Monday, July 9, 2018

இனிக்காத முக்கனிகளில் முதல்கனி! -சரவணன் சந்திரன்

இனிக்காத முக்கனிகளில் முதல்கனி!

-சரவணன் சந்திரன்

தலைகீழாகத் தொங்குகிற வவ்வாலைப் போல ஒரு வதந்தியும் ஒரு மருத்துவ உண்மையும் லட்சக்கணக்கானோர் வாழ்வை ஒரு பழத்தை அறுப்பதுபோலக் குறுக்குவெட்டாக அறுத்துத் தள்ளியிருக்கிறது. இந்த மனிதர்களின் வாழ்வு இந்த வருடம் பூத்துக் குலுங்கவில்லை. பொதுவாகவே ஆடிக் காற்று துவங்கி விட்டால், கிளிமூக்கு மாம்பழம்பங்களின் வருகையோடு மாம்பழ சீசன் முடிவிற்கு வந்துவிடும். மாம்பழ விவசாயிகள் துவங்கி விற்பனையாளர்கள் வரை எல்லோரும் முகமெல்லாம் மஞ்சள் பூத்துத் திரிவார்கள். சும்மாவா அப்படி? அதிகப்பட்ச விலையாக சில சமயங்களில் கிலோவிற்கு நூறு ரூபாய் கிடைத்த கதைகளெல்லாம் சந்தைகளில் கொட்டிக் கிடக்கும்.

இந்த வருடம் அத்தனை நம்பிக்கைகளையும் அத்தனை உழைப்புகளையும் அடித்துச் சாய்த்திருக்கிறது  வேண்டாத பருவம். ஐந்து ரூபாய்க்குக்கூட மாம்பழங்களை வாங்க ஆளில்லை என்கிற நிலைமை இயல்பை மீறி கோரப் பற்களைக் காட்டி கனிவதற்குப் பதில் அழுகி விட்டது.
திரும்புகிற பக்கமெல்லாம் புலம்பல்கள் கசப்பான பழங்களாய் மாறிக் காதில் விழுகின்றன.

இந்த வணிகத்தில் ஈடுபட்டிருக்கிற எல்லா தட்டு மக்களையும் கடந்த மாதம் முழுக்கச் சந்தித்தேன். பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஊரொன்றைச் சேர்ந்த மொத்த வியாபாரியும் ஏற்றுமதியாளருமான ஒருத்தரைச் சந்தித்த போது, “இந்த வருடம் மட்டும் எனக்கு ஐம்பது கோடி நஷ்டம். இதிலிருந்து பிழைத்து எழ இன்னும் குறைந்தது ஐந்து வருடங்களைச் செலவளிக்க வேண்டியிருக்கும்” என்றார். மாம்பழத்தைத் தாண்டி வேறு ஏதாவது பழ வியாபாரமொன்றில் ஈடுபட்டுத் தப்பித்துக் கொள்வார் அவர். அதே பொள்ளாச்சிக்கு அருகில் இருக்கிற வயதான விவசாயி ஒருத்தர் தன்னுடைய மாம்பழத் தோப்பை இரண்டே முக்கால் லட்சம் ரூபாய்க்குக் குத்தகைக்கு விட்டிருக்கிறார்.

மாம்பழ வீழ்ச்சியின் காரணமாக அவருடைய தோப்பில் கொத்துக் கொத்தாய்க் காய்த்திருந்த பழங்களைக் குத்தகைக்கு எடுத்தவர், பாதிக் காய்களை எடுத்த பிறகு மிஞ்சியிருப்பவற்றை மரத்திலிருந்து இறக்கவே இல்லை. “இறக்கு கூலியே வராது. வேணும்னா உங்க சொந்தக்காரங்களுக்கு எடுத்துக் குடுத்துக்கோங்கன்னு சொல்லிட்டான். ஒரு காயில கைய வச்சாலும் நாளைக்கு நீங்க எடுத்து வித்துட்டீங்கன்னு வந்து நிப்பான். அதான் அப்படியே விட்டுட்டோம். இதுகூட சிக்கலில்ல. எனக்கு வியாபாரம் ஆகலைன்னு அடுத்த வருஷம் காசு கொடுக்காம இன்னொரு வருஷ குத்தகைய கேப்பாங்க. இத்தனைக்கும் பாதிக் காயை எடுத்து வித்துட்டாங்க” என்றார். பாதிக் காய்களை எடுத்து விட்டீர்களே என்கிற கேள்வியை அவர் குத்தகைதாரரை நோக்கி எறியவே முடியாது. ஏற்கனவே நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் போதே நஷ்டம் என்று சொல்லி பாதித் தொகையைத் தராமல் கட்டையைக் கொடுக்கிற குத்தகைதாரர்களிடம் இதையெல்லாம் பேசிப் பயனில்லை என்பதை விவரம் தெரிந்தவர்கள் அறிவார்கள்.

