Friday, October 5, 2018

20 ரூபாய் டாக்டர் - ravishankar ayyakannu

Ravishankar Ayyakkannu
2018-10-05

"20 ரூபாய் மருத்துவர் ஜெகன்மோகன் என்று ஒருவர் காலம் ஆகிவிட்டார். மக்கள் அவரது மறைவு குறித்து வருந்துகிறார்கள். இது போன்ற சேவை உள்ளம் கொண்ட மருத்துவர்களைக் காண்பது அரிது" - செய்தி.

ஒரு நாளைக்கு 300 பேருக்கு 20 ரூபாய் என்ற கணக்கில் சனி ஞாயிறு தவிர்த்து மாதம் 22 நாள் வேலை பார்த்தால் கூட 1,32,000 ரூபாய் சம்பாதிக்கலாம். அவரது மருத்துவமனை வாடகை, ஊழியர் செலவு எல்லாம் கழித்தால் கூட குறைந்தது 1,00,000 ரூபாய் சம்பாதிக்கலாம்.

எனக்குத் தெரிந்த மருத்துவர் ஒருவர் இருக்கிறார். இவர் அந்த 20 ரூபாய் கூட வாங்குவதில்லை. ஊசி, மருந்து மட்டும் இல்லை அறுவை சிகிச்சை கூட இலவசம்.

மாதம் சம்பளமாக அவர் ஈட்டுவது 60,000 ரூபாய் மட்டுமே.

அவருக்குப் பெயர் அரசு மருத்துவர்.

மருத்துவர் ஜெகன் மோகன்கள் போன்றோர் ஆற்றும் சேவை நன்று. ஆனால், மிகக் குறைந்த ஊதியத்தில் வேலை பார்க்கும் ஆயிரக்கணக்கான அரசு மருத்துவர்கள் ஆற்றும் சேவை அதனை விட அரிது. பாராட்டிற்குரியது.

அவர்களை மறந்து விடுகிறோம். எவ்வளவோ துயரைத் தாங்கி வேலை செய்யும் அவர்கள், ஒரு கட்டத்தில் "இந்த நன்றி கெட்ட சமூகத்துக்கு உழைக்கத் தான் வேண்டுமா" என்று ஓய்ந்து விடுகிறார்கள்.

அதே போல் ஜெகன் மோகன் 20 ரூபாய் வாங்கும் நல்லவர் என்று கட்டமைக்கும் பொதுப்புத்தி, 200 ரூபாய் கேட்கும் ஒரு சிறப்பு மருத்துவரை வில்லன் ஆக்குகிறது.

சிறப்பு மருத்துவர்கள் படிப்புக்கும் உழைப்புக்கும் 200 ரூபாய் எல்லாம் ஒரு தொகையே இல்லை. நம்மிடம் காசு இல்லை என்றால் அரசு மருத்துவமனையை நாடுவதே நேர்மை. உழைத்துப் பொருள் ஈட்டும் எந்தத் தொழில் துறையினரையும் வில்லனாக்கத் தேவை இல்லை.

இந்தக் காலத்தில் எந்த மருத்துவர் சேவை செய்கிறார் என்று அசால்டாக கேட்கிறோம். நானெல்லலாம் எவ்வளவு சம்பாதித்தாலும் வாழ்நாள் முழுக்க படித்துக் கொண்டும் உழைத்துக் கொண்டும் இருக்க முடியாது என்று மருத்துவர் படிப்புக்கு விண்ணப்பிக்காமலேயே விட்டவன்!

நோயாளி இறந்தால் மருத்துவரை அடித்துக் கொல்லும் இந்த நாட்டில் ஒருவர் மருத்துவர் ஆகத் துணிவதே சேவை தான்!

அரசு மருத்துவர்கள் குறைந்த ஊதியத்துக்கும் தனியார் மருத்துவர்கள் நியாயமான விலைக்கும் மருத்துவம் பார்ப்பதே ஒரு சேவை தான்!

நீட் சுழலில் சிக்கி, மருத்துவம் முற்றிலும் தனியார் மயமாகும் ஒரு நாள் இதை நாம் உணர்வோம்.

#நீட் #மருத்துவம் #சேவை #பொதுப்புத்தி

https://m.facebook.com/story.php?story_fbid=10157957054708569&id=576438568

No comments:

Post a Comment