Thursday, January 10, 2019

4 படுகொலைகள்

LR Jagatheesan
2019-01-10

சுதந்திர இந்தியாவின் முதல் அரசியல் படுகொலை மஹாத்மாகாந்தி. இரண்டாவதாக எமெர்ஜென்ஸி என்கிற பெயரில் நடந்த ஜனநாயகப் படுகொலை. மூன்றாவதாக கொல்லப்பட்டது மதசார்பின்மை (பாபர்மசூதி இடிப்பின் மூலம்). நான்காவதாக சமூகநீதியும் இன்று படுகொலை செய்யப்பட்டது. இந்திய நாடாளுமன்றத்தின் ஏகோபித்த ஆதரவோடு.

முதல் கொலையை ஆர் எஸ் எஸ் தனியாக செய்தது. இரண்டாவது கொலையை தன் பங்குக்கு காங்கிரஸ் செய்தது. கம்யூனிஸ்டுகளின் ஒரு பாதி அதை ஆதரித்தது. மூன்றாவது படுகொலையை செய்தது ஆர் எஸ் எஸ் என்றாலும் காங்கிரஸின் உள்கை அதில் ஒளிந்தே இருந்தது. நான்காவதாக இன்று நடந்து முடிந்திருக்கும் சமூகநீதி படுகொலையை ஆர்எஸ்எஸ்சோடு, காங்கிரஸும், கம்யூனிஸ்டுகளும், ஆனப்பெரிய அம்பேட்காரிய கட்சிகளும் சேர்ந்தே செய்து முடித்திருக்கின்றன.

இந்த நான்கு படுகொலைகளையும் தொடர்ந்து எதிர்த்தது/எதிர்ப்பது திராவிடர் இயக்கமும் அதன் வழியில் வந்த திமுக என்கிற கட்சியும் மட்டுமே. என்ன காரணம்?

ஆரியத்தின் அரசியல் வடிவம் ஆர் எஸ் எஸ். அதற்கான ஒரே எதிர்ப்பு ஒட்டுமொத்த இந்தியாவிலும் திராவிடம் மட்டுமே. அதுவே இங்கே நிறுவப்பட்ட வரலாறு.

ஹிந்து, ஹிந்தி, ஹிந்துஸ்தான் என்பதன் எதிர்ப்பதம் தமிழ், தமிழன், தமிழ்நாடு என்பதாக மட்டுமே இருந்தது. இருக்க முடியும். அதுவே இயல்பு. அதன் ஆனப்பெரிய அரசியல் சமூக எழுச்சியின் வடிவமே இங்கே திராவிட இயக்கமாக ஓங்கி உயர்ந்தது.

அந்த திராவிடத்தை எதிர்த்து ஹிந்தியத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் எந்த தத்துவமும் ஆர்எஸ்எஸ்சின் ஹிந்து, ஹிந்தி, ஹிந்துஸ்தான் என்கிற செயல்திட்டத்துக்கு தெரிந்தோ தெரியாமலோ நேரடியாகவோ மறைமுகமாகவோ எடுபிடியாக மட்டுமே இறுதியில் முடிவார்கள் என்பது இந்திய/தமிழக அரசியலில் மீண்டும் மீண்டும் தொடர்ந்து நிரூபிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. தமிழ்தேசியத்தில் இருந்து தலித் தேசியம் வரை அது தான் நடந்தது. இன்று மீண்டும் ஒருமுறை அது நடந்தேறியிருக்கிறது.

ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பயன் தரும் விதத்தில் சுதந்திர இந்தியாவில் இட ஒதுக்கீட்டுக்காக இந்திய அரசியல் சட்டத்தையே முதன்முதலில் திருத்தியது தமிழ்நாட்டில் மட்டுமே இருக்கும் இயங்கும் திராவிட இயக்கம். பெரியார்/அண்ணா என்கிற இரு பேரரக்கர்கள் அந்த சாதனையை செய்து காட்டினார்கள்.

அதன் நீட்சியாக அவர்கள் இருவருக்குமான ஒற்றை வாரிசான கலைஞர் மூலம் திராவிடர் இயக்கத்தின் சமூகநீதி செயற்திட்டம் மண்டல் கமிஷன் அறிக்கை அமுலாக்கமாக அகில இந்தியாவுக்கும் விரிவடைந்தது.

இன்று தமிழ்நாட்டின் திராவிடர் இயக்கம் வளர்த்தெடுத்த அந்த சமூகநீதியின் அடிப்படையை அசைத்துப்பார்க்கும் வேலைக்கான கால்கோள்விழா நடந்தேறியிருக்கிறது. கம்யூனிஸ்டுகளின் அம்பேட்காரிய கட்சிகளின் அமோக ஆதரவோடு.

நல்லது. வரலாற்றில் இது இதுவும் ஒரு நிகழ்வு. மண்டலை கமண்டலம் கொண்டு எதிர்த்தவர்கள் மோடி மூலம் தம் வன்மத்தை இன்று நிறைவேற்றிக் கொண்டிருக்கலாம். வரலாற்றுப்பகையை தீர்த்துக்கொண்டதாக கொண்டாடி மகிழலாம்.

ஆனால் வரலாறு என்பது உறைநிலையல்ல. தொடர்வது. இயங்குவது. தொடர்ந்து முன்னோக்கி நகர்வது. மண்டல் எதிர்ப்பாளர்களுக்கு இன்று ஒரு மோடி கிடைத்திருப்பதைப்போல சமூக நீதிக்காக பாடுபடுபவர்களுக்கு இன்னொரு வி பி சிங் இந்தியாவில் வராமலா போவார்?

அல்லது பெரியாரின் பேரன்களும் அண்ணாவின் தம்பிகளும் கலைஞரின் உடன்பிறப்புகளும் தமிழ்நாட்டில் உருவாகாமல் போய்விடுவார்களா? வருவார்கள். கண்டிப்பாக வருவார்கள். வரலாறு அவர்களை வரவைக்கும். உருவாக்கும்.

https://www.facebook.com/100005714313513/posts/948813538652448/

No comments:

Post a Comment