Thursday, October 20, 2016

'அம்பேத்கர் இந்திய தேசியத்தை ஆதரித்தார்..’ ஆமாம் இப்போ இன்னாங்குற அதுக்கு?

‘அம்பேத்கர் இந்திய தேசியத்தை ஆதரித்தார்..’ ஆமாம் இப்போ இன்னாங்குற அதுக்கு?

- தோழர் வே மதிமாறன்

அம்பேத்கர் இந்திய தேசியத்தை ஆதரித்தார், இந்திய தேசியம் என்பது இந்து தேசியம்தான், பார்ப்பன தேசியம்தான், அவர் இந்து தேசியத்தை, பார்ப்பன தேசியத்தை ஆதரித்தவர் என்று என் நண்பன் சொல்கிறான். உண்மையா?

-கனல்

இந்திய தேசியம் இந்து தேசியமாக இருக்கிறது என்பது உண்மைதான்.
இந்திய தேசியம் என்று உருவாவதற்கு முன்பு தமிழ்நாடு புரட்சிகரத் தமிழ்த்தேசியமாகவா இருந்தது?

ஜாதி வெறியும், தலித் வீரோதமும், பார்ப்பன செல்வாக்கும், பார்ப்பன அடிமைத் தனமும், நிலப்பிரபுத்துவக் கொடுமையும் இன்று இருப்பதைவிடப் பல மடங்கு அதிக அளவில் இருந்தது.

ஒப்பிட்டளவில் பார்த்தால், தமிழ்நாடு தனித் தனியாகத் தமிழ் மன்னர்களால் மட்டுமே ஆளாப்பட்டு வந்தபோது இருந்த நிலையைவிட இன்றைய நிலையில் மேன்மையுள்ளதாகவே இருக்கிறது.

குறிப்பாக, தலித் மக்களின் வளர்ச்சி, அவர்கள் மீது நடக்கும் வன்கொடுமைகளுக்கான எதிர்ப்பு, மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி, சமூகப் பொருளாதார வளர்ச்சி இவைகள் எல்லாம், தமிழனுக்கு என்று பல நாடுகள் இருந்தபோது இருந்த நிலையைவிட இன்றைய நிலையில் சிறப்பாகவே இருக்கிறது.

ஏகாதிபத்திய பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்த இந்திய தேசியம், மற்றும் முதலாளித்துவத்தினால் ஏற்பட்ட நிலப்பிரபுவத்துவ எதிர்ப்பு கூறுகளால் கிடைத்த நன்மை இதைச் சாத்தியமாக்கி இருந்தது.

அதனால்தான், டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்றவர்கள் இந்து மத, பார்ப்பனிய, ஜாதி எதிர்ப்பு அரசியலை மிகத் தீவிரமாகப் பேச முடிந்தது. அதனால் நாமும் தெளிவு பெற்றோம்.

மாறாக, தனித் தமிழ் நாடாக, தனித் தனி நாடாக இருந்திருந்து பார்ப்பனியத்திற்கு எதிராக, ஜாதிக்கு எதிராக, இந்து மதததிற்கு (சைவம், வைணவம்) எதிராகப் பெரியாரும், அம்பேத்கரும் பேசியிருந்தால்,

“யாரங்கே.. இவர்கள் இருவரையும் யானை காலில் மிதத்துக் கொல்லுங்கள்” என்று உத்தரவிட்டிருப்பார்கள் பார்ப்பன அடிமைகளான ஒரிஜினல் தமிழ் மற்றும் மாராட்டிய மண்ணின் மன்னர்கள்.

அப்படித்தான் சமணர்களையும், பவுத்தர்களையும் கொன்றார்கள், ‘தனிநாடு’ மன்னர்கள்.

சரி, அண்ணல் அம்பேத்கர் ஏன் இந்திய தேசியத்தைப் பேசினார்?

தமிழ்நாட்டில் இருப்பதைப் போலவே, இந்தியா முழுக்க ஊருக்கு வெளியே சேரி இருக்கிறது.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நேர் மேல் இருக்கிற வன்னியர், கள்ளர் ஜாதிக்காரர்கள் எப்படித் தலித் மக்கள் மேல் வன்முறையைத் தமிழ்நாட்டில் நிகழ்த்துகிறார்களோ, அதுபோலவே உத்திரப்பிரதேசம், பிகார், அரியான பகுதியில் இருக்கிற ஜாட், யாதவ் ஜாதி வெறியர்களும் நடத்துகிறார்கள்.

தமிழ்நாட்டில் வன்னியர், கள்ளர்களிடம் தலித் விரோதத்தைத் தூண்டி அவர்களை ஜாதிய அடியாளாகப் பயன்படுத்தி அவர்களை மட்டும் குற்றவாளியாகக் காட்டிவிட்டு, வன்னியர்களையும், கள்ளர்களையும் இழிவானவர்களாகக் கருதுகிற பிள்ளை, முதலி, செட்டி, பார்ப்பனர்கள் போன்ற இன்னும் பிற ஆதிக்க ஜாதிக்காரர்கள் எப்படி நல்லவர்கள் போல் நடிக்கிறார்களோ, அதுபோலவே இந்தியா முழுக்க ‘உயர்’ ஜாதிக்கார்கள் நடந்து கொள்கிறார்கள்.