மூன்றாவது அடுக்கில் இருப்பவர்களான நேரடி விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். அவர்களது பழங்களை முழுக்கவே சந்தைப்படுத்த இயலவில்லை. இரண்டு டன் மாம்பழத்தை குப்பையில் போட்டு விட்டேன் என்று சொல்லி ஒரு விவசாயி வந்து நின்றார்.

ஒரு பிராந்தியத்தில் மட்டும் குப்பையில் கொட்டிய மாம்பழங்களைத் தின்பதற்கு அந்தளவு எண்ணிக்கையில் அங்கே மாடுகள்கூட கிடையாது என்பது பெருஞ்சோகம். இதற்கிடையே கோடையில் பெய்த ஆலங்கட்டி மழையொன்று தர்மபுரி மாவட்டத்தில் மாம்பழங்களைக் கீழே தள்ளி வெம்பச் செய்தது தனிக் கதை. என்ன காரணம் என்பதைச் சொல்வதற்கு முன்னால் ஒரு புள்ளி விபரத்தைப் பார்த்து விடலாம்.

இந்திய ஏற்றுமதி சங்கமொன்றின் புள்ளி விபரப்படி 2016-17 ஆம் ஆண்டில் மட்டும் 52,761 டன் மாம்பழம் ஏற்றுமதியாகியிருக்கிறது. அரபு நாடுகள், பங்களாதேஷ், மலேசியா, நெதர்லண்ட், இலங்கை, நேபாளம், இலண்டன், பாகிஸ்தான், கத்தார் போன்ற நாடுகளுக்கு பெருமளவில் இந்தியாவில் இருந்து மாம்பழங்கள் ஏற்றுமதியாகின்றன. தொகையில் சொல்ல வேண்டுமெனில், கடந்த வருடம் மட்டும் இந்தியா 4,498 கோடி ரூபாய்க்கு பழ ஏற்றுமதி செய்திருக்கிறது. இதில் நாற்பது சதவீதம் மாம்பழத்தின் வழியாக வந்தது. இந்த வருடம் புள்ளி விபரத்தை எடுத்துப் பார்க்கவே எல்லோரும் அஞ்சுகின்றனர். இதில் முக்கால்வாசி தொகை மண்ணில் சரிந்திருக்கிறது. அவற்றில் இனி பழ வண்டுகள் மொய்க்கும்.

1998-இல் மலேசியாவில் உள்ள நிபா என்கிற கிராமத்தில் அந்த வைரஸ் முதன்முறையாகக் கண்டறியப்பட்டது. அதனாலேயே அதற்கு நிபா வைரஸ் எனவும் பெயரிட்டார்கள். சுமார் 105 பேர் அந்த வைரஸ் தாக்குதலால் மரணமடைந்தார்கள். அது உலகின் பல்வேறு பக்கங்களுக்கும் பரவியது என்றாலும், இந்திய மருத்துவக் கணக்கீட்டின் படி மேற்கு வங்க மாநிலத்தை அந்த வைரஸ் இரண்டு முறை தாக்கியது. 2001 ஆம் வருடம் சிலிகுரியையும் 2007-ஆம் வருடம் நாதியாவையும் அது தாக்கியது.

பழந்திண்ணி வவ்வால்களின் கழிவுகள் மற்றும் எச்சில் வழியாக அந்த வைரஸ் பரவுகிறது என மலேசியாவில் கண்டறிந்ததையடுத்து இந்திய மருத்துவத் துறையும் அதை உறுதி செய்தது. பழந்திண்ணி வவ்வால்கள் வாய்வைத்த பழங்களுக்கெல்லாம் எட்டில் சனி எட்டிப் பார்த்தது இதற்குப் பிறகுதான். இந்தமுறை அந்தச் சனி இந்தியாவின் தெற்கு முனையான கேரளாவில் எட்டிப் பார்த்து விட்டது. கோழிக்கோடு பகுதியில் ஒரே குடும்பத்தில் மூன்று பேரைத் தாக்கியது அந்த வைரஸ். அவர்களுக்குச் சிகிச்சையளித்த செவிலி ஒருத்தரையும் தாக்கியது., இவர்கள் உள்ளிட்டு இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை பத்துப் பேர் உயிரிழந்திருக்கின்றனர் என்று சொல்கிறார்கள்.

