தேசிய இனப் பிரச்சனையும்-
தமிழ் தேசியமும்
தற்போது ஆளும்கட்சியாக விளங்கும் பாரதிய ஜனதாக் கட்சி இந்தியாவில் தேசிய இனங்களே இல்லை என்று ஒரேயடியாக மறுத்திடும் கட்சி. இந்தியா, ஒரே தேசம், ஒரே தேசிய இனம், ஒரே மதம் கொண்ட நாடு என்ற கருத்துடையவர்கள் அவர்கள்.
அவர்களது கருத்துப்படி பார்த்தால் தமிழினம் என்ற ஒன்று இல்லை என்ற அபத்தமான முடிவுக்கு வர வேண்டியிருக்கும். இந்த அபத்தங்களை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது.இந்தியா பல தேசிய இனங்களைக் கொண்ட நாடு.
அப்படியானால் ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தை தேசிய இனம் என்று எதை வைத்து நிர்ணயிப்பது?தொடர்ச்சியான ஒரு நிலப்பரப்பில், ஒரு பொது மொழியும், பொதுப் பொருளாதார வாழ்வும், பொதுப் பண்பாடும், அப்பண்பாட்டில் உருவான உளவியல் உருவாக்கமும் கொண்டு வாழ்ந்து, வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒரு சமூகமே ஒரு தேசம்.
தமிழகத்தில் வாழும் மக்கள் ஒரு தனி தேசிய இனம். குறிப்பிட்ட நிலப்பரப்பு, பொது மொழி உள்ளிட்ட அனைத்தும் தமிழ் இனத்திற்கு உண்டு. கேரளம், ஆந்திரா, அசாம் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் இந்த இலக்கணம் பொருந்தி வருகிறது. எனவே, பல்வேறு தேசிய இனங்கள் சேர்ந்து வாழும் நாடாக இந்தியா திகழ்கிறது.
தேசிய இனங்களிடம் தேசியம் என்ற கருத்து ஒரு உணர்வாக எழுகிறது. அதாவது, ஒரு தேசிய இனத்தவரிடம் நமது மக்கள் நம்மவர் என்ற மனப்பான்மை நிலைத்திருக்கிற நிலையே தேசியம் எனப்படுவது. இந்த தேசிய உணர்வை ஒன்று திரட்டி மாநில ஆட்சி அதிகாரத்தை திராவிட இயக்கம் தமிழகத்தில் கைப்பற்றியது.
இதேபோன்று பல நாடுகளில் தேசிய உணர்வுகளைப் பயன்படுத்தி பல முதலாளித்துவ இயக்கங்கள் மக்கள் செல்வாக்கு பெற்றன. அதாவது, முதலாளித்துவ பொருளுற்பத்தி முறை வளர்ந்த நிகழ்வோடு இணைந்ததாக தேசிய இனங்களின் வளர்ச்சி அமைந்தது. ஆனால், சேர, சோழ, பாண்டியர் காலங்களில் தனித் தனி நாடுகளாக இன்றைய தமிழகம் பிரிந்திருந்த சூழலில் நமது மக்கள் நம்மவர் என்ற தேசிய மனப்பான்மை இருக்கவில்லை.
தேசம், தேசிய இனம், தேசியம் என்பதெல்லாம் பிற்காலத்தில் எழுந்த கருத்தாக்கங்கள். முதலாளித்துவ சகாப்தம் துவங்குவதற்கு முன்பு இப்போது தேசியம் என்று பேசப்படுகிற உணர்வு நிலை எழவில்லை. நிலபிரபுத்துவ சமூகத்தில் மக்கள் தங்களை தங்களது கிராமங்கள், பகுதிகள், பிரதேசங்களைச் சார்ந்தவர்களாக அடையாளப்படுத்திக் கொண்டனர்.
முதலாளித்துவம் பெரும் பொருளாதார மாற்றத்தை நிகழ்த்தியது. ஒரு உள்நாட்டு சந்தையை உருவாக்கியதால் மக்கள் நாட்டு அரசுகளின் கீழ் உள்வாங்கப்பட்டு, தேசம் சார்ந்த குடிமகன்களாக மாறினர். இந்த வளர்ச்சிப் போக்கு வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமாக நடைபெற்றது.
