Saturday, January 5, 2019

விவசாயி என்னும் புனித பிம்பம்

Prabhu RS
2016-01-05

*கேள்வி:*

இணையத்தில் விவசாயிகளை ஏதோ அரிய உயிரினம் போலவும், அப்பிராணிகளாகவும், சூதுவாது தெரியாத பச்சை மண்ணு எனவும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், இடைத்தரகர்கள், கார்ப்பரேட் கம்பெனிகள் அவர்களை ஏமாற்றி சுரண்டுவதாகவும், தவறான பாதையைக் காட்டுவதாகவும் பலரும் எழுதி வருகின்றனர். அது எந்தளவுக்கு உண்மை என கொஞ்சம் விளக்கமுடியுமா?

*பதில்:*

நம் பொதுமக்களுக்கும், ஊடகத்துக்கும் எப்போதுமே ஒரு புனித பிம்பம் தேவை. அஃது ஊழல் ஒழிப்பு சமூக அக்கறையாளர்களாக இருக்கலாம், நேர்மையான ஐஏஎஸ் அதிகாரிகளாக இருக்கலாம் அல்லது இயற்கை விவசாயிகளாகவும் இருக்கலாம்.

கொஞ்ச நாளைக்கு அவர்கள் மட்டுமே புனிதர்கள் மற்றவர்கள் உதவாக்கரைகள் என அவர்களாகவே முடிவுசெய்துகொண்டு கண்டமேனிக்கு பேச, எழுத ஆரம்பிப்பார்கள். இப்போதெல்லாம் தொலைக்காட்சிகளில் உட்கார்ந்து விவாதமும் செய்கிறார்கள்.

விவசாயிகளும் மற்ற தொழிலில் இருப்பவர்களைப்போல உணர்ச்சிகளால் கட்டுப்படுத்தப்பட்ட மனிதர்கள்தாம். அவர்களும் கோபம், குரோதம், ஆசை, பேராசை, போட்டி, பொறாமை, துரோகம், காமம், ஆணவம், அகங்காரம் என பலவற்றாலும் ஆட்பட்டு எதிர்வினைகளைப் புரிகிறார்கள்.

கிராமத்துக்குள் சென்றாலே மோர் கொடுத்து, கொஞ்சம் வயக்காட்டையும் உங்கள் பெயரில் எழுதிவைத்து அவர்கள் வீட்டுப்பெண்ணை திருமணமும் செய்து தருவார்கள் என்பதெல்லாம் தமிழ் திரைப்படங்களில் மட்டுமே வரும்.

ஒருவேளை நீங்கள் விவசாயத்துறை, வங்கி, பாசனம், மின்சாரம் அல்லது கால்நடைத்துறை அதிகாரியாக giving end-இல் இருக்கும்பட்சத்தில் இருந்தால் கிடைக்கும் வரவேற்பை மிகைப்படுத்தி புரிந்துகொண்டு ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று சிலாகித்துக்கொள்ளலாம்.

விவசாயிகளுக்கு கடன்தர வங்கிகள் முன்வருவதில்லை என்று பொத்தாம் பொதுவாக சொல்பவர்கள், கடனை வசூலிக்கச் செல்லும் அதிகாரிகளின் குமுறலை எப்போதாவது கேட்டுப் பார்த்திருப்பார்களா என்பது சந்தேகமே.

எதற்கெடுத்தாலும் இடைத்தரகர்கள் சுரண்டுகிறார்கள் எனக் கதறும் இணைய சமூகம் அந்த தரகர்களில் 90% விவசாயிகள்தான் என்பதையும் கவிஞர்களோ, எழுத்தாளர்களோ திடீரென மஞ்சள் புரோக்கராகவோ, பால்காரராகவோ மாறமுடியாது என்பதை உணருவதில்லை.

மாசு உண்டாக்கும் ஆலை முதல் மீத்தேன் எடுப்பதுவரை அனைத்து தேவைகளுக்கும் நிலம் ஊரகப்பகுதிகளில் வாங்கிக்கொடுப்பது Ernest & Young, PWC போன்ற நிறுவனங்கள்தான் என்று நினைத்துக்கொண்டு இருப்பார்களாட்டம்.

வேறு ஏதாவது ஓர் உதாரணம் வேண்டுமே என நீங்கள் கேட்கக்கூடும். குறுகியகால நெல் இரகங்களில் தமிழகத்தில் பல முன்னனி இரகங்கள் இருக்க  பாப்பட்லா, BPT எனவும் ஆந்திரா பொன்னி என்றும் அழைக்கப்படும் நெல் இரகத்தை, அரிசிக்கு டிமான்ட் இருக்கிறது என்பதற்காக அவர்களாகவே இங்கு அறிமுகப்படுத்திக்கொண்டனர்.

அடுத்த மாநிலத்துக்கு அரிசியைக் கொண்டுசெல்ல இருக்கும் கட்டுப்பாடுகளில் கால்வாசிகூட விதைநெல்லைக் கொண்டுசெல்ல இல்லை. தமிழகத்தில் விவசாயத்துறையால் பரிந்துரைக்கப்படாத அந்த இரகம் குலைநோய்க்கு (Paddy Blast) மிக எளிதாக வசப்படும் (நைட்ரஜன் கொஞ்சம் அதிகமானால் washout-தான்). அதைக் கட்டுப்படுத்த தெளிக்கப்படும் Tricyclozole இந்த ஆண்டு 30-40% வரை கூடுதலாக விற்கக்கூடும் என சந்தை நிலவரம் தெரிவிக்கிறது.

ஒருவேளை அது epidemic ஆகும்பட்சத்தில் மர்மநோய் எனவும், அதைக் கட்டுப்படுத்த டன் கணக்கில் பூஞ்சானக்கொல்லியை விற்கும் பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகள் எனவும், நோய் தாக்கக்கூடிய இரகங்களை விற்க துணைபோகும் விஞ்ஞானிகள் எனவும், உள்ளூர் விதைகளைத் திட்டமிட்டு அழித்ததால் வந்த விளைவு எனவும் ஒரு கட்டுரை எழுதினால் வைரலாகி தெறி ஹிட் கொடுக்குமல்லவா? (பன்னாட்டு நிறுவனங்கள் இந்த ஜெனரிக் மூலக்கூறை விட்டுப்போய் ஒரு தசமகாலம் ஆகிவிட்டது).

அலுவலகத்தில் இருந்தவாறு ACAC Critics (Air Conditioned room Arm Chair critics) எழுதித்தள்ளும் கட்டுரைகளாலும், அவர்களை சமூக அக்கறையாளர்களாகவும், அறிவுஜீவிகளாகவும் காட்டும் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளாலும் உங்கள் சமூக விழிப்புணர்வு கட்டமைக்கப்படுகிறது என்றால் அதில் பல ஆபத்துகள் இருக்கின்றன.

எதிர்காலத்தில் நீங்கள் ஏதேனும் திட்டங்களை செயல்படுத்த ஊரகப்பகுதிகளில் பணியாற்றும்போது வரக்கூடிய setback-கிற்கான தார்மீகப் பொறுப்பும் உங்களையே சாரும். ஏனென்றால் புனித பிம்பங்கள் என்பது வெறும் மயையே.

https://www.facebook.com/595298772/posts/10156333664228773/

No comments:

Post a Comment