சிரிக்காமல் படிக்கவும்
2nd வர்ல்டு வார் உச்சத்தில் இருந்த சமயம். ஒட்டுமொத்த உலகமும் போரில் தகித்து கொண்டிருந்தது.
அப்போதுதான் இந்தியாவில் காந்தி, நேரு போன்றவர்கள் வெள்ளையர்களிடம் சுதந்திரத்திற்காக கெஞ்சிக்கொண்டு இருந்தார்கள். ஜெர்மனியிலோ ஹிட்லர் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தார். சர்ச்சில் என்ன செய்வது என தெரியாமல் திகைத்துப் போய் இருந்த சமயம். அப்போது இந்தியர்களிடம் சர்ச்சில் ஒரு நிபந்தனை போட்டார். "ஜப்பானை அமெரிக்கா பார்த்துக்கொள்ளும். ஆனால் ஜெர்மனியை எங்களால் சமாளிக்க முடியவில்லை. நீங்கள் ஹிட்லரை தோற்கடித்து எங்களுக்கு வெற்றி வாங்கித்தந்தால் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கிவிடுகிறோம்," என அறிவித்தார்.
இந்த நிபந்தனையை கேட்ட காந்தியும், நேருவும், "அதுக்கு வக்கிருந்தால் நாங்கள் உங்களையே தோற்கடித்து சுதந்திரம் அடைந்துகொள்ள மாட்டோமா? நாங்கள் ஏனய்யா உம்மிடம் கெஞ்சப்போகிறோம்? போயா லூசு," என சொல்லிவிட்டு பின்வாங்கிவிட்டார்கள். ஆனால் ஒரே ஒரு மாவீரன் மட்டும் அமைதியாக உட்கார்ந்திருந்தார். நீண்ட நேர அமைதி. அவர் முகத்தை ராணுவ தொப்பி மூடியிருந்தது.
"தம்பி.எந்திரிப்பா கேட்டை மூட போறோம்," என காவலர்கள் அவரை எழுப்பியபோதுதான் அந்த மாவீரன் நேதாஜி என்றும் அவர் இவ்வளவு நேரம் தூங்கிக் கொண்டிருந்ததும் தெரிந்தது. பிறகு சர்ச்சில் அவரிடமும் அதே கதையை முதலில் இருந்து சொன்னார். முழுவதுமாக பொறுமையாக கேட்ட அந்த மாவீரன், "ஆரம்பத்தில் நல்லாருந்துச்சு. போக போக கொஞ்சம் போர் அடிச்சுச்சு. ஆனா க்ளைமாக்ஸ் நல்லாருந்துச்சு," என தனது கருத்தை சொல்லிவிட்டு, ஜெர்மனியை தோற்கடிக்கும் சவாலை தான் ஏற்பதாகவும், இரவில் தன் சகாக்களுடன் ஆலோசிப்பதாகவும் சொல்லிவிட்டு நகர்ந்தார்.
இரவு. நேதாஜியின் வீடு. நேதாஜியும் அவர் தளபதிகளும் கூடியிருந்தார்கள். ஹிட்லரை எப்படி அழிக்கலாம் என விடியவிடிய ஆலோசித்தார்கள். "நேதாஜி சார். ராவணனை கொன்ற ராமனை அனுப்பலாமா?" என ஒருவர் கேட்டார். அவர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார் என்றார்கள். "மராத்திய வீரன் சிவாஜியை அனுப்பலாம்," என்றார் ஒருவர். அவரும் இறந்துவிட்ட செய்திகேட்டு அதிர்ந்தார் நேதாஜி. பிறகு தர்மன் தம்பி அர்ஜுனன், கர்ணன், லகான் புவனேஷ்வர், மங்கள் பாண்டே என பலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் எல்லோருமே இறந்தவர்களாகவே இருந்தார்கள். இப்படி வீரர்கள் எல்லாம் இளம் வயதிலேயெ இறந்துவிட்டால் என்னதான் செய்வது என நேதாஜி மனம் உடைந்த சமயம், "ஐயா" என ஒரு தமிழ் குரல் கேட்டது. நேதாஜியின் சிலம்பப் படையில் மலையாண்டித்தேவர் என்ற சிலம்பு வாத்தியார் தலைமை பொறுப்பில் இருந்தார். அவர்தான் ஐயா என கூப்பிட்டார். "ஐயா. கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலையலாமா?" என கேட்டார்.
