Saturday, October 27, 2018

மொளவாசெலவு - Kathir RS

Kathir RS
27/10/18

#மொளவாசெலவு

நம்மாழ்வார் பற்றிய ஒரு விவாதத்தில்
நான் பகிர்ந்து கொண்ட சில கருத்துகள்..(மறுபகிர்வு சில திருத்தங்கள் பிற்சேர்க்கைகளுடன்)

---

பசுமைப்புரட்சி நடந்தபோது, அரசாங்கம் விவசாயக்கடனை வாரி வாரி வழங்கியது. மானியத்தில் உரங்கள், பூச்சி மருந்துகளை வழங்கியது.

குறுகிய காலப்பயிர்கள், கலப்பினப் பயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. வேளாண் ஆராய்ச்சிகள் முடுக்கிவிடப்பட்டன. விவசாயத்தை ஊக்குவிக்க, உற்பத்தியை அதிகரிக்க தொடர் பரப்புரைகள் நடத்தப்பட்டது.

விவசாய புரட்சிக்காகவும், வளர்ச்சிக்காகவும் அரசாங்கம் உண்மையிலேயே 'தீயா' வேலை செய்தது.

ஆனால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் வாராக்கடனை வசூலிக்க, எல்லா மலினமான வேலைகளிலும் இறங்கின வங்கிகள். ஜப்தி என்ற பெயரில் பல குடும்பங்களை காவு வாங்கின இவ்வங்கிகள்.

ஆனால் ஒருவழியாக உணவுப் பற்றாக்குறை முடிவுக்கு வந்தது.

---

இந்த பசுமைப் புரட்சிக்கு முன்பும் பின்பும் உணவு தானியங்களை சேமிக்கவும், நாட்டின் எல்லா மூலைகளுக்கும் கொண்டு செல்லவும் தேவையான "எந்த விரிவான கட்டமைப்பும்" இந்திய அரசிடமில்லை. கடந்த காலங்களில் ஏற்பட்ட பஞ்சத்திற்கு இதைக் காரணமாக சிலர் சொல்வார்கள்.

ஆனால், உண்மையில் "நம்மிடம் போதுமான உற்பத்தியில்" என்பதுதான் முக்கியமான காரணமாகும். நமது நாட்டில் "பாரம்பரிய நெல் சாகுபடி" என்பது விவசாயிகளின் உழைப்பை ஆண்டுக்கு 9 மாதங்கள் உறிஞ்சிக் கூடியவையாக இருந்தன.

அத்துடன் விவசாயிகள் என்போர் நில உரிமையாளர்களாக இருக்கவில்லை. வெறும் கூலிகளாகவே இருந்தனர். நிலங்கள் பண்ணையார்களிடம் இருந்தன.

9 மாதங்கள் நிலத்தில் பாடுபட்டாலும் விளைச்சல் என்பது கடவுள் தயவில்தான் நடந்தது. வறட்சி, வெள்ளம், பூச்சிகள் - என எல்லா சோதனைகளையும் எதிர் கொண்டுதான் வேளாண்மை செய்தனர்.

அதில் கிடைக்கும் நெல் பண்ணையாரின் தானியக் கிடங்குக்கே செல்லும். கூலியாக கிடைக்கும் சொற்ப நெல்லை அவித்து அரிசியாக்கி அதிகபட்சம் அவர்கள் ஒரு மாதம் சாப்பிட்டாலே பெரிது.

---

அக்காலத்தில், அதிகமில்லை ஒரு 30-40 ஆண்டுகளுக்கு முன், ஓர் உழைக்கும் விவசாயின் வீட்டில் அம்மி சத்தம் கேட்கவே இரவு மணி 9 ஆகிவிடும். அதுதான் அவர்கள் சமையலை தொடங்கும் நேரம்.

சமைத்து முடிக்குமுன் தூங்கிவிடும் பிள்ளைகளை எழுப்பிதான் சோறூட்டுவார்கள்.

