Sunday, November 25, 2018

ஹாலிவுட் படங்களும், சைனா மார்கெட்டும்

பால கணேசன்
2018-11-25

கடைசியாக ஒரு சைனீஸ் வில்லன் நடித்த ஹாலிவுட் படத்தை நீங்கள் எப்போது பார்த்தீர்கள் என்று நினைவிருக்கிறதா? அல்லது சைனாவை வில்லன் போல காட்டிய, சைனா மக்களை கெட்டவர்கள் போன்று சித்தரித்த பெரிய ஹாலிவுட் படத்தை கடைசியாக எப்போது பார்த்தீர்கள்?

ஒரு பத்து வருடத்திற்கு முன்பெல்லாம் ஒரு பெரிய ஆக்ஷன் ஹீரோ நடித்த ஹாலிவுட் படம் வெளியாகிறதென்றால் அதில் ஒரு சின்ன வேடத்தில் ஒரு சைனீஸ் ஆள் நடித்திருப்பார். பின்னர் ஹீரோவின் நண்பனாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சைனீஸ் நடிகர்கள் நடிக்க ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்தில் படத்தின் முக்கிய திருப்பங்களுக்கு காரணமான வேடத்தில் அவர்கள் வந்தார்கள். அதில் வில்லனாக நடிக்கும் சைனீஸ் நடிகர்களும் கூட இருந்தார்கள். ஆனால் இப்போது?

ஒரு விஷயம் சொன்னால் உங்களுக்கு நம்புவது கடினமாக இருக்கும். சென்ற வருடம் பிக்ச்சார் நிறுவனம் ஒரு அனிமேஷன் படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். அதில் ஒரு காட்சியில் ஏலியன் ஒன்று பூமிக்கு வந்து மிக முக்கியமான இடங்களை எல்லாம் அழிப்பது போல ஒரு காட்சி இருந்தது. நகைச்சுவை காட்சிதான் அது. அதில் சீனப்பெருஞ்சுவரில் ஒரு பெரிய ஓட்டையை போடுவதாக திரைக்கதை எழுதியிருந்தார்கள். ஆனால் அதற்கான அனிமேஷனை உருவாக்கிக்கொண்டிருந்தபொழுது இந்த காட்சியை சீனாவில் திரையிடும்பொழுது, அது சில எதிர்மறையான விமர்சனங்களையும், மனக்குழப்பதையும் ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாகவும், அதனால் வசூல் குறைய வாய்ப்பிருக்கிறது என்றும் முடிவு செய்த தயாரிப்பு நிறுவனம், இறுதியில் சீனப்பெருஞ்சுவரை ஓட்டை போடுவதற்கு பதிலாக, தாஜ்மகாலை உடைப்பது போல காட்சி மாற்றினார்களாம்.

மேற்கண்ட பத்தியின் மூலம் தெரியவரும் செய்திகளை கவனியுங்கள். அது அனிமேஷன் படமாகவே இருந்தாலும் கூட, நகைச்சுவைக்காக வைக்கப்பட்ட காட்சியாகவே இருந்தாலும் கூட, சீனாவின் பெருமை என்று கூறப்படும் ஒரு உலக அதிசயத்தை இழிவுபடுத்துவதை போல காட்டக்கூடாது என்பதில் ஏன் தயாரிப்பு குழுவினர் இவ்வளவு மும்முரமாக இருந்தார்கள்? அடுத்ததாக சினிமா என்கிற ஊடகம் ஒரு பொழுதுபோக்கு விஷயம். அந்த பொழுதுபோக்கு விஷயத்தை பார்க்கும் ஒருவன் மனக்குழப்பம் அடைவான் என்றும், அதன் மூலம் படத்தின் வசூல் பாதிக்கும் என்றும் முடிவெடுக்க வேண்டிய காரணமென்ன? இந்த கேள்விகளுக்கான பதில் ஒன்றே ஒன்றுதான்.

பணம். சீனா கடந்த மூன்று வருடங்களுக்குள் ஹாலிவுட்டுக்கு அள்ளி தந்திருக்கும் பணம்.

சீனாவில் ஒவ்வொரு நாளும் பத்து திரையரங்குகள் புதிதாக திறக்கப்படுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. எப்படியெனில் 2012-ல் வெறும் 12,407 திரையரங்குகள் மட்டுமே சீனாவில் இருந்தது. அதுவே 2017-ல் 50,776 திரையரங்காக மாறியது. 2021-ன் முடிவில் 80,377-ஆக இருக்கும் என்று கூறுகிறார்கள். சீனாவின் மொத்த சினிமா வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு வருமானம் ஹாலிவுட் படங்களால் கிடைக்கிறது. 2015-ல் 38% வருமானத்தை தந்த இந்த ஹாலிவுட் படங்கள், அதுவே 2017-ல் 41% வருமானத்தை தந்ததாக கூறப்படுகிறது.

