Thursday, October 4, 2018

நிழல் வீரர்கள் - புத்தக விமர்சனம்

பாவெல் சக்தி
2018-10-02

எக்சலன்சி ஒரு நாளில் எத்தனை முறை சிறுநீர் குடிப்பீர்கள்? காலை எழுந்தவுடன் வரும் முதல் சிறுநீரா? அல்லது எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாமா? பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் ஜியா உல் ஹக் மற்றும் இந்திய பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல் இது...

ஒருமுறை பிரதமர் மொரார்ஜி தேசாய் பாரிஸூக்கு சென்றிருக்கும்போது சிறுநீரை குடிக்க எந்த டம்ளரை பயன்படுத்தினார் என தெரியாததால் அங்குள்ள இந்திய தூதரின் மனைவி வீட்டிலுள்ள எல்லா டம்ளர்களையும் தூர எரிந்து விடுகிறார்.

இப்படிபட்ட சுவாரஸ்யமான தகவல்கள்தான் நூலில் இருக்கும் என நீங்கள் நினைத்தால் அதை உடனடியாக மாற்றிவிடுங்கள். இப்படி மொரார்ஜிக்கு பிடித்த விசயமாக பேசித்தான் பாகிஸ்தானில் அணு ஆயுத தயாரிப்பு குறித்து இந்தியா அறிந்து வைத்திருப்பதை நரசிம்மராவிடம் இருந்து ஜியா உல் ஹக் கறந்த கதை பின்னாடியே வரும்.

பி.ராமன் 1968இல் ரா (RAW Research & analysis wing)  துவங்கப்பட்ட காலம் முதல் 1994 வரை பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். நூலை அவர் ஒப்புதல் வாக்குமூலமாக எல்லாம் எழுதவில்லை. அரசின் எல்லா அடக்குமுறைகளையும் நியாயப்படுத்தும் விதத்தில்தான் எழுதியுள்ளார்.

ஆனால் நமக்கு தேவை அதுவல்லவே. ஒரு உளவு அமைப்பு எந்தவிதத்திலெல்லாம் செயல்படுகிறது? அதன் பலவீனங்கள் என்ன? உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அது பின்பற்றும் நடைமுறைகள் என்ன? போராடும் அமைப்புகளை அது எவ்வாறு கட்டுப்படுத்துகிறது? கண்காணிக்கிறது? உடைக்கிறது? உருவாக்குகிறது? அல்லது உருவாக அனுமதிக்கிறது என்ற விவரங்கள்தான். அந்தவகையில் இந்த நூல் மிக முக்கியமானது என்றே நினைக்கிறேன்.

நூலில் தி இந்து ஆங்கில நாளிதழ் பற்றி ஒரு செய்தி வருகிறது. அதாவது நூலாசிரியரை ஒரு ரா அதிகாரியாக அல்லாமல் நிருபராக பாரிஸ் செல்ல திட்டம் வகுக்கப்படுகிறது. அதற்கு இந்துவிடம் கோரிக்கை வைக்கப்படுகிறது. இந்துவும் அதை ஒப்புக்கொண்டு அவர் பாரிஸ் செல்வதற்கு, அங்கு அவரின் செலவுகளுக்கு எல்லாம் தனது சொந்த செலவில் ஏற்பாடு செய்கிறது. மேற்படி செலவுகளுக்கு ஆகும் தொகையை ரா பின்னர் இந்துவுக்கு வழங்கும்.

பத்திரிக்கைகள் நேர்மையானவை, அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிகாட்டுபவை என நாம் நம்புவது எவ்வளவு கேலிக்குரியது என இதை படிக்கும்போது நமக்கு விளங்குகிறது அல்லவா? இதேப்போல் ராவை நம்பி அல்லது ராவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பத்திரிக்கைகள் குறித்தும் ஆங்காங்கே சில தகவல்கள் சொல்லப்படுகிறது. 

சி‌ஐ‌ஏ பற்றி நூலில் நிறைய இடங்களில் வருகிறது. இந்தியாவில் ரா அதிகாரி பற்றி ராவுக்கு தெரிந்ததைவிட சி‌ஐ‌ஏவுக்கு நன்றாக தெரியும் என்கிறார். ரா அலுவலகத்திலே ஒருமுறை வெடிக்காத குண்டு ஒன்று வைக்கப்படுகிறது. அது சி‌ஐ‌ஏவின் வேலை என்று தெரிந்தாலும் அது யார் என்று கண்டுபிடிக்க முடிவதில்லை.

இஸ்ரேல் போலவே சி‌ஐ‌ஏவும் இந்திய உளவுதுறைக்கு பயிற்சி கொடுக்கிறது. ராவில் பணியாற்றி சி‌ஐ‌ஏவுக்கு வேலை பார்த்த ஒருவர் பற்றிய தகவலும் பிரத்யேகமாக நூலில் குறிப்பிடப்படுகிறது. பின்னர் அவரை காணவில்லையே என்று தேடும்போதுதான் சி‌ஐ‌ஏ உதவியுடன் அவர் அமெரிக்காவில் செட்டிலும் ஆகிவிட்ட விபரம் ராவுக்கு தெரிய வருகிறது.

