Friday, November 16, 2018

“Caste is the state of mind” என்கிறார் அம்பேத்கர். எவ்வளவு கூர்மையான விவரிப்பு!

சிவபாலன் இளங்கோவன்
2018-11-17

“Caste is the state of mind” என்கிறார் அம்பேத்கர். எவ்வளவு கூர்மையான விவரிப்பு!

மற்றவர்களை போல அவர் ‘சாதி ஒரு மனநோய்’ என சொல்லவில்லை, மாறாக மிக மிக நுணுக்கமாக அது ஒரு ‘மனநிலை’ என்கிறார். நோய்கள் குணமடையக்கூடியன ஆனால் மனநிலை மாறாதது. நோய் என்பது நமது விருப்பத்தை தாண்டி, நமது கட்டுபாட்டை தாண்டி நம்மில் நிகழ்வது. ஒரு நோயில் இருந்து விடுபடவே ஒவ்வொரு மனிதனும் நினைக்கிறான். ஆனால் மனநிலை அப்படியல்ல அது விரும்பி ஏற்றுக்கொள்வது அல்லது விரும்பி உள்வாங்கிக்கொள்வது. ஏதோ சில சாதகங்களுக்காக ஒரு மனநிலையை ஒரு மனிதன் தனக்குள் விரும்பி வரித்துக்கொள்கிறான். சாதி அது போன்ற ஒரு மனநிலை தான். அதன் வழியே கிடைக்கும் ஆதாயத்திற்காக ஒருவன் விரும்பி அதை தரித்துக்கொள்கிறான். இங்கு ஆதாயம் என்பது வேறொன்றுமல்ல இன்னொரு மனிதனை அதன்பொருட்டு பிரித்துப்பார்ப்பதே, அவன் மீது சாதி ரீதியாக தனக்கு கிடைத்த ஆதாயத்தை பிரயோகிப்பதே.

இன்னும் நுணுக்கமாக பார்த்தால் அம்பேத்கர் இதை ‘trait’ என சொல்லவில்லை. ‘state’ என்று தான் விழிக்கிறார். ‘trait’ என்பது மரபணுவில் (Genes) பதிந்தது, மரபு ரீதியாக வருவது அதாவது ஒருவனுடைய ‘trait’ என்பது அவன் பிறப்பதற்கு முன்பே தீர்மானிக்கப்படுகிறது. ‘state’ என்பது கற்றுக்கொள்வது. ஒருவன் பிறந்ததற்கு பிறகு இந்த சமூகத்திடம் இருந்து கற்று கொண்டதில் தனக்கு தேவையானதை, சாதகமானதை உள்வாங்கிக்கொண்டு அதை எப்போதும் வெளிப்படுத்தி கொண்டிருப்பது தான் ‘state’. அம்பேத்கர் சாதிய மனநிலை என்பது மரபணுவில் கடத்தப்படும் பண்பல்ல மேலும் ஒருவன் பிறக்கும் போது அத்தகைய மனநிலை ஏதுமற்றவனாக தான் பிறக்கிறான் ஆனால் அவன் வளரும்போது இந்த சமூகம் இந்த மனநிலையை அவனுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக புகுத்திவிடுகிறது என்கிறார்.

சாதிய மனநிலை ஒருவனுக்கு வந்ததுக்கு சாதிய சமூகம் மட்டுமே காரணம். ஒருவன் இத்தகைய மனநிலையை தனக்குள் கொள்ளும்போது அவன் அதை மட்டுமே பிரதானமாக கொண்டு சக மனிதன் மீதுள்ள கரிசனத்தை நிராகரிக்கிறான். சகமனிதன் மீதான கரிசனம் மற்றும் சகமனிதர்களுடன் இணைந்திருத்தல் தான் “Socialization”ல் பிரதானமானது. “Human are social animal” என்ற கூற்றுப்படி பார்த்தால் இந்த “Socialization” அவ்வளவு முக்கியமானது. சாதி என்பது இந்த “Socialization”க்கு நேர் எதிரானது. சாதிய மனநிலையை கொண்டிருக்கும் ஒருவன் “Human are social animal” என்ற பண்புகளற்று போகிறான், அதன் படி அவன் வெறும் மிருகம் என்ற பதத்திற்கு உள்ளே தான் வருகிறான். அப்போது அவன் வெளிப்படுத்தும் பண்புகளும் மிருகத்தை ஒத்தவையாகவே இருக்கின்றன.

இந்த மிருகங்களிடம் இருந்து மனிதர்களை காப்பது இன்றைய காலகட்டத்தில் மனிதனுக்கு முன் உள்ள மிகப்பெரிய சவால். அதற்கான வேலையை இந்த சமூகத்தில் படிந்துள்ள சாதிய விழுமியங்களை தகர்ப்பதில் இருந்தே தொடங்க வேண்டும். அதை நோக்கி முற்போக்கு இயக்கங்கள் செயல்பட வேண்டும். குறிப்பாக பெரியாரிய இயக்கங்கள் வெறும் ‘கடவுள் மறுப்பு’ பிரச்சாரங்களில் இருந்து வெளியே வந்து நேரடியாக சாதிய பண்பாடுகளை, பெருமிதங்களை, புனிதங்களை இளைய தலைமுறைகளிடம் அம்பலப்படுத்த வேண்டும். அதற்கான பிரச்சாரங்களை ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வீதிகளிலும் செய்திட வேண்டும். அதில் ஒருங்கிணைந்து செயல்பட நாம் எல்லாரும் தயாராக வேண்டும்.

சாதியை அழிக்கும் புயல் எந்த வங்கக்கடலில் இருந்து தொடங்காது, அதை நம் மனதில் இருந்தே கொள்ள வேண்டும். ஏனென்றால் “Caste is the state of mind”.

https://m.facebook.com/story.php?story_fbid=2389952417712562&id=100000934822167

No comments:

Post a Comment