இந்த வசூல் ஹாலிவுட் படத்திற்கு எந்தவகையில் உதவுகிறது என்கிற கேள்வி எழலாம். இப்போது நாம் உதாரணமாக ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் பாகம் ஏழு படத்தையே எடுத்துக்கொள்ளலாம். அது மிகப்பெரிய ஹிட்டான ஒரு ஹாலிவுட் படம் என்பது நமக்கு தெரியும். படத்தின் பட்ஜெட்டை விட அதிக அளவு பணத்தை அந்தப்படம் ஹாலிவுட்டிலேயே சம்பாதித்துவிட்டது என்பதும் உண்மை. அதாவது போட்ட காசை எடுத்தாச்சு. இதன் மூலம் அந்தப்படம் ஹிட் என்று அறிவித்துவிட்டார்கள். அதன்பின்னர் அந்தப்படம் சீனாவில் வெளியாகிறது. சீனாவில் அந்தப்படம் 390 மில்லியன் அமெரிக்கன் டாலர்கள் சம்பாதிக்கிறது. கிட்டத்தட்ட உலகம் முழுக்க அந்த படம் சம்பாதித்த லாபத்திற்கு மிக அருகில் வரும் தொகை இது. இப்போது இந்த தொகையும் சேருவதால், வெறும் ஹிட் என்று அறிவிக்கப்பட்டிருந்த அதே படம் இந்த வருமானம் மூலம் பிளாக்பஸ்டர் அந்தஸ்தை பெறுகிறது. இது முதல் நன்மை.

இரண்டாவது நன்மை இந்த ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படங்கள் ஒரு பெரிய ப்ராண்ட். ஏற்கனவே எட்டு பாகங்கள் வெளிவந்துவிட்டன. இந்த வெற்றியின் மூலம் அந்த ப்ராண்டை சீனா  போன்ற பெரியநாட்டில் ஆழமாக பதியவைக்கலாம். நன்றாக கவனியுங்கள். ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படத்தின் கதாபாத்திரங்களில் ஒரு சைனீஸ் கதாபாத்திரமும் முக்கிய பங்காற்றும். இதன்மூலம் அவர்களுக்கு நெருக்கமாகவும் இருக்கமுடியும். ஏழாவது பாகம் வசூலித்ததை விட  50 மில்லியன் டாலர்கள் அதிகமாக வசூலித்து, ஃபேட் ஆப் ஃபியூரியஸ் மிகப்பெரிய சாதனையை சீனாவில் படைத்தது. எட்டாவது பாகமும் பிளாக்பஸ்டர். இதைவிட ஆச்சர்யமாக வெறும் ஆவரேஜ் வெற்றி என்று மட்டும் சொல்லப்பட்ட டிரான்ஸ்பார்மர் படத்தின் இறுதி பாகம், சீனாவில் வெற்றிபெற்று நல்ல வசூலை குவித்ததால், அது பெரிய ஹிட் படமாக மாறியது. இதன்மூலம் சீனாவின் சினிமா மார்க்கட் பற்றி ஓரளவிற்கு ஒரு புரிதல் வந்திருக்கலாம்.

நமக்கு வந்த இந்த புரிதல் சீனாவின் அரசியல்வாதிகளுக்கும் கூட வந்தது. புதிதாக வெளியாகும் எந்தவொரு மிகப்பெரிய ஹாலிவுட் படமாக இருந்தாலும் அதை சீனாவில் வெளியிட அந்த அரசியல்வாதிகள் போடும் ஒரே நிபந்தனை," எந்த காரணத்திற்காகவும் சீனாவின் பெருமையை குழைப்பது போன்ற காட்சிகள் படத்தில் இருக்கக்கூடாது..". அப்படி காட்சிகள் இருந்தால் ஒன்று நீக்கிவிட்டு வெளியிடவேண்டும். இல்லையெனில் மாற்றி எடுத்து வெளியிட வேண்டும். இதை வெறும் கோரிக்கையாக அவர்கள் வைக்கவில்லை. ஒரு எழுதப்படாத சட்டமாகவே இதை முன்னெடுத்து அதை செயல்படுத்துவதிலும் தீவிரமாக இருந்ததன் பலன்தான் சீனப்பெருஞ்சுவருக்கு பதிலாக தாஜ்மகாலை இடிப்பது.