கிட்டதட்ட 10000 பேருக்கு மேல் ராவில் வேலை செய்கின்றனர். ஆட்சியாளர்களும் ரா’வை மட்டுமே தங்கள் சுயநலன்களுக்கு பயன்படுத்துகின்றனர்.. முழுமையாக நம்புகின்றனர். அதனால்தான் ராவை நாடாளுமன்ற கண்காணிப்புக்கு உட்படுத்துவதை ரா அதிகரிகளைவிட அரசியல்வாதிகள் அதிகம் பயப்படுகின்றனர். இந்தியா தலைமை கணக்காளரின் சோதனைக்கு உட்படாத ராவின் மது, மாது உட்பட மற்றும் இன்னபிற சப்ளைககளின் செலவு பட்டியல் கோடிகளை தொடும்.

ஒவ்வொரு ஊழலின்போது அதை எப்படியாவது மறைத்து ஆட்சியாளர்களை காப்பாற்றுவதும், பின்னர் ஆட்சி மாறும்போது தான் காப்பாற்றியவர்களையே போட்டு கொடுக்கும் பணி மட்டும்தான் ரா தெளிவாக செய்கிறது என நூலைப் படித்தாலே தெளிவாக விளங்கும்.

வெளிநாட்டில் பணியாற்றிய ரா அதிகாரிகள் மெர்சிடிஸ் பென்ஸ் காரில் வலம் வந்தனராம். ஒரு கட்டத்தில் raw relative & associates wing என்று கூறும் அளவிற்கு தங்களது உறவினர்களை ராவுக்கும் பல உயர் அதிகாரிகள் கொண்டு வருகின்றனர். இந்திரா காலத்தில் எண்ணற்ற டி‌விக்களை ரா அதிகாரிகள் வெளிநாட்டில் இருந்து வாங்கினார்களாம். இதெல்லாம் ராவின் பலவீனங்கள்.

இதுபோன்ற தகவல்கள் மூலம் இந்தியாவில் ஊழல் புரையோடி போயிருக்கும் துறையாக ரா இருப்பது தெளிவாக தெரிகிறது. இந்திரா, ராஜீவ் படுகொலைகள், மும்பை குண்டுவெடிப்பு என  ரா கோட்டை விட்ட பல கதைகளும் நூலில் விவரிக்கப்படுகிறது. இவர்களை வைத்துதான் இந்திய வெளியுறவுத்துறை கொள்கைகளும் தீர்மானிக்கப்படுகிறது.

நூலில் பாபர் மசூதி இடிப்பு சம்பவம் பற்றி விவரிக்கப்படுகிறது. பாபர் மசூதி இடிப்புக்கு முன் அத்வானி நரசிம்மராவை சந்தித்து பலமுறை பேசுகிறார். அது டேப்பில் பதிவும் செய்யப்படுகிறது. அது வெளிவருமேயானால் பல உண்மை தகவல்கள் வெளிவரும் என்கிறார். அதேபோல பாபர் மசூதி இடிப்பே இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு காரணம் என்றும், அதற்குமுன் ஜம்முவை தவிர இந்தியாவில் எங்குமே இஸ்லாமிய தீவிரவாதம் இருந்ததில்லை என்றும் சொல்கிறார்.

போகிறபோக்கில் நூலில் இந்திய உளவுத்துறை பணிகளில் இஸ்லாமியர்களை அனுமதிக்ககூடாது என்ற சர்தார் வல்லபாய் படேலின் தீர்மானமும், அது இந்திரா ஆட்சி காலத்தில் மாற்றப்பட்ட தகவலும் சொல்லப்படுகிறது.

இன்னொரு முக்கிய தகவல் வி.பி.சிங் ஆட்சி காலத்தில் ஜம்முவில் ஆர்‌எஸ்‌எஸ் உறுப்பினர்களுக்கு ரா ஆயுத பயிற்சி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை அத்வானியால் வைக்கப்படுகிறது. அதனை செயல்படுத்தும் விதமாக ரா அதிகாரிகள் மற்றும் ஆர்‌எஸ்‌எஸ்‌ சந்திப்பு இரண்டு முறை உயர்தர ஹோட்டல்களில் நடக்கிறது. பின்னர் அத்வானியின் ராத யாத்திரையால் வி.பி.சிங்கிற்கு ஏற்பட்ட கோபத்தினால் அது நிறுத்தப்படுகிறது.

சங் பரிவார அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு பல சதி வேலைகளில் உள்நாட்டு உளவு அமைப்பான ஐ‌பி செயல்பட்டதை கார்கரேயை கொன்றது யார்? என்ற நூலில் எஸ்.எம்.முஷ்ரிஃப் தோலுரிருத்து காட்டியுள்ளதை இங்கு பொருத்திப் பாருங்கள்.

இது மட்டுமல்ல. காஷ்மீர் போராட்டத்திற்கு பதிலடியாக பாகிஸ்தானில் நடக்கும் பஞ்சாப்-சிந்து தேசிய இன போராட்டதிரற்கு சகல வசதிகளையும் ரா அங்கு செய்து கொடுக்கிறது. அங்கு சில இடங்களில் குண்டுவெடிப்பிலும் ராவின் பங்கு இருக்கிறது என பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது.

