Thursday, January 10, 2019

பொருளாதார இடஒதுக்கீடு - செந்தில், கவுண்டமணி

*செந்தில்:*

என்ன அண்ணே பிராமணர்களுக்கான 10% இடஒதுக்கீட்டை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் எல்லாம் ஆதரிக்கும் போது திமுக மட்டும் ஏன் எதிர்க்குது?

*கவுண்டமணி:*

அடங்கொன்னியா, அது பிராமணர்களுக்கான இடஒதுக்கீடு இல்லடா, இதுவரை இடஒதுக்கீடு வரைமுறைக்குள் வராத எல்லா உயர்சாதியினருக்குமான இடஒதுக்கீடு. அதாவது BC, MBC, SC & ST பட்டியலுக்குள் வராத Other Castes (OC).

நம்ம தமிழ்நாட்டை மட்டும் உதாரணமா எடுத்துக்கிட்டா, நாம பொதுவா பிராமணர் என்று அழைக்கும் ஐயர், ஐயங்கார் தவிர்த்து இங்குள்ள சைவ முதலியார், சைவ பிள்ளை, நாட்டுக்கோட்டை செட்டியார், ரெட்டி, நாயுடு எல்லாருமே உயர்சாதியினர் தான்.

அவங்க எல்லாருக்கும் தான் இடஒதுக்கீடு, அதுவும் பொருளாதார அடிப்படையில். அதனால தான் இதை திமுக எதிர்க்குது.

*செந்தில்:*

அது தான் ஏன் எதிர்க்கனும்? இதே தமிழ்நாட்டுல

BC = 26.5%
BC (Muslim) = 3.5%
MBC = 20%
SC = 15%
SC (Arunthathiyar)= 3%
ST = 1%

மொத்தம் 69% இடஒதுக்கீடு இருக்கும் போது FC-க்கு 10% இருக்க கூடாதா அண்ணே?

கவுண்டமணி:
எவன்டா சொன்னது அப்படி? முதலில் இந்த இடஒதுக்கீடு என்பதே ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கு தரப்படும் உரிமை என்பதையும் அது ஒரு சலுகை அல்ல என்பதையும் நல்லா புரிஞ்சிக்கணும்

நம்ம தமிழ்நாட்டுல இந்த ஐயர், ஐயங்கார், சைவ முதலியார், சைவ பிள்ளை, நாட்டுக்கோட்டை செட்டியார், ரெட்டி, நாயுடு இவங்க எல்லார்கிட்டயும் தலைமுறை தலைமுறையா கல்வி கற்கும் உரிமை இருந்துச்சு, இருக்குது. நான் சொல்லுறது சரியா?

செந்தில்:
சரி தான் அண்ணே

கவுண்டமணி:
அதே உரிமை நம்மூரில் காலம் காலமாக வாழ்ந்துக்கொண்டிருக்கும்,
தேவர்களுக்கு இருந்துச்சா?
வன்னியர்களுக்கு இருந்துச்சா?
கவுண்டர்களுக்கு இருந்துச்சா?
நாடார்களுக்கு இருந்துச்சா?
பறையர்களுக்கும், பள்ளர்களுக்கும், சக்கிலியர்களுக்கு இருந்துச்சா?
இன்னும் உனக்கு தெரிஞ்ச வேற என்னென்ன சாதியிருக்கோ அவங்களுக்கெல்லாம் இருந்துச்சா?

செந்தில்:
இல்லை அண்ணே

கவுண்டமணி:
ஏன் ஒரு சிலருக்கு உரிமை இருந்துச்சு?
ஏன் ஒரு சிலருக்கு உரிமையில்லாம இருந்துச்சு?
காரணம் அவங்கவளோட சாதி.
பொருளாதாரம் இல்லை.

நாம இங்கே காலம் காலமா நில உடைமை சமுதாயங்கள் என்று சொல்லக்கூடிய தேவர்கள், வன்னியர்கள், கவுண்டர்கள் கூட பணமிருந்தும், சொத்திருந்தும் படிக்க உரிமை இல்லாம தான் இருந்தாங்க என்பதே உண்மை.

அதனால தான் அவங்களை BC, MBC என்று வகைப்படுத்தி அவங்களுக்கு முன்னுரிமை கொடுத்து படிக்க வைத்து டாக்டராகவும், இஞ்சினியராகவும், உருவாக்கி, அரசாங்கத்தில் பல வேலைகளில் உட்காரவைச்சிருக்கோம்.