அந்தக் குடும்பம் தங்களுடைய கிணற்றைச் சுத்தப்படுத்திய போது அந்த வைரஸ் தாக்கியதாகவும் செய்திகள் சொல்கின்றன. நர்ஸ் ஒருத்தரே இந்த வைரஸால் உயிரிழந்ததால் ஒட்டுமொத்த மருத்துவ வர்க்கமும் அற நோக்கோடு வீறிட்டு எழுந்து அந்த வைரஸை இப்போது கட்டுப்படுத்தி இருக்கின்றனர். கேரள அரசு எடுத்த துரித நடவடிக்கைகளின் காரணமாக முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர் அந்த எட்டாமிடத்து சனியை. அதற்காக கேரள முதல்வர் உலக அரங்கில் பாராட்டுகளைக் குவித்துக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் இப்படி வந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை மருத்துவத் துறை சார்ந்தவர்கள்தான் சொல்ல வேண்டும். உண்மையிலேயே அதைப் பற்றி அறிந்து கொள்வதற்கு ஆவலாகவும் இருக்கிறேன். எல்லாம் முடிந்து விட்டது என நிமிர்ந்து உட்கார முடியாது. அதன் தாக்கம் எல்லா பக்கங்களிலும் எதிரொலிக்க ஆரம்பித்து விட்டது.

தோழியொருத்தர் தன்னுடைய கேரள பயணத்தை ஒத்திப் போட்டார். கோழிக்கோடு பகுதியில்தானே அது என்ற போது, அந்தக் கேள்வியை அவர் உள்வாங்கிக் கொள்ளவே இல்லை. மருத்துவத் துறை விளக்கங்களை அவர் காதில்கூட போட்டுக் கொள்ளவில்லை. குறைந்தது ஆறுமாதத்திற்காவது கேரளாவிற்குச் செல்ல மாட்டேன் என கொள்கை முடிவு எடுத்து விட்டார். ஒரே இந்தியாவிற்குள் வாழ்பவர்களே இந்த முடிவிற்கு வரும் போது, பிற நாடுகளின் பயனாளர்கள் என்ன செய்வார்கள்?
அதுதான் பழ ஏற்றுமதி விஷயத்தில் நடந்தது. இத்தனைக்கும் இந்தியாவில் இருந்து போகும் பழங்களின் ஏற்றுமதியில் கேரளாவின் பங்கு என்பது சொற்பமானதே. பழந்திண்ணி வவ்வால்கள் மெல்லிய தோலைக் கொண்ட பழங்களையே உண்ணுகின்றன என்பதால் மாம்பழம், கொய்யா, சப்போட்டா, வாழை போன்ற பழங்களை இறக்குமதி செய்ய பல நாடுகள் மறுத்து விட்டன.

குறிப்பாக அதிகளவில் ஏற்றுமதியாகும் மாம்பழத்தின் மஞ்சள் மீது மிக அடர்த்தியான தடைச்சிவப்பை அணிவித்து விட்டனர். ஏற்றுமதி தலைகுப்புறத் தள்ளி விட்டாலும் உள்ளூர் வியாபாரத்தை வைத்து மேலெழலாம் என்கிற எண்ணத்திலும் அடி விழுந்து விட்டது. உள்ளூர் வியாபாரத்தை எடுத்துக் கொண்டாலும், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகியவற்றை உள்ளடக்கிய பிற மாநிலப் பழங்களில் பெரும்பாலானவை கேரளாவிற்கே செல்கின்றன.

தமிழ்நாட்டில் மாம்பழம் சாப்பிட்டு ஒருத்தர் வைரஸ் தாக்கிச் செத்து விட்டார் என்கிற வதந்தி கேரளாவில் மலைத் தீ போலப் பரவியது. வவ்வாலைப் போல அந்த வதந்தி ஒவ்வொரு வீட்டின் நிலைக் கதவிலும் தொங்கியது. மக்கள் பழந்திண்ணும் பழக்கத்திலிருந்து ஒடுங்கிக் கொண்டார்கள். இத்தனைக்கும் மலையாள தேசமென்பது பழங்களைத் தின்று தீர்க்கும் தேசம். தமிழ்நாட்டைப் போல பழமே சாப்ப்பிடாத வர்க்கமில்லை அவர்கள்.

