Saturday, July 14, 2018

இயக்கங்களின் Chosen One உளவியல் கட்டமைப்பு

Lafees Shahid
Via Facebook
2016-10-06

அல் குர்ஆன் யூதர்களின் சரித்திரங்களை கூறுவதன் நோக்கம் அதனை வாசிப்பவர்களுக்கு கதை கூறுவதற்காக அல்ல என்பது தெளிவு. வரலாற்றில் யூதர்கள் தூதுத்துவ பணியை சுமக்கும் தகுதியை இழந்து ஏன் வீழ்ச்சி அடைந்தார்கள், யூதர்களின் இழிவுகளுக்கான பண்பாட்டு மற்றும் உளவியல் காரணிகள் என்ன என்பதை அடையாளப்படுத்தி அவற்றை தவிர்ந்திருக்குமாறு முஸ்லிம் சமூகத்தினை அறிவுறுத்தல் செய்வது அல் குர்ஆனின் நோக்கம்.

யூதர்கள் தூதுத்துவத்தை சுமக்கும் தகுதியை இழந்தமைக்கான பிரதான காரணம் தம்மை "இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட" மக்களாக கருதிக் கொண்டது. இந்த Chosen One உளவியல் கட்டமைப்பு யூதர்களை கர்வம் கொண்டவர்களாகவும், தமக்குள் மிகவும் உட் சுருங்கிப் போன தன்மை கொண்டவர்களாகவும் மாற்றியது.

மேன்மையும், மாண்புகளும் தம்முடைய "சாராம்ச" பண்பு என்று யூதர்கள் கருதிக் கொண்டு ஏனையோரை இழிவான எண்ணம் கொண்டு நோக்கினார்கள். உலகம் முழுவதற்கும் ஒரு அருளாக வந்த இஸ்லாத்தினை தமக்கு மத்தியில் மட்டும் சுருங்கிக் கொண்டு பிரபஞ்ச தூதுத்துவத்துக்கு துரோகம் இழைத்தார்கள். இந்த Chosen One உளவியல் தான் நபிகளாரினை - அவர் உண்மையான இறைத்தூதர் என்று தெரிந்தும் - நிராகரித்தது. அவருடைய சமூக செயல் திட்டங்களுக்கு தடையாக நின்றது.

தற்கால இஸ்லாமிய சமூகத்தில் உருப்பெற்றுள்ள சில குழுக்கள் கூட தம்மை இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்ற உளவியலால் போர்த்திக் கொண்டு இருக்கிறார்கள். தம்மைத் தவிர ஏனையோர் வழி பிறழ்ந்தவர்கள், இஸ்லாத்தினை சரிவர பின்பற்றாதவர்கள் என்று இவர்கள் கருதுகிறார்கள்.

இதனால் தான் ஏனைய சிந்தனை பள்ளிகளின், இயக்கங்களின் கருத்துக்களை காது கொடுத்து கேட்பதற்கு கூட இவர்கள் தயாராக இருப்பதில்லை. இது அதன் உச்சகட்ட வளர்ச்சியாக மற்றமையின் மனப்பாங்குகளை, அதன் இருப்பை மறுக்கும் பாசிஸமாக மாற்றமடைகிறது.

விளைவாக எஞசுவது குழப்பங்களும், அமைதியின்மையும் மட்டுமே.
மதிப்பீடுகளின் வீழ்ச்சியே ஆன்மீக வீழ்ச்சி. மற்றமையின் இருப்பை அங்கீகாரம் செய்வதுதான் இலங்கை முஸ்லிம்கள் தமக்கு உள்ளும் புறமும் செய்ய வேண்டிய தலையாய பணி...

No comments:

Post a Comment