Leo Joseph
Via Facebook
2016-Nov-05
அம்பேத்கர் ஏன் இஸ்லாம் மதம் மாறாமல் புத்த மத்திற்கு மாறினார்????
அதற்க்கான காரணம் என்ன சொன்னார்???
எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் கீழ்கண்ட காரணங்களை குறிப்பிடலாம்...
1. பவுத்தம் பார்ப்பனிய எதிர்ப்பை முதன்மையாக கொண்டது. இஸ்லாமில் சாதியம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதன் தோற்றம் பார்ப்பனிய எதிர்ப்பு அல்ல. பார்ப்பனிய எதிர்ப்பை தனது மூலமாக கொள்ளாத ஒரு மதம் சாதியை கிரகித்துக் கொள்ள வாய்ப்புகள் அதிகம். உதாரணம் கிறிஸ்தவம்
இன்னும் பல விடயங்களை தரவுகளோடு பகிர்கிறேன்.
-------
1. மதம் என்றால் என்ன?
2. சமூகம் என்றால் என்ன?
3. மதத்துக்கும் சமூக ஜனநாயகத்துக்கும்---- என்ன தொடர் பு?
4. மதமாற்றம் ஏன் தீண்டப்படாதவர்களுக்கு அவசியம்?
இந்த கேள்விகளுக்கு பதில்களின் தொடர்ச்சி தான் பாபாசாகேப் அம்பேத்கர் ஏன் பௌத்தத்தை தேர்வு செய்தார் என்பது...
---------
ஏன் பௌத்தம்?
இந்து மதம் என்பது ஒரு மதமே அல்ல , அது ஏவல்களையும் கட்டளைகளையும் உள்ளடக்கிய விதிமுறைகளின் தொகுப்பே, மதம் என்பது தத்துவம் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்கிற அண்ணல் அம்பேத்கர் , தீண்டப்படாத மக்கள் இந்து மதத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதே சமூக விடுதலைக்கு ஒரே வழி என்பதை அழுத்தமாக வலியுறுத்துகிறார்.
மதமாற்றம் என்பதே தீண்டப்படாத மக்களின் நீண்ட கால இழிநிலை நீங்க ஒரே வழி என்பது பாபாசாகேப் அவர்களின் தீர்க்கமான முடிவு. இந்துவாக பிறந்த நான் ஒரு போதும் இந்துவாக இறக்க மாட்டேன் என்பதை உறுதிபட தெரிவித்த அண்ணல் அம்பேத்கர், தனது மதமாற்ற முடிவை நீண்டகாலம் கழித்தே அறிவிக்கிறார். அதற்கான காரணம் மத மாற்றம் ஏன் அவசியம், மத மாற்றம் தீண்டதகாதவர்களின் வாழ்வில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் அல்லது ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும் என்பதனை பல வழிகளிலும் அலசி ஆராய்ந்த பிறகே , தனது பௌத்த தேர்வை பிரகடனப்படுத்துகிறார்.
இந்து மதம் தவிர்த்து இஸ்லாம், கிறிஸ்தவம், சீக்கியம் , சமணம், பௌத்தம் என பல மதங்கள் இந்தியாவில் இருக்கையில் , பாபாசாகேப் ஏன் பௌத்தத்தை தேர்வு செய்தார்? அல்லது இந்து மதத்தை புறக்கணிக்க மக்கள் நாத்திகத்தை/கடவுள் மறுப்பை வலியுறுத்தாமல் ஏன் பௌத்தத்தை தேர்வு செய்தார் என்கிற கேள்விகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.
இதற்கான பதில்கள் வெறுமனே அண்ணல் அம்பேத்கரின் பேச்சுகளை, எழுத்துகளை மேற்கோள் காட்டுவதனால் மட்டும் புரிந்து கொள்ளப்படக் கூடிய ஒன்று அல்ல. இதற்கான பதிலை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டுமெனில் அம்பேத்கரைப் படிக்க வேண்டும், அம்பேத்கரியம் என்பது எதுவென உள்வாங்க வேண்டும். குறைந்த பட்சம் இந்து மதம், மதங்களின் நோக்கம் மற்றும் செயல்பாடு , மதமாற்றம் தீண்டப்படாதவர்களுன் வாழ்வில் விளைவிக்க விழையும் மாற்றம், பௌத்தம் மற்றும் பார்ப்பனியம் குறித்து பாபாசாகேப் ஆய்ந்து தெரிவித்த கருத்துகளை நாம் உள்வாங்க வேண்டியது அவசியம்.
அம்பேத்கரியம் என்பது பரவலாக பேசப்படுவது போல சாதி ஒழிப்பு அல்ல. அம்பேத்கரியத்தின் பிரதான இலக்கு சமூக விடுதலை / சமூக ஜனநாயகம். இந்த சமூக விடுதலை / சமூக ஜனநாயகத்தை நோக்கிய வழுமுறைகள் அல்லது படிநிலைகள் தான் மதமாற்றம் மற்றும. சாதி ஒழிப்பு. வழிமுறைகளை இலக்குகள் என தவறாக புரிந்து கொண்டதன் விளைவுதான் , இத்தனை ஆண்டுகாலம் ஆகியும் அம்பேத்கரியத்தால் சாதியத்தை ஒழிக்க முடியவில்லை, ஆகவே அம்பேத்கரியம் தோல்வி அடைந்துவிட்டதாக சிலர் பிரச்சாரம் செய்யவும் காரணமாகும்.
