Thursday, February 26, 2015

அந்த முஸ்லிம் பெண்கள்

அந்த முஸ்லிம் பெண்கள்.
(டீஸ்டா செடல்வாட் மீதான பழி வாங்கும் நடவடிக்கை குறித்து நான் மார்ச் மாத உயிர்மை இதழில் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து சிலவரிகள்....)
"..........இவ்வளவுக்குப் பின்னும் இது போன்ற வன்முறைகளில் இன்று அதிக அளவில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டது குஜராத் 2002 ல்தான் என்பது குறிப்பிடத் தக்கது. மோடி அமைச்சரவையில் இருந்த ஒரு அமைச்சர் உட்பட 117 குற்றவாளிகள் அங்கு இப்போது தண்டிக்கப்பட்டுள்ளார்கள் என்றால் அதன் பின்புலமாக உள்ளவை இரண்டு.

  1. ஒன்று பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் கொண்ட உறுதி. 
  2. மற்றது அந்த உறுதியை அவர்களுக்குத் தந்து அதை அணையாமல் காத்த டீஸ்டா செடல்வாடின் ஈடு இணையற்ற கடும் அர்ப்பணிப்பு.
பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள், குறிப்பாக பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட முஸ்லிம் பெண்கள் உறுதியுடன் நின்றதையும், அவர்களின் கணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இதை ஒரு இழிவாகக் கருதாமல் அவர்களுக்குத் துணை நின்றதையும் நினைக்கும்போது மனம் சிலிர்க்கிறது. 

பாலியல் வன்முறை என்று வந்து விட்டால் பாதிக்கப் பட்டவர்களின் பெயரைக் கூட வெளியிடக் கூடாது, படத்தை அறவே வெளியிடக் கூடாது என்கிற சூழலில் ரொம்பவும் கட்டுப் பெட்டியானவர்கள் எனக் கருதப்படும் முஸ்லிம் பெண்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டதும், கொடும் பாலியல் வன்முறைக்கு ஆளான பில்கிஸ் பானு போன்றோர் தொலைக் காட்சிகளில் நேர்காணல் அளித்ததும், பல நேரங்களில் இத்தகைய பெண்களின் கணவர்கள் அவர்களோடு நின்றதும் வரலாற்றில் பதியப்பட வேண்டிய ஒன்று.

தங்களுக்கு இழைக்கப்பட்டது அவமானமல்ல. அது குற்றம். அது வன்முறை. அந்தக் குற்றத்துக்கு உரியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதொன்றே அவர்களின் ஒரே நோக்காக இருந்தது

(படத்தில் பில்கிஸ் பானு (2008). அவர் மீது வன்முறை புரிந்தவர்கள் தண்டிக்கப்பட்ட அன்று ப்ரெஸ் மீட்டில்... 'நான் சுமத்திய குற்றம் உண்மை என்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது... என் உயிருக்கு இன்னும் ஆபத்து உள்ளது..' என்று அவர் அன்று கூறினார்)

No comments:

Post a Comment