செந்தில்:
சரி அண்ணே

கவுண்டமணி:
அதே சமயத்தில் OC என்று வகைப்படுத்தப்பட்டுள்ள ஐயர், ஐயங்கார், சைவ முதலியார், சைவ பிள்ளை, நாட்டுக்கோட்டை செட்டியார், ரெட்டி, நாயுடு சாதியில் பிறந்தவங்க எல்லாம் என்ன தான் வறுமையில் இருந்தாலும் சில சாதிக்கென்றே விதிக்கப்பட்டிருக்கும் வேலைகளை செய்யவே மாட்டாங்க

செந்தில்:
புரியல அண்ணே

கவுண்டமணி:
உனக்கு புரியுற மாதிரி சொல்லுறேன் கேளு.
என்னைக்காவது இந்த OC பிரிவை சேர்ந்த ஏழைகளை பிணம் எரிக்கும் வேலையில் நீ பார்த்திருக்கியா?

செந்தில்:
இல்லை அண்ணே

கவுண்டமணி:
முடிவெட்டும் வேலையை செய்வதை பார்த்திருக்கியா?

செந்தில்:
இல்லை அண்ணே

கவுண்டமணி:
அட அருந்ததியர் மாதிரி மலம் கூட அள்ள வேண்டாம், இந்த பஸ் ஸ்டாண்டில் இருக்குதே கக்கூசு அதில் டோக்கன் போடும் இடத்திலாவது பார்த்திருக்கியா?

செந்தில்:
இல்லை அண்ணே

கவுண்டமணி:
பானை செய்வதையோ, கொளுத்து வேலை செய்வதையோ, குப்பை அள்ளுறதையோ பார்த்திருக்கியா?

செந்தில்:
இல்லையே அண்ணே

கவுண்டமணி:
அதுல இருக்குடா இந்த சமூகத்தோட சூட்சமம்.

நல்ல கேட்டுக்கோ.

நீ பொறந்தப்புறம் தான்டா உனக்கு பேரு வைப்பாங்க...ஆனா இந்த சாதி...நீ உங்கம்மா வயித்துல கருவா உருவாகிடும் முதல் நாளே உறுதி செய்யப்பட்டு விடுகிறது.

உன் பேர் உனக்கு பிடிக்கலைன்னா நீ மாத்திக்கலாம், ஆனா உன் சாதி உனக்கு பிடிக்கலைன்னு நீ மாத்திக்க முடியாது.

செந்தில்:
ஆமாம் அண்ணே

கவுண்டமணி:
அப்போ நம்ம மாநிலத்துல பிறந்த ஒருவனுக்கு நிலையான இழிவு எது? அவன் பணமா? சாதியா?

செந்தில்:
சாதி தான் அண்ணே

கவுண்டமணி:
உண்மை நிலைமை இப்படியிருக்கும் போது, இதில் ஏன் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு கொண்டு வரனும்?

செந்தில்:
அப்போ உயர் சாதி ஏழைகளுக்கு வழியே இல்லையா அண்ணே?

கவுண்டமணி:
அடேய் இந்தியாவில் உள்ள சமூக ஏற்றத் தாழ்வுகளை நீக்குவதற்காகத்தான் இடஒதுக்கீடு, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்கு இல்லை.

செந்தில்:
ஏன் அண்ணே?

கவுண்டமணி:
போன வருஷம் பணக்காரனாக இருந்தவன் இந்த வருஷம் ஏழையாவதும்
இந்த வருஷம் ஏழையா இருக்கிறவன் அடுத்த சில வருஷத்துல பெரும் பணக்காரன் ஆவதையும் நாம பார்த்திருக்கோமோ?

செந்தில்:
நிறைய பார்த்திருக்கோமே அண்ணே

கவுண்டமணி:
எங்க? போன வருஷம் SC ஆக இருந்து, இந்த வருஷம் FC ஆனவனையோ
இந்த வருஷம் FC ஆக இருந்து அடுத்த வருஷம் MBC ஆகப்போகும் ஒருவனையும் உன்னால் காட்டமுடியுமான்னு சொல்லு

செந்தில்:
அது எப்படி அண்ணே முடியும்?

கவுண்டமணி:
முடியாது இல்லே!
அது தான் வர்ணாஸ்ரமம்...
தமிழ்நாட்டில் பிறந்த ஒவ்வொருவனுக்கும்
சாதி நிலையானது (Constant Factor)
பொருளாதாரம் மாறிக்கொண்டே இருப்பது (Variable Factor)

அதனால இடஒதுக்கீடு என்பது Constant Factor ஆன சாதியை வைத்து மட்டுமே இருக்க முடியும், Variable Factor ஆன பொருளாதாரத்தை வைத்து அல்ல

செந்தில்:
எல்லாம் சரி அண்ணே, திரும்பவும் அதே கேள்வி தான்...அப்போ உயர் சாதி ஏழைகளுக்கு எப்படி தான் உதவுவது?