ஐரோப்பாவில் முதலாளித்துவ வளர்ச்சி வேகமாக நடைபெற்ற போது நாட்டு அரசுகளின் உருவாக்கம் அதையொட்டி நிகழ்ந்தது. முதலாளித்துவமும், நிலப்பிரப்புத்துவமும் ஒருங்கே இயங்கி வந்த ஆசிய நாடுகளில் நாட்டு அரசுகளின் உருவாக்கம் வேறு விதமாக நடைபெற்றது. ஒவ்வொரு நாட்டுக்கும் இதையொட்டி தனி வரலாறு உண்டு. அது ஒரு தனி ஆய்வு.
எனினும் முதலாளித்துவ வளர்ச்சி தேசிய அரசுகளின் உருவாக்கத்திற்கு வித்திட்டது என்பது பொதுவான உலக அனுபவம்.
முதலாளித்துவ இலாப வேட்டைக்கு விரிந்த பரந்த சந்தை தேவை. இந்த ஒருங்கிணைந்த சந்தை தேவைக்காக மக்களின் தேசிய இன உணர்வுகளை முதலாளித்துவம் பயன்படுத்திக் கொள்கிறது. ஜார் மன்னன் ஆட்சியின் போது ரஷியாவில் வளர்ந்து கொண்டிருந்த முதலாளித்துவம், நாடு தழுவிய சந்தை வேண்டும் என்பதற்காக, ரஷிய இன மேலாதிக்க வெறியை வளர்த்து, இதர தேசிய இனங்கள் ஒடுக்குமுறைக்கு ஆளாகி இருக்கும் சூழலை நிலைநிறுத்தியது. ரஷிய அல்லாத இதர இனங்களின் தேசிய எழுச்சியை அது அடக்குமுறை கொண்டு அடக்கி, ரஷியாவை பல தேசிய இனங்களின் சிறைக்கூடமாக நீடிக்கச் செய்திட கடும் முயற்சி மேற்கொண்டது.
பிறகு, கம்யூனிஸ்ட் ஆட்சி வந்த பின்புதான், தேசிய இனங்களுக்கு சமத்துவம் கிடைத்தது.
ஆனால், இந்தியாவில் வேறான நிலைமை இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக அன்று வளர்ந்து வந்த இந்திய தேசிய உணர்வுகள் வளர்ந்து வலுப்பெற்று, அது விடுதலை இயக்கமாக மலர்ந்தது. பிரிட்டிஷ் ஆட்சியின் ஆதிக்கத்தில் இருந்ததால் சந்தை, இலாப வாய்ப்புக்கள் பிரிட்டிஷ் முதலாளித்துவத்திற்கு சாதமாக இருந்தது.
இந்திய உள்நாட்டு முதலாளித்துவம் அவற்றை தனக்குரியதாக்கிக் கொள்ள முயற்சித்தது. இதன் காரணமாக உள்நாட்டு முதலாளித்துவம் விடுதலை இயக்கத்தை ஆதரித்தது. காங்கிரஸ் தலைமையிலான தேசிய இயக்கத்திற்கு முதலாளிகள் பக்கபலமாக இருந்தனர். இதே இந்தியப் பெரு முதலாளித்துவம் விடுதலைக்குப் பிறகு மொழி வழி மாநிலம் என்ற தேசிய இன எழுச்சி ஏற்பட்ட போது, தங்களது விரிந்து பரந்த, நாடு தழுவிய சுரண்டலுக்கும், சந்தை வாய்ப்புக்களுக்கும் ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சத்தால் அந்த எழுச்சியை அடக்கி ஒடுக்கினர்.
மக்கள் போராட்டத்தால் அந்த கோரிக்கை வெற்றி பெற்று மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டன. அதாவது முதற் கட்டத்தில் இந்தியா என்ற தேசியம் உணர்வு சார்ந்த ஒற்றுமையை இந்திய முதலாளித்துவம் ஆதரித்தது. இரண்டாவது கட்டத்தில், மாநில அளவில் உருவான தேசியத்தை அது எதிர்த்தது.
எனவே, முதலாளித்துவம் தனது மூலதனக் குவியலை மையமாகக் கொண்டு தேசிய இன எழுச்சியை நிராகரிக்கிறது; அல்லது தேசிய இனங்களுக்கிடையே இன வெறியை கிளப்பி அதனைப் பயன்படுத்தி கொள்கிறது.
