பொறுப்புதுறப்பு:
* இது கட்டுரையாளரின் சொந்த கருத்து.
* உங்களுக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருந்தால் கீழேயுள்ள கட்டுரையாளரின் பேஸ்புக் லிங்கில் விவாதிக்கலாம். ஏற்கனவே பலர் விவாதித்து கொண்டிருக்கின்றார்கள். நல்லதொரு உரையாடல்.
---
RS Prabu
2018-10-02
இளைஞர்கள் விவசாயம் செய்ய முன்வருவதில்லை, விளைநிலங்கள் ரியல் எஸ்டேட் மனைகளாக்கப்பட்டு வருகின்றன என்ற இரண்டு பொத்தாம்பொதுவான வாதங்கள் அனைத்து உரையாடல்களிலும், கட்டுரைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. இவ்விரண்டு கூற்றுகளுமே சமகாலத்தின் மிகப்பெரிய பொய் என்பதையும் அதிலிருக்கும் நுண்ணரசியலையும் கவனமாகப் பார்க்க வேண்டியிருக்கிறது.
தமிழக சூழலில் மாவட்ட வாரியாக 90% விவசாய நிலங்களை வைத்திருப்பது அந்தந்த பகுதிகளின் ஆதிக்க சாதியினர் மட்டுமே. இன்று வீட்டுக்கு ஒரு கணினி நிபுணரை தமிழகம் உருவாக்கி சென்னை, ஐதராபாத், பெங்களூரு மட்டுமல்லாது அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது. வேலையே கிடைக்கவில்லை என்றாலும் மூன்று நான்கு ஆண்டுகள் சென்னை, கோவை போன்ற நகரங்களில் அறை எடுத்து வேலை தேடும் கணிசமான இளைஞர்கள் உண்டு. விவசாய நிலங்களும் பெரும்பாலும் இவர்களது பெற்றோர்களிடம்தான் இருக்கிறது.
ஆண்ட பரம்பரையினர் தங்களது வாரிசுகள் விவசாயம் செய்வதை விரும்புவதில்லை. தப்பித்தவறி ஊருக்குள் விவசாயம் செய்யும் இளைஞர்கள், 35 வயதானாலும் திருமணம் செய்ய பெண் கிடைக்கவில்லை என்று உட்கார்ந்திருப்பதே சாட்சி. சரி, அப்ப என்னதான் பிரச்சினை ஏன் இந்தக்கால இளைஞர்கள் வேளாண் தொழிலில் ஈடுபட முன்வருவதில்லை என்ற குற்றச்சாட்டு பரப்பப்பட்டு வருகிறது?
காலங்காலமாக நிலவுடைமைச் சாதிகளுக்கு பண்ணை வேலைகள் செய்துவந்த தலித் மக்கள் விவசாயக் கூலி வேலைகளை விட்டு வேறு தொழிலுக்கு சென்றதுதான் பிரச்சினை. நேரடியாகச் சொல்லாமல் சுற்றிவளைத்து நாடு எதிர்நோக்கும் மாபெரும் அச்சுறுத்தல் என்று பில்டப் கொடுக்கப்பட்டு வருவது இதைத்தான். உழவு செய்ய, A2 பால் தரும் மாடுகளைப் பராமரிக்க, விதைக்க, அறுக்க, கதிரடிக்க, மரமேற, வண்டிமாடு ஓட்ட மலிவான கூலிக்கு வந்தவர்கள் இப்போது வருவதில்லை என்பதுதான் இன்றைய இளைஞர்கள் விவசாயத்துக்கு வருவதில்லை என்று பாலிஷான மொழிநடையில் சொல்லப்படுகிறது.