அதிகளவிலான இறைச்சி உண்ணும் பழக்கம், பழம் சாப்பிடும் பழக்கத்தையும் உடன் சேர்த்தே வைத்திருக்கிறது. மலையாள மக்கள் குறிப்பாக தமிழகத்திலிருந்து வரும் பழங்களை ஒதுக்க ஆரம்பித்தார்கள். மலப்புலா பக்கத்தில் இருக்கிற மஞ்சேரியில் உள்ள மொத்த வியாபாரி ஒருத்தர், “இனிமே சனங்களோட பயத்தை எதைக் காட்டியும் போக்க முடியாது. நிலைமை சீராக ஒரு மூணு மாசமாவது ஆகும். என் சப்ளையரெல்லாம் தினமும் நெருக்குறாங்க. மனச கல்லாக்கிட்டு போனயே எடுக்கறதில்லை” என்றார்.

பொதுவாகவே கேரளாவிற்கு தமிழகத்திலிருந்து தினம்தோறும் 200 லாரிகளில் பழங்கள் போய் இறங்கும். அதிலும் ரம்ஜான் நேரத்தில் 400 லோடுகளாக அதிகரிக்கும். ஆனால் இந்த முறை 50 லோடு என்பதே அதிகம். அதில்கூட அதிகமும் வேறு பழங்களே ஏறிச் சென்றன. நான் இருக்கும் இடத்திற்குப் பக்கத்தில் நெல்லிக்காய்த் தோப்பு ஒன்றை கேரள வியாபாரி குத்தகைக்கு எடுத்திருக்கிறார். பழந்திண்ணி வவ்வால் கதை உண்மையென்றே வைத்துக் கொண்டாலும், அது நெல்லிக்காயில் எல்லாம் வாய் வைக்காது. ஆனாலும் குத்தகைதாரர் நெல்லிக்காயை பறித்துப் போக வரவில்லை.

நெல்லி மரத்தடியில் நெல்லிக் காய்கள் பச்சை எறும்புகள் போல தரையில் வீழ்ந்து பரந்து கிடந்தன. மக்கினால் உரம்தான் விடுங்க என அந்த விவசாயி மனதைத் தேற்றிக் கொண்டார். எத்தனையைத்தான் அள்ளிச் சாப்பிடுவது? நானே ஒரு கூடை நிறைய அள்ளி வைத்துக் கொண்டு போகிறவர்கள் வருகிறவர்களுக்கெல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். இத்தனைக்கும் ஒட்டன்சத்திரத்திரம் சந்தையில் கிலோ முப்பது ரூபாய்க்கு நெல்லி இன்றைய தேதியில் விற்றுக் கொண்டிருக்கிறது. குத்தகையில் ஒரு சொல் மாறக்கூடாது என்பதால் கைவைக்க மாட்டார்கள்.

நெல்லிக்கே இந்தக் கதையென்றால், மாம்பழத்திற்கு? தமிழக பழ வியாபாரத்தை, அதிலும் குறிப்பாக மாம்பழ வியாபாரத்தை இடையில் இருக்கிற வியாபாரிகள் பேராசையுடன் கெடுத்து வைத்திருக்கிறார்கள். கார்பைடு கல் வைப்பதாலேயே நான் மாம்பழம் சாப்பிடுவதில்லை என்று சொல்கிற நிறையப் பேரைச் சந்தித்திருக்கிறேன். இன்னொரு பக்கம் பச்சைத் திட்டுகள் மாம்பழத்தில் தெரிந்தால், அது சரியில்லாத பழம் என நுகர்வோர்களே எண்ணிக் கொள்கிற மடமையும் இருக்கிறது. பொட்டுப் பச்சை இல்லாமல் முழு மஞ்சளாக இருக்கும் பழங்களையே அவர்கள் சூப்பர் மார்கெட்டுகளில் விரும்பித் தேர்ந்தெடுக்கிறார்கள். விஷயம் தெரிந்தவர்களுக்கு அவை கல்வைக்கப்பட்டவை என்பது நன்றாகத் தெரியும்.