உழைக்கும் மக்களிடம் தனது மேலாண்மையை தக்க வைத்துக் கொள்ள, முதலாளித்துவத்திற்குப் பயன்படும் முக்கியமான சித்தாந்தக் கருவி, தேசிய இனவெறி. இது, கடந்த பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்து வரும் வரலாறு. தேசிய உணர்வுகளை தனது ஆதாயத்திற்கு முதலாளித்துவம் பயன்படுத்தி இன மோதல்களையும், இன வன்முறையையும் தூண்டி வர்க்க ஒற்றுமையைக் குலைக்கிறது.
இந்திய சூழலில் மாநில முதலாளிகளும், நிலப்பிரப்புக்களும் பிராந்திய உணர்வுகளை சுரண்டல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்கின்றனர். அதனால் தான், கார்ல் மார்க்ஸ் எழுதினார்: “முதலாளித்துவத்தை வீழ்த்தி, பாட்டாளி வர்க்கம் வெற்றி பெறுவது, ஒடுக்கப்பட்ட தேசங்களின் விடுதலைக்கான திறவுகோல்”.
எனவே, உழைக்கும் வர்க்கங்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவது தேசிய இனப்பிரச்னை தீர்வதற்கான வழியாக அமைந்துள்ளது.
பல தேசிய இனங்கள் வாழும் ஒரு நாட்டில் அந்த இனங்களிடையே முழுச் சமத்துவம் இல்லாத நிலை இருந்தால் அந்நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய ஒன்றாக தேசிய இனப் பிரச்னை உள்ளது. இந்தியா இதற்கோர் உதாரணம். இன்னமும் இந்தியாவில் சமத்துவம் எட்டப்படவில்லை. ஒரு இனமோ பல இனங்களோ விசேட சலுகைகள், உரிமைகள் கொண்டிருப்பதும், இதர இனம் அல்லது இனங்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வரும் நிலையும் ஒரு நாட்டில் இருந்தால் அங்கு தீர்க்கப்பட வேண்டிய பிரச்னையாக தேசிய இனப் பிரச்சனை உள்ளது.
தேசிய இனப் பிரச்சினைக்கு இறுதி இலக்கு எது? எந்த தேசிய இனத்துக்கும் விசேட அந்தஸ்து, உரிமைகள் என்பது அகன்று, அனைத்து இனங்களும் சம உரிமை, சம அந்தஸ்து பெற்று வாழுகிற ஒரு சமுதாயம் அமைவதுதான் இறுதித் தீர்வு. இது பொருளாதாரச் சமத்துவத்திற்கான போராட்டத்தோடு இணைந்தது.
இந்த இலக்கை அடைய உழைக்கும் வர்க்கங்கள் தேசிய இனப் பிரச்சினை குறித்து கோரிக்கைகளை எழுப்பி, போராட வேண்டும். பண்பாடு, மொழி, கலை உள்ளிட்ட அம்சங்கள் முற்போக்கான கோரிக்கைகளை முன்னிறுத்தி மக்களைத் திரட்ட வேண்டும்.
ஒரு நாட்டின் பாட்டாளி வர்க்கங்கள் மொழியால், பண்பாட்டால் வேறுபட்டிருக்கலாம். ஆனால், முதலாளித்துவத்தால் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகும் வர்க்கங்கள் எனும் வகையில் உலகத் தொழிலாளி வர்க்கங்கள் ஒரே தன்மை கொண்டவர்கள். சுரண்டலிலிருந்து விடுதலை என்ற பொது நோக்கம் கொண்டவர்கள்.
பல சமயங்களில் பிரிவினைக் கோரிக்கைக்கு பின்னணியாக இருப்பது இன வெறி. ஒரு தேசிய இனம் சார்ந்த மக்களுக்கு எதிராக மற்ற இன மக்களை தூண்டிவிட, ஆளுகிற முதலாளித்துவ வர்க்கங்களுக்கு இனவெறி பயன்படுகிறது. தேசிய ஒடுக்குமுறை எந்த வடிவில் இருந்தாலும் உலகின் எந்த மூலையில் நிலவினாலும் அதனை உழைப்பாளி மக்கள் எதிர்க்க வேண்டும். உலக உழைக்கும் வர்க்கங்களோடு இணைந்து இந்த எதிர்ப்பினை வலுப்படுத்த வேண்டும்.
