Sunday, July 15, 2018

கும்பலாகச் சேர்ந்து முஸ்லிம்களை அடித்துக் கொல்வதை ஏன் பயங்கரவாதம் என்கிறோம்?

கும்பலாகச் சேர்ந்து முஸ்லிம்களை அடித்துக் கொல்வதை ஏன் பயங்கரவாதம் என்கிறோம்?

துல் கஅதா 01, 1439 (2018-07-14) இர்ஃபான் அஹமது

2015ல் நிகழ்ந்த முஹம்மது அக்லாக்கின் படுகொலையையொட்டி பொதுவெளியில் எழுந்த கண்டனக் குரல்கள் சில மாதங்கள் நீடித்தன. அவை இந்தியாவில் “சகிப்பின்மை” தொடர்பான விவாதத்தைக் கிளப்பின. 2017ல் மதுரா செல்லும் ரயிலில் ஜுனைத் கான் கொல்லப்பட்டது ஒரு வாரத்துக்குத் தலைப்புச் செய்தியாக ஆனது. இந்த மாதம் உத்தரபிரதேசத்தின் ஹாப்பூரில் காசிம் அடித்தே  கொலை செய்யப்பட்டிருப்பது செய்திகளில் அரிதாகவே இடம்பெற்றிருக்கிறது.

இவை மாதிரியான குற்றங்கள் வழமையானவையாக மாறும்போது, அவற்றையொட்டி மக்களிடம் எழும் கோபம் சிதறுண்டு போய்விடுகிறது.

பசுவதையைத் தடுக்கிறோம் என்கிற சாக்கில் இந்துக் கலவரக் கும்பல்கள் முஸ்லிம்களைக் கொன்று குவிப்பதற்கு எதிராக மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் செய்தது என்ன? சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரமொன்று பசுவின் பெயரால் 60 வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகக் கூறுகிறது. அவற்றில் 97% 2014க்குப் பிறகு நடந்திருக்கின்றன. அவற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 84% முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் தொடர்பாக பேரா. இர்ஃபான் அஹமத், ஹஃப்பிங்டன் போஸ்ட்க்கு அளித்த பேட்டியை இங்கே தருகிறோம். பேரா. இர்ஃபான் அஹமத் ஜெர்மனியின் Max Planck நிறுவனத்தில் சமயம் மற்றும் இனப் பன்மைத்துவம் குறித்த ஆய்வில் ஈடுபட்டுவரும் மூத்த ஆராய்ச்சியாளர். இத்தகைய கொடூரமான பொதுக் குற்றங்கள் இந்தியாவில் எங்கனம் வாடிக்கையாகி விட்டிருக்கின்றன என்பதையும், சிவில் சமூகம் அதை எளிதில் கடந்துபோகும் நிலைமை இங்கே உருவாவது குறித்தும் உரையாடுகிறார்.

இர்ஃபான் அஹமது பிஹார் மாநிலத்திலுள்ள தனது சொந்தக் கிராமமான தம்ரியில் இஸ்லாமியா அரபியா மதரசாவில் படித்து, பிறகு பாட்னாவின் பி.என். கல்லூரி, புது டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியா, ஜேஎன்யூ ஆகிய பல்கலைக்கழகங்களில் தனது மேற்படிப்பைத் தொடர்ந்தவர். ஐரோப்பிய, ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்களில் அரசியல் மற்றும் மானுடவியல் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார். Islamism and Democracy in IndiaReligion as Critique: Islamic Critical Thinking from Mecca to the Marketplace ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

நேர்கண்டவர்: பெத்வா ஷர்மா.

இந்தியாவில் முஸ்லிம்களை அடித்தே கொல்வதை பயங்கரவாதச் செயல் என்கிறீர்களே, ஏன்?

