Thursday, October 11, 2018

Meeto - வாசுகி பாஸ்கர்

Metoo

#வாசுகிபாஸ்கர்

Spot Light படத்தில், அதே பெயருடைய ஒரு investigative journalism நிறுவனம், தேவாலயத்தில் பாதிரியார்கள் மூலம் நிகழந்த பாலியல் வன்புணர்வு நிகழ்வுகளை குறித்து விசாரிக்க ஆரம்பிக்கும். சில வழக்குகளை தீர விசாரித்து அதை பிரசுரம் செய்து நாடே அந்த செய்தியால் பற்றிக்கொண்டு ஸ்பாட் லைட் நிறுவனத்துக்கு ஆயிரக்கணக்கான தொலைபேசி அழைப்புகளும் கடிதங்களும் வந்தவண்ணம் இருக்கும். அந்த நிறுவனமே தலைச்சுற்றி போகுமளவு நாடு முழுக்க இருக்கும் தேவாயலங்களின் sexual abuse குற்றசாட்டுகள் வெளிவரும். அதில் பெரும்பான்மையானோர் இளைஞர்கள், தனது சிறு வயதில் நடந்த அனுபவத்தை பகிர்வார்கள்.

இதை இன்று நாடே பற்றிக்கொண்ட இருக்கும் #metoo வோடு தொடர்பு படுத்தலாம். இத்தனை வருடம் இல்லாமல் இப்போது ஏன் இதை சொல்கிறார்கள் என்பதற்கான பதில் ஒன்று தான். இதை யாரேனும் ஒருவர் தொடக்கி வைக்க வேண்டும், தனது அனுபவத்தை பகிர்வதற்கான நெஞ்சுரமும் சூழலும் உருவாகும் போது, அது கொடுக்கும் மன தைரியமும் ஊக்கமும் மௌனித்து இருக்கும் பல பேரை பேச வைக்கும்.

யார் மீது குற்றம் சாட்டுகிறோமோ, அவரோடு குற்றம் சாட்டப்பட்டவருக்கு இருந்த கடந்த கால பழக்கத்தை மேற்கோள் காட்டி, அந்த குற்றசாட்டை நீர்த்து போகச்செய்யும் பலரது விமர்சனங்களுக்கும் அதே படத்தில் பதில் இருக்கிறது.

பாதரியாரால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞன் சொல்வான் "பாதிரியார் என்பவர் கடவுளுக்கு இணையானவர் என்று எனக்கு கற்பிக்கப்பட்டது, பாதிரியாரின் பார்வை நம் மீது படுவதே புண்ணியம் என்கிற சூழலில், அந்த பாதிரியார் நம்மை ஒன்றை செய்ய சொல்கிறார் என்றால், நீங்கள் அதை எப்படி மறுக்க முடியும்? அது கிட்டத்தட்ட கடவுளை மறுப்பது போல"

பாதரியாராகட்டும், ஆண்களாகட்டும், இந்த சமூகத்தில் அவர்கள் தனி நபர்கள் அல்ல, அது ஒரு அதிகாரம். சமூக அமைப்பில் இங்கே ஆண்களே அதிகாரமாக இருக்கும் போது, அதிகாரத்தோடு தொடர்பில் இருக்கும் ஆண்களை குறித்து சொல்லவே தேவையில்லை. இந்த விவகாரத்தை நாம் இந்த அடிப்படையில் நோக்குவது தான் அறமாக இருக்க முடியும்.

ஆண் என்னும் இந்த அதிகார அமைப்பில், ஆண்களுக்கு இணங்கினால் தான் எதுவும் சாத்தியமென்னும் கடந்த கால சூழலியலை, கடந்த கால அநீதிகளை வெளிப்படையாக சொல்லும் மற்றுமொரு சூழலை கொண்டு ஒப்பீட்டு, ஒரு பெண் எதை பேச வேண்டும், எதை பேசக்கூடாது என்று நாம் யாரும் தீர்மானிக்க முடியாது, அதை அந்த பெண் தான் தீர்மானிக்க வேண்டும்.

