RS Prabu
2018-10-04
ஒரு லாரி டிரைவரின் திறந்த கடிதம்.
பேரன்புடையீர்,
வணக்கம். ஏட்டுக்கல்வியும், அனுபவக்கல்வியும் ஒருங்கே கிடைக்கப்பெற்றதாகச் சொல்லிக்கொள்ளும் அன்பர்கள் பலர் அவ்வப்போது பேஸ்புக், வாட்சப் உரையாடல்களில் லாரி டிரைவர்களுக்கு உதவுமே என்று ஒரு குறிப்பிட்ட கருத்தை விடாப்பிடியாக தெரிவித்து வருகின்றனர். அதாவது, நாட்டிலுள்ள மைல்கல்களில் இந்தியில் எழுதுவது லாரி டிரைவர்களுக்கு உதவுமாம். இந்த அக்கறையைப் பார்த்து புளகாங்கிதமடைந்ததால் லாரி ஓட்டுநர்களின் உள்ளக்கிடக்கைகள் சிலவற்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.
பொதுவாகவே லாரி டிரைவர் வேலை என்பது சமுதாயத்தின் கடைசிப் புகலிடமாகவே பார்க்கப்படுகிறது. கிளீனராக வேலைக்குச் சேர்ந்து, இலகுரக ஓட்டுநர் உரிமம் வாங்கி, இரண்டாண்டுகள் கழித்து கனரக உரிமம் வாங்கி ஓட்டுநர் ஆனபின் நாங்கள் சந்திக்கும் பல இன்னல்களைப் பேசக்கூட ஆளில்லை. லாரி உரிமையாளர்களுக்கு இருக்கும் சங்கத்தின் வலுவில் பத்தில் ஒருபங்குகூட எங்கள் டிரைவர்கள் சங்கத்திற்குக் கிடையாது.
நகரத்தில் தினசரி பயணிக்கும் மக்களுக்கே அடிப்படை வசதிகள் கிடையாது என்கிறபோது டிரைவர்களுக்கு என்ன இருக்கும்? தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பெரிய உணவகங்களில் எங்களை நிறுத்தவே அனுமதிக்கமாட்டார்கள். நெடுஞ்சாலைகளில் ஏ2பி, மெக்டொனால்டு கடைகள் இருக்கும் நிறுத்துமிடங்களில் உள்ள கழிப்பிட வசதிகளைப் பார்த்து ஸ்வச் பாரத்தின் வெற்றி என்று நடுநிலையாளர்கள் பலர் பெருமிதப்படுகின்றனர். ஆனால் அவர்கள் ஒருநாளும் டிரக் பார்க்கிங் ஏரியா பக்கம் வந்திருக்கவே மாட்டார்கள். உடைக்கப்பட்ட கதவுகள், தண்ணீர் வராத குழாய்கள் என இரணகளமாக இருக்கும் கழிவறைகளே எங்களுக்கானவை. இன்னமும் வாட்டர்கேனைத் தூக்கிக்கொண்டு காட்டுக்குள்தான் சென்றுகொண்டிருக்கிறோம்.
வழிநெடுகிலும் ஆர்டிஓ இலஞ்சம், ஹைவே பேட்ரல் காவலர்களுக்கு இலஞ்சம், நகர எல்லைக்குள் வந்ததும் நகராட்சி சுங்கம் என்ற பெயரில் 100% கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் ஈட்டிக்காரர்கள், போக்குவரத்து காவலர்கள் என சகலமானவர்களுக்கும் கையூட்டு வழங்க ஒரு குறிப்பிட்ட தொகையை லாரி ஓனர்களே அனுமதித்தாலும், கொஞ்சம் கூடுதலாகப் போய்விட்டால் நாங்கள் திருட்டுக்கணக்கு எழுதியதாக எச்சரிக்கப்படுவோம்.