கல்வி வாய்ப்புகள், அரசாங்க நலத்திட்டங்கள், இட ஒதுக்கீடுகள் தமிழகம் போன்ற மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டாலும் வட மாநிலங்களிலும் சேர்த்து கிடைத்த ஒரு வாய்ப்பு Mobilityயால் கிடைக்கப்பெற்றதே. பஜாஜ், ஹீரோ ஹோண்டா, டிவிஎஸ் போன்ற நிறுவனங்களின் பங்கு இதில் அளப்பறியது. 400 ரூபாய்க்கு விவசாய கூலி வேலை செய்வதைவிட 30 கிலோமீட்டர் சென்று 700 ரூபாய்க்கு கொத்தனார் வேலை செய்வதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தது இந்த வாகனங்கள்தான்.
அபார்ட்மென்ட்டுகளில் வீட்டு வேலைக்கு வரும் பெண்கள் ஸ்கூட்டி, சூப்பர் எக்செல்களில் வருவதுதான் அங்குள்ள உயர் நடுத்தர வருவாய் பிரிவு இல்லத்தரசிகளின் கவலையாக இருக்கிறது. வேலைக்காரப் பெண்கள் ஸ்கூட்டி வைத்திருப்பதாலேயே வெஸ்பா வாங்கிய வீடுகள் பல உண்டு (பயாஜியோ கம்பெனிக்கே இப்படி ஒரு மார்க்கெட் செக்மெண்ட்டேஷன் இருப்பது வண்டி அறிமுகப்படுத்தும்வரை தெரிந்திருக்க வாய்ப்பில்லை). சைக்கிளில் மட்டுமே - அதுவும் பண்ணையார் எதிரில் வரும்போது இறங்கி நின்று - செல்ல விதிக்கப்பட்ட தலித் மக்கள் பைக்குகளில் ஓவர்டேக் செய்து செல்கையில் 'நேத்து நம்மளகண்டு வேட்டிய இறக்குனதெல்லாம் இன்னிக்கு பைக்ல ஹார்ன் அடிச்சிக்கிட்டு போவுது' என்பதன் நவநாகரீக வடிவம்தான் 'இந்தக்கால இளைஞர்கள் விவசாயத்துக்கு வருவதில்லை' என்பதாகும்.
நிலம் வைத்திருக்கும் சாதியினரே அந்தந்த பிராந்திய விளைபொருட்களின் புரோக்கர், கமிசன் மண்டி, பார்வர்டிங் ஏஜென்ட், உரக்கடை, டிராக்டர் வாடகைக்கு விடுதல்வரை செய்கின்றனர். இவர்களது வாரிசுகளை ஐடி, அயல்நாட்டு, அரசாங்க வேலைகளுக்கு ஏற்றுமதி செய்துவிட்டு மிச்சமிருக்கும் ஓரிரண்டு இளசுகளை பைனான்ஸ் செய்ய அனுப்பிவிட்டு, அதற்கும் தேறாத கேஸ்கள் ஊருக்குள் ஆண்ட பரம்பரை அரசியல் கட்சிகளை வளர்க்கையில் இவர்களது தோட்டத்துக்கு தலித் மக்கள் வேலைக்கு வரவில்லை என்பதே இளைஞர்கள் விவசாயம் செய்யத் தயாராக இல்லை என்பதாகும்.
தொழிற்புரட்சியால் ஏற்படப்போகும் இந்த சமூகவியல் நகர்வுகளைக் கணித்து அரசு திட்டங்களை வகுக்காமல் போனது சமூகப் புரிதல் இல்லாத, தொலைநோக்குப் பார்வை இல்லாத அதிகாரிகளால் ஏற்பட்டதேயாகும். மானியங்களாலும், கடன் தள்ளுபடிகளாலும், குறைந்த பட்ச ஆதார விலைகளாலும் விவசாயத்தை மீட்டெடுக்க முடியும் என்பது நாளேடுகளில் நடுப்பக்கக் கட்டுரைக்கு மட்டுமே ஏற்புடையதாக இருக்கும். இந்திய விவசாயமும், கிராமங்களும் சாதியும் பிரிக்கவே முடியாதது. இதைக் கவனிக்காமல் நதிநீர் இணைப்பு, இயற்கை விவசாயம் என்பதெல்லாம் கட்டுரைகளோடு முடிந்துவிடும்.