கல் வைப்பதைத்தானே கண்டுபிடிக்கிறீர்கள்? சமீபத்தில் தாராபுரம் பக்கத்தில் உள்ள பண்ணையில் ஒரு லோடு சப்போட்டாவைக் கொண்டு வந்து அதற்கு ஸ்பிரேயரில் வைத்து மருந்து அடித்துக் கொண்டிருந்தார்கள். விசாரித்தபிறகுதான் சோதனை செய்பவர்களின் முகத்தில் கரியைப் பூச அவர்கள் இப்போது மாம்பழம், சப்போட்டா போன்ற பழங்களில் ஸ்பிரேயர் வைத்து மருந்தடிக்கத் துவங்கி விட்டார்கள் என்பதும் தெரிந்தது.

முழுக்கவே இதுபோன்ற காரணங்களால் உள்ளூர் வியாபாரம் முன்னைப் போலச் சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை. ஏற்றுமதி அல்லது கேரளாவைக் குறிவைத்தே பழ வியாபாரம் என்கிற அச்சு பெரும்பாலும் சுழல்கிறது. நல்லவேளை, கொய்யாவில் மருந்தடிக்க முடியாது என்பதால் எங்களுடைய பிழைப்பு சிக்கலில்லாமல் தொடர்கிறது. எங்களுடைய தோப்பில் வவ்வாலை நான் பார்த்ததே இல்லை என்றாலும், மொத்தமாய் அடி விழும் போது நாலு அடி நம் முதுகிலும் விழத்தான் செய்யும். நாற்பது ரூபாய் விற்றுக் கொண்டிருந்த கொய்யா இப்போது பதினைந்து ரூபாயாக வீழ்ந்திருக்கிறது. ஆடி போனால் டாப்பாக வந்து விடுவான் என அந்தப்படத்தில் சொல்வதைப் போல சபரிமலை சீசன் ஆரம்பித்தால், தப்பித்து விடலாம் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

ஆனால் அந்த நம்பிக்கை மாம்பழ விஷயத்தில் இந்தாண்டு குப்புற வீழ்ந்துவிட்டது. இதிலிருந்து மீள அவர்கள் இன்னும் சில ஆண்டுகளை பணயம் வைக்க வேண்டியிருக்கும். அதிகாலையில் மூன்று பெட்டி மாம்பழங்களை எடுத்துக் கொண்டு பேருந்தில் அவரது வயதான மனைவியை அழைத்துக் கொண்டு தள்ளாடி ஏறிப் போனார் எனக்குத் தெரிந்த விவசாயி ஒருத்தர். உள்ளூர்ச் சந்தையில் யாரும் வாங்கத் தயாராக இல்லை. கொடுமுடி பக்கத்தில் இருக்கிற மூவலூருக்கு போகிறேன் என்றார்.

மூவலூர் சந்தையில் இருவரும் வெயிலில் கடை பரப்பியிருக்கின்றனர். இரவு பத்து மணிக்குத் திரும்பி அவர் வந்த போதும் தற்செயலாக அந்தயிடத்தில் இருந்தேன். “மொத தடவையா இவளை வியாபாரத்துக்கு கூப்டு போறேன். விக்காத நெலையில வேறாளுக்கு கூலி குடுக்க முடியுமா. பஸ்ஸூக்கு எனக்கும் அவளுக்கும் சேத்து முன்னூறு ரூபா. பெட்டிக்கு இருநூறு ரூபா. மத்தியான சாப்பாட்டுக்கு ரெண்டு பேருக்கும் சேர்த்து நூறு ரூபா. இடையில மூணு நாலு தடவை  ஒண்ணுக்கு வெளிக்கிக்கு போய்ட்டு வர்றதுக்கு முப்பது ரூபா. அதுக்கும் காசுன்னு வந்துட்டுதுல்ல. நாள் பூரா உக்காந்து வித்ததில தொள்ளாயிரம் ரூபா கிடைச்சுது. விக்காத மிச்சத்த அங்கயே கொட்டிட்டு திரும்பி வர்றோம்” என்றார். சேலைத் தலைப்பால் அந்த அம்மாள் கசிந்த நீரைத் துடைப்பதைப் பார்த்தும் பார்க்காமல் இருளிற்குள் இறங்கினேன். அடுத்த வருடமாவது அவர்களது வாழ்க்கையில் வெளிச்சம் பிறக்க வேண்டும்!

https://m.facebook.com/story.php?story_fbid=1750037978437776&id=100002947732385

No comments:

Post a Comment