தொழில்முறை லாரி ஓட்டுநர்கள் எப்போதும் கவனமாகவும், சாலை விதிகளை மதித்துமே இயங்குகின்றனர். ஆனால் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் எந்த வண்டி பெரிய வண்டியோ அவனே குற்றவாளி என்பது இந்தியாவில் எழுதப்படாத சட்டம். விபத்தில் சிக்கியவர்கள் படுகாயமடைந்தாலோ, இறந்துவிட்டாலோ லாரி டிரைவர்களுக்கு பிரச்சினை குறைவு. லேசாகக் கார் மட்டுமே ஒடுங்கிவிட்டது, பைக் கீழே விழுந்து ஓட்டியவருக்குக் காயமில்லை என்றால் யார் மீது தவறு என்றே விசாரிக்கமால் எங்களை அடிக்கப் பாய்வார்கள். அதுவும் அடிபட்ட வண்டி அந்தந்த உள்ளூர் வண்டியாக இருந்தால் அவர்கள் வழங்குவதே தீர்ப்பு. அப்படி ஆகும் செலவினங்களை லாரி உரிமையாளர்கள் பெரும்பாலும் தரமாட்டார்கள்; நாங்கள் கையிலிருந்தே செலவளிக்க வேண்டும்.
விபத்தில் ஓட்டுநர்களுக்குப் பலத்த காயமேற்பட்டு லாரி கவிழ்ந்து கிடந்தால் எங்கள் உயிரைக் காப்பாற்ற உதவுவதற்கு முன்னர் அங்கிருக்கும் பொருட்களைத் திருடிக்கொள்வது இந்தியா முழுவதும் இருக்கும் நடைமுறை. லாரியும், காரும் மோதி லாரி டிரைவர் படுகாயமடைந்திருந்தாலும் காரில் வந்தவர்களை முதலில் ஆம்புலன்சில் ஏற்றப்படுவதும் ஒரு வழமையான சம்பிரதாயம். லாரியில் விலையுயர்ந்த பொருட்கள் கொண்டுசெல்லப்படும்போது டிரைவர்களைக் கொன்றுவிட்டு லாரியைக் கடத்துவது சாதாரணம். ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து காப்பர் தகடுகள் ஏற்றிச்சென்ற லாரிகளைக் கொள்ளையடிக்க எத்தனை டிரைவர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்பதும் இந்தி ஆதரவு நடுநிலையாளர்கள் பார்வையில் வராது.
விபத்துகளில் கை, கால்களை இழந்து காலம் முழுவதும் லாரி பட்டறைகளில், புரோக்கர் ஆபீஸ்களில் வாட்ச்மேனாகவும், கேட் கீப்பராகவும், டீ பாயாகவும் கிடைத்த வேலையைச் செய்து காலந்தள்ளும் டிரைவர்களைப் பற்றி இந்த நடுநிலை இந்தி ஆதரவாளர்கள் ஒருநாளாவது நினைத்திருப்பார்களா?
இன்று பெரும்பாலான டிரைவர்கள் டச்ஃபோன் (அதாவது ஸ்மார்ட்போன்) பயன்படுத்துகின்றனர். சரக்கு இறக்கவேண்டிய இடங்களை வாட்சப் லொக்கேஷனாகப் பெற்று, அவரவர் மாநில மொழியில் வரும் கூகுள் மேப்ஸைப் பயன்படுத்தி சரியான வழியில் பயணிப்பதன் மூலம் நேரத்தையும், டீசலையும் கணிசமாக சேமிக்கின்றனர்.
ஆங்கிலம் தெரிந்தவர் தெரியாதவர், ஜெர்மன் தெரிந்தவர் தெரியாதவர், ஸ்வாகிலி தெரிந்தவர் தெரியாதவர், நல்லவர் கெட்டவர், யோக்கியர் அயோக்கியர், வள்ளல் கஞ்சப்பிசினாரி, அப்பாவி கொலைகாரன் என எதிலுமே இரண்டு பிரிவுகள் மட்டுமே உண்டு. நடுநிலை என்ற ஒன்றைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? யோக்கியன் அல்லது அயோக்கியன் மட்டும்தானே இருக்க முடியும்? நடுநிலை அயோக்கியன் அல்லது நடுநிலை யோக்கியன் என்று ஏதாவது உண்டா?
