Wednesday, November 7, 2018

Freebies அல்ல, அவை உருவாக்கியது Level Playing Field.

Narain rajagopalan
2018-11-07

இலவசங்களை கழுவி ஊற்றி சினிமா எடுக்கலாம்.  ரசிகமனோபாவ குஞ்சுகள் அதை கொண்டாடவும் செய்யலாம். பாப்புலிச எண்ணங்களாக அவை பகிரவும் படலாம். ஆனால் உண்மை வேறெங்கோ இருக்கிறது.

சில காலங்களுக்கு முன்பு “நக்கீரன்” இதழுக்காக #திராவிடம்50 வரிசையில் திராவிட அரசியல் கட்சிகளும், இலவச/விலையில்லா சங்கதிகளையும் எப்படி பார்ப்பது அவசியம் என்று எழுதி இருந்தேன். இந்த சூழலுக்கு பொருத்தமானதாக இருக்குமென்பதால் இது.

+++++

”அதிமுகவும், திமுகவும் ஐம்பது வருஷமா எல்லாத்தையும் ப்ரீயா கொடுத்து இந்த ஊரையே குட்டிச்சுவரா மாத்தி வச்சிருக்காங்க” “திராவிட இயக்கத்தின் அஸ்தமனம்” “திராவிட கட்சிகள் குடியை பரவலாக்கி தமிழ்நாட்டை கெடுத்து விட்டன” - இதுவும், இதைப் போன்று நிறைய வாசகங்களையும் திராவிடத்திற்கு எதிரான ஆட்களும், பார்ப்பனீய கட்சிகளும், ஊடகங்களும் கடந்த சில வருடங்களாக உரத்த குரலில் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு வாதத்துக்கு திராவிட அரசியல் கட்சிகளின் பொருளாதார அணுகுமுறை தவறானது, தோல்வியுற்றது என்று வைத்துக் கொண்டால் எப்படி தமிழகம் இந்திய ஒன்றியத்தின் எல்லா அளவுகோல்களிலும் டாப் 5-வில் வருகிறது ? தமிழக எப்படி திராவிட ஆட்சிகளின் கீழ் இந்தியாவில் இரண்டாவது பெரிய மாநிலமாக உருவெடுக்கிறது ? இலவசங்கள் குடிமக்களை சோம்பேறியாக்குகின்றன என்பது எந்தளவிற்கு உண்மை ?

அடிப்படையில் திராவிட இயக்கமும், அதன் வழியே ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றிய திராவிட அரசியல் கட்சிகளும் சமூக நீதியின் வழியே தமிழகத்தின் பொருளாதாரத்தினைப் புரிந்துக் கொண்டார்கள். திராவிடப் பொருளாதார அடிப்படையே சமூகநீதியும், பொருளாதார படிநிலை பரவலாக்கமும் தான். இலவசங்களையும், சலுகைகளையும், குடிமக்களின் சமூகப் பொருளாதார படிநிலை உயர்த்தலுக்கான ஒரு யுக்தியாக பயன்படுத்தினார்கள்.

இலவசங்கள் ஓட்டுக்காக அள்ளி வீசப்படும் வெற்று வாக்குறுதிகள் அல்ல. மாறாக, திமுக மற்றும் அதிமுக தேர்தல் அறிக்கைகளில் சமூக நீதியும், பாதுகாப்பும், பொருளாதார மேம்பாடும் மிக கவனமாக கையாளப்பட்டன. ஒரு ஆட்சி போய் இன்னொரு ஆட்சி வந்தால், முந்தைய ஆட்சியின் மக்கள் நல, பொருளாதார திட்டங்கள் கிடப்பில் போடப்படுவது அரசியல் நிதர்சனம். ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் உருவான மதிய உணவு திட்டத்தினை எம்.ஜி. ஆரின் அதிமுக ஆட்சி சத்துணவு திட்டமாக மாற்றியது. பின்னாளில் மாறி மாறி வந்த திமுக, அதிமுக ஆட்சிகளில் திட்டம் கைவிடப்படாமல், இன்னமும் விஸ்தரிக்கப்பட்டது. திட்டத்தின் சமூக நீதியும், மேம்பாடும் முக்கியம். அது யார் கொண்டு வந்த திட்டமாக இருந்தாலும் சரி. இது தான் திராவிட அரசியல் பொருளாதாரத்தின் வெற்றி.

இட ஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு, தனியார் கல்லூரிகள், தொட்டில் குழந்தை திட்டம், கலர் டிவி, லேப்டாப், மிக்சி, கிரைண்டர், காப்பீடு திட்டமென தமிழக சமூக நல இலவச திட்டங்கள் குடிமக்களின் ஆதார தேவைகளையும் பயன்பாட்டையும் தொடர்ச்சியாக விரிவு படுத்தி விட்டன. இலவசங்கள் தமிழ்நாட்டில் Freebies அல்ல, அவை உருவாக்கியது Level Playing Field. இந்த சமூக நீதி தான் திராவிடப் பொருளாதார உயர்விற்கான அடித்தளம்.

