Friday, January 18, 2019

அன்னை ஆயிஷா

Lafees Shaheed
2017-01-19

இறைதூதர் முஹ‌ம்ம‌த் (ஸல்) மறுவிலா முழுமதி. விசுவாசிகளின் அன்னையரான ஆயிஷா (ரழி) அவர்களும் மறுவிலா முழுமதி தான்.

நபிகளாரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் பயின்றாலும் தன்னுடைய அதிகப்படியான கேள்விகளின் மூலமும் அதிகம் கற்றுக் கொண்டவர், அன்னை ஆயிஷா.

"இதற்கு என்ன அர்த்தம் இறைத்தூதரே? ' என்ற கேள்வியை நாம் ஆயிஷாவின் ஊடாக அடிக்கடி நபி மரபுகளை பதிந்திருக்கும் தொகுப்புகளில் காண்கிறோம்.

தன்னுடைய இளம் வயது தரும் உத்வேகம் மற்றும் அதனூடான அவசரம் போன்ற காரணங்களினால் நபிகளாரின் மெல்லிய கண்டனங்களையும் ஆயிஷா (ரழி) எதிர் கொள்ள நேரிட்டது.

ஆனால் அந்த கண்டனங்கள் கூட அன்னை ஆயிஷாவின் மகத்துவத்தின் அடையாளம் தான். ஏனெனில் அவர் இறைத்தூதரின் மனைவியாக இருந்தாலும் ரத்தமும் சதையுமான பெண். தன் கணவர் மீது ஆழ்ந்த பிரியம் கொண்ட, காதலில் திளைத்த பெண். நபிகளாரின் ஏனைய மனைவியரின் மீது அவருக்கு கொஞ்சம் பொறாமை இருந்தது. ஆனாலும் அதனை தாண்டிய அன்பும், கண்ணியமும் இருந்தது. நபிகளாரின் ஏனைய மனைவியரின் சிறப்புகள் குறித்த ஹதீஸ்களை அன்னை ஆயிஷா அறிவித்து இருக்கிறார். ஆனாலும் நபிகளாரின் மனதில் அன்னை கதீஜாவுக்கு இருந்த உயர் கண்ணியமும், உன்மத்தம் நிறைந்த காதலும் தனக்கு கடைசி வரையில் சித்திக்காது என்ற ஏக்கமும் ஆயிஷா (ரழி) அவர்களுக்கு இருந்தது. இந்த மானுட பண்பு தான் அன்னை ஆயிஷாவின் விசேஷம். இஸ்லாமிய வரலாறு கூறும் செய்தி ஒன்றே ஒன்றுதான். அது அன்னை ஆயிஷாவை நிகர்த்த அறிவாளுமை உலக வரலாற்றில் இல்லை என்பது..

அன்னை ஆயிஷாவுக்கு கிடைத்தது போன்ற கணவர் ஏனைய சில பெண்களுக்கும் கிடைத்துத் தான் இருக்கிறார். ஆனால் அன்னை ஆயிஷா போன்ற ஒரு மனையாள் நபிகளாரைத் தவிர ஏனைய எந்தக் கணவருக்கும் கிடைக்கவில்லை.

https://www.facebook.com/100005063134008/posts/1167436873435073/

No comments:

Post a Comment