காலை உணவும், மதிய உணவும் பெரும்பாலும் முதல் நாள் இரவு சமைத்த உணவாகவே இருக்கும். இன்னும் கூட இந்த நிலை சில குடும்பங்களில் இருக்கவே செய்கிறது.

ஆனால், அக்காலத்தில் எல்லா வீடுகளிலும் இதுதான் நிலை.

---

'மொளவா செலவு' என்று சொல்லப்படும் 'குழம்புக்கு தேவையான மளிகை' எல்லா கடைகளில் பிரசித்தி பெற்றது.

ஒரு மஞ்சள் துண்டு, இரண்டு காய்ந்த மிளகாய், ஒரு பிடி மல்லி, கொஞ்சம் சோம்பு கொஞ்சம் சீரகம் - ஆகியன ஒரு நாள் சமையலுக்குத் தேவையான மளிகையாகும்.

இது விலை 4அணா 8அணா. பிற்காலத்தில் 1ரூபாய் 2ரூபாய் வரை விற்கப்பட்டது. தற்போது இந்த பழக்கமும், சொல்லும் வழக்கொழிந்துவிட்டன.

எனக்கு தெரிந்து கிராமங்களில் சின்ன சின்ன கடைகளில் "ரெண்ரூவாய்க்கு மொளவா செலவு, ரெண்டு தேங்கா கீத்து, காருவா புளி காருவா கடுகு, அம்பது காசுக்கு எண்ண, ஒரு தாஜ்மஹால் பீடிகட்டு" - எனச் சொல்லி இரவு 8 மணி இருட்டில் வந்து அன்றைய இரவு உணவுக்கான ஜாமான்களை வாங்கி சென்ற 8 - 9 வயது பிள்ளைளைகளும் தாய்மார்களும் இருந்தார்கள்.

---

நெல்லுச்சோறு என்ற சொல்லும் அப்படித்தான். ஓர் ஏழையின் வீட்டில் நெல்லுச்சோறு என்பது பண்டிகைதின உணவு போன்றது. அதுவும் சுடு சோறு என்பது மிகப்பெரிய விருந்தாகும்.

இப்படிப்பட்ட காலச்சூழலைத்தான் பசுமைப் புரட்சி வேரோடும் வேரடி மண்ணோடும் புரட்டிப்போட்டது.

நம்மாழ்வாருக்கு இதை பழித்து எதிர்த்து தனது ஆளுமையை நிறுவவேண்டிய தேவை என்ன என்று தெரியவில்லை. பசுமை புரட்சியால் விளைந்த நன்மைகளை அவர் மருந்துக்கு கூட பட்டியலிட்டதில்லை.

அவரும் சரி, அவரது ஞானக் குழந்தைகளும் சரி, தற்காலத்தில் நாம் அடைந்திருக்கும்

"மாபெரும் சமூக பொருளாதார வளர்ச்சியையும், சாதாரண மனிதர்கள் வாழ்வில் பெற்ற முன்னேற்றத்தையும்" பகடி பேசி,

"இயற்கை விவசாயம், இயற்கை மருத்துவம், மண் மலடு, விதை பாதுகாப்பு, பன்னாட்டு சதி, உலகமயம், கார்ப்ரேட் கொள்ளை, உணவில் விஷம்" இப்படி பல டெர்மினாலஜிகளை பயன்படுத்தி

"எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்" என்ற குற்றஉணர்வை உருவாக்கி, ஒப்பாரி வைத்து தங்களது வியாபாரத்தை பெருக்கி வருகிறார்கள்.

மக்களும் சுய பரிதாபத்தில் அறிவற்று இந்த முட்டாள்தனங்களை பின்பற்றுகிறார்கள்.

என்றைக்கு இவர்களுக்கு உண்மை உரைக்குமோ அன்று மொத்தமாக ஏமாந்து போயிருப்பார்கள்.

No comments:

Post a Comment