இனப்பிரச்சனையை அணுகுவதில் சர்வதேசப் பார்வை முக்கியமானது. இதுவே முதலாளித்துவ கட்சிகளிடமிருந்து தொழிலாளி வர்க்கக் கட்சிகளை வேறுபடுத்துகிற உரைகல்.
ரஷிய நிலைமைகளில் தேசிய இனப்பிரச்னைக்கு தீர்வாக பிரிந்து போகும் உரிமை உள்ளிட்ட சுயநிர்ணய உரிமையை தனது திட்டத்தில் முன்வைத்தார் லெனின். இது ஆண்டாண்டுக் காலமாக ஒடுக்கப்பட்டு வந்த ரஷிய அல்லாத தேசிய இனங்களுக்கு பெரும் நம்பிக்கையை ஊட்டியது.
அவர்கள் போல்ஷிவிக் கட்சியின் மீதும், புரட்சியின் மீதும் நம்பிக்கை வைத்தனர். அனைத்து தேசிய இனங்களின் தொழிலாளி வர்க்க ஒற்றுமை மூலம் புரட்சி வெற்றி பெற்றது. எனவே, சுயநிர்ணய உரிமை என்பது நாட்டைத் துண்டாட எழுப்பப்பட்ட கோரிக்கை அல்ல.
இந்தக் கோரிக்கை எழுப்பப்பட்ட போது, இது பிரிவினைக்கு இட்டுச் செல்லும் என்ற விமர்சனம் எழுந்த போது, விவாகரத்து சட்ட உரிமையை உதாரணமாகக் காட்டி லெனின் வாதிடுகிறார்.
விவாகரத்தை அனுமதிக்கும் சுதந்திரம், குடும்ப உறவுகளை அழிக்க ஊக்கமளிக்கும் என்று சொல்வது முட்டாள்தனமானது என்றார் லெனின். ஆக, லெனியத்தின் அடிப்படை, ஒன்றுபட்ட தேசத்தில் அனைத்து தேசிய இனங்களுக்கும் சம அந்தஸ்து, சம உரிமை என்பதுதான்.
ரஷியாவில் போல்ஷிவிக் கட்சியின் செயல் திட்டத்தை லெனின் உருவாக்கினார். அதில், எல்லா தேசங்களிலும், நிலவும் அனைத்து வகை தேசிய வெறிகளை எதிர்த்து வெற்றிகரமாக நடத்த வேண்டிய போராட்டத்தை அவர் வலியுறுத்துகிறார். அவரே இதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்.அவர் ரஷிய தேசிய இனத்தில் பிறந்தவர். ரஷிய இனம் சார்ந்தோரிடம் நிலவும் ரஷிய இனவெறியை கண்டிக்க அவர் எப்போதும் தயங்கியதில்லை.
கட்சித் தோழர்களிடம் பூடகமாக இந்த உணர்வுகள் வெளிப்படும் போதேல்லாம் அதனை அம்பலப்படுத்தினார்.
ஒருமுறை மிகவும் வெறுப்புடன் குறிப்பிட்டார். கம்யூனிஸ்ட்களில் இரண்டு பேருக்கு ஒருவரை கீறிப் பாருங்கள்; அவரிடம் ஒரு மேலாதிக்க இனவெறியை நீங்கள் காண்பீர்கள்; அந்த வெறியன் நமக்குள் உட்கார்ந்து கொண்டிருக்கின்றான். அவனை எதிர்த்து வீழ்த்த வேண்டும். தனது இறுதிக் காலம் வரை இந்த போராட்டத்தை அவர் நடத்தினார்.
இனவெறி அடிப்படையில் தேசிய இனப்பிரச்னைகளை அணுகுவது சரியான அணுகுமுறை அல்ல. அது உழைப்பாளி மக்களிடம் வர்க்க உணர்வை மழுங்கடித்து இன அடையாளத்தை வலுப்படுத்தும். இதன் மூலம் முதலாளித்துவ சித்தாந்த மேலாதிக்கத்திலிருந்து உழைப்பாளி மக்களை விடுவிக்க இயலாத நிலை ஏற்படும்.
இந்திய தேசிய இனப்பிரச்னையை எவ்வாறு அணுக வேண்டும்.