சமூக ஜனநாயகம் / சமூக விடுதலை என்பதே பிரதான இலக்கு என்பதால் அதை அடையும் இருவழிகளாகவே மத மாற்றம் மற்றும் சாதி ஒழிப்பு ஆகியனவற்றை காண வேண்டும்.
இந்து மதம் சமூக ஜனநாயகத்திற்கு விரோதமானதாகும். ஒருவர் இந்து மதத்தை விட்டு விலகி , இஸ்லாம், கிறிஸ்தவம் , பௌத்தம் உள்ளிட்ட மதங்களில் தன்னை இணைத்துக் கொள்ளும் போது சாதி ஒழிப்பு என்பதை விட, எந்த அளவு ஜனநாயகத் தன்மை கூடி இருக்கிறது என்பதே ஒப்பு நோக்க தக்கது. கிறிஸ்தவத்திலும் சாதி இருக்கிறது, அதனால் மதமாற்றம் சாதியை ஒழிக்காது, எனவே அம்பேத்கரியம் தோற்றுவிட்டது என்பது புரிதலின்மையால் எழும்பும் கூற்று. இந்து மதத்தோடு ஒப்பு நோக்கும் போது கிறிஸ்தவத்தில் ஜனநாயகத் தன்மை சற்று கூடுதல் என்பதே பிரதானமானது. மதம் என்பது தனி மனித ஆளுமை வளர்ச்சிக்கும் சமூக கூட்டிணைவு வாழ்வுக்கும் எந்தளவிற்கு துணை புரிகிறது என்பதை கொண்டே மதிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும். அண்ணல் அம்பேத்கர் சகோதரத்துவம் பற்றிந தனது வாதத்துக்கு வலுவூட்ட கிறிஸ்தவர்களின் பைபிளிலிருந்து தான் மேற்கோள் காட்டுகிறார். ஆனாலும் அவர் தீண்டப்படாத மக்களின் மத மாற்றம் என்று வரும் போது கிறிஸ்தவத்தை பரிந்துரைக்கவில்லை. முகமதியர்களும் தாழ்த்தப்பட்ட மக்களை நீண்ட தகாதவர்களாகவே நடத்தினார்கள் என்கிற ஒரு எடுத்துக்காட்டைத் தவிர இஸ்லாம் மதத்தின் மீதும் அவர் கடுமையான விமர்சனங்கள் எதையும் முன் வைத்ததாக தெரியவில்லை. ஆனாலும் மத மாற்றத்தின் போது பௌத்தத்தையே தன் மக்களுக்கான சிறந்த தேர்வாக பரிந்துரைக்கிறார். அது ஏன் என்கிற கேள்விக்கு நிச்சயமாக, தாழ்த்தப்பட்டவர்களின் பூர்வீக மதம் பௌத்தம் என்ற ஒற்றை வரியிலான தட்டையான புரிதல் பதிலாக அமைய முடியாது.
இந்து மதம் அல்லது இந்து சமூகம் குறித்து பாபாசாகேப் :
* இந்துக்களும் தீண்டப்படாத மக்களும. இரு தனித்தனி குழுக்கள்.
=> தீண்டப்படாதவன் ஒருவன் இந்துக்களின் சமூகத்தைச் சேர்ந்தவன் அல்ல. இந்துக்களும் தீண்டப்படாதவரைத் தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவராகக் கருதுவதில்லை.
=> தீண்டாதவர்கள் இந்துக்களே என்று இந்துக்கள் கூறுகிறார்கள். ஆனால், தீண்டாதவர் ஒருவரின் இறந்த உடலை இந்து சுடுகாட்டில் எரிக்க முடியாது.
(டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் - தொகுதி 9, இயல் 6)
* இந்து மதம் சாதி மற்றும் தீண்டாமையை வலியுறுத்துகிறது.
=> ஒரு இந்து தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறான் எனில் அவனுடைய மதம் அவனுக்கு அவ்வாறு கட்டளையிட்டு இருப்பதால்தான்.
(டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் - தொகுதி 9)
=> உங்களின் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் ‘இந்து தர்மமே' முக்கிய காரணமாகும். உலகத்தில் உள்ள மதங்களிலேயே இந்து மதம்தான் சாதிப்பாகுபாடுகளையும் தீண்டாமையையும் அங்கீகரிக்கிறது.
(‘அகில இந்திய பட்டியலின சாதியினர் கூட்டமைப்பு' 29.1.1944 அன்று கான்பூரில் நடத்திய மாநாட்டில் பாபாசாகேப் அம்பேத்கர் ஆற்றிய உரை.)
* இந்து மதம் சாதி மற்றும் தீண்டாமை குறித்த விதிமுறைகளின் தொகுப்பே.
=>. மதம் என்று ஒரு இந்து குறிப்பிடுவது பல்வேறு ஏவல்களும் தடை களும் கொண்ட ஒரு தொகுப்பே.
- பாபாசாகேப் அம்பேத்கர்
(உங்கள் நூலகம் அக்டோபர் 2012 இதழில் வெளியானது)
* இந்து மதம் மதம் என்ற அந்தஸ்துக்கு தகுதியற்றது.
=> கட்டளைகளின் தொகுப்பாக அமைந்துள்ள ஒன்றை நான் மதம் என்று மதிக்க மாட்டேன்.