கவுண்டமணி:
ஏன் உதவ முடியாது?
எங்க தலைவர் கலைஞர் கொண்டு வந்தாரே...
முதல் தலைமுறை பட்டதாரிக்கு கூடுதலாக 5 மார்க்...
அதை கொண்டு வாங்க.
கலைஞராவது தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டும் சாதி வித்தியாமில்லாம 5 மார்க் தானே கொடுத்தார்...
உனக்கு தான் 56" இருக்கே!
நீ இந்தியா முழுக்க எல்லா மாணவர்களுக்கும் 10 மார்க் கொடு

இந்தியாவில் உள்ள அனைத்து சாதியை சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரிக்கு அது BE, MBBS, Bsc, MSc, Mphil, MBA, MCAன்னு எந்த படிப்பாக இருந்தாலும் 25 வயது வரை முழுக்க முழுக்க அரசு செலவில் தான் என்று திட்டம் கொண்டு வாங்க

செந்தில்:
என்னண்ணே நீங்க என்னலாமோ சொல்லுறீங்க?
நீங்க தான் 69% வச்சுக்கிட்டு இருக்கீங்களே! ஒரு 10% போன என்ன குறைஞ்சிடப் போகுது?

கவுண்டமணி:
அடேய் எல்லா BC, MBC, SC & ST மாணவர்களும் அந்த 69 சதவிகிதத்தில் மட்டும் தேர்வாகி கல்லூரிகளுக்கு போவதில்லை.

General Category-ல FC, BC, MBC, SC & ST மாணவர்கள் எல்லாரும் தான் நல்ல மார்க் எடுத்தா தேர்வாகுறாங்க.
அந்தளவுக்கு அதிகமான Cut-Off எடுக்கவில்லைன்னாலும் அதை விட கொஞ்சம் கம்மியா மார்க் எடுத்தவங்க தான் இந்த 69 சதவிகிதத்தில், அதாவது Reserved Category-ல தேர்வாகுறாங்க.

இப்போ நேரடியா General Category-ல  10% FCக்குன்னு கொடுத்தா அது நல்ல மார்க் எடுத்திருக்கும் BC, MBC, SC & ST மாணவர்களை மறைமுகமாக BC, MBC, SC & ST-க்கான 69% Category-குள்ள தள்ளும். அதனால நேரடியாக பாதிக்கப்படப்போறது BC, MBC, SC & ST மாணவர்கள் தான்.

புரிஞ்சுதா?

செந்தில்:
புரியுது. ஆனா இன்னும் ஒரு சந்தேகம்

கவுண்டமணி:
நீ என்ன கேட்பேன்னு எனக்கு தெரியும், இருந்தாலும் பரவாயில்லை...அதை நீயே கேளு

செந்தில்:
ஏன்ணே...அது ஏன்? BC, MBC, SC & ST மாணவர்கள் மட்டும் General Category-லையும் உள்ள வரணும்? அவர்களுக்கான Reserved Category-லையும் உள்ள வரணும்? FCக்கு மட்டும் 10% கொடுத்தா அதை தப்புன்னு சொல்லுறீங்க?

கவுண்டமணி:
ஏன்னா...நம்ம தமிழ்நாட்டோட மக்கள் தொகையில் FC மட்டும் ஒரு 5-லிருந்து 6 சதவிகிதத்தை தாண்டாது. ரொம்பவே அதிகபட்சமா கணக்கு பண்ணாக்கூட 10 சதவிகிதத்தை தாண்டவே தாண்டாது. மீதம் 90 சதவிகித மக்கள் FC அல்லாத BC, MBC, SC & ST மக்கள் தான்.

ஒரு மாநிலத்தோட மக்கள் தொகையில்
90% இருக்கும் BC, MBC, SC & ST மக்களுக்கு 69 சதவிகித இடஒதுக்கீடு என்பதும்
10% இருக்கும் இதர FC மக்களுக்கு அதே 10% இட ஒதுக்கீடு என்பதும்
சரியா?

செந்தில்:
அப்போ இதுக்கு என்ன தான் அண்ணே வழி?

கவுண்டமணி:
ஏன் வழியில்லை?
அது தான் சாதியவாரியான கணக்கெடுப்பு நடத்தி எந்த சாதியில் எத்தனை பேர் இருக்காங்கன்னு Data வச்சிருக்காங்களே!

