘அறிவைப் பிரயோகித்தல்’ என்ற இபாதத்தை நிறைவேற்றியதற்கான கூலிக்கு உரித்துடையவராக மாறுகிறீர்கள்... ஸுப்ஹானல்லாஹ்!!!
பகுத்தறிவு எந்தளவுக்கு அதிகமாக பிரயோகிக்கப்படுகிறதோ (அதாவது பகுத்தறிவுக்கு எந்தளவு சுதந்திரம் வழங்கப்படுகிறதோ) அந்தளவுக்கு அதிகமாக அது வஹியின் அடிப்படைகளை புரிந்துகொள்ள ஏதுவாய் அமைந்து விடுகிறது. பகுத்தறிவின் மீதான கெடுபிடிகளும் வரையறைகளும் அதிகரிக்கும் போது உண்மைக்கும் பகுத்தறிவுக்குமிடையிலான இடைவெளியும் அதிகரிக்கிறது. ஓட்டம் தடைப்பட்டு அசைவற்று தேங்கி நிற்கும் நீர் எப்படி தன்னளவிலும் அசுத்தமாகி இன்னும் பல அசுத்தங்கள் பிறந்து வளர்வதற்கான உற்பத்திஸ்தானமாகவும் மாறி விடுகிறதோ, அவ்வாறே பிரயோகிக்கப்படாமல் தேக்கி வைக்கப்படும் பகுத்தறிவும் கூட தன்னளவிலும் அசுத்தப்பட்டு அசுத்தமான சிந்தனைகளின் பிறப்பிடமாகவும் மாறி விடுவதைப் பார்க்கலாம். ‘அறிவைப் பயன்படுத்தி சிந்தித்து விளங்காதவர்கள் மீது அசூசையை (அருவருப்பை) அல்லாஹ் ஏற்படுத்தி விடுகிறான்’ என்ற அல்குர்ஆன் (10:100) ஆயத் எத்தனை தெளிவாக இந்த உண்மையைப் படம் பிடித்துக் காட்டுகிறது!
அறிவின் எதிரிகள் பகுத்தறிவின் வகிபாகத்தை பகுத்தறிவுவாதமாக சித்தரிப்பர். ‘பகுத்தறிவுவாதம்’ என்பது மனித அறிவை மிஞ்சிய வேறோர் அறிவு இல்லை என்ற வாதமாகும். ஆனால் பகுத்தறிவின் வகிபாகம் என்பது மனித அறிவை மிஞ்சிய அறிவொன்றின் ஆழ அகலத்தைப் புரிந்துகொள்ளும் முயற்சியிலான தொடர் சிந்தனைச் செயற்பாடாகும். அறிவைப் பிரயோகிக்கத் தெரியாத மனிதர்களுக்கு(?) அல்குர்ஆனின் பாஷையில் சொன்னால் ‘செவிட்டு ஜந்துகளுக்கு’, அல்லது ‘ஊமைச் செவிடுகளுக்கு’, ‘கால்நடைகளை விட கேவலமான நிலையில் உள்ள ஜீவராசிகளுக்கு’ பகுத்தறிவுவாதம் மற்றும் பகுத்தறிவின் வகிபாகம் இரண்டுக்குமிடையிலான வேறுபாட்டைக் கூட புரிந்துகொள்ள முடியாத முடியாத புலனியக்கக் கோளாறு இருப்பதாகவே கொள்ள வேண்டியிருக்கிறது.
சிந்திக்கின்ற மனிதர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க தமது வேர்பிடித்த கதிரைகளுக்கும் கொழுப்புத் தட்டிய வயிறுகளுக்கும் ஆப்பு வைக்கப்படும் என்ற அச்சத்தைத் தவிர, அறிவின் மீது வெறுப்பைக் கொட்டுவதற்கு வேறு என்ன நியாயம்தான் இருந்துவிடப் போகிறது!!!
https://m.facebook.com/story.php?story_fbid=2368230859876823&id=723418241024768
No comments:
Post a Comment