இது அண்ணாதுரையின் ‘மூன்று படி இலட்சியம்; ஒரு படி நிச்சயம்’ என்கிற ரேஷன் கடை அரிசியில் ஆரம்பித்து, கருணாநிதியின் பல்வேறு ஆட்சிக் காலங்களில் கொடுக்கப்பட்ட சலுகைகள், திட்டங்களாகவும், எம்.ஜி.ராமசந்திரனின் சத்துணவாகவும், ரிக்‌ஷாக்காரர்களுக்கு செருப்பும், ரெயின் கோட்டாகவும், பின்னாளைய உலகமயமாக்கலுக்கு பின்னான கருணாநிதி ஆட்சியில் டைடல் பூங்காவாகவும், கார் கம்பெனிகளின் சலுகைகளாகவும், கலர் டிவியாகவும், ஜெயலலிதாவின் ‘அம்மா உணவகம்’, மாணவர்களுக்கு இலவச லேப்டாப்பாகவும் விரிந்தது. குடிமக்களின் தேவைகளை உணர்ந்து, அதை சமூக நீதி அடிப்படையில் அரசாங்கமே தொடர்ச்சியாக செய்ததால் தான் தமிழகம் எல்லா துறைகளிலும் முன்னோடியாக நிற்கிறது.

திராவிட அரசியல் கட்சிகள் விதைத்ததில் உருவானது தான் தனியார் பொறியியல் கல்லூரிகள். மருத்துவ வசதிகள். தமிழ்நாட்டின் குக்கிராமத்துக்குக் கூட மினிபஸ் போகும் சாலைகள். போன தலைமுறைக்கான உயர்வினை இட ஒதுக்கீடும், தொண்ணூறுகளுக்கு பின்னான தலைமுறைக்கான எழுச்சியை தனியார் கல்லூரிகளும், அரசு ஆதரவும் உருவாக்கியது. இன்றைக்கு திராவிட அரசியல் கட்சிகளை நிராகரிக்கும் மத்திய தர வர்க்கமென்பதே திராவிட அரசியல் இயக்கங்கள் உருவாக்கியதே.

இலவச கல்வி, இலவச மின்சாரம், பொது சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பு, பெண்கள் முன்னேற்றம், பெண் கல்வி, சுயமரியாதை, சுயசார்பு என எல்லா அளவுகோல்களிலும் தமிழகம் முன்னிலையில் இருக்க காரணம்  சமூக நீதி சார்ந்த தொலைநோக்கு பொருளாதாரப் பார்வை தான். எதுவுமே இல்லாத ஒரு மாநிலத்தை எல்லா வளமும் கொண்ட நிலமாக, பொருளாதார பவர் ஹவுஸாக மாற்றியது திராவிட அரசியல் இயக்கங்களும், அவர்கள் ஆட்சியதிகாரத்தில் இருந்த போது கொண்டு வந்த திட்டங்களும் தான்.

தமிழகத்தில் கடைப்பிடிக்கப் பட்ட “இலவச” திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு தான் நக்சல், மாவோயிச பாதிப்புகள் அதிகமாக இருந்த ஆந்திராவை ராஜசேகர ரெட்டி, தீவிரவாதமில்லாத மாநிலமாக மாற்றினார். சமாஜ்வாடியின் அகிலேஷ் யாதவ் உத்தரப் பிரதேசத்தில் அதே இலவச திட்டங்களைக் கொடுத்து தான் ஆட்சியைப் பிடித்தார். கர்நாடாகாவில் காங்கிரஸின் சித்தராமய்யா ‘அம்மா உணவகம்’ போல ‘நம்ம உணவகம்’ என்பதை போன பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார். ஆக இலவசங்கள் சீரழித்து விட்டன என்கிற வாதம் போலியானது. பொய்யானது. அடிப்படைகளற்றது. இலவசங்களின் மூலம் சமூக சமநிலையும், பொருளாதார பரவலும் நடக்கும். அது அடித்தட்டு மக்களை அடுத்த பொருளாதார நிலைக்கு உயர்த்தும். இதை ஐம்பதாண்டுகளுக்கு முன்பே சிந்தித்து, ஆட்சிக்கு வந்ததுமே அதை சாத்தியப் படுத்தியதால் தான் தமிழகம் திராவிட கட்சிகளின் கீழ் தொடர்ச்சியாக முன்னேறி இருக்கிறது. 

இந்தியை நிராகரிக்கிற, எந்த பெரிய இயற்கை வளங்களும் இல்லாத, நீருக்கு அடுத்த மாநிலங்களை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்ற ஒரு மாநிலத்தை திராவிட கட்சிகள் ஐம்பதே வருடங்களில் இந்திய ஒன்றியத்தில் மகாராஷ்ட்ராவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய பொருளாதாரமாக மாற்றி இருக்கிறார்கள். ஒரு நாடாய் இருக்குமானால், தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ($170 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) கிட்டத்திட்ட தென்கிழக்கு ஆசியாவின் ஆறாவது பெரிய நாடாக புரூனே, மியான்மர், கம்போடியா, கிழக்கு திமோர், லாவோஸை விட மேலாகவும், வியட்நாமிற்கு இணையாகவும் இன்றைக்கு இருக்கும். இது தான் திராவிட சமூகப் பொருளாதார சாதனை.

