*கலாநிதி அஹ்மத் அஷ்ரப்
2018-11-21
*ஒரு பெண், "வலி" (பாதுகாவலர்) இல்லாமல் திருமணம் செய்வது , ஷரீஅத்துக்கு முரணானதா?*
இஸ்லாத்தில், ஒரு பெண் திருமணம் செய்வதில் பின்வரும் நடைமுறைகள் இருக்கின்றன:
*நடைமுறை (1):*
ஜாஹிலிய்யாக் காலத்தில், ஒரு ஆண், பெண்ணின் பாதுகாவலரிடம், கல்யாணம் கேட்டு, மஹர் கொடுத்து, திருமணம் செய்தல்.
இஸ்லாம் வந்ததின் பின்பும், இந்த நடைமுறை தொடர்ந்தது. (புஹாரி: 5127)
ஆனால் , பெண்ணின் விருப்பம் பெறப்படவேண்டும். (புஹாரி: 5136, முஸ்லிம்: 1419)
விருப்பம் பெறப்படாமல் விட்டால், பெண் முறைப்பாடு செய்யுமிடத்து, நீதிபதி திருமணத்தை ரத்துச் செய்யலாம்.
*நடைமுறை (2):*
இஸ்லாத்தில், ஒரு பெண் தானாகவே திருமணம் செய்யும் முறை அறிமுகப் படுத்தப்பட்டது.
இதற்க்கு பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் கொள்ளலாம்:
"இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து நின்று 'நான் என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டேன்' - என்று கூறினார்.
அவருக்கு நபியவர்கள் பதிலேதும் சொல்லவில்லை.
அப்போது ஒருவர் எழுந்து 'இறைத்தூதர் அவர்களே இவரை எனக்கு மணமுடித்து வைய்யுங்கள்' - என்று கூறினார்.
நபி (ஸல்)அவர்கள் இவருக்கு மஹ்ராக கொடுக்க உம்மிடம் ஏதேனும் பொருள் உள்ளதா?' என்று கேட்டார்கள்.
அவர் 'சில அத்தியாயங்கள் மனப்பாடமாக உள்ளது. அதை தவிர என்னிடம் எதுவும் இல்லை' - என்று கூறினார்.
அப்போது நபி ஸல் அவர்கள் 'உனக்கு மனனமாய் உள்ள குர்ஆனை அவளுக்கு கற்றுக்கொடுப்பதை மஹராக்கி இவளை உமக்கு மணமுடித்துத் தந்தேன்' - என்று கூறினார்கள்.
(கருத்துச் சுருக்கம்)
(புஹாரி: 5087, முஸ்லிம்: 1425)
இந்த ஹதீஸில், அப்பெண்ணிடம் உனக்கு வலி (பாதுகாவலர்) இருக்கின்றாரா என்றோ, அல்லது அவரைக் அழைத்து வா என்றோ கூறவில்லை. இப்பெண்ணுக்கு வலி இருக்கவில்லை என இந்த ஹதீஸின் எந்த அறிவிப்பிலும் இல்லை.
மேலும், "வலி இல்லாமல் திருமணம் இல்லை", "எந்தப் பெண்ணும் வலி இல்லாமல் செய்த திருமணம், செல்லுபடியாகாது", போன்ற ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவைகள்.
அதனால், அவைகளை, இமாம் புஹாரி, இமாம் முஸ்லிம் ஆகியோர் தங்களது கிரந்தங்களில் பதிவுசெய்யவில்லை.
சில அறிஞர்கள்:
"நீங்கள் பெண்களை விவாகரத்துச் செய்து, இத்தாவை முடித்துக்கொண்டால், அவர்களை திருமணம் செய்யத் தடுக்காதீர்கள்" (அல் பகரா : 232)
என்ற ஆயத்து, பாதுகாவலர்களை நோக்கிச் கூறப்பட்டது என்றும், பாதுகாவலர் கட்டாயம் என்பதினால்தான், அவர்களை தடுக்க வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது என்று வாதிக்கின்றனர்.
இது தவறாகும். இது விவாகரத்துச் செய்த கணவன்மார்களை நோக்கிச் சொல்லப்பட்டதாகும். இதறக்குரிய முன் ஆயத்துகளை நோக்கினால், கணவன்மார்களையே விழிக்கின்றது இங்கே பாதுகாவலர்களைப் பற்றிப் பேசவில்லை.
மாறாக, விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள், உங்கள் வீட்டில் இத்தா முடிந்துவிட்டால், அவர்களை, வீட்டில் அடைத்துவிடாமல், அவர்கள் விரும்பும் கணவன்மார்களை திருமணம் செய்ய தடையாக இருக்காதீர்கள் என்பதே ஆயத்தின் கருப்பொருள் ஆகும்.
அதேபோன்று, "முஷ்ரிகீன்களுக்கு (முஸ்லிம் பெண்களை) திருமணம் முடித்து வைக்காதீர்கள்" (அல் பகரா : 221) - என்ற வசனம், பாதுகாவலர்களை விழித்துச் சொல்லப்பட்டதல்ல. அது சகல முஸ்லிம்களையும் நோக்கி, கூறப்பட்ட ஒன்றாகும்.
அவ்வாறே, "உங்களில் திருமணமாகதவர்களுக்கும் , திருமணம் செய்துவையுங்கள்" (அந்நூர்: 32) என்ற வசனமும், அவர்கள் திருமணம் செய்வதற்க்கு உதவுங்கள்" என்பதே அதன் கருத்து. இது பாதுகாவலர்களை நோக்கிச் சொல்லப்பட்டதல்ல. இல்லாவிட்டால், ஆண்களுக்கும் "வலி" அவசியமானது என்ற பொருளைக் கொடுக்கும்.
இமாம் அபூ ஹனீபா அவர்கள், வலி கட்டாயம் தேவை இல்லை என்றே கூறியுள்ளார்.
ஆயிஷா ரழி அவர்கள், தனது சகோதரன் அப்துர்ரஹ்மான், ஷாமில் இருந்தபோது, அவரது அனுமதி இல்லாமல், அவரது மகள் ஹப்ஸாவை, முன்திர் பின் சுபைருக்கு திருமணம் செய்துவைத்தார்கள்
(அல் முவத்தஃ: 2040)
இதன் மூலம், வலி, திருமணத்துக்கு அடிப்படை நிபந்தனை அல்ல என்பதை விளங்க்கிக் கொள்கின்றோம்.
எனவே, ஒருபெண், 18 வயதுக்குப் பின், வலி இல்லாமல் திருமணம் செய்யலாம் என்ற முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தக் குழுவின் சிபார்சு, ஷரீயாவுக்கு முரணானதல்ல. எகிப்து போன்ற நாடுகளிலும், இது போன்ற சட்டம் நடைமுறையில் உள்ளது.
இந்த உரிமையை, 20 அல்லது 22 வயது என வரையறை செய்தால் நல்லது என்பது எனது ஆலோசனையாகும்.
No comments:
Post a Comment