அதேபோல வடகிழக்கு, ஈழம் என போராளிக்குழுக்களை பிரித்து ரா செய்த, செய்து கொண்டிருக்கும்  அட்டூழியம் சொல்லில் அடங்காது. இந்தியாவிலும் அப்படித்தான்.

ராஜிவ் காலத்தில் உளவுத்துறை பெருமளவில் கணினி மயமாக்கப்பட்ட பிறகு இன்னும் அதிதீவிரமாக சி‌ஐ‌ஏ, எஃப்‌.பி.‌ஐ, மொசாட் என பல நாட்டு உளவு நிறுவனங்களோடு கூட்டுசேர்ந்து பயிற்சி மேற்கொள்வது, போராளி குழுக்களை உடைப்பது,  ஒட்டுக்கேட்பது, கம்யூனிச எதிர்ப்பு பிரசாரத்திற்காக பல வழிகளில் செலவு செய்வது என பல்வேறு கண்காணிப்பு வேலைகளில் சட்டவிரோதமாக ராவும், ஐபியும் ஈடுபடுகிறது.

1983-களில் தமிழகத்தில் ஈழப்பிரச்சனை கொழுந்துவிட்டு எரிந்தபோது அதை ராவும், ஐ‌பியும் சேர்ந்து திறமையாக கையாண்டது. எம்ஜியாருக்கு பக்கபலம் தமிழகத்தில் உளவுத்துறை அதிகாரி மோகன்தாஸ். விடுதலை புலிகளுக்கு பழ நெடுமாறன். ஈராஸ் அமைப்புக்கு பெரியார்தசன். டெலோவுக்கு சந்திரகாசன் என எல்லாவுமே ரா கண்காணிப்பில் தெளிவாக நடந்தன.

1983-ம் ஆண்டு ராவில் பணியாற்றிய சந்திரசேகரின் மூலம்தான் பிரபாகரன் தமிழகம் வரவழைக்கப்பட்டு நூறு நூறு பேராக இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு பின்னர் டெல்லி வழியாக டேராடூன் சென்று அங்கு வைத்து பயிற்சியளிக்கபட்டது. இது ஏற்கனவே பயிற்சி எடுத்து கொண்டிருந்த போராளி குழுக்களுக்கு தெரியாது. இப்படி பிரித்தாளும் சூழ்ச்சிகளை தெளிவாக செய்தனர்.

பின்னர் விடுதலைப் புலிகள் இந்தியாவுக்கு எதிராக மாறியபின் அவர்களுக்கு எதிராக சில குழுக்களை உருவாக்கியது. இலங்கையிலும் இதேபோல்தான் “வங்கம் தந்த பாடம்” என்ற கட்டுரையை பிளாட் அமைப்பு வெளியிட்டபோது ரா அவர்களை எச்சரித்தது மட்டுமில்லாமல் அவர்கள் அமைப்பை சீர்குழைக்கவும் ஆரம்பித்தது.  ஈபிஆர்எல்எஃப், டெலோ அமைப்புகளை உருவாக்கி அங்கும் இதே வேலையை செய்தது.

இந்திய ராணுவம், இந்திய உளவுத்துறை இரண்டும் வேறுவேறல்ல. நாம் தொடர்ச்சியாக சொல்லி வருவதுபோல தமிழகத்திலும் எப்பொழுதெல்லாம் தமிழ்தேசிய உணர்வு மேலோங்குகிறதோ அப்போதெல்லாம் புதிது புதிதாக தமிழ்தேசிய இயக்கங்கள் உளவுத்துறைகளால் உருவாக்கப்பட்டு அல்லது அனுமதிக்கப்பட்டு  அந்த எழுச்சி காயடிக்கப்படும்.

சிபா ஆதித்தனார், மாபொ சிவஞானம், பழ நெடுமாறன், மணியரசன் ஆரம்பித்த இயக்கங்கள் முதற்கொண்டு 2009-இல் எழுந்த ஈழ எழுச்சியின்போது உருவாகிய நாம் தமிழர், மே17, இளம்தமிழகம் வரை இதை நீங்கள் கவனித்தால் கொஞ்சம் புரிந்து கொள்ளலாம்.

அதேபோல் தலித்திய, பெண்ணிய அமைப்புக்கள், என்.ஜீ.வோக்கள், மனித உரிமை குழுக்கள், பின்நவீனத்துவ, அடையாள அரசியல்கள் போன்றவற்றையும் இதனோடு தொடர்புபடுத்தி இந்தியா முழுவதும் உளவுத்துறை செய்துவரும் வேலைகளை புரிந்து கொண்டோமேயானால் உண்மையில் மக்களுக்கான கட்சியை நாம் கட்டலாம்.

அந்த வகையில் இந்த நூல் நமது கையில் இருக்க வேண்டிய ஆளும் வர்க்கத்தின் கையேடு. வாய்ப்பிருந்தால் படியுங்கள் தோழர்களே..

No comments:

Post a Comment