தேசிய இனப்பிரச்சனையை தனித்துப் பார்ப்பது, சரியானது அல்ல. மக்கள் ஜனநாயக அரசு அமைப்பதின் பிரிக்க முடியாத பகுதி அது. தேசிய இன உரிமைகளுக்கான போராட்டம் பொதுவான புரட்சிகரப் போராட்டத்துடன் இணைந்தது.
தேசிய சமத்துவத்திற்கான போராட்டத்தை நடத்துகிற போது, எந்த முனையிலிருந்து தேசிய வெறி எழுந்தாலும், அதனை எதிர்த்து உறுதிமிக்க, ஊசலாட்டமில்லாத நிலை எடுக்க வேண்டும்.
இந்திய நிலைமைகளில் பெரு முதலாளிகள், மற்றும் பிராந்திய முதலாளித்துவக் கட்சிகள் எழுப்பும் தேசிய வெறியை எதிர்த்த போராட்டம் முக்கியமானதாகும். இந்திய தேசியம் எனும் வகையில் மத்திய அரசின் மையப்படுத்தப்பட்ட அதிகார மேலாதிக்கத்திற்காக பெரு முதலாளிகளின் குரலாக செயல்படுகிற காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகளின் தேசிய வெறியை எதிர்க்க வேண்டும். அந்தக் கட்சிகளின் தேசியம் இந்நாட்டின் பல தேசிய இனங்களின் இருப்பையே அங்கீகரிக்கவில்லை.
பா.ஜ.க.வின் இந்து தேசியம் எனும் கருத்து மதம் சார்ந்து தேசிய இனத்தை வரையறுக்கிறது. இதனால் தனித்தனி தேசிய பண்பாடுகளை அது நிராகரிக்கிறது. அத்துடன், சிறுபான்மையினரின் பண்பாட்டையும் நிராகரிக்கிறது. பல தேசிய இனங்களையே மத அடிப்படையில் பிளவுபடுத்தும் தன்மை கொண்டது. அனைத்து மதங்களை சார்ந்தவர்களுக்கும், அவரவர் சமூக வாழ்க்கை முறைகளை, நாட்டின் ஜனநாயக அரசியல் சாசன விதிமுறைகளுக்கு உட்பட்டு, பின்பற்றும் உரிமை உண்டு.
ஆனால், பாஜக இந்த உரிமையை மறுக்கிறது. எனவே, சங் பரிவாரத்தின் தேசியம் பற்றிய பார்வை ஒற்றுமைக்கும், தேசிய இனங்களின் ஜனநாயக உரிமைக்கும் எதிரானது. மறுபுறம், இந்தியப் பொருளாதார தளத்தில்,பெரு முதலாளிகளுக்குப் போட்டியாக, தங்களை வலுப்படுத்திக் கொள்ள பிராந்திய முதலாளித்துவம் முயற்சிக்கிறது. இதற்கு அவ்வபோது தேசிய வெறியை பயன்படுத்திக் கொள்ளுகிறது.
உதாரணமாக, தமிழகத்தில் திமுக துவக்கத்தில் திராவிட நாடு என்ற பிரிவினை கோஷத்தை எழுப்பியது.பிறகு,பிராந்திய முதலாளித்துவம், பெரு முதலாளித்துவ தலைமையின் கீழ், வளர்வதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்ட சூழலில் பிரிவினை கோரிக்கை கைவிடப்பட்டது. மாநில சுயாட்சி என்ற ஜனநாயக உள்ளடக்கம் கொண்ட கோரிக்கை எழுப்பப்பட்டது. ஆனால், இதில் கூட, ஒரு பலவீனமான மத்திய அரசு இருக்க வேண்டும் என்ற வகையில் கோரிக்கைகள் எழுப்பபடுவதுண்டு.
இது, பிராந்திய முதலாளித்துவம் விரும்புகிற பலவீனமான மத்திய அரசு; பலமான மாநில அரசு என்ற ஏற்பாடு ஆகும். பலமான மத்திய அரசு, பலமான மாநில அரசுகள் என்ற உண்மையான ஜனநாயக கோட்பாட்டிற்கு எதிரானது. எனினும் மாநிலக் கட்சிகள் எழுப்பும் மாநில சுயாட்சிக் கோரிக்கை வரவேற்க வேண்டிய நிலைப்பாடு.