ஒரு பெண் தன் மொத்த அனுபவத்தில், நூறு பாலியல் சீண்டல்களை அனுபவித்து இருக்கலாம், அதில் சிலவற்றை சில காரணங்களுக்காக இன்றும் கூட மறைக்கலாம், அது அந்த பெண்ணுக்கு சாதகமாகவும் பாதகமாகவும் இந்த சமூகம் கொடுத்திருக்கும் நிர்பந்தம். அதில் சிலவற்றை அவள் மறைக்கிறாள் என்கிற அனுமானத்தினாலேயே, அவள் சொல்லத்துணிந்த குற்றச்சாட்டையும், குற்றம் சுமத்தப்பட்ட நபரையும் புனிதப்படுத்தி விட முடியாது. ஒப்பீட்டளவில் இன்னாரை குறித்து பேசத்தேவையில்லை என்கிற முடிவுக்கும் வர முடியாது.

தன் கடந்த கால கசப்புணர்வுகளையும் அனுபவங்களையும் ஒருவர் சொல்லத்துணிந்து விட்டால், அவர் இரண்டு விதமான மனநிலைக்கு தயாராகி விட்டாரென்று அர்த்தம்,

1 . வெற்றி அடைந்த பிறகு தனது வாழ்க்கை அனுபவத்தினை பகிர்தல் ( படைப்பாளிகள், எழுத்தாளர்கள் என்று பல்வேறு துறையில் வெற்றி பெற்றவர்கள் தங்களது சுயசரிதையில் ஒளிவு மறைவின்றி பதிவு செய்வதை நாம் பார்க்கலாம் )

2 ஒன்றை பகிர்வதின் மூலம், அதனால் உருவாகும் பாதகங்களை சந்திக்கும் அளவு மனரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஒருவர் தயாaldராகிற போது.

இந்த இரண்டு மனநிலையில் இருந்து தான் ஒருவர் தனது கடந்த காலத்தை குறித்து ஒளிவு மறைவின்றி பேச முடியும்.

தலித் ஒருவன் தன் அடையாளத்தை மறைத்து இந்த பொது சமூகத்தின் அங்கீகாரம் பெற்று வளர்வதும், பின்னாளில் "தலித் என்பதை மறைத்தால் தான் இவை எனக்கு கிடைக்குமென்றால், அது எனக்கு தேவையில்லை" என்கிற மனநிலைக்கு முன்னேறும் மனப்பான்மையை உதாரணமாக சொல்லலாம்.

பெண் மீதான ஒடுக்குமுறை என்பது சித்தாந்தங்களை கடந்தது, தேசத்தை கடந்தது. "கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கலைனா இங்க எதுவும் நடக்காது" என்பது சினிமாத்துறையில் எழுதப்படாத சட்டம், கோடம்பாக்கம் தெருவெங்கும் வழக்கத்தில் இருக்கும் வசனம். சினிமா தாண்டி பல்வேறு துறைகளில் இது தான் நிலை. ஒரு பெண்ணை எதை சொல்லி இந்த சமூகம் ஒடுக்குகிறதோ, அந்த பெண் அதையே தனது ஆயுதமாக்குவது அந்த பெண் பணிபுரிகிற இடங்களில் இருந்து குடும்ப அமைப்பு வரை தொடர்கிறது. சீரியல் பார்க்கும் பெண்களை கூட கேலி செய்வதை நான் தவிர்த்துக் கொண்டதின் காரணம் அதுவே. மாலை வேளைகளில் டாஸ்மாக்கிலும், ரோட்டோர டீ கடைகளிலும், இருண்ட மைதானத்தின் நடுவிலும் அமர்ந்து நண்பர்களோடு அரட்டை அடிக்கும் கொடுப்பினை பெண்களுக்கு கிடைத்தால் அந்த எழவெடுத்த சீரியலை பார்க்கவா போகிறார்கள்? நிச்சயமில்லை. இந்த சுதந்திரத்தை மீட்ட பெண்கள், சமூகத்தில் எங்கும் எப்போதும் போய் வரலாம் என்கிற பெண்கள் சீரியலை பார்த்துக்கொண்டா இருக்கிறார்கள்? இலக்கிய, அரசியல், சமூக கூட்டங்களில் பங்கேற்கிறார்கள், தேர்ந்தெடுத்த சினிமாக்களை பார்க்கிறார்கள், தனக்கான நேரத்தை எப்படி செலவிடுவது என்பதை அவர்களே தீர்மானிக்கிறார்கள், எந்த புற அழுத்தமும் இல்லாமல்.