- பாபாசாகேப் அம்பேத்கர்
(உங்கள் நூலகம் அக்டோபர் 2012 இதழில் வெளியானது)
* இந்து மதம் சாதிக்கு புனித தன்மை அளிக்கிறது.
=> இறைவன் தன் உடம்பின் பல்வேறு பகுதிகளிலிருந்து மனிதர்களைப் படைத்தார் என்னும் கோட்பாட்டை இந்து சமூக அமைப்பு அடிப்படையாகக் கொண்டுள்ளது.
(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 3, பக்கம் : 97)
* இந்து சமூக அமைப்பில் தனி மனிதனுக்கு அங்கீகாரம் இல்லை.
=> தனிமனிதனை மய்யப்படுத்தும் முறை இந்து சமூக அமைப்பில் இல்லை. இந்து சமூக அமைப்பு தனி மனிதர்களால் அல்லாமல் வர்க்கம் அல்லது வர்ணத்தின் அடிப்படையில் அமைந்தது.
(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 3, பக்கம் : 96)
=> இந்து சமூகத்தில் தனி மனிதனுக்கு இடமில்லை. இந்து சமூகம் வகுப்புவாத அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளது. என்னைப் பொருத்தவரை, ஒரு தனி மனிதனை அங்கீகரிக்காத மதத்தை ஏற்க இயலாது.
(1936 ஆம் ஆண்டு மே மாதம் 30, 31 ஆகிய இரு நாட்கள் இயோலாவில் பாபாசாகேப் அம்பேத்கர் ஆற்றிய பேருரை)
* இந்து மதம் தாழ்வு மனப்பான்மையை விதைக்கிறது.
=> தீண்டத்தகாதவர்களின் தாழ்வுமனப்பான்மையானது, அவர்கள் தனிமைப்படுத்தப்படுவது, அவர்களுக்கெதிராக பாரபட்சம் காண்பிக்கப்படுவது, நட்புறவற்ற சூழ்நிலை நிலவுவது போன்ற சமூக சூழ்நிலைகளின் விளைவாகும்.
(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 5, பக்கம் : 416)
* தாழ்வு மனப்பான்மையை இந்து மதம் அவனுள் புகுத்தியிருக்கிறது. அது ஒருபோதும் புத்துணர்வை வளர்க்காது.
(15.10.1956 அன்று மாபெரும் மதமாற்ற நிகழ்வையொட்டி பாபாசாகேப் அம்பேத்கர் ஆற்றிய உரை)
* இந்து மதம் ஒரு பாசிசக் கொள்கை.
=> இந்து மதம் பாசிச, நாசிச சித்தாந்தங்களைப் போன்ற ஓர் அரசியல் சித்தாந்தமாகும்.
(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 15, பக்கம்: 879)
=> இந்து மதக் கருத்தியல் என்பது, பிற மதத்தினரின் கருத்துகளைத் தூக்கி எறிவதாகவும், பிற மனிதர்களின் வளர்ச்சியை மகிழ்ச்சியை காணச் சகியாத ஒன்றாகவும் நடைமுறையில் அமைந்துள்ளது.
(‘பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு' : 8 பக்கம் : 247)
* வர்க்க மற்றும் பாலின ஏற்றத்தாழ்வுகளே இந்து மதத்தின் அடிப்படை.
=> வர்க்க ஏற்றத்தாழ்வுகளும் பாலின ஏற்றத்தாழ்வுகளுமே இந்து சமூகத்தின் அடித்தளமாக இருக்கிறது.
(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 14(2), பக்கம்: 1325)
* இந்து மதம் என்பது சதுர்வர்ணக் கோட்பாடு தான்.
=> சதுர்வர்ண முறை என்பது ஒரு வழக்கமல்ல. அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே முடியாது, அதுதான் மதம்.
(15.10.1956 அன்று மாபெரும் மதமாற்ற நிகழ்வையொட்டி பாபாசாகேப் அம்பேத்கர் ஆற்றிய உரை)
* இந்து மதம் ஒரு அழிவு மதம்.
=> இந்து மதத்தில் சமத்துவம் இல்லை. நம்மை அழித்தவர்களும் இந்த மதத்தால் அழிக்கப்படுவார்கள். இந்து மதத்தால் யாருமே வாழ முடியாது; அந்த மதமே ஓர் அழிவு மதம்.
(15.10.1956 அன்று மாபெரும் மதமாற்ற நிகழ்வையொட்டி பாபாசாகேப் அம்பேத்கர் ஆற்றிய உரை)
* இந்து மதம் என்பது நம் மீது திணிக்கப்பட்ட அடிமைமுறை.
=> இந்து மதம் என்பது நமது மூதாதையர்களின் மதம் அல்ல; இது, நம்மீது திணிக்கப்பட்ட அடிமைத்தனமே.
(1936 ஆம் ஆண்டு மே மாதம் 30, 31 ஆகிய இரு நாட்கள் இயோலாவில் நடைபெற்ற மாபெரும் மாநாட்டில் பாபாசாகேப் அம்பேத்கர் ஆற்றிய பேருரை)
* ஒவ்வொரு இந்துவுக்கும் சாதி உண்டு.
=> ‘சாதியற்ற இந்துக்கள்' என்று இந்நாட்டில் எவரும் இல்லை. ஒவ்வொரு இந்துவுக்கும் சாதி உண்டு. பார்ப்பனர், மகராட்டா, குன்பி, கும்பார் அல்லது ஒரு தச்சன் இவர்களில் யாரும் சாதியை விட்டு வாழும் இந்துவாக இல்லை.
(பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு' : 15 பக்கம் : 331)
மேற்குறிப்பிடப்பட்ட இந்து மத தத்துவங்களும் இந்து சமூக அமைப்புமே தீண்டப்படாத மக்களின் இழிநிலைக்கும் நெடிய துயர்நிலைக்கும் காரணமாக இருக்கிறது. பொருளாதார நிலையையும் தாண்டி ஒருவனின் சாதியே அவன் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது.
ஒருவனது பிறப்பே அவனது சாதியை தீர்மானித்து விடுவதால் அவன் இறப்பு வரை, ஏன் இறப்புக்கு பின்னும் கூட சாதி பிணைப்பிலிருத்து விடுபட முடிவதில்லை. ஒரு பிராமணன் எப்போதும் பிராமணன் தான். ஒரு தலித் எப்போதும் தலித் தான். இப்படி தான் இந்து மதம் இயங்குகிறது.
இப்படி ஒரு சாராருக்கு சலுகைகளையும் உயர்வையும் இன்னொரு சாராருக்கு இழிவையும் தாழ்வையும் அளிக்கும் மதம், தனது மதம் என்ற அந்தஸ்தையே இழந்து விடுகிறது.
மதம் குறித்து பாபாசாகேப்:
* மதம் என்பது வெறும் விதிமுறைகளின் தொகுப்பு அல்ல.
=> மதம் என்பது வெறும் விதிகள் மட்டும் சம்பந்தப் பட்டதாகும்போது அது மதம் என்ற நிலையை இழந்து விடுகிறது.
- பாபாசாகேப் அம்பேத்கர்
(உங்கள் நூலகம் அக்டோபர் 2012 இதழில் வெளியானது)
* மதம் தத்துவத்தை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும்.
=> பழங்கால விதிகளாலான மதத்தை ஒழிக்க வேண்டும். அதற்குப் பதிலாகத் தத்துவங்களாலான மதம் என்று வர வேண்டும் என்று விரும்புகிறேன்.
- பாபாசாகேப் அம்பேத்கர்
(உங்கள் நூலகம் அக்டோபர் 2012 இதழில் வெளியானது)
* மதம் தனி நபரின் ஆளுமையை மதிக்க வேண்டும்.
=> மதமானது அந்த தனிநபரை தரந்தாழ்ந்த, பயனற்ற தாழ்த்தப்பட்டவர் என்று அணுகாமல் சமமான மனிதன் என்று அணுகினால்தான் இதைக் குணப்படுத்த முடியும்.
(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 5, பக்கம் : 416)
* ஒரு சமூகக் குழுவில் உறுப்பினராக மதம் அவசியம்.
=> ஒரு சமூகக் குழுவில் நுழைந்து உறவுமுறை பந்தத்தை உருவாக்கிக் கொள்ள விரும்புகின்ற எவர் ஒருவரும், அந்த சமூகக் குழுவின் கடவுளையோ, கடவுளர்களையோ ஏற்றுக் கொள்வதன் மூலம் மட்டுமே அதில் நுழைய முடியும்.
(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 5, பக்கம் : 416)
* வாழ்வை பாதுகாப்பதே மதத்தின் மையமாகும்.
=> வாழ்க்கை என்பதும் அதைப் பாதுகாப்பது என்பதும்தான் பழங்குடிச் சமூகத்திலிருந்த மதத்தின் முக்கிய அம்சமும், மய்யக் கருத்துமாகும்.
(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 5, பக்கம் : 408)
* சொர்க்கம், நரகம், கடவுள் என்பதை விடவும் மதம் சமூக ரீதியானது. மதம் மக்களுக்கானது.
=> மதத்தின் முக்கிய உள்ளடக்கம் சமூக ரீதியானது என்ற அம்சத்தைக் காணத் தவறுவது, மதத்தை அர்த்தமற்றதாக்கி விடுகிறது.
(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 5, பக்கம் : 406)
* ஏழைகளுக்கு நம்பிக்கையூட்டும் ஒன்று மதம் மட்டுமே. அந்த நம்பிக்கையே வாழ்வை நகர்த்த ஏழைகளுக்கு உதவுகிறது. எனவே மதம் தேவை.
=> உயர்ந்த வசதியான வகுப்பினருக்கு மதம் தேவையில்லாமல் இருக்கலாம். அவர்களுக்கு பெரிய பங்களாக்களும், அவர்களுக்கு வேலை செய்ய வேலையாட்களும், பணமும், சொத்தும், மரியாதையும் கிடைக்கும். இத்தகைய மனிதர்கள் மதத்தைப் பற்றி சிந்திக்க வேண்டியதில்லை. ஆனால், ஏழை மக்களுக்கு மதம் தேவையாக இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மதம் தேவையாக இருக்கிறது. ஏழை மனிதன் நம்பிக்கையில்தான் வாழ்கிறான். அவனுடைய வாழ்க்கையின் வேரே நம்பிக்கைதான். அந்த நம்பிக்கையை அவன் இழக்க நேரிட்டால், அவனுடைய வாழ்க்கை என்னவாகும்? மதம் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் பயப்படாமல் இருக்க, நம்பிக்கையான வாழ்க்கையை அளிக்கிறது. எனவேதான் ஏழை ஒடுக்கப்பட்ட மக்கள், மதத்தின்பால் ஈர்க்கப்படுகிறார்கள்.