இந்த General Category என்பதையே மொத்தமா ஒழித்துவிட்டு இருக்கும் 100% கல்வியையும், வேலை வாய்ப்பையும் மக்கள் தொகை அடிப்படையில் FC, BC, MBC, SC & ST மக்களுக்கு சாதிய அடிப்படையில் பிரிக்கட்டுமே!

யார் வேண்டாம்ன்னு சொல்ல போறாங்க?

செந்தில்:
இவ்வளவு குழப்பம் இருக்கும் போது எதுக்குண்ணே இதை ராத்திரியோட ராத்திரியா கொண்டு வந்தாங்க?

கவுண்டமணி:
இந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய FC பிரிவுக்கு 10% இடஒதுக்கீடு என்பதே நம்ம 56 இன்ச் மோடு முட்டியின்  இன்னொரு ஃபிராடுத்தனம் தான்.

ஏன்னா இதே 10% சட்டத்தை 1991ல் நரசிம்மராவ் அரசு கொண்டு வர முயன்று, 1992ல் உச்சநீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் அனுமதி மறுக்கப்பட்டது. அதுல ரொம்ப தெளிவா Reservation is for ONLY for Socially and Educationally Oppressed Communities and not to Economically Weaker Sections என்று சொல்லியிருக்காங்க.

இது மத்தியரசுக்கு தெரியாதா? நல்லா தெரியும். ஆனாலும் கொண்டு வந்திருக்காங்க.

செந்தில்:
அது தான் ஏன் அண்ணே?

கவுண்டமணி:
வேற என்ன? மே மாசம் வரப்போகும் மக்களவை தேர்தல் தான். 5 ஆண்டு முழு பலத்தோட ஆட்சியில் இருந்திருந்தாலும் மக்களிடம் ஒட்டு கேட்டு போகும் போது சொல்லுறதுக்கு ஒரு சாதனையும் செய்ய வக்கில்லை. இனி இதை பெருசா பேசுவாங்க.

இப்போ பாரு நேத்துல இருந்து ரஃபேல் பத்தி எல்லாரும் பேசுறதை விட்டுட்டு இதை பத்தி பேச ஆரம்பிச்சுட்டோமா? அது தான் அவங்களுக்கு தேவை. இனி எல்லாரும் இது சரியா? தவறா? என்பது பற்றிய ஆராய்ச்சியில் மூழ்கிவிடவே வாய்ப்பு அதிகம்.

செந்தில்:
எல்லாம் சரி தான் அண்ணே. ஆனா காங்கிரஸ் ஆதரிக்குறதை பத்தி நீங்க எதுவும் சொல்ல மாட்டுறீங்களே!

கவுண்டமணி:
அடேய்
திமுக தமிழ்நாட்டில் மட்டும் இருக்கும் மாநில கட்சி
காங்கிரஸோ எல்லா மாநிலத்திலும் இருக்கும் அகில இந்திய கட்சி

நாங்க எங்க மாநிலத்தையும், மக்களையும் முன் வைத்து தான் அரசியல் செய்ய முடியும்
காங்கிரஸ் ஒட்டுமொத்த இந்தியாவையும் முன் வைத்து தான் அரசியல் செய்ய முடியும்

தமிழகத்துக்கு சரியாக இருப்பது ஒட்டு மொத்த இந்தியாவுக்கே சரியாக இருக்கனும் என்று எந்த கட்டாயமும் கிடையாது.

நமக்கு எது வேண்டும்? எது வேண்டாம்? என்ற முடிவு எடுக்கும் அதிகாரம் இருந்தால் மட்டுமே நமக்கு போதும்.

இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு, அந்தந்த மாநில மக்களுக்கு என்ன வேண்டும்/வேண்டாம் என்று நாம முடிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

செந்தில்:
இப்போ என்ன தான் சொல்லுறீங்க?

கவுண்டமணி:
தமிழ்நாட்டை பொறுத்தவரை

எல்லா சாதியினருக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என்று சொல்லுபவனை நம்பு!
ஏன்னா அவன் உன் நண்பன்!

எவனுக்கும் இடஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்லுபவனையும் நம்பு!
ஏன்னா அவன் உன் நேரடி எதிரி, பேசிக்கலாம், போட்டி போட்டு ஜெயிக்கலாம்.

ஆனா....
இந்த பொருளாதார இட ஒதுக்கீடு வேண்டும் என்று சொல்பவனை மட்டும் நம்பாதே!

பூட்டக்கேசு ஆயிடுவ

No comments:

Post a Comment