Lafees Shaheed
2016-01-21
இஸ்லாமிய பிரச்சார வரலாற்றில் இஹ்வானிய தஃவாவுக்கு என்று ஒரு பிரத்யேக இடம் உள்ளது.
கிலாபா ராஷிதாவின் பின்னரான பரம்பரை ஆட்சிகளின் காலப் பிரிவுகளில் - குறிப்பாக உமையாக்களின் ஆட்சியில் - இஸ்லாமியப் பிரச்சாரம் பற்றிய பொறுப்பில் இருந்து முஸ்லிம் அரசுகள் தம்மை விடுவித்துக் கொண்டன. இதன் பொழுது முஸ்லிம் உம்மாவின் அறிஞர்களே இஸ்லாத்தின் உயிரோட்டத்தை பாதுகாக்கும் பொறுப்பையும், முஸ்லிம் சமூகத்தின் கட்டுக்கோப்பை பலப்படுத்தும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டனர்.
இமாம் அப்துல் காதிர் ஜீலானியின் பிறகு சூபி தரீக்காக்கள் எனும் ஆன்மிக வழியமைப்புகள் உருவாகின. இஸ்லாத்தின் பரம்பலில், சூபி மரபுகளின் பங்களிப்புகள் குறித்து வரலாற்று பதிவுகள் மிகவும் வெளிப்படையானவை மற்றும் இலகுவில் பெற்றுக் கொள்ளக் கூடியவை.
இந்த தொடரில் ஐரோப்பிய காலனிய யுகத்தில் வந்தவையே வட ஆப்பிரிக்க ஸனூஸி அமைப்பு, சூடானில் அல் மஹ்தி இயக்கம், இந்தியாவின் ஸெய்யித் அஹ்மத் ஷஹீதின் ஜிஹாத் அமைப்பு போன்றன.
மிக வெளிப்படையாகவே ஏகாதிபத்திய எதிர்ப்பினை கொண்டு, முஸ்லிம் உலகினை காலனியத்தின் ராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கும் திட்டத்தை கொண்டிருந்த ஆயுத போராட்ட அமைப்புகள் இவை.
அல்ஜீரியாவின் அமீர் அப்துல் காதிர் ஜஸாயிரியும், இந்தியாவின் ஸெய்யித் அஹ்மத் ஷஹீதும், லிபியாவின் அஹ்மத் இப்னு அலி அஸ் - ஸனூஸியும் காலனிய எதிர்ப்பின் முக்கோண ஆளுமைகளாவே ஒரு காலத்தில் திகழ்ந்தனர்.
இந்த வரிசையில் நவீன வரலாற்றின் இஸ்லாமிய பிரசாரத்தின் கொடுமுடியாக தோன்றியவர், இமாம் ஹஸன் அல் பன்னா. காலனியத்துக்கு எதிரான முன்னைய போராட்டங்களின் போதாமையின் இடைவெளியில், ஆயுதப் போராட்டம் வலுவிழந்து சென்ற ஒரு காலப்பகுதியில் தோன்றியதே, இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கம்.
இது இந்திய உபகண்டத்தில் மெளலானா அபுல் அஃலா மெளதூதியினால் உருவாக்கப்பட்ட ஜமாஅதே இஸ்லாமி, துருக்கிய இஸ்லாமிய இயக்கங்கள் போன்றவற்றிக்கும் பொருத்தம் என்றாலும் இஹ்வானிய சிந்தனையினதும், அதன் நிறுவனர் ஷெய்க் பன்னாவின் தாக்கத்தின் பரப்பெல்லை விஸ்தீரணம் பிரமாண்டமானது.
இஹ்வானிய அமைப்பும், அதன் சிந்தனையாளர்களும் இல்லாவிடின் முஸ்லிம்களின் தற்கால நிலை இன்னும் அதலபாதாளத்தில் இருக்கும் என்பது தான் உண்மை.
இஸ்லாமிய வரலாறு என்பது தொடர்ந்தும் சலசலத்து ஓடும் நதி. இஸ்லாமிய வரலாற்றில் இயங்கியலை உயிர்ப்புடன் வைத்திருப்பதே, இஸ்லாமிய பிரச்சார முனைவுகளும், எத்தனங்களும்தான். வரலாற்றில் நிகழ்ந்த எந்த பிரச்சார முயற்சியும் முற்றாக காலாவதியாகிப் போன ஒரு விடயம் அல்ல.
சூபி தரீக்காக்களின் பங்களிப்புக்களோ, முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபோ, காலனியத்திற்கு எதிரான ஜிஹாத் அமைப்புகளோ எதுவாக இருந்தாலும் அவை அனைத்தையும் தொகுத்துக் கொண்டே எம்மால் சமகால தஹ்வா முனைவுகளை எடை போட முடியும். ஹஸன் அல் பன்னாவினை வாசிப்பது ஒரு யுகத்தின் வரலாற்றையே அறிந்து கொள்வதற்கு சமமானது, அது அவசியமானதும் கூட.
https://m.facebook.com/story.php?story_fbid=1168968486615245&id=100005063134008
No comments:
Post a Comment