தலித் விரோதமும், தாழ்த்தப்பட்ட மக்களின் மீது காழ்ப்புணர்ச்சியும் இந்திய தேசியத்திற்கான அடையாளமாகப் பார்வையற்றவர்களுக்கும் தெளிவாகப் புரிவது போல், பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கிறது.

தாழ்த்தப்பட்ட தமிழனின் பிரச்சினை மற்ற ஜாதி தமிழனின் பிரச்சினைகளிலிருந்து வேறுபட்டது; ஆனால், ஒடுக்குமுறைக்கு உள்ளாவதில் தமிழகத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், ஆந்திரா, அரியான உட்பட இந்தியா முழுக்க உள்ள தாழ்த்தப்பட்ட மக்களும் ஒற்றுமை இருக்கிறது.

இதை உணர்ந்த டாக்டர் அம்பேத்கர் இந்தியா முழுக்க உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் சார்பாகப் போராடினார். மாராட்டிய மகர் ஜாதி தாழ்த்தப்பட்ட மக்களின் ஒடுக்குமுறையைப் பற்றி மட்டும் அவர் குறிபிடவில்லை. தமிழ் நாட்டில் திருநெல்வேலியில் ‘கண்ணால் பார்த்தலே தீட்டு’ என்று கொடுமையான ஒடுக்குமுறைக்கு உள்ளான ‘புதிரை வண்ணார்’ சமூக மக்களின் பிரச்சினை குறித்தும் பேசியியிருக்கிறார்.

அதனாலேயே இந்தியா முழுவதும் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவராகக் கொண்டாடப்படுகிறார்.

டாக்டர் அம்பேத்கர் மீதான அவதூறுகளை, தமிழ்த்தேசியம் பேசுகிறவர்களில் தலித் அல்லாதவர்களே இப்படி அள்ளி வீசுகிறார்கள்.

இதற்கு நேர் மாறாக இனனொரு புறத்தில் காந்தி, ராஜாஜி, பாரதி, காமராஜ், முத்துராமலிங்கம், இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர் போன்றவர்களை ஆதரிக்கிறார்கள்; இல்லையென்றால் விமர்சிக்க மறுக்கிறார்கள்.

டாக்டர் அம்பேத்கர் பேசிய இந்திய தேசியத்தில் தலித் மக்களுக்கான விடுதலை என்கிற முற்போக்கான அம்சம் இருந்தது.

காந்தி, ராஜாஜி, பாரதி, காமராஜ், முத்துராமலிங்கம் இவர்களின் இந்திய தேசியத்தில், ஆதிக்க இந்திய வெறியும், காங்கிரஸ் மற்றும் இந்து அமைப்புகளுக்கே உரிய தேசிய இனங்களுக்கு எதிரான வன்மமும்தான் இருக்கிறது.

இந்து மதத்தில் நம்பிக்கை உள்ள, இந்துக் கடவுளான முருகன் மீது அளவுகடந்த பக்தி கொண்ட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இந்துத்துவுத்திற்கு எதிரான தமிழ் தேசிய தலைவராக இவர்களுக்குத் தெரியும்போது,

இந்திய தேசியத்தை ஆதரித்து இந்து மதத்தை, இந்துக் கடவுள்களைக் கந்தலாக்கிய அண்ணல் அம்பேத்கரை இந்து மதத்தை ஆதரித்தவர் என்று அவதூறு செய்வது திட்டமிட்ட ஜாதி இந்துவின் உணர்வைத் தவிர வேறென்ன?

அம்பேத்கர் பற்றிய இவர்களது விமர்சனம் என்கிற பெயரில் வருகிற அவதூறுகளில், தமிழ் தேசிய உணர்வெல்லாம் இல்லை. ஜாதிய உணர்வுதான் வழிகிறது.

தமிழ் தேசியமோ, தெலுங்கு தேசியமோ, மலையாள தேசியமோ எந்த வகையான விடுதலை குறித்துப் பேசுகிற எவரும் அம்பேத்கரை எதிர்த்து அல்ல, அவரைப் புறக்கணித்துச் செயல்பட்டாலே அவன் ஒரு ஜாதி வெறியனாகவும் தலித் விரோதியாகவும்தான் இருப்பான்.

அம்பேத்கரின் அடிப்படை அரசியலுக்கு எதிராகவே அவரை அவதூறு செய்கிற ஒருவனை நீங்கள் உங்கள் நண்பர் என்று சொல்லாதீர்கள்; அவர் நண்பர் அல்ல எதிரி.

உங்கள் எதிரி மட்டுமல்ல, சமூக எதிரி. சமூக விரோதி.

No comments:

Post a Comment