(15.10.1956 அன்று மாபெரும் மதமாற்ற நிகழ்வையொட்டி பாபாசாகேப் அம்பேத்கர் ஆற்றிய உரை)
* மதம் தேவையில்லை என்பவர்கள் மதத்தின் முக்கியத்துவத்தை அறியாதவர்கள்.
=> மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு மதம் இன்றியமையாததாகிறது. எனக்குத் தெரியும், ஒரு பிரிவினர் காரல் மார்க்சை படித்த பிறகு, மதம் தேவையற்றது என்று கருதுகிறார்கள். அவர்களுக்கு மதத்தின் முக்கியத்துவம் தெரியவில்லை.
(15.10.1956 அன்று மாபெரும் மதமாற்ற நிகழ்வையொட்டி பாபாசாகேப் அம்பேத்கர் ஆற்றிய உரை)
இந்து மதம் என்பது ஓர் மதமே அல்ல, அது ஒரு சாராரை நிரந்தரமாக கீழானவர்களாக தக்க வைக்கும் மோசமான அடிமைமுறைகளான சாதியும் தீண்டாமையும் தான் என்பதை அழுத்தமாக தெரிவிக்கும் பாபாசாகேப் அம்பேத்கர், ஒரு மதம் எப்படி செயலாற்ற வேண்டும், மதத்தின் மையம் எது, ஏன் மதம் அவசியம் என்பதை பற்றி கூறும் கருத்துகளை தெளிவாக உள்வாங்கிக் கொண்டால் தான், ஏன் இந்து மதத்திலிருந்து தாழ்த்தப்பட்ட மக்கள் வெளியேற வேண்டும் அல்லது மத மாற்றம் ஏன் அவசியம் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
மத மாற்றம் குறித்து பாபாசாகேப்:
* இந்து மதத்தில் சாதியும் தீண்டாமையும் நிரந்தரமானது.
=> தீண்டத்தக்கவர் என்றால் எப்போதுமே தீண்டத்தக்கவர்; தீண்டாதவர் என்றால் எப்போதுமே தீண்டாதவர்தான். பிராமணர் என்றுமே பிராமணர்தான், தோட்டி என்றுமே தோட்டிதான்.
* படிநிலை ஏற்றத் தாழ்வு இந்து மதத்தின் அதிகாரப்பூர்வ சித்தாந்தம்.
=> படிநிலை ஏற்றத் தாழ்வு தற்செயலானதோ, இடைநிகழ்வோ அல்ல. அது இந்துக்களின் ஒரு சமயக் கோட்பாடு. அது இந்து சமயத்தின் அதிகாரப்பூர்வமான சித்தாந்தம்.
("தீண்டப்படாதவர்களுக்கு காங்கிரசும் காந்தியும் சாதித்தது என்ன?" - தொகுதி 16, இயல் 7)
(டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் - தொகுதி 9, இயல் 4)
* படிநிலை ஏற்றத்தாழ்வு பிராமணியத்தின் அதிகாரப்பூர்வமான கோட்பாடு. அது சுதந்திரம், சமத்துவம் சகோதரத்துவத்துக்கு எதிரானது.
=> ஏற்றத் தாழ்வு என்பது பிராமணீயத்தின் அதிகாரப்பூர்வமான கோட்பாடு; சமத்துவம் விழையும் கீழ்மட்ட வகுப்பினரை ஈவு இரக்கமின்றி, மனச்சான்றின் உறுத்தலின்றி அடக்கி ஒடுக்குவதை பிராமணீயம் தனது புனித கடமையாகக் கருதுகிறது.
("தீண்டப்படாதவர்களுக்கு காங்கிரசும் காந்தியும் சாதித்தது என்ன?" - தொகுதி 16, இயல் 9)
=> சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகளின் எதிர்மறைதான் பார்ப்பனியம்
(அம்பேத்கர் நூல் (தமிழ்) தொகுப்பு : தொகுதி 37).
* கல்வியோ, செல்வமோ ஒருவரின் தீண்டத்தகாத நிலையை மாற்றி விடுவதில்லை.
=> தீண்டாதவர் ஒருவர் அறிவிலும் ஒழுக்கத்திலும் எவ்வளவு உயர்ந்தவராக இருந்தாலும், அறிவிலும் ஒழுக்கத்திலும் தாழ்ந்தவரான தீண்டத்தக்கவர் ஒருவரைவிட, அந்தஸ்தில் குறைந்தவராகவே வைக்கப்படுகிறார். எவ்வளவுதான் ஏழையாக இருந்தாலும் தீண்டத்தக்கவர் ஒருவரின் அந்தஸ்து, எவ்வளவுதான் செல்வராக இருந்தாலும் தீண்டாதவர் ஒருவரின் அந்தஸ்தைவிட உயர்ந்ததே ஆகும்.
(டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் - தொகுதி 9, இயல் 4)
* சாதியை கை விடும்படி இந்துக்களை நிர்பந்திக்க வேண்டும்.
=> தனது வழிகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சாதி இந்துவை நினைக்கும்படி செய்தால்தான், உணரும்படி நிர்ப்பந் தித்தால்தான் தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு விடுதலை கிட்டும்; விமோசனம் கைகூடும்.
("தீண்டப்படாதவர்களுக்கு காங்கிரசும் காந்தியும் சாதித்தது என்ன?" - தொகுதி 16, இயல் 5)
* பார்ப்பனியத்தை அழித்தொழிக்க வேண்டும்.