இந்தியாவில் நிகழ்த்தப்படும் இந்தக் கும்பல் கொலைகள் முஸ்லிம்களுக்கு என்ன சொல்ல வருகின்றன? “நாங்கள் சொல்வதுபோல்தான் நீங்கள் வாழவேண்டும். இல்லையென்றால், உங்களுக்கு உயிர்வாழ உரிமை இல்லை.” இந்தக் கொலைகள் திரும்பத் திரும்ப நடக்கின்றன எனும்போது அவை புறத்தூண்டுதல்களின்றித் தன்னியல்பாக நடப்பவை அல்ல என்கிற பாடத்தைத்தான் நாம் அக்லாக், காசிம் போன்றோரின் சம்பவங்களிலிருந்து படித்திருக்கிறோம். ஆக்ஸ்ஃபர்ட் ஆங்கில அகராதியின்படி, பயங்கரவாதம் என்பது “அரசியல் நோக்கங்களுக்காக வன்முறையிலும் அச்சுறுத்தலிலும் ஈடுபடுவதாகும்.” இங்கே முஸ்லிம்கள் அடித்தே கொல்லப்படுவதை பயங்கரவாதத்தின் ஒரு வடிவம் என்றே நான் கருதுகிறேன். ஏனெனில், அவை குறிப்பிட்டவொரு நோக்கத்திற்காக அச்சத்தை ஏற்படுத்தவே நிகழ்த்தப்படுகின்றன. அந்த நோக்கம் அரசியல் தன்மையிலானது, தனிப்பட்ட ஒன்று அல்ல.

எப்படி இந்தப் பயங்கரவாதம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது?

பயங்கரவாதத்துக்குப் பல வடிவங்கள் உள்ளன. இஸ்லாமியப் பயங்கரவாதம் என்ற ஒன்று மட்டுமில்லை; அதற்கு இந்து வடிவம், யூத வடிவம், கிறிஸ்தவ வடிவம் அல்லது மதச்சார்பற்ற வடிவமும்கூட இருக்கிறது. நீங்கள் கருவிகளைக் கவனிக்கக் கூடாது, விளைவுகளைத்தான் பார்க்கவேண்டும். வெடிகுண்டுகள், ஏவுகணைகள், கார்பெட் குண்டு, கும்பல் படுகொலைகள் எனப் பல வழிகளிலும் அச்சத்தை உண்டாக்க முடியும்.

பயங்கரவாதத்தைப் பொறுத்த வரையில் அச்சம்தான் மையமானது. ரயிலில் உணவுப் பொதிகளைத் திறப்பதற்கே முஸ்லிம்கள் அஞ்சுகின்றனர். நான் எனது உணவுப் பொதியைத் திறந்து, அதில் இறைச்சி இருக்கும் பட்சத்தில், அது கோழி இறைச்சியாகவோ ஆட்டிறைச்சியாகவோ இருந்தாலும்கூட, அது பற்றி அங்கே ஒரு வதந்தி பரவி எனது உயிர் பறிக்கப்படலாம் என்று அஞ்சுகின்றனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எவ்வித அச்சமுமின்றி அவர்கள் தமது டப்பாவைத் திறந்து சாதாரணமாகச் சாப்பிட முடிந்தது. ஆனால் இப்போது (2017-18) ஏன் அஞ்ச நேருகிறது?

வேறு வகையான அச்சம் எதுவும் சமூகத்தில் நிலவுகிறதா?

இங்கே உள்ள இந்துக்கள் உள்ளிட்ட பெரும்பான்மை மக்கள் மத்தியிலும் அச்சம் நிலவுகிறது. அதை ‘கண்டும் காணாமை’ (Percepticide) என்று சொல்லலாம். அதாவது, ஒருவர் இறைச்சியைக் காரணம்காட்டிக் கொல்லப்பட்டால், எனது புரிதலின்படி, இங்குள்ள ஒரு சாமானிய இந்துவும் பீதியடையவே செய்வார். ஆனால் என்ன நடந்திருக்கிறது என்றால், அவர்கள் அச்சம் எனும் நிலையிலிருந்து ‘கண்டும் காணாமை’ என்றவொரு நிலைக்கு வந்துசேர்ந்திருக்கிறார்கள்; இந்த விஷயத்தைக் கவனிப்பதையே தவிர்க்கிற, அல்லது கொண்டுகொள்ளாத ஒரு நிலையை வந்தடைந்திருக்கிறார்கள். சமகால இந்தியாவில் இது முஸ்லிம்களுக்கு நேரும் அனுபவம். எனினும் இது முஸ்லிம்களுக்கு மட்டுமேயானதும் இல்லை. அச்சம் என்பது கண்டும் காணாமையின் (Percepticide) உள்ளார்ந்த அம்சம்.