பெண்களுக்காக வகுக்கப்பட்ட கற்பிதங்களோடு வாழ்வது எந்த பெண்ணுக்கும் உளமார உகந்ததாக இருப்பதில்லை, சுய மரியாதையான வாழ்க்கை தான் ஒவ்வொருவரின் ஆசை. யாரை கெஞ்சியும் இறைஞ்சியும் வாழும் வாழ்க்கை நமக்கு பொதுவிலேயே உவப்பானதாக இருப்பதில்லை. காலம் தான் அதை தீர்மானிக்கிறது, அதே காலம் தான் அதிலிருந்து விடுபடவும் வழி வகுக்கிறது.

#metoo ஹாஸ்டக் போடாத பெண்கள் தான் இங்கே கோடான கோடி, அந்த கோடான கோடி பெண்கள் சொல்லத்துணியவே மாட்டார்கள் என்பது சம்மந்தப்பட்ட ஆண்களுக்கு சர்வ நிச்சயமாக தெரியும், அந்த அவர்கள் மேலுள்ள பயத்தினால் மாத்திரமல்ல, அதை அந்த பெண் சொல்லத்துணிந்தால் அவனை விட அவளுக்கு தான் அதில் சிக்கல் என்பது ஆணுக்கு தீர்க்கமாய் தெரியும், அந்த அசாத்திய நம்பிக்கையில் தான் இன்று பல பேர் உலா வருகிறார்கள். என்ன தர்க்கம் பேசினாலும் ஆண் / பெண் பார்வை இங்கே முழுமையாக மாற இன்னும் எத்தனை ஆண்டுகள் பிடிக்கும் என்பதனை உறுதியாய் சொல்வதற்கில்லை.

சமகாலத்தில் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்த கலைஞரையும் ஜெயலலிதாவையும் எடுத்துக்கொள்ளுங்கள், பெண் என்பதை victim கார்டாக வைத்து விளையாடியவர் ஜெயா என்கிற குற்றசாட்டு உண்டு. ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் கதைக்கப்படும் ஏராளமான சம்பவங்களை இங்கே பல பேர் நக்கலாக குறிப்பிடுவதும் உண்டு. ஒரு வாதத்துக்கு அதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டாலும், தனது தனிப்பட்ட வாழ்க்கையை மறைத்து தன்னை வேறு ஒருவராக முன்னிறுத்தி கொள்ள ஜெயாவை நிர்பந்திப்பது எது? கலைஞருக்கு மூன்று மனைவிகள், அவரின் ஒரு நாள் schedule ல் கோபாலபுரத்தில் எப்போது இருப்பர், சிஐடி காலனியில் எப்போது இருப்பர், சட்டமன்றத்துக்கு எத்தனை மணிக்கு போவார் என்பது ஊரறிந்த விஷயம்.

உள்ளது உள்ளபடி  மனசாட்சியோடு ஒரு பெண் முதலமைச்சர் காலையில் ஒரு கணவன் வீட்டிலும் மாலையில் ஒரு கணவன் வீட்டிலும் இருப்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அது சாத்தியமாகும் சூழல் நம் சமூகத்தில் இருக்கிறதா?