ஆனால் அதனை அக்கட்சிகள் உறுதியாக தொடர்ந்து எழுப்புவதில்லை.
தமிழகத்தில் அதிமுக, திமுக உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் அவ்வபோது மாநில சுயாட்சிக் கோரிக்கையை எழுப்பினாலும் மக்களைத் திரட்டிப் போராட முன்வருவதில்லை. ஏனெனில், மக்களுக்கான அதிகாரம் என்ற வகையில் மாநில சுயாட்சிக் கோரிக்கையை அவர்கள் எழுப்புவதில்லை.
உண்மையில், மாநில முதலாளித்துவக் கட்சிகள் தமிழகத்தில் மக்கள் ஆதரவை பெற்றிட மொழி, இன சமத்துவப் பிரச்னைகளை பயன்படுத்திக் கொண்டனர். ஆனால், அவை இன்னும் தீர்க்கப்படவில்லை. உழைக்கும் மக்கள் இயக்கங்கள் அவற்றை எழுப்பிட வேண்டும். மாநில சுயாட்சிக்காக உழைக்கும் மக்கள் குரலெழுப்ப வேண்டும். அத்துடன் கீழ்மட்ட உள்ளாட்சி அமைப்புக்கள் வரை அதிகாரம் பரவலாக்கப்பட்டால் தான் தமிழினக் குடிமக்கள் ஒவ்வொருவரும் சம உரிமை கொண்டவர்களாக வாழ முடியும்.
பல தேசிய இன மக்கள் உழைக்கும் வர்க்கம் என்ற வகையில் நாடு தழுவிய அளவில் மொழி, பண்பாட்டு, இன உரிமைகளுக்காக திரளும் போது இனச் சமத்துவம் சாத்தியமாகும்.
எனவே, தற்போதைய நிலையில் இந்திய தேசிய இனப்பிரச்னை மூன்று குறிக்கோள்கள் கொண்டது.
அனைத்து மொழிகளுக்கான சமத்துவம்
மத்திய மாநில உறவுகள் சீரமைத்தல்
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பல பகுதிகளுக்கிடையே உள்ள சமச்சீரற்ற நிலை மாறி சமமான வளர்ச்சி. இவை 65 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் நீடிக்கின்றன.
இந்த மூன்று அம்சங்களை மையமாக வைத்து பல கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் இயக்கம் வளர்க்கப்பட வேண்டும்.
மூன்றாவது அம்சமாக சொல்லப்பட்ட சமச்சீரற்ற வளர்ச்சி, முதலாளித்துவ வளர்ச்சிப்பாதை ஏற்படுத்திய விளைவு, இந்திய ஆளும் வர்க்கக் கொள்கைகளை எதிர்த்த ஒன்றுபட்ட போராட்டம், தேசிய இனப் பிரச்சனைக்கான ஜனநாயகத் தீர்வாக அமையும்.
தேசிய இனப்பிரச்சனைகளை ஏகாதிபத்தியம் எவ்வாறு கையாள்கிறது என்பதை நினைத்துப் பார்ப்பது அவசியம். 1950களில் 60களில் காலனீய ஆதிக்கம் உலகளவில் தகர்க்கப்படும் காலத்திற்கு முன்பு, தேசீய இனப்போராட்டங்களுக்கு, அவை பெரும்பாலும் காலனிய எதிர்ப்பு இயக்கங்களாகவும் அமைந்த நிலையில், ஒரு வலுவான ஏகாதிபத்திய எதிர்ப்பு உள்ளடக்கம் இருந்தது.
ஆனால், அதற்குப்பின் வளரும் நாடுகளுக்கு எதிரான வகையில் ஏகாதிபத்தியம் பல தேசிய இன எழுச்சிகளை தூண்டி விட்டது. வளரும் நாடுகளில் சிலவற்றை பலவீனப்படுத்தும் நோக்குடன் இந்த நாடுகளில் பிரிவினை வாத இயக்கங்களை ஆதரித்தது. அவற்றிற்கு பண மற்றும் ஆயுத உதவி அளித்தது. இந்தப் பின்னணியில், பல தேசிய இன உணர்வு அடிப்படையிலான இயக்கங்கள் முற்போக்கு உள்ளடக்கத்தை இழந்து, ஏகாதிபத்திய நலன்களுக்கு சாதகமாக செயல்படும் நிலை ஏற்பட்டது.