ஏஞ்சலினா ஜூலியின் கணவர் ப்ராட் பிட் சீனாவிற்குள் நுழைய முடியாது என்கிற விஷயம் உங்களுக்கு தெரியுமா? அதற்கு காரணம் என்ன தெரியுமா? 1997-ல் வெளிவந்த செவன் இயர்ஸ் இன் திபெத் என்கிற படத்தில் நடித்ததால் அவருக்கு போடப்பட்ட தடை இது. சீனாவிற்கும், திபெத்துக்குமான சண்டை உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கலாம்.இரண்டாம் உலகப்போரின் போது நிகழ்ந்த மிகப்பெரிய கொடூரமான ஒரு சம்பவம் அது. அதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட ஒரு நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் நடித்த ஒரே காரணத்திற்காக பிராட் பிட்டுக்கு அன்றிலிருந்து அனுமதி மறுப்பு. இதுகூட பரவாயில்லை. லேடி காகா உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.தலாய் லாமாவை இவர் சந்தித்தார் என்கிற ஒரே காரணத்திற்காக இவருக்கு சீனாவில் நுழைய தடைவிதித்தார்கள். உலகின் புகழ்பெற்ற பாடகியான கேட்டி பெரி ஒரு இசை நிகழ்ச்சியின்போது அணிந்திருந்த ஆடையில் சூரியகாந்தி பூக்கள் இருந்ததால் தடைசெய்யப்பட்டார். ஏனெனில் சூரியகாந்தி பூக்கள் என்பது சீனா அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த ஒரு குழுவின் சின்னமாக இருந்தது. அதை ஆதரிப்பது போல ஆடை அணிந்ததாக கூறி கேட்டி பெரிக்கு சீன அரசு ஆயுட்கால தடை விதித்திருக்கிறது.

இப்படி கலைஞர்களை எல்லாம் இந்த மாதிரியான காரணத்திற்காக நாட்டுக்குள் நுழைவதையே தடை செய்யும் சீன அரசு, திரைப்படங்களில் அதை கடுமையாக கடைப்பிடிப்பதில் எந்தவித ஆச்சர்யமும் இல்லை. ஹாலிவுட் அந்த நிபந்தனைகளை ஒப்புக்கொண்டு ஆகவேண்டிய கட்டாயத்தில் இப்போது இருக்கிறார்கள். அதற்கு இன்னொரு முக்கிய காரணம் சீனாவில் தயாரிக்கப்படும் அவர்களது சொந்தமொழி படங்களும் ஹாலிவுட்டுக்கு நிகரான வருமானத்தை சீனாவில் பெற ஆரம்பித்திருக்கின்றன. ஒல்ஃப் வாரியர், ஆபரேஷன் ரெட் சி போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை அடைந்திருப்பதால், சீனப்படங்களின் சந்தையை தாண்டி புதிதாக ஏதேனும் செய்யவேண்டிய கட்டாயத்தில் ஹாலிவுட்க்காரர்கள் இருக்கிறார்கள். அதனால் சீனாவின் எல்லா நிபந்தனைக்கு தலையாட்டுவதை தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.

இதையே இந்தியாவில் சற்று எப்படி இருக்கிறதென எட்டிப்பாத்தால் கேவலமாக இருக்கிறது. அதற்கு உதாரணமாக வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் அது இந்தியாவில் வெளியிடும் 3டி படங்களில், திரையரங்கில் உபயோகிக்கும் 3டி கண்ணாடி வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை தங்களது பங்காக கேட்கிறது. ஆனால் இந்திய திரையரங்க உரிமையாளர்கள் அப்படி எல்லாம் பங்கு தரமுடியாது என்று மறுத்துவிட்டனர். இது முதன்முதலில் ஆரம்பித்த படம் ஜுராசிக் வேர்ல்ட். உங்களுக்கே தெரிந்திருக்கும் அந்த பத்ம 3டியில் இந்தியாவில் வெளியாகவில்லையென்று. இதோ இந்தவாரம் வெளியான தி பெண்டாஸ்டிக் பீஸ்ட் படத்தின் இரண்டாம் பாகமும் வார்னர் பிரதர்ஸ் வெளியீடுதான். இந்தமுறையும் அதே பிரச்சினையால் படம் 3டியில் வெளியாகவில்லை.

உண்மையில் ஹாலிவுட் படங்களுக்கு இந்தியா மிகப்பெரிய மார்க்கட். நாம் டிமாண்ட் செய்யக்கூடிய இடத்தில் இருக்கிறோம். ஆனால் நம் அரசாங்கமோ அல்லது அதிகாரிகளோ அதையெல்லாம் கண்டுகொள்வதேயில்லை. ஒரு நல்ல சினிமா அனுபவத்தை பெற திரையரங்கிற்கு வரும் மனிதர்களை ஒரு பொருட்டாக கூட நம் அரசாங்கம் எடுத்துக்கொள்வதில்லை என்பதற்கு இந்த 3டி கண்ணாடி விவகாரம் ஒரு சிறிய எடுத்துக்காட்டுதான். இன்னொரு பக்கம் சீனாவை  பொறாமையாக இருக்கிறது. அவர்கள் ஹாலிவுட் என்கிற பூனைக்கு மிக எளிதாக மணி கட்டிவிட்டார்கள். ஆனால் நாம்?

https://m.facebook.com/groups/374418146228060?view=permalink&id=792827457720458

No comments:

Post a Comment