ஆணுக்கு சமூகம் கொடுக்கும் transparency அவனை ஒளிவுமறைவற்றவனாகவும், பெண்ணுக்கு அதுவே நெருக்கடியாகவும் இருப்பதை எல்லாம் கணக்கில் கொண்டால் இதை நம்மால் புரிந்துக் கொள்ள முடியும். இதையெல்லாம் மீறி "எவனிடம் பணிந்தும் நானில்லை" என்பது தான் சமத்துவத்தின் இலக்கு, அது இன்னும் சாத்தியப்படாமல் ஒரே தராசில் வைத்து நீதி சொல்வதென்பது அயோக்கியத்தனம்.

யூதர்களுக்கு எதிராக கடுமையான பிரச்சாரங்கள் ஜெர்மனியில் உருவாகி கொண்டிருந்த காலத்தில் ஜெர்மனி பள்ளிக்கூடங்களில் ஜெர்மன் பெண் பெண்களுக்கு ஒரு வாக்கியம் போதிக்கப்பட்டது, "பெண்களே, நீங்களெல்லாம் ஒரு ஜெர்மானியனை சுமக்கப்போகிறீர்கள்" என்பது அந்த முழக்கம்.

உலகத்தில் எத்தனை பெரிய ராஜ்ஜியம்  / இனம்  / மொழி என்று எதை காப்பாற்றும் சமூகத்திலும் பாசிசத்தின் முன் பெண்கள் வாரிசை சுமக்கப்போகும் ஒரு உறுப்பாக தான் பார்க்கப்படுகிறார்கள், தனது சொந்த சமூகத்தாலேயே அளவில்லாத கொடுமைகளை அனுபவித்தவர்கள் பார்ப்பனிய வீட்டுப்     பெண்கள்.

ஜெயமோகனின் வெள்ளையானை நாவலில் தலித்தான காத்தவராயனிடம் பிரிட்டிஷ் அதிகாரி ஒரு பார்ப்பன தெருவில் நின்று கேட்பான் "இந்த வீட்டிலிருந்து பெண்கள் வெளியே வர மாட்டார்களா?"

அதற்கு காத்தவராயன் சொல்வான் "இல்ல துரை, அவர்களும் எங்களை போலத்தான்"

எந்த சித்தாந்தத்தின் படி சமூகம் அமைந்தாலும் அங்கே பெண்களுக்கு எதிரான மனநிலை முழுமையாக ஒழியுமா என ஊர்ஜிதமாக சொல்வதற்கில்லை, அதனால் தான் ஆண் / பெண் சமத்துவம் என்பது சித்தாந்தங்களுக்கு அப்பாற்ப்பட்ட அடிப்படை என்று சொல்கிறேன்.

அதன் விளிம்பில் இருந்து ஒரு பெண் தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்களை சொல்வதற்கான சூழல் ஏற்பட்டால், நாடு முழுக்க ஒரு அலை உருவானால், அதை தொடக்கமாக கொண்டு இங்கே பேசத்துணியாத பெண்கள் பேசுவதற்கும், இப்படி விவாதிப்பதனால் அச்சத்தை காரணமாக கொண்டாவது திருந்தப் போகும் ஆதிக்கவாதிகளுக்கு பாடமாக இருக்க இந்த உரையாடல்கள் அவசியம்.

அதை முளையிலேயே நம் சாதக  / பாதக காரணங்களை கொண்டு நீருக்கடியில் அழுத்துவதின் மூலம், அல்லது ஊரறிந்த ஒரு பொறுக்கிக்கு வக்காலத்து வாங்குவதின் மூலம், அல்லது இதை ஏன் பேசுவானேன் என்று கடப்பதின் மூலம் நாம் பெறப்போவது ஏதுமில்லை.

காரணம் எதுவாயினும், இந்த ஹாஸ்ட்டாக்கில் நக்கலடித்து கொண்டிருப்பவர்கள், இதை நகைப்பவர்கள் மனநோயாளிகள். பேசத்துணிந்தவர் பேசினால், இங்கே இது தான் நிலை, இது வரலாற்றில் புதிதாய் நடப்பவையல்ல..

https://m.facebook.com/story.php?story_fbid=1484305105005214&id=100002772164687

No comments:

Post a Comment