Sunday, January 6, 2019

பெண்கள் வீடுகளில் தொழுது கொள்வது தான் சிறந்ததா? - லபீஸ்

Lafees Shaheed
2019-01-05

நபித் தோழர்கள் பொதுவாக மார்க்க விடயங்களில் சாதாரணமாவற்றை விட சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து காரியமாற்றுவார்கள். சிறந்தவற்றை விட மிகச் சிறந்த விடயங்களை நோக்கி நகர்வார்கள். நபித் தோழர்கள் மார்க்கம் குறித்த உயர் அவதானம் கொண்டவர்கள் எனும் வகையில் இது இயல்பான ஒரு விடயமே.

நபிகளாரை பொறுத்தவரையில் நபித் தோழர்கள் அளித்த மானுட கெளரவம் என்பது நபிகளாரின் சொல், செயல், அங்கீகாரத்தை அதனதன் இடத்தில் வைத்து நூறு சதவீதம் பின்பற்றுவதே.

'பெண்கள் வீடுகளில் தொழுது கொள்வது தான் சிறந்தது' என்று இருப்பின் ஸஹாபா சமூகத்தின் பெண் அங்கத்தவர்கள் மஸ்ஜித்திற்கு அதிகம் சென்று தொழுகை நடாத்தியது ஏன்?

நபிகளார் 'சிறந்தது' என்று ஒன்றை கூறி இருக்க நபித் தோழர்கள் (இந்த இடத்தில் தோழியர்கள்) அதனை விட அந்தஸ்து குறைந்த ஒரு விடயத்தை தேர்ந்து கொண்டார்கள் என்று நினைப்பது எவ்வளவு தூரம் சரியானது?

உமர் இப்னுல் கத்தாப் (ரழி) தனது மனைவியர்களில் ஒருத்தர் மஸ்ஜித்திற்கு செல்வதை தனிப்பட்ட முறையில் விரும்பவில்லை. ஆனால் அந்த மனைவி 'அல்லாஹ் வின் அடியார்களான பெண்கள் மஸ்ஜித்திற்கு செல்வதை தடுக்காதீர்கள்' எனும் நபிமொழியை மேற்கோள் காட்டி உமரின் கருத்துக்கு இணங்கவில்லை. கலீபா உமர் கொலை செய்யப்படும் பொழுது கூட மஸ்ஜிதில் அந்த மனைவி இருந்தார் என்பது தான் வரலாறு.

'பெண்கள் வீடுகளில் தொழுது கொள்வது தான் சிறந்தது 'என்று இருந்து இருப்பின் உமர் (ரழி) அதனை மேற்கோள் காட்டி தனது மனைவியரை வீட்டிலேயே இறுத்தியிருக்க முடியும். ஆனால் அப்படி நடைபெறவில்லை.

நபித் தோழர் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) 'அல்லாஹ்வின் அடியார்களான பெண்கள் மஸ்ஜித்திற்கு செல்வதை தடுக்காதீர்கள் ' எனும் நபிமொழியை அறிவித்த பொழுது இப்னு உமரின் மகன் பிலால் பித்னா வரும் என்று கூறி அதனை மறுத்தார். இறைதூதரின் ஹதீஸை தனது மகன் மறுப்பதாக அதனை கண்டித்த இப்னு உமர் (ரழி) மரண பரியந்தம் வரை தனது மகனுடன் பேசவில்லை.

' பெண்கள் வீடுகளில் தொழுது கொள்வது தான் சிறந்தது' என்று ஹதீஸ் இருந்திருப்பின் இப்னு உமரின் மகன் அதை மேற்கோள் காட்டி தனது தந்தையுடன் வாதாடி இருக்க முடியும். ஆனால் அப்படி நடைபெறவில்லை.

உண்மையில் 'பெண்கள் வீடுகளில் தொழுது கொள்வது தான் சிறந்தது' எனும் நபிமொழி நபித் தோழர்களின் சமூகத்தில் பரவலாக புழக்கத்தில் இருக்கவில்லை. மேற்போந்த உமர் (ரழி) - அவரது மனைவி மற்றும் அப்துல்லாஹ் இப்னு உமர் - அவரது மகன் பிலால் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் சுட்டுவது அதனைத்தான்.

' பெண்கள் வீடுகளில் தொழுது கொள்வது தான் சிறந்தது' எனும் அறிவிப்பில் வரும் 'சிறந்தது' எனும் பதம் அறிவிப்பாளர் வரிசையில் உள்ள ஒருவரின் தவறினால் ஹதீஸில் தவறுதலாக கலந்து விட்ட ஒரு வாசகமாக இருக்கலாம். ஹதீஸ்களில் இப்படியான விபத்துகள் ஏற்படுவது நிறுவப்பட்ட ஒன்று. வரலாறு அதற்கு சாட்சி.

' பெண்கள் வீடுகளில் தொழுது கொள்வது தான் சிறந்தது' என்பதை பெண்களின் வீடு சார்ந்த பொறுப்புகளை கவனத்தில் கொண்டு அவர்களுக்கு நபிகளார் அளித்த ஒரு உளவியல் விடுதலை, சலுகை என்று எடுக்க வேண்டும் எனும் உஸ்தாத் யூசுஃப் அல் கர்ளாவியின் கருத்தை தேர்ந்து கொண்டாலும் சரி,

பெண்கள் வீடுகளில் தொழுது கொள்வது தான் சிறந்தது எனும் ஹதீஸில் வரும் 'சிறந்தது' எனும் வாசகம் தவறுதலாக ஹதீஸில் கலந்து விட்ட ஒன்று என்று எடுத்தாலும் சரி,

எப்படி எடுத்துக் கொண்டாலும் சரி வாக்கியவாத நோக்கில் பெண்கள் மஸ்ஜித்திற்கு செல்வதை விட வீட்டில் தொழுது கொள்வது தான் சிறந்தது என்று பொருள் கோடல் செய்ய முடியாது. ஏனெனில் நபித் தோழியர்கள் நபிகளாரின் காலத்தில் மஸ்ஜித்திற்கு தான் வந்து தொழுதார்கள். இதுதான் பரவலான சமூக நடைமுறை.

சிறந்தது என்று(வீடுகளில் தொழுது கொள்வது) நபிகளார் கூறியதை விட்டு விட்டு சாதாரணமான ஒன்றை (மஸ்ஜித்திற்கு சென்று தொழுவது)நபித் தோழர்கள் தேர்ந்து கொண்டார்கள் என்று நினைப்பது அடிப்படையில் அந்த ஸஹாபாக்கள் சமூகத்திற்கே இழுக்கு...!

#இங்கிருந்து அறிவோம்
#பாதையை_செப்பனிடல்

https://www.facebook.com/100005063134008/posts/1158084491036978/

No comments:

Post a Comment