=> சமத்துவமின்மை என்னும் குணாம்சத்தை அதாவது பார்ப்பனியத்தைத் தொழிலாளர் மத்தியிலிருந்து வேரோடு களைந்தெறிய வேண்டும்.
(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்கம்: 179)
* நமது இழிவான நிலைக்கு நம் மீது இந்து மதம் செலுத்தும் ஆதிக்கமே காரணம்.
* தனி மனிதனை அன்புடனும் மரியாதையோடும் நடத்தும் சகோதரத்துவம் வேண்டும்.
=> ஒரு தனி மனிதன் மற்றவர்களை அன்புடனும் மரியாதையுடனும் நடத்தி, உடன் வாழும் மனிதருடன் ஒன்றுபட்டு வாழ விரும்பும் மன நிலையே சகோதரத்துவம் எனப்படுவது.
(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 3, பக்கம் : 96)
* சகோதரத்துவம் இல்லாமல் சுதந்திரமும் சமத்துவமும் வெளி பூச்சு தான்.
=> சகோதரத்துவம் இல்லாமல், சமத்துவமும் சுதந்திரமும் வண்ணப் பூச்சு போல ஆழமற்றதாகவே இருக்கும்.
(25.11.1949 அன்று, மக்களவையில் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆற்றிய உரையின் ஒரு பகுதி.)
* மற்றொரு சமூகக் குழுவுடன் உறவுமுறையை ஏற்படுத்திக் கொள்வது இந்துக்களின் கொடுங்கோன்மையை எதிர்க்க உதவும்.
=> உறவுமுறை என்பது, இன்று தாழ்த்தப்பட்டவர்கள் தன்னந்தனியாக அனுபவிக்க வேண்டியுள்ள இந்துக்களின் கொடுங்கோன்மையையும் ஒடுக்குமுறைகளையும் சந்திப்பதற்காக உறவுமுறைப்பட்ட சமூகக் குழுவின் ஆதரவைப் பெற துணைபுரிகிறது. மற்றொரு சமூகக் குழுவுடன் உறவு என்பது சிறந்த பாதுகாப்பாகும்.
(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 5, பக்கம் : 414)
* தனிமைப்படுத்தப்படுவதை தவிர்க்க சமத்துவம் போதிக்கும் ஒரு குழுவுடன் இணைதல் அவசியம்.
=> தாழ்த்தப்பட்டவர்கள் தாங்கள் தனிமைப்படுத்தப்படுவதற்கு முடிவு கட்ட வேண்டுமென்றால், சாதியை அங்கீகரிக்காத மற்றொரு சமூகக் குழுவுடன் சேர்ந்தாக வேண்டும்.
(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 5, பக்கம் : 414)
=> அவர்கள் ( தீண்டத்தகாதவர்கள்) இந்துக்கள் என்றபோதிலும்கூட அவர்கள் முஸ்லிம் மக்களிடம் இருந்தும், கிறித்துவர்களிடம் இருந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஏனென்றால், இந்துக்கள் என்ற முறையில் அவர்கள் இந்துக்களுக்கும் அதைப் போன்றே இந்துக்கள் அல்லாதவர்களுக்கும் அந்நியமானவராகி விடுகின்றனர். இந்தத் தனிமைப்படுத்துதலுக்கு முடிவு கட்ட ஒரேயொரு வழிதான் உள்ளது. இதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை. இந்து அல்லாத ஏதாவதொரு சமூகக் குழுவுடன் இணைந்து அதனுடைய உறவுமுறையாக ஆகிவிடுவது என்பதுதான் அந்த வழி.
(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 5, பக்கம் : 414)
* தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இந்து மதத்தை சகித்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
=> தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தாங்கள் உள்ளாக்கப்படும் சமத்துவமற்ற நிலைகளை தூக்கி எறிய முடியாமல் இருக்கலாம். ஆனால் தொடர்ந்து சமத்துவமற்றப் போக்கினை ஆதரிக்கும் மதத்தினை, இனியும் சகித்துக் கொண்டிருக்க முடியாது.
(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 17(1), பக்கம் : 199)
* நம்மை புத்துணர்வற்றவர்களாக்கு அடக்கி ஒடுக்கும் இந்து மதத்தை தூக்கி எறிய வேண்டும்.
=> ஒரு மனிதனின் உடல் அல்லது மனம் ஏன் பாதிக்கப்படுகிறது? ஒன்று அவன் நோய்வாய்ப்பட்டிருக்க வேண்டும் அல்லது அவன் மனது புத்துணர்ச்சியின்றி இருக்க வேண்டும். மனதில் புத்துணர்ச்சி இல்லையெனில், அங்கு முன்னேற்றம் இருக்க முடியாது. அவனுக்கு ஏன் புத்துணர்ச்சி இல்லை. இதற்கான முதல் காரணம், மனிதன் எந்த வாய்ப்புகளும் வழங்கப்படாமல் வைக்கப்பட்டிருக்கிறான் அல்லது அவன் முன்னேற எந்தவித நம்பிக்கையுமின்றி வைக்கப்பட்டிருக்கிறான். இத்தகு சூழலில், அவன் எப்படிப் புத்துணர்வோடு இயங்க முடியும்? அவன் நோயுற்றே கிடக்கிறான். தன்னுடைய உழைப்புக்குரிய பயன் கிட்டும்போதுதான் அவன் புத்துணர்வு பெறுகிறான்.