திராவிட அரசியல் கட்சிகள் பல்வேறு தரப்பு மக்களின் தேவைகளை களத்திலிருந்து தொடர்ச்சியாக புரிந்துக் கொண்டு அதற்கேற்றாற் போல அரசு திட்டங்களை வகுத்ததால், இங்கே தனித்துவமான இயக்கங்கள், கட்சிகள், பேரவைகள் தலை எடுக்கவே முடியவில்லை. இது தான் திராவிட கட்சிகளின் பலம். இதனால் தான் தமிழகத்தில் தலித் இயக்கங்களோ, இடதுசாரி இயக்கங்களோ, மதவாத, அடிப்படைவாத இயக்கங்களோ முழுமையாக வளரவே இல்லை.  ஏகப்பட்ட கூக்குரல்கள், கூட்டணிகள், மீடியாக்கள் என அலையலையாக எதிர்ப்புகள் இருந்தும் நடந்து முடிந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் இரண்டு திராவிட அரசியல் கட்சிகளும் சேர்ந்து 82% வாக்கு விகிதத்தைப் பெற்றிருந்தார்கள். தமிழகம் திராவிட கட்சிகளை மட்டுமே நம்புகிறது என்பதற்கு இது தான் ஆதாரம். 

திமுக மற்றும் அதிமுகவின் மீது ஏகப்பட்ட அதிகார மீறல்கள், ஊழல் குற்றசாட்டுகள் என இ.பி.கோவின் எல்லா பிரிவுகளிலும் வழக்குகள் ஏராளம். ஆனாலும், தமிழகத்தின் வருடாந்திர வளர்ச்சி விகிதம் குறையவே இல்லை. உலகமயமாக்கலை புரிந்துக் கொண்டு, அதை மாநிலத்தின் வளர்ச்சிக்காக முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு தமிழகத்தினை தொழில்சார் மாநிலமாக மாற்றிய பெருமை திராவிட அரசியல் இயக்கங்களையே சாரும். அதே சமயத்தில் அதனால் உருவாகி இருக்கக் கூடிய நவீன பொருளாதார ஏற்றத் தாழ்வுகளையும், சமச்சீரின்மை சிக்கல்களையும், சூழலியல் பிரச்சனைகளையும் முழுமையாக புரிந்துக் கொண்டு உள்ளார்களா என்பது பெரிய கேள்வி.

21-ஆம் நூற்றாண்டின் சமூக நீதி, சமத்துவம், மேன்மை என்பது இதில் அடங்கி இருக்கிறது. திராவிடம்100 வருமா என்பது இவ்வாறான சிக்கல்களை எப்படி அணுகுகிறார்கள், எப்படி தீர்க்கப் போகிறார்கள், என்ன மாதிரியான நவீன சமூக நீதி யுக்திகளை கையாளப் போகிறார்கள் என்பதில் மட்டுமே அடங்கி இருக்கிறது.

மக்கள் திராவிட கட்சிகளைக் கவனித்துக் கொண்டே இருக்கிறார்கள். திராவிட கட்சிகள் மக்களை கூர்ந்து கவனிக்க வேண்டிய நேரமிது.

+++++

"We are not sentimental idiots" Mr. முருகதாஸ்.

இந்த மாநிலத்தில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் தங்களை ஆள்பவர்கள் தங்களுக்கு என்ன செய்து இருக்கிறார்கள் என்று தெரிந்து தான் வைத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த “ஊழல் ஒழிப்பு, கறுப்புப் பண ஒழிப்பு” யுடோபிய கனவுகளில் நம்பிக்கை இல்லை. நிதர்சனத்தில் அவர்கள் வாழ்வியலையும், வாழ்வாதாரத்தையும் உயர்த்திய திராவிட அரசியல் கட்சிகளுக்கு அவர்கள் நன்றியோடு தான் இருக்கிறார்கள்.

ஏ.ஆர். முருகதாஸ், விஜயண்ணா தொடர்பில் இருப்பவர்கள் இதையும் அவர்களிடத்தில் காட்டலாம். ஏற்கனவே அட்லீ என்றொரு ஆஃப் பாயில் தமிழகத்தின் பொது சுகாதார, மருத்துவ முன்னேற்றத்தினை அரைகுறையாய் முன் வைத்ததில் யூட்யூப்பில் பிரசவம் பார்க்கிறோம் என்று ஏற்கனவே ஒரு உயிரை இழந்திருக்கிறோம். இதையெல்லாம் அவ்வப்போதே கணக்கு தீர்த்து முடித்தல் அவசியம் என்பதாலேயே மேற்சொன்னது.

https://m.facebook.com/story.php?story_fbid=10156374620986998&id=719151997

No comments:

Post a Comment