எந்தத் தரப்பு பாதிக்கப்பட்டதோ, பலவீனமாக இருக்கிறதோ அந்தத் தரப்புக்கு ஆதரவு தருவதுதானே முறை? அப்படி ஆதரவு தெரிவிக்காமல் கள்ளமவுனம் காப்பதை நடுநிலை என்று சொல்லப்படுவதைக் காட்டிலும் சிறுமை வேறு எதுவுமில்லை.
இந்தியாவின் கனரக லாரிப் போக்குவரத்துத் தொழிலில் கிட்டத்தட்ட 40% நாமக்கல் மாவட்டத்துக்காரர்களால் இயக்கப்படுகிறது. பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு உரிமையாளர் யார் என்ற டேட்டா குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தமிழகப் போக்குவரத்துத்துறையிடம் கிடையாது. சென்னையில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள் எத்தனை பேர் என்ற டேட்டா கணக்கு மாதிரி ஏதாவது ஒரு நம்பர் தரப்படுமே தவிர வேறெதுவும் இருக்காது.
இந்த சோ கால்டு நடுநிலை ஆசாமிகள் வடமாநில லாரி ஓட்டுநர்களுக்குப் பயன்படுவதற்காகவே தமிழ்நாட்டுக்குள் மைல்கல்லில் இந்தியில் எழுதப்படுகிறது என்று எடுத்து வைக்கும் மெஜாரிட்டி வாதத்தின்படி பார்த்தால் இந்தியா முழுவதும் அதிகமாகப் பயணிப்பது தமிழகத்து டிரைவர்களே. அதன்படி தமிழில் அல்லவா இந்தியா முழுவதும் எழுதி வைக்கவேண்டும்? புத்திசாலி அல்லது முட்டாள் என்ற இரண்டில் நடுநிலை என்று ஏதாவது இருக்கிறதா?
ஆகவே நடுநிலையாளர்களே, லாரி டிரைவர்களின்மீது கரிசனப்படுவதாக இருந்தால் எத்தனையோ முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. மாதம் நாற்பதாயிரம் ரூபாய் பிடித்தம் இல்லாமல் சம்பாதித்தாலும் டிரைவர்களுக்கு திருமணம் செய்ய யாருமே பெண் கொடுக்க முன்வருதில்லை. உங்கள் கரிசனத்தை இந்த விவகாரத்தில் காட்டி, உங்களது சொந்தபந்தத்தில் உள்ள பெண்களுக்கு ஒரு லாரி டிரைவர் வரனாக அமையும்படி செய்யுங்கள். நல்ல டிரைவரே நல்ல டிரான்ஸ்போர்ட் கம்பெனி அதிபராகி, பின்னாளில் தொழிலதிபர் ஆக முடியும். திரும்பவும் சொல்வது என்னவெனில், டிரைவருக்குப் பெண் கொடுக்க சம்மதம், சம்மதம் இல்லை என்ற இரண்டு மட்டும்தான். நடுநிலை என்று எதுவும் இல்லை.
அதனால் மைல்கல்லில் இந்தியில் எழுதி வைத்து டிரைவர்களுக்கு உதவுவதாகச் சொல்லி நடுநிலை என்ற பெயரில் மல்லாக்கப்படுத்து எச்சில் துப்பாதீர்கள். பத்து லாரி டிரைவர்களைக்கூட பர்சனலாகத் தெரியாத இந்த இந்தி ஆதரவுக் கோமாளிகளின் தொல்லை கொசுக்கடியை விட தொந்தரவாக இருக்கிறது.
அன்புடன்,
நடுநிலை, மய்யநிலை என்று குறுக்கே ஓடும் பலர்மீது இடிக்காமல் இயங்கும் சரக்குந்து ஓட்டுநர்.
No comments:
Post a Comment