(15.10.1956 அன்று மாபெரும் மதமாற்ற நிகழ்வையொட்டி பாபாசாகேப் அம்பேத்கர் ஆற்றிய உரை)
* மத மாற்றம் அன்றி சமூக விடுதலை சாத்தியமில்லை.
=> நம்முடைய இயக்கத்தின் நோக்கம், தீண்டத்தகாத மக்களுக்கு சமூக விடுதலையைப் பெற்றுத் தருவதே ஆகும். மதம் மாறாமல் நாம் இந்த விடுதலையைப் பெறவே முடியாது.
(1936 ஆம் ஆண்டு மே மாதம் 30, 31 ஆகிய இரு நாட்கள் இயோலாவில் நடைபெற்ற மாபெரும் மாநாட்டில் பாபாசாகேப் அம்பேத்கர் ஆற்றிய பேருரை)
* இந்து மதத்தில் இருந்து அல்லல் படுவதை விடவும் சமத்துவத்தை அடைய மத மாற்ற பாதை எளிதானது, சாத்தியமானது.
=> சமத்துவத்தை அடைய இரு வழிகள் உள்ளன. 1. இந்து மதத்தில் இருப்பது; 2. இந்து மதத்தை விட்டு விலகி மதம் மாறுவது.
இந்து மதத்தில் இருந்து கொண்டு எப்படி சமத்துவத்தை அடைய முடியும்? ஒருவன் தீண்டத்தகுந்தவனாகவோ, தீண்டத்தகாதவனாகவோ இருக்கக் கூடிய உணர்வைப் போக்குவது மட்டுமே பிரச்சினையைத் தீர்த்து விடாது. கலப்புத் திருமணத்தாலும், கலந்துண்ணுவதாலுமே சமத்துவத்தை அடைய முடியும்.
இதற்கு ‘சதுர்வர்ணம்' (நான்கு வர்ணம்) அழிக்கப்பட வேண்டும்; பார்ப்பன மதம் வேரறுக்கப்பட வேண்டும். இது சாத்தியமாகுமா? இல்லை எனில், இந்து மதத்தில் இருந்து கொண்டு சமத்துவத்தை எதிர்பார்ப்பது விவேகமாகுமா?
மதமாற்றப் பாதை இதைவிட மிகமிக எளிதானது. மிகத் தெளிவாக, மதமாற்றத்தின் மூலமே சமூக சமத்துவத்தைப் பெற முடியும்.
(1936 ஆம் ஆண்டு மே மாதம் 30, 31 ஆகிய இரு நாட்கள் இயோலாவில் நடைபெற்ற மாபெரும் மாநாட்டில் பாபாசாகேப் அம்பேத்கர் ஆற்றிய பேருரை)
* நமது சொந்த பலத்தை மட்டுமே நம்பி இந்துக்களின் கொடுங்கோன்மையை ஒழிக்க முடியாது.
=> நீங்கள் உங்கள் சொந்த பலத்தை மட்டுமே நம்பியிருந்தால், இந்துக்களின் கொடுங்கோன்மையை நீங்கள் முறியடிக்க முடியாது. நீங்கள் பலமற்று இருப்பதால்தான் ஒடுக்கப்படுகிறீர்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
நீங்கள் ஆதரவற்று இருப்பதால்தான், இந்துக்கள் உங்களுக்கு அநீதி இழைக்கின்றனர்; உங்களைக் கொடூரமாகத் தாக்குகின்றனர்.
(1936 ஆம் ஆண்டு மே மாதம் 30, 31 ஆகிய இரு நாட்கள் இயோலாவில் நடைபெற்ற மாபெரும் மாநாட்டில் பாபாசாகேப் அம்பேத்கர் ஆற்றிய உரை.)
* இந்துக்களின் வன்கொடுமைகளை முறியடிக்க வெளியிலிருந்து நாம் பலத்தை பெற்றாக வேண்டும்.
=> இரண்டு உண்மைகள் தெளிவாகத் தெரிகின்றன: 1. நீங்கள் எவ்வித பலமுமின்றி உங்கள் மீதான வன்கொடுமைகளை எதிர்க்க முடியாது. 2. வன்கொடுமைகளை எதிர்க்க உங்களிடம் போதிய பலம் இல்லை. இந்த இரண்டு முடிவுகளின் தொடர்ச்சியாக மூன்றாவது உண்மை விளங்குகிறது. அது என்ன? வன்கொடுமைகளை முறியடிக்க வெளியிலிருந்து நீங்கள் பலத்தைப் பெற்றாக வேண்டும்.
(1936 ஆம் ஆண்டு மே மாதம் 30, 31 ஆகிய இரு நாட்கள் இயோலாவில் பாபாசாகேப் அம்பேத்கர் ஆற்றிய பேருரை)
* வேறு சமூகத்துடன் உறவை ஏற்படுத்தாமல் வெளியிலிருந்து பலத்தை பெற முடியாது.
=> வேறு சமூகத்துடன் நீங்கள் நெருங்கிய உறவு வைத்துக் கொள்ளாமல், வேறு மதங்களில் நீங்கள் உங்களை இணைத்துக் கொள்ளாமல், வெளியிலிருந்து நீங்கள் பலத்தைப் பெற முடியாது.
(1936 ஆம் ஆண்டு மே மாதம் 30, 31 ஆகிய இரு நாட்கள் இயோலாவில் பாபாசாகேப் அம்பேத்கர் ஆற்றிய பேருரை)
* சாதி மற்றும் தீண்டாமை இழிவை ஒழிக்க மதத்தை மாற்றிக் கொள்வதே தீர்வு.
