Monday, October 31, 2016

ஆதார் அபாயம்

ஆதார் அட்டையின் ஆபத்தை இன்னும் நம் மக்கள் உணராமல் விழுதடித்துக் கொண்டு வாங்க ஓடுகிறார்கள்.

ஆதார் அட்டையை கொண்டுவரும் பொழுது, “இது கட்டாயமில்லை” என்று சொல்லி தான் கொண்டுவந்தார்கள்.

பின்னர், கேஸ் மானியம் பெற ஆதார் அவசியம் என்ற நிலையை ஏற்படுத்தினார்கள்.

கேஸ் மானியம் பெற ஆதார் அட்டையை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும் என்று மாற்றினார்கள்.

இப்பொழுது குடும்ப அட்டை பெற ஆதார் அட்டை அவசியம் என்ற நிலையை ஏற்படுத்திவிட்டார்கள்.

நாளை உங்கள் மின்சார கணக்குடன் ஆதார் அட்டையை இணைப்பார்கள்.

பின் உங்கள் ஓட்டுனர் உரிமம், வீட்டு வரி, சொத்து வரி என அனைத்தும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படும்.

நாளை நீங்கள் மீத்தேனுக்கு எதிராகவோ, கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராகவோ போராடி ஒருநாள் கைதாகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் கைரேகை அங்கு பதிவு செய்யப்படும். நீங்கள் ‘அரசிற்கு எதிரானவர்’ என்று ஆவணப்படுத்தப்படும். நீங்கள் பாஸ்போர்ட் எடுக்கும்போதோ, அல்லது வேறு ஏதாவது ஒரு இடத்திலோ உங்களை அரசு முடக்கும்.

ஒரு உதாரணத்திற்கு என்று எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் வங்கிக் கணக்கும், சொத்து வரியும் ஒரே ஆதார் அட்டையில் இணைக்கப்பட்டுள்ளது. நாளை சொத்து வரி என வரும்போது, உங்கள் சம்மதம் இல்லாமலேயே உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து அரசு பணம் எடுக்கும் நிலை நிச்சயம் வரும். இதே போல் மின்சார கட்டணம் முதல் பலவற்றிற்கு நீளும்.

இதன் நீட்சியாக நாளை நீங்கள் வீடு தேடி ஒரு வீட்டிற்கு குடியேற வேண்டும் என்றால், அந்த ஏரியா காவல் நிலையத்தில் உங்கள் கைரேகையை வைத்து, ஒழுக்க சான்றிதழ் வாங்கி வந்து குடியேற வேண்டிய நிலை ஏற்படலாம். இதற்கு, ‘குற்றங்களை குறைக்க இது அவசியம்’ என்று பிரச்சாரம் செய்யப்படும்.

இதெல்லாம் நடக்காது என்று நினைக்கிறீர்களா? இன்று ஒரு ஜியோ சிம் வாங்க வேண்டும் என்றால்கூட ஆதார் அட்டை இல்லாமல் வாங்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

*நீங்கள் அரசாங்கத்தை நம்பி தந்த உங்கள் தகவல்கள் தனியாரிடம் (அம்பானியிடம்) தாரைவார்க்கப்பட்டுள்ளது.*

*உங்கள் கைரேகை உட்பட உங்கள் தகவலை ஒரு தனியார் (அம்பானி) பயன்படுத்த முடிகிறதென்றால், நாளை எவரோ செய்த குற்றச் செயலில் உங்கள் கைரேகையை போலியாக சித்தரித்து நீங்கள் செய்ததாக மாற்றுவதற்கு எவ்வளவு நேரம் ஆகப்போகிறது…*

ஆகவே, சிம் வாங்குவதற்கு ஆதார் அட்டையை கொடுக்காதீர்கள்.

நன்றி:
சமூக பொறுப்பும் சமுதாய சிந்தனையும்

No comments:

Post a Comment