நேதாஜிக்கு புரிந்துவிட்டது. பலமாக சிரித்தார். அந்த வீடே அதிர்ந்தது. அவர் குரலில் வெற்றி உறுதியாகிவிட்ட பெருமிதம். உடனே தன் தளபதிகளிடம், "எத்தனை பேர் இறந்து போயிருந்தால் என்ன? என் தம்பி முத்துராமலிங்கதேவன் உயிரோடு இருக்கிறான். அவன் போதும் ஹிட்லரை முடிக்க," என கர்ஜித்தார்.
பசும்பொன்னில் தன் வீட்டில் தவத்தில் ஈடுபட்டிருந்த தெய்வத்திருமகனாருக்கு இது அசரிரீயாக கேட்டது. எழுந்து போய் ராணுவ உடைக்கு மாறினார். தன் ஆட்களை கூப்பிட்டார். "வேல்கம்பையும், வீச்சருவாவையும் எடுங்கடா. புளிசோறு கட்டிக்கங்கடா. போருக்கு போவோம்," என உத்தரவிட்டு தன் படைகளுடன் ஜெர்மனிக்கு கிளம்பினார்.
ஜெர்மனியின் பெர்லின் நகரம். பீரங்கி சத்தத்தையும் மீறி "வெற்றிவேல் வீரவேல்" எனும் ஒலி விண்ணை பிளந்தது. நாஜிப்படையின் குண்டுகளை வீச்சரிவாளால் தடுத்தபடியே வெறியுடன் முன்னேறியது திருமகனாரின் படை. நாஜிக்கள் அலறி ஓடினார்கள். அதுவரை Jews என அழைக்கப்பட்ட Jewsகள் தங்களை காப்பாற்றிய 'தேவர்'க்கு மரியாதை செய்யும் விதமாக தங்கள் பெயரை 'யூதர்' என மாற்றிக்கொண்டார்கள். தேவரய்யாவின் படை தன்னை நோக்கி வரும் தகவல் ஹிட்லருக்கு போனது. எதற்குமே அஞ்சாத ஹிட்லர் பயந்து நடுங்கினார். "நானா செத்துட்டா ஒருவாட்டிதான் சாவேன். ஆனா தேவர் என்ன கொன்னாருன்னா ஒன்பது வாட்டி சாவடிப்பாரு," என அலறிய ஹிட்லர் சயனைட் குப்பியை சப்பி நுரை தப்பி செத்துப்போனார். அப்போது அங்கே வந்த திருமகனார், "ஆயிரம்தான் இருந்தாலும் அவன் ஒரு மாவீரன்," என சொல்லி பெட்ரோலை ஹிட்லர் மீது ஊற்றி தீயிட்டு இறுதிசடங்கு செய்தார்.
இந்த விஷயம் ப்ரிட்டிஷாருக்கு தெரிந்துவிட்டது. நிபந்தனையை ஏற்று இந்தியாவை இந்தியர்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தம் அவர்களுக்கு. ஆனால் நேதாஜியிடம் ஒப்படைத்தால் தேவர் தலைமையில் படை அனுப்பி இங்கிலாந்தை எளிதாக பிடித்துவிடுவார் என்பது சர்ச்சிலுக்கு தெரிந்தது. அதனால் நடு இரவில் மவுண்ட் பேட்டன் வீட்டுக்கு நேருவை அவசரமாக அழைத்தார்கள். "நான் இங்கேதான் இருக்கேன்," என சமயலறையில் இருந்து வெளிவந்தார் நேரு. அதிர்ந்த வெள்ளையர்கள் சுதந்திரத்தை அவரிடம் அளித்துவிட்டு அப்படியே ஓடினார்கள். இதுதான் வரலாறு.
என்னதான் மரத்தின் பூவும், பழமும் வெளியே தெரிந்தாலும் மண்ணுக்குள் இருந்து மரத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பது வேர்தான். அப்படியான தியாகத்தை தான் நம் நாட்டுக்காக தேவரய்யா செய்தார் என்பது #நம்மில்_எத்னி_பேருக்கு_தெரியும்
No comments:
Post a Comment