Ganesh babu
2018-10-16
ஓ இருக்கே!
வெவ்வேறு காலக்கட்டத்தில் தங்களைப் பற்றி தாங்களே செய்துக்கொண்ட சுயமதிப்பீடுகளின் அடிப்படையில் அவர்கள் இருவரும் சொன்ன கருத்துக்களோடு நான் முரண்படுறேன்.
ஒருமுறை தந்தை பெரியார் பேசும்போது, "இன்னிக்கு என் மனசுக்கு முற்போக்குனு தோன்றுவதை நான் பேசுறேன். இன்னும் 100ஆண்டுகள் கழிச்சு ஒரு இளைஞன், 'ரொம்ப வருஷம் முன்னாடி ஈ.வே.ராமசாமினு ஒரு காட்டுமிராண்டி வாழ்ந்திருக்கான். நிறைய பிற்போக்குத்தனமா உளறியிருக்கான்' என்று என்னைப் பத்தி பேசுமளவுக்கு சமூகம் முன்னேறலாம். அப்படி முன்னேறிவிட்டால் அதைவிட எனக்கு அதிக மகிழ்ச்சி வேறொன்றும் இல்லை" என்றார்.
இன்னும் நூறு அல்ல, ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தந்தை பெரியாரைப் போன்ற ஒரு முற்போக்கு சிந்தனையாளரை மனித சமூகம் பார்க்கப்போவதில்லை என்று நான் தீர்க்கமாக நம்புகிறேன்.
அப்படி ஒருவேளை பெரியார் ஆசைப்பட்டதைப் போல மனித சமூகம் முற்போக்குச் சிந்தனையில் பெரியாரையே மிஞ்சி வளர்ந்தாலும், அப்போது வாழும் பகுத்தறிவுள்ள ஒரு இளைஞன் ஒருப்போதும் பெரியாரை காட்டுமிராண்டி என்றுச் சொல்லமாட்டான்.
மாறாக "பெரியார் என்றொரு மாமனிதர் மட்டும் இந்த மண்ணில் பிறக்காமல் போயிருந்தால் நாமெல்லாம் இன்னும் சாதிவெறியர்களாகவும், மதவெறியர்களாகவும், பார்ப்பன அடிமைகளாகவும் காட்டுமிராண்டிகளைவிடக் கொடூரமாக வாழ்ந்துக்கொண்டிருப்போம். நல்வாய்ப்பாக பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தந்தை பிறந்துவிட்டதால், தனயன்கள் நாம் பிழைத்துக்கொண்டோம்!" என்று நன்றியுணர்ச்சியோடு தந்தையை நினைவுக்கூறுவான்.
அடுத்து தலைவர் கலைஞரின் சுயமதிப்பீட்டின் அடிப்படையிலான கருத்து. 1995-1996ஆம் ஆண்டு அவருக்குப் பிரதமர் ஆகும் வாய்ப்பு கிடைத்தப்போது, அதை அவர் மறுக்கிறார். சரி, அது அவரது விருப்பம்/வியூகம். ஆனால் அதற்கு அவர் சொன்னக் காரணத்தை என்னால் இன்னும் ஏற்றுக்கொள்ளமுடியாது. "என் உயரம் எனக்குத் தெரியும்" என்று எதை நினைத்துச் சொன்னாரோ எனக்குத் தெரியாது. அது ஒருவேளை அவரது பெருந்தன்மையாகக்கூட இருக்கலாம். ஆனால் தன் தலைவரின் உயரம் அவருக்கே தெரியவில்லை என்பதுதான் உண்மை.
சமூகநீதிக்காகவும், பெண்விடுதலைக்காகவும், மாநில சுயாட்சிக்காகவும் வேறெந்தப் பிரதமரையும்விட, தேசியத் தலைவரையும்விட மிகமிகக் கூடுதலாக சாதித்துக்காட்டியவர் என் தலைவர் கலைஞர். அவர் கால் தூசிக்குக்கூட ஈடாகாத வெறும்பயல்களால் நிரம்பியுள்ள கூடாரம்தான் இந்திய தேசிய அரசியல். அதனால் "என் உயரம் எனக்குத் தெரியும்" என்ற கலைஞரின் வரிகளோடு நான் முற்றிலும் முரண்படுகிறேன்.
மற்றபடி தந்தையோடும், தலைவரோடும் முரண்படுமளவுக்கு அடியேனுக்கு அறிவுமில்லை, அனுபவமுமில்லை. அப்படி ஏதாவது ஒன்றிரண்டு சிறிய மாற்றுக்கருத்துகள் இருந்தாலும் அவற்றை பொதுவில் எழுதவேண்டியத் அவசியமுமில்லை.
-Ganesh Babu
கேட்க: askganesh.trickychat.com
No comments:
Post a Comment