தீவிர இயற்கை விவசாய ஆர்வலர்கள் அப்பட்டமான சாதி வெறியர்கள் என்று சொன்னால் சிலருக்கு தர்ம சங்கடமாக இருக்கலாம். ஆனால் இதில் எந்த மிகைப்படுத்தலும் கிடையாது. அவர்களைப் பொறுத்தமட்டில் அந்தக்கால கிராமியச் சூழலில் விவசாயம் நடக்கவேண்டும். அந்த கிராமியச் சூழலில் சாதி இல்லாமல் ஆர்கானிக் இடுபொருட்களை கம்பெனி மூலம் வினியோகித்தால் அய்யகோ விவசாயிகளின் தற்சார்பு எங்கே, கார்ப்பரேட் ஆதிக்கம் வருகிறதே என பாட ஆரம்பிப்பார்கள். ஆர்கேனிக் (கொஞ்சம் ஸ்டைலாக ஆர்கானிக் என்பதை ஆர்கேனிக் என்று சொல்வதே சமகால மேல்தட்டு ஃபேஷன் ஆகும்) உணவு என்பதே நான் உன்னைவிட உயர்வானவன், எனது உணவு நீங்கள் உண்ணும் உணவைவிட உயர்வானது என்பதை நிறுவுவதற்கே இன்று பயன்படுகிறது. வாயில் மலத்தைக் கரைத்து ஊற்றும் கொடுமையைவிட கிலோவுக்கு 50 ppm அளவில் பூச்சிக்கொல்லி இருப்பதாகக் கண்டறியப்படுவதே பெருவாரியானோருக்குக் கவலைகொள்ளத்தக்க விசயமாகத் தெரிகிறது.
விளைநிலங்கள் வீட்டு மனைகளாக்கப்பட்டு வருகின்றன என்ற கூற்றை அலசினால் அதுவும் ஒரு மாய பிம்பம் என்பது புலப்படும். சினிமாவில் வருவதுபோல யாரும் குடும்பத்தினரைக் கட்டிப்போட்டு பெட்ரோல் ஊற்றி கையெழுத்து வாங்குவதில்லை. நிலம் இருப்பவர்கள் தாமாக முன்வந்து விற்கிறார்கள். இதில் விற்பனை செய்பவர்கள் வாங்குபவர் என்ன சாதி என்று தெரியாமல் விற்பதில்லை. ரியல் எஸ்டேட் புரோக்கர்களாக பல சாதியினரும் இருப்பது, கமிசனைப் பிரித்துக்கொள்வது அந்தத் துறைக்குள் இருக்கும் ஒரு மிகப்பெரிய நுண்ணரசியலில் ஒன்றாகும்.
கடந்த பதினைந்து ஆண்டுகளில் உங்கள் ஊர்ப்பக்கம் புதிதாக முளைத்த பெட்ரோல் பங்குகள் எத்தனை, அவை விளைநிலங்களின் மீது அமைக்கப்பட்டனவா இல்லையா என்பதை சிந்தித்துப் பார்த்தால் புரியும். ஒரு பெட்ரோல் பங்குக்கு அரை ஏக்கர் என்று வைத்துக்கொண்டால் தமிழகம் முழுவதும் எத்தனை ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை இந்த பங்க்குகள் விழுங்கியது என கணக்கிட்டால் புரியும். பெட்ரோல் பங்க் அமைப்பது அந்தந்தப் பகுதி ஆதிக்க சாதியினரால் மட்டுமே முடியும். தலித் கோட்டா என்றாலும் மேனேஜ்மெண்ட் கண்ட்ராக்ட் யாரிடம் இருக்க முடியும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
விவசாயக் கூலி அல்லாத வேளைகளில் கிடைக்கும் அதிக ஊதியமும், பணிசார்ந்த பலன்களும் மிக முக்கியமான ஒன்று. ஒரு ஷாப்பிங் மால், பெரிய அலுவலகக் கட்டிடங்களில் பராமரிப்பு ஊழியர்களுக்கான பார்க்கிங்கில் எத்தனை சைக்கிள்கள், டிவிஎஸ் 50கள் நிற்கின்றன என்று கவனித்தால் போதுமானது. தமிழக அரசின் இலவச மிதிவண்டிகள் அடித்தட்டுப் பெண்களுக்கு எவ்வளவு பெரிய mobilityயைக் கொடுத்திருக்கின்றன என்பதற்கு பெரம்பலூர், அரியலூர் மாவட்ட ஊரகப்பகுதிகளில் பயணித்தறிய வேண்டும்.