=> ஒரு மனிதனை இன்னொரு மனிதன் தொழுநோயாளியைப் போல் நடத்த அறிவுறுத்தும் ஒரு மதத்தில் இருக்கும்வரை, சாதியால் நம் மனதில் ஆழமாக நிலை நிறுத்தப்பட்டிருக்கும் வேறுபாடுகள் ஒரு போதும் அழியாது. தீண்டத்தகாத மக்கள் மீதான சாதிக் கொடுமைகளையும் தீண்டாமையையும் ஒழிக்க, மதத்தை மாற்றிக் கொள்வது மட்டுமே சரியான மருந்தாகும்.
(1936 ஆம் ஆண்டு மே மாதம் 30, 31 ஆகிய இரு நாட்கள் இயோலாவில் பாபாசாகேப் அம்பேத்கர் ஆற்றிய பேருரை)
இதுவரை கூறப்பட்டவைகளை சுருக்கமாக பார்த்தால்,
* அரசியல் ஜனநாயகம், பொருளாதார ஜனநாயகம் இரண்டுக்கும் அடித்தளமாக இருப்பது சமூக ஜனநாயகம்.
* சமூக ஜனநாயகம் சகோதரத்துவம் நிறைந்த, தனி மனிதனை தனக்கு சமமானவனாக மதிக்கும் சமூகமே.
* மதம் என்பது சுதந்திரம், சமத்துவம் , சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் அமைய வேண்டும்.
* மதம் மக்களுக்காகவே. இறையியலிருந்து மதத்தை பிரிக்க வேண்டியது அவசியம்.
* சதுர் வர்ணக் கோட்பாடு / படிநிலை ஏற்றத்தாழ்வு இந்து மதத்தின் அதிகாரப்பூர்வ சித்தாந்தம்.
* பிராமணியம் என்பது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகளுக்கு எதிரானது.
* இந்து மதம் ஒழிக்கப்பட்டாலன்றி சாதியும் தீண்டாமையும் ஒழிய வாய்ப்பில்லை. இந்து சமூக முறை நீடிக்கும் வரை தீண்டாமை தொடரும்.
* தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சமத்துவத்தை வலியுறுத்தும் பிற மதங்களில் தங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தீண்டாமையிலிருந்து விடுபெறலாம்.
* இந்து மதத்தோடு ஒப்பிடுகையில் பிற மதங்களில் சமூக ஜனநாயகம் சற்று கூடுதல் என்பது உண்மை.
* தாழ்த்தப்பட்டவர்கள் தனிமைபடுத்தப்பட்டிருப்பதால் தான் இந்துக்களின் கொடுங்கோன்மைக்கு ஆளாகிறார்கள். தனிமைப்படுத்தப்படுதலுக்கு முடிவு கட்ட வேறு சமூக குழுக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்.
* வேறு சமூக குழுவுடன் இணைவதன் மூலமாகவே நாம் பலத்தை பெற முடியும். இது மத மாற்றத்தினால் தான் சாத்தியம்.
ஆக மத மாற்றம்,
* தீண்டாமையிலிருந்து விடுபட,
* தனிமைப்படுத்தப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க அவசியமாகிறது.
இந்தளவில் பார்த்தோமானால் ஒருவர் இந்து மதத்திலிருந்து வெளியேறி வேறு மதத்தில் தங்களை இணைத்துக் கொள்வதே போதுமானது.
ஆனால் மத மாற்றத்தின் மூன்றாவது கூறான , இந்துக்களின் கொடுங்கோன்மையை எதிர்க்கும் பலத்தை பெறுவதற்கு என்ற அடிப்படையில் தாழ்த்தப்பட்டவர்கள் ஒரு சமூக குழுவாக ஒன்றிணைதல் அவசியம்.
இந்து மதத்தின் சாதி, தீண்டாமை கோட்பாடுகளை உள்வாங்காத, சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் ஆகிய கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த , சமூக ஜனநாயகம் மிகுந்த ஒரு மதத்தை அடையாளம் காட்டுவது அவசியமாகிறது .
கிறிஸ்தவம் சாதியத்தை உள் வாங்கிக் கொண்டது. இஸ்லாம் பழங்கால விதிமுறைகளை இறுக்கிப் பிடித்த, ஆண் பெண் சமத்துவமற்ற மதமாக இருக்கிறது.
பௌத்தம் , இஸ்லாம் என்று வரும் போது தீண்டாமையிலிருந்து விடுபெறும் உடனடி தீர்வை இஸ்லாம் வழங்குவதை மறுக்க முடியாது. ஆனால் பகுத்தறிவு, சமத்துவம், சுதந்திரம், பெண் உரிமை, சமூக ஜனநாயகம், சகோதரத்துவம் ஆகிய நீண்ட கால லட்சியங்களோடு ஒப்பிடுகையில் பௌத்தமே உயர்ந்து நிற்கிறது. ஆகவே தான் தாழ்த்தப்பட்டவர்கள் ஒரு சமூக குழுவாக ஒருங்கிணைய ஏற்ற மதமாக பௌத்தத்தை பாபாசாகேப் பிரகடனம் செய்கிறார். பௌத்தமேற்போம்... சமத்துவம் , சகோதரத்துவம் நிறைந்த சமூகம் படைப்போம்!