Lafees Shaheed
208-12-24
இஸ்லாம் பாரம்பரிய அர்த்தத்தில் ஒரு 'மதம்' அல்ல. அது ஒரு வாழ்வியல் நெறி. சமூகவியல் திட்டம்.
ஒழுக்க நியதிகளையும் அவற்றை கண்காணிப்பு செய்யும் தண்