பி. எஃப், இஎஸ்ஐ போன்ற பலன்கள் மால்கள், பெரிய அலுவலகங்களில் மாதம் எட்டாயிரம் சம்பளம் வாங்கும் ஹவுஸ்கீப்பிங் பெண்களுக்கு ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் கிடைக்கிறது. பெங்களூருவில் ஜவுளி நிறுவன ஊழியர்கள் பி. எஃப் பிரச்சினையின்போது பேருந்து எரிப்பு அளவுக்குச் சென்றதை நினைவுகூர்க. ஊர்க்கட்டுப்பாட்டை மீறியதாக ஒதுக்கி வைக்கப்படும் அவலங்கள் இதில் ஏதும் இல்லை.
நபார்டு வங்கியால் ஊக்குவிக்கப்படும் உழவர் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் என்பது சாதிவலைக்குள் எப்படி சிக்கி நசுங்குகிறது என்பதையும் அஃது ஏன் தோல்வியைத் தழுவுகிறது என்பதையும் தனியாக பி.எச்.டி-யே செய்யலாம்.
தமிழகத்தில் உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு VAT exemption இருந்தது. இப்போது மித்ரோன் மோடி பராக்கிரமத்தால் உரத்துக்கு 5%, பூச்சிக்கொல்லிகளுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது. பூஜ்யத்திலிருந்து நேரடியாக 18% வரி விதிக்கப்பட்டதற்கு வேறு துறைகளாக இருந்தால் கடும் எதிர்ப்பைக் காட்டியிருப்பார்கள். ஆனால் தமிழக விவசாயிகள் சங்கங்களின் எந்த பிரிவும் பெயரளவுக்குக்கூட கண்டனம் தெரிவித்ததாகக் காணோம். டெல்லிக்குச் சென்று கடனைத் தள்ளுபடி செய்யவும், நதிநீர் இணைக்கவும் மண்சோறு சாப்பிடுவதால் எதுவும் நடக்கப்போவதில்லை. பூச்சிக்கொல்லிகளுக்கு 18% வரி என்பது விவசாயத்தின் மீதான நேரடியான தாக்குதல் என்பது ஆர்கேனிக் விவசாயக் கனவு கோஷ்டிகளுக்குப் புரியப்போவதில்லை என்பதைவிட விவசாய சங்கங்களுக்கே புரியவில்லை என்பதுதான் அபாயகரமானது.