ஆப்பிரிக்காவில், காலனி ஆதிக்கத்தை எதிர்த்த தேசிய இன போராட்டங்களை உடைக்க குழு-இன பிரிவினை வாதங்கள் கிளப்பி விடப்பட்டன. சோவியத் யூனியனுக்கும், சோசலிசத்திற்கும் எதிராகவும், இச்செயல்பாடுகள் ஏகாதிபத்தியத்தால் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன. இந்திய நாட்டில் வடகிழக்கு மாநிலங்களிலும், சீனாவில் திபெத் பகுதியில் பிரிவினைவாத சக்திகளை கிளப்பி விடுவதிலும் ஏகாதிபத்தியத்தின் பங்கு உள்ளது என்பது தெளிவு படுத்தப்பட வேண்டும்.
எழுபது ஆண்டுகள் ஒன்றுபட்ட நாடாக இருந்த யூகோஸ்லேவியா நாடு, குரோஷியா, ஸ்லோவினியா, போஸ்னியா என துண்டு துண்டான நாடுகளாக பெரும் இரத்தக் களறிக்கு இடையில் பிரிந்தன. இன மோதல்களில் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியானர்கள். கொடூரமாக மக்கள் தங்களிடயே போரிட்டு சாகும் நிலையை ஏகாதிபத்தியவாதிகள் தங்கள் சுயநலத்திற்காக ஊக்குவித்தனர்.
இனவெறியும், ஏகாதிபத்திய தூண்டுதலும் சேர்ந்தால், பேரழிவு ஏற்படும் என்பதற்கு ஒரு உதாரணம் யூகோஸ்லேவியா. அமெரிக்க ஏகாதிபத்தியம் அங்கு தனது அரசியல், பொருளாதார, ராணுவ மேலாதிக்கத்தை நாட்டுப்பிரிவினை மூலம் வலுவாக உறுதிபடுத்திக் கொண்டது. இதேநிலையை தெற்காசியப் பிராந்தியத்தில் ஏற்படுத்த அவர்கள் விரும்புகின்றனர்.
சீனாவை மட்டுப்படுத்த இந்தியாவை பகடைக்காயாக பயன்படுத்துவது உள்ளிட்ட பல தந்திரங்களை கையாள்கின்றனர். இலங்கை நாடு அமைந்துள்ள பகுதி, ஒரு முக்கியமான, கேந்திரமான பகுதி. இலங்கையில் இனக்குழப்பம், மோதல்கள் நீடிப்பது, அவர்களுக்கு சாதகமாக உள்ளது.
முதலாளித்துவம் எப்போதும் தேசிய இனக் கோரிக்கைளை முன்னிறுத்தும். ஆனால், பாட்டாளி வர்க்கம் வர்க்கப் போரட்டத்துக்குட்பட்டு இந்த கோரிக்கைகளை எழுப்பும். தேசிய இனங்களுக்கு சமத்துவம், சம உரிமையை வலியுறுத்துகிற அதே நேரத்தில், பாட்டாளி வர்க்கக் கூட்டணியை முக்கியத்துவம் கொடுத்து முன்னிறுத்தும்.
ஒவ்வொரு தேசிய இன கோரிக்கையையும் தொழிலாளி வர்க்கப் போராட்ட கோணத்திலேயே அணுகுவதே சரியானது. இனம் சார்ந்த கலை, இலக்கியம், இசை, மொழி, பண்பாடு என அனைத்துத் துறைகளிலும் முற்போக்கான கோரிக்கைகள் உருவாக்கப்பட வேண்டும். அந்தக் கோரிக்கைகளுக்காக மக்கள் திரண்டிட வேண்டும். முதலாளித்துவம் இனக் கோரிக்கைளை முன்னிறுத்தி மக்களை தனது வசம் கைப்பற்றி கொள்ளும் என்ற வரலாற்று அனுபவம் இங்கு ஏராளமாய் இருக்கிறது.
ஆதாரம்.தோழர்கள் லெனின் ஸ்டாலின் எழுதிய நூல்களின் குறிப்புகளிலிருந்து.
சூாியசேவியா் தோழா் வரலாற்று ஆசிாியா் ஆய்வாளா்
No comments:
Post a Comment