எல்லோரும் அச்சத்திலிருப்பதாலேயே மௌனம் காக்கிறார்கள் என்கிறீர்களா?

அச்சம் இங்கு முதன்மையாக யார் மீது திணிக்கப்படுகிறது என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும்-முஸ்லிம்கள் மீது. எனினும் இது அவர்களோடு மட்டும் நின்றுவிடுவது இல்லை. நல்லெண்ணமும் நீதியுணர்வும் கொண்ட குடிமக்கள் என்ற இரண்டாம்நிலை மக்கள் தொகுதியினரும் இருக்கவே செய்கிறார்கள். நீதியும் நேர்மையும் எந்தவொரு சமூகத்தின் தனிச்சொத்தாகவும் இருக்க முடியாதுதானே.

நானும் நீங்களும் ரயிலில் பயணிப்பதாக வைத்துக்கொள்வோம். நான் எனது உணவுப் பொதியைத் திறந்து சாப்பிடுகிறேன். அந்தச் சமயத்தில் ஒருவர் என்னிடம் தவறாக நடந்துகொள்கிறார் என்றால், அதைப் பார்க்கும் நீங்கள் எப்படி எதிர்வினையாற்றுவீர்கள்? ஒருவேளை அதை நீங்கள் கண்டும் காணாதது போல், எதிர்வினையாற்றாமல் இருப்பீர்களென்றால் அது ஜனநாயகத்தின் மரணத்தைதான் நமக்கு உணர்த்தும்; அல்லது ஜனநாயகத்தை அதன் உண்மையான தன்மையுடன் நாம் பின்பற்றவில்லை என்பதைக் காட்டும். ஜனநாயக உணர்வுநிலை என்பது ஓட்டுப் போடுவதை மட்டுமே சார்ந்ததல்ல. நமது வெளிப்படைத் தன்மையோடும் நீதியுணர்வோடும் நேர்மையோடும் தொடர்புடையது அது.

இதற்கு இணையானவற்றை வரலாற்றில் காணமுடியுமா?

நவீன வரலாற்றைப் பொறுத்த வரை, இத்தகைய கும்பல் படுகொலைகளுக்குக் கனகச்சிதமான எடுத்துக்காட்டுகளை அமெரிக்காவில் காணலாம். ‘கு க்ளக்ஸ் க்ளான்’ (Ku Klux Klan) இயக்கத்தின் வெள்ளையின மேலாதிக்கப் பயங்கரவாதிகள் பலவீனர்களாயிருந்த கறுப்பர்களுக்கு எதிராக (குறிப்பாகத் தென் பகுதியில்) கடும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களாக இருந்தனர். சில வரலாற்றாசிரியர்கள் இவர்களை ஜனநாயகக் கட்சியின் பயங்கரவாதப் பிரிவினர் என்றுகூட விளிக்கிறார்கள். தற்காப்புக்காகவே தாம் பயங்கரவாதத்தில் ஈடுபடுவதாக ‘க்ளான்’ கருதியது. இனவாதச் சட்டங்களைத் தளர்த்துவதையும், கறுப்பினத்தவர்கள் அரசியலில் பங்கெடுப்பதையும் அது எதிர்த்தது. இனவாதச் சமூக அமைப்பு “இயற்கையானது” என்று சொல்லி அதைப் பாதுகாக்க நினைத்தது.

ஆரம்பத்தில், ‘க்ளான்’ இயக்கத்தினர் இரகசியமாக இரவு நேரங்களில் மட்டுமே பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொண்டு வந்தார்கள். அமெரிக்க மறுகட்டுமானக் (American Reformation) காலத்துக்கு பின், வெளிப்படையாகக் கும்பல் கொலைகளைக் கட்டவிழ்த்துவிடத் தொடங்கினார்கள். (உதாரணத்துக்கு டெக்சஸில் 1915ல்) அவற்றைப் புகைப்படங்களாக எடுத்துத் தங்களின் குடும்பங்களுக்கும் நண்பர்களுக்கும் பெருமிதத்துடன் பகிர்ந்து கொண்டார்கள். இதே விதமாக, இப்போது இந்தியாவில் நடைபெறும் கும்பல்  கொலைகள் சமூக வலைத்தளங்களில் காணொளிகளாய் வலம்வருவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

முஸ்லிம்கள் அடித்தே கொல்லப்படுவதற்கு எதிராகப் பொதுவெளியில் எழும் கண்டனக் குரல்கள் நாளுக்குநாள் (தாத்ரி தொடங்கி ஹாப்பூர் என) சரிந்துகொண்டே போகின்றதே, ஏன்?

Karl Schmitt எனும் நாஜி சார்புச் சிந்தனையாளர் ஒருவர் இருந்தார். அவரைப் பொறுத்தவரை, அரசியல் என்பது பகைவர்களுக்கும் நண்பர்களுக்கும் இடையே அழுத்தமான பிரிகோடை வரைவதுதான். பொதுவாகத் தற்போது இந்தியாவில் அரசியல் என்பது பொதுநலன் (Welfare) பற்றியதாக இருக்கும் அதேசமயம், அது போர்நலன் (Warfare) பற்றியதாகவும் பகைமை எனும் எண்ணக்கரு பற்றியதாகவும் இருக்கிறது. முஸ்லிம்களை “மற்றமையாகச்” சித்தரிப்பதில் இந்தியாவிற்கென்றே உரிய ஒரு வரலாறு உண்டு. எனினும், இந்தச் செயல்பாடு கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில் முடுக்கம் பெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சியின்போதும் கூட முற்றாக இந்த நிலை கிடையாது என்று சொல்வதற்கில்லை.

முஸ்லிம்களை “அஃறிணையாக்கும்” (thingification) செயல்முறை இங்கே படுஜோராக நடந்துகொண்டுள்ளது. உயிரற்ற பொருட்களாக அவர்களை உருமாற்றுவது, மற்றமையாகக் கட்டமைப்பது, வெறுமனே புள்ளிவிவரமாகவும் இலக்கமாகவும் அவர்களை மதிப்பிழக்கச் செய்வது இங்கே தொடர்கிறது. முஸ்லிம் சமூகம் தேசத்திற்கு வெளியே நிறுத்திப் பார்க்கப்படுகிறது. முஸ்லிம்கள் வெறும் வேற்று மனிதர்களாக மட்டுமல்லாமல், பகை மனிதர்களாகவே நிலைநிறுத்தப்படுகிறார்கள்.

ஆனால் ஜனநாயகம் என்பதே மக்களனைவரும் அதிகாரம் பெறுவது பற்றியது தானே?

ஜனநாயகம் என்பதை நீங்கள் மக்களனைவரும் அதிகாரம் பெறுவது எனப் பார்க்கிறீர்கள். பெண்கள், தலித்கள், கிராமப்புற மற்றும் நகர்ப்புற வறியவர்கள் அதிகாரம் பெறுவது பற்றியெல்லாம் நாம் பேசிவருகிறோம். அதேசமயம் இன்னொரு பக்கம், முஸ்லிம்களை அதிகாரமிழக்கச் (Disempowerment) செய்வதும் ஒரு பேசுபொருளாகத் தொடர்ந்து வருகிறது. ஜனநாயகத்தின் கவலைக்குரிய பக்கம் இது. ஒரு ஜனநாயக நாட்டில் சிறுபான்மையினரை அதிகாரமிழக்கச் செய்தல், அஃறிணையாக்கல், மற்றமையாக்கல் நடந்துகொண்டிருப்பது எதனால்? கும்பலாகச் சேர்ந்து முஸ்லிம்களை அடித்தே கொல்வதென்பது, நமது ஜனநாயகப் பரிசோதனையின் பலவீனத்தைக் காட்டுகிறது.

இந்தக் கும்பல் கொலைகளில் ஈடுபடுபவர்கள் அல்லது அவற்றை வேடிக்கை பார்ப்பவர்கள் ஏன் காணொளிகளாக அவற்றைப் பதிவேற்றம் செய்து பரப்புகிறார்கள்?

இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க வேண்டுமென்றால், முஸ்லிம்கள் அடித்தே கொல்லப்படும் இத்தகைய காணொளிகள் சமூக ஒழுங்குக்குக் குந்தகம் விளைவிப்பவை என்று தெரிந்தும் கூட அரசாங்கம் ஏன் அவற்றைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்று நாம் கேள்வியெழுப்ப வேண்டியுள்ளது. இத்தகைய காணொளிகளைப் பதிவேற்றுபவர்கள் தங்களைச் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாகவோ, அல்லது சட்டம் தங்கள் பக்கம் இருக்கிறது என்றோதான் கருதுகிறார்கள். அரசுக்கும் சிவில் சமூகத்திலுள்ள கலவரக் கும்பல்களுக்கும் மத்தியில் ஒருவகையான புரிந்துணர்வும் ஒத்திசைவும் இருக்கிறது என்பதுதான் உண்மை.

மேற்சொன்ன காணொளிகள், இக்குற்றங்களில் பாதிக்கப்படுவோருக்கும் அவற்றை அரங்கேற்றுவோருக்கும் ஏகசமயத்தில் விடுக்கப்படும் செய்திகளாக அமைகின்றன. “நாங்கள் சொல்வதுபோல் உங்கள் வாழ்கையைத் திருத்தியமைத்துக் கொள்ளுங்கள்” என ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தை நோக்கியும்; “நம் சமுதாயத்திற்காக நாங்கள் என்ன செய்திருக்கிறோம் பாருங்கள்” என ஒட்டுமொத்த இந்துச் சமூகத்தை நோக்கியும் அவை பேசுகின்றன. அவை ஏதோ சாதனைகள்போல் முன்வைக்கப்படுகின்றன. அவமானகரமான தருணங்களை யாரும் பரப்பிக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால், சாதனைகளைப் பரப்பத்தானே வேண்டும்? உண்மையில், இது மற்றவர்களுக்கும் ஒரு துணிச்சலைத் தரக்கூடியது. என்னால் அனுபவபூர்வமான ஆதாரங்களைக் கொண்டு இதை நிறுவ முடியாது என்றாலும், இதை அனுமானிப்பது ஒன்றும் அவ்வளவு சிரமமான காரியமல்ல. அவர்கள் படுகொலைகளில் நேரடியாக ஈடுபடாவிட்டாலும் கூட, ஏதோ நல்லதொன்று நடந்திருப்பதாகக் கருதுகிறார்கள்.

முஸ்லிம்கள் அடித்தே கொல்லப்படுவதைக் காண்போரின் மனவோட்டம் என்னவாக இருக்குமென்று நினைக்கிறீர்கள்? உதாரணமாக, காசிம் கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துக் கொண்டிருந்ததைச் சுற்றியிருந்து பார்த்துக் கொண்டிருந்தவர்களின் மனநிலை எப்படியானது?

முதலில், நாம் வேறொரு வகைக் கும்பல் கொலையைப் பார்க்கலாம். சமூக விலக்கல்களை ஒருவர் மீறிவிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அதற்காக அவர் அடித்து உதைக்கப்படுகிறார், அல்லது முகத்தில் கரும்புள்ளி குத்தி கழுதையின் மேல் அமர்த்தப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படுகிறார். இதனைப் பார்த்துக் கொண்டிருக்கும் கூட்டத்துக்கு ஒரே சமயத்தில் கிளர்ச்சியும் பீதியும் உண்டாகும். ‘அது நான் இல்லை’ என்பதால் கிளர்ச்சியும், ‘அது நானாகவும் இருந்திருக்க வாய்ப்புண்டு’ என்பதால் பீதியும் உண்டாகும். கூட்டம் பலவித மதப் பின்னணி கொண்டதாக இருக்கும்பொழுது மட்டுமே இவ்விதம் பீதியும் கிளர்ச்சியும் ஏக சமயத்தில் உண்டாகிறது.

ஆனால், முஸ்லிம்களை அடித்தே கொல்லும் சம்பவங்களில் நீங்கள் காண்பது வித்தியாசமானது. காசிமைச் சுற்றி நின்றிருந்த இருபத்தி சொச்சம் பேரில் எவருக்கும், ‘காசிமின் இடத்தில் நான் இருந்திருந்தால்…’ என்ற நினைப்பு வந்திருக்க முடியாது. எனவே அவர்களின் மனவோட்டமும் இதில் வித்தியாசப்படுகிறது. ‘காசிமின் இடத்தில் நான் இருந்திருக்கச் சாத்தியமுண்டு’ என்று அவர்கள் நினைத்திருந்தாலும் கூட, அவரைத் தாக்குவதை அவர்கள் நிறுத்தியிருக்கப் போவதில்லைதான் என்றாலும், அவர்களின் மனநிலை முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக அமைந்திருந்திருக்கும். இது நம்மை மீண்டும் அஃறிணையாக்கல், மற்றமையாக்கல், அதிகாரமிழக்கச் செய்தல் ஆகிய பேசுபொருளுக்குக் கொண்டுவந்து நிறுத்துகிறது.

இதை இன்னும் சற்று விளக்க முடியுமா?

‘நான் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவன், அவர்கள் வேற்றுச் சமூகத்தினர்’ என்பதுதான் இங்கு தொழிற்படும் எண்ணம். மட்டுமின்றி அவர்கள் மனிதர்கள் அல்லர், கழித்துக்கட்டப்பட வேண்டிய பொருட்களைப் போன்றவர்கள். வேறு வார்த்தைகளில் சொன்னால், அவர்கள் நமக்குத் தேவையற்றவர்கள்.

அரசியல் ரீதியில் கடைப்பிடிக்கப்படும் பாரபட்சம்தான் இந்த மற்றமையாக்கலுக்குக் காரணமா?

ஒருமுறை பிரதமர் மோடியின் உரையைக் கேட்டு ரொம்பவே கலக்கமுற்றேன். அதில் அவர் சூசகமான அரசியல் மொழியைப் (Dog-Whistle Politics) பயன்படுத்தியிருந்தார். ஓர் பாதுஷாவுக்கும் ராஜாவுக்குமிடையிலான வேறுபாடுகளைக் குறிப்பிட்டுப் பேசினார், பாதுஷா என்றால் முஸ்லிம் என்ற அர்த்தத்தில். இருவருக்கும் இடையில் மத்தியகாலத்தில் நடந்த ஓர் போரில் பாதுஷா தந்திரமாக நூறு பசுக்களைத் தனது படைக்கு முன்புறம் நிறுத்திச் சண்டையிட்டாராம். நான் இதை எங்கும் படித்ததில்லை. இதுமாதிரியான விஷயங்கள் பரப்பப்பட்டால் அவை தீய விளைவுகளையும் பாதிப்புகளையுமே ஏற்படுத்தும். மோடி பிரதமர் ஆவதற்கு முன்பும்கூட, ராகுல் காந்தியைக் குறிப்பிட ‘ஷேஹ்ஸாதா’ (Shehzada) என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். ‘யுவராஜ்’ என்ற சொல்லை அவர் பாவித்திருக்க முடியும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும் என உறுதியாகக் கூற முடியும். முஸ்லிம் என்பதைக் குறிக்கவே அப்படிச் சொன்னார்.

(மேலே மோடி பாதுஷா என்பதன் மூலம் காஸி சையத் சலார் மசூதையும், ராஜா என்பதன் மூலம் 11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தலித் அரசர் சுஹேல்தேவையும் குறிப்பிடுகிறார். உ.பி.-யில் பாஜக தனது அரசியல் ஆதாயத்துக்காகத் தன்வயப்படுத்த நினைக்கும் அரசர்தான் சுஹேல்தேவ் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்சொன்ன நூறு பசுக்களின் கதை ஒரு புனைவு என்றே வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.)

முஸ்லிம்களை அடித்தே கொல்லும் சம்பவங்கள் ஒரு சமூகம் என்ற வகையில் நம்மிடமும் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன?

இந்தக் கும்பல் கொலைகள் மற்றும் மாட்டிறைச்சி, பசு பற்றிய விவாதங்களுக்கு மற்றொரு குறிக்கோளும் உண்டு:  பொதுவெளிகளை (தாம் விரும்பும் விதத்தில்) மாற்றி வடிவமைப்பதும் ஒழுங்குபடுத்துவதுமே அது. ஐரோப்பாவில் தலை முக்காடு பற்றியும் ஹிஜாப் முறை பற்றியும் இதே பாணியில் நடக்கும் விவாதங்கள், பொது இடங்களில் எவை அனுமதிக்கப்படவேண்டும் என்பது தொடர்பானவை என்பது கவனிக்கத் தக்கது.

இந்தியாவில் ரயில் ஒரு பொது இடம். இந்தியா மற்றும் அதன் ரயில்களின் அழகுகளில் ஒன்றே, அதன் பலவிதக் காட்சிகளும் வாசனைகளும்தான். நீங்கள் பீகார் ரயிலில் ஏறினால் அங்கே லிட்டி, பரோட்டா, சட்டு எனப் பல்வேறு உணவு வகைகளின் மணம் வீசுவதை நுகரலாம்.

சைவம் X அசைவம் என்று வரும்போது, அதற்கொரு காட்சிப் பரிமாணமும் வாசனைப் பரிமாணமும் இருக்கிறது. பொது இடங்களில் ஒரேவிதமான, ஒருபடித்தான, பெரும்பான்மைவாத நோக்கிலான காட்சிகளையும் வாசனைகளையும் மட்டுமே நிலைநிறுத்துவதுதான் இந்துத்துவச் செயல்பாட்டாளர்கள் மற்றும் இந்தக் கும்பல் கொலைகளின் குறிக்கோள். சைவத்தின் காட்சியையும் சைவத்தின் வாசனையையும் மட்டுமே அனுமதிக்க முடியும் என்கிறார்கள். இறைச்சியையும் அதன் வாசனையையும் அவர்கள் பொது இடங்களிலிருந்து அகற்றிவிட விரும்புகிறார்கள்.

இதன் விளைவுகள் என்ன?

சமீபத்தில் மூத்த பத்திரிக்கையாளர் அர்ஃபா கானம் ஷர்வானி, “ஆர்எஸ்எஸ் இந்த நாட்டை ஆள நினைக்கிறது; அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகத்தான் இத்துணை வன்முறைகளையும் அது கட்டவிழ்த்துவிடுகிறது என்றால், நாங்கள் அவர்களுக்கு அதிகாரத்தைப் பெற்றுத்தர உறுதியளிக்கிறோம்” என்று கூறினார். ராஜ்யசபா உறுப்பினராக இருந்த முஸ்லிம் ஒருவர், அரசியலில் இருந்து முஸ்லிம்கள் விலகிவிட வேண்டும் என்றார்.

இந்த இடத்தில் எழும் சுவாரஸ்யமான கேள்வி, “என்னவகையான ஜனநாயகம் இது?” அனைத்துத் தரப்பு மக்களும் அரசியல்மயமாவதும் அதில் பங்கேற்பதும்தான் ஜனநாயகம் என்பதன் எண்ணக்கரு. ஜனநாயகம் என்பது அச்சத்திற்கான முறிவு மருந்தாகவும், பயத்திலிருந்து விடுதலை அளிப்பதாகவும் இருக்க வேண்டும். ஆனால், நம்மிடமுள்ள ஜனநாயகம் மக்களை அரசியல்நீக்கம் செய்வது ஏன்? அரசியலில் அக்கறையற்று முற்றாக விலகி நிற்கத் தூண்டுவது ஏன்? நமது ஜனநாயகம் அச்சத்தை உற்பத்தி செய்கிறது என்றால், நாம் ஜனநாயகம் என்பதைக் குறித்தே அடிப்படைக் கேள்விகளை எழுப்ப வேண்டியிருக்கிறது என்று பொருள்.

(ஹாப்பூரில் காசிம் கொலை செய்யப்பட்டதையொட்டி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பத்திரிகையாளர் ஷர்வானி கூறியதாவது, “இவையெல்லாம் 2019 தேர்தல் வெற்றிக்காகவே நடந்துகொண்டிருக்கின்றன என்றால், ஒரு இந்தியக் குடிமகளாகச் சொல்கிறேன், இந்திய மக்களின் பாதுகாப்புக்கும் அமைதிக்கும் அவர்கள் உறுதியளித்தால் பாஜக-ஆர்எஸ்எஸ் நிரந்தரமாக ஆட்சியில் அமர நான் ஆதரவளிக்கத் தயார்.”)

சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்தப்பட்ட தேர்தலின் மூலமாகத்தானே பாஜக ஆட்சிக்கு வந்தது?

ஜனநாயகம் என்பது வெறுமனே தேர்தலையோ வெகுஜனவாதத்தையோ மட்டுமே சார்ந்ததல்ல. அது அரசமைப்புச் சட்டத்தையும், அரசில் எந்த அளவுக்கு குடிமக்கள் உரிமைகள் பெறுவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதையும் பற்றியது. எது நீதி, எது அநீதி என்கிற உணர்வைப் பெற்றிருப்பதும் ஜனநாயகம்தான். ஜனநாயகம் எனும் எண்ணக்கருவை நீங்கள் நீதியிலிருந்து பிரித்துவிட்டால் அது கும்பலாட்சியாக, கலவரக் கூட்டத்தின் ஆட்சியாக மாறிவிடும்.

முஸ்லிம்கள் இந்தப் பிரச்னையை எப்படி எதிர்கொள்கிறார்கள்?

கும்பல் கொலைகளில் ஈடுபடுபவர்களை நூறு கோடி இந்துக்களின் பிரதிநிதிகளாக முஸ்லிம்கள் பார்க்கவில்லை. ஜனநாயக அமைப்பின் மீது முஸ்லிம்கள் முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இவ்விசயத்தில் முஸ்லிம்கள் மகத்தான நன்னடத்தையை -அசலான ஜனநாயகவாதிகளின் நடத்தையை- வெளிப்படுத்துகிறார்கள். வெறும் தேர்தல் ஜனநாயகத்தின் விழுமியத்தை அல்ல, ஜனநாயகம் எனும் பண்பாட்டு விழுமியத்தை அவர்கள் இவ்விசயத்தில் கடைப்பிடிக்கிறார்கள். முஸ்லிம்களின் மொழியில் ‘சப்ரு’ என்று சொல்லப்படும் நிலைகுலையாமையையும் அழகிய பொறுமையையையும் பேணி வருகிறார்கள்.

மூலம்: From The Ku Klux Klan To Cow Vigilantes: A Scholar Explains Why Lynching is Terrorism

தமிழாக்கம்: நாகூர் ரிஸ்வான்

No comments:

Post a Comment