வர்ணாசிரம முறைகளைத் தாங்கிப்பிடிக்கும் கிராமப்புற வாழ்வியல் முறைகளிலிருந்து வெளிவரும் அடித்தட்டு மக்களுக்கு வாய்ப்பளிப்பது MSME நிறுவனங்களே. இவற்றில் பெருவாரியான மக்கள் அமைப்புசாரா தொழிலாளர்களாக, தினக்கூலிகளாக, சில நேரங்களில் கொத்தடிமைகளாக பணிபுரிவதைத் தடுப்பதிலும், அவர்களை முறையான பதிவுசெய்த தொழிலாளலர்களாக ஆக்குவதிலும் உள்ள நடைமுறை சிக்கல்களை அறிந்தே மனிதவள ஆற்றல்சார் நிறுவனங்கள் தோன்றின. டீம்லீஸ், அடிக்கோ என பல நிறுவனங்களை உதாரணமாகக் காட்டலாம். பிரபல அரசியல்வாதி ஒரிவரின் நிறுவனம் குறித்து சொல்லத் தேவையில்லை. Vendor employee, contractor employee, third party employee என பலதரப்பட்ட பெயர்களில் பணிபுரியும் நிறுவனத்தின் நேரடி payroll-இல் இல்லாமல் வேறு நிறுவனத்தின் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்தாலும் PF, ESI, காப்பீட்டு பலன்கள் நேரடியாக கிடைத்துவிடும்.
ஒப்பந்த பணியாளர்களின் payroll வைத்திருக்கும் நிறுவனங்களை ஒருசாரார் தரகுமுதலாளிகள், கார்ப்பரேட் கால்நக்கிகள் என பலவாறாக விளிக்கிறார்கள். தற்போது மித்ரோன் மோடி அரசு minimum wages act மூலமாக மாதத்திற்கு ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 18000 ரூபாய் சம்பளம் வழங்கப்படவேண்டும் என்ற தீர்மானத்தை முன்வைத்து நகர்த்தி வருகிறது. ஓர் ஊழியருக்கு எடுத்த எடுப்பிலேயே மாதம் 18000 என்பது கேட்பதற்கு இனிமையாக இருக்கலாம். ஐம்பது பேருக்கும் குறைவான ஊழியர்களை வைத்து நடத்தப்பட்டு வரும் சின்னச்சின்ன ஆலைகள் 18000 சம்பளம் வழங்கினால் ஆறுமாதம்கூட தாக்குப்பிடிக்க முடியாது. இந்த சட்டத்தை மதிக்காத சிறு நிறுவனங்கள் PF, ESI, காப்பீடு இல்லாமல் கூலி வழங்குவது என்பது கிராமிய விவசாய சூழலில் பண்ணையாரிடம் கூலி வாங்குவதற்கு ஒப்பான சூழலை உண்டாக்கும். இதன்மூலம் சட்டத்தை மதித்து நடந்து கம்பெனியை திவாலாக்கிக் கொள்ளலாம்; தொழிலாளர்களின் payroll-இல் இல்லாமல் கம்பெனி நடத்துவதன் மூலம் அடித்தட்டு மக்களுக்கு எந்தவித பலன்களும் சென்றடையாமல் பார்த்துக்கொள்ளலாம். பிரச்சினைகள், நிச்சயமற்ற சூழல், பாதுகாப்பின்மை, எதிர்காலம் குறித்த அச்சம், குழப்பங்கள் இருக்கும் இடங்களில்தான் சாதிகளும், மதங்களும், பக்தியும் வேர்விட்டு வளரமுடியும்.
நோட்டை செல்லாக்காசாக்கி கருப்புப் பணத்தை ஒழித்ததுமாதிரி, பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 18% வரி விதித்து ஆர்கேனிக் விவசாயத்தை ஊக்குவிப்பது மாதிரி, ஒப்பந்த ஊழியர்களுக்கு மாதம் 18000 சம்பளம் வழங்க சட்டமியற்றி தொழிலாளர்களையும், MSMEகளையும் nake in india செய்து 2022-இல் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக்கி, கணிசமான இளைஞர்களை விவசாயத்துக்குத் திருப்பும் ARYA (Attracting and Retaining Youth in Agriculture) திட்டங்களை புரிந்துகொள்ள மண் கீ பாத் கேட்க வேண்டும்.
https://m.facebook.com/story.php?story_fbid=10155250701403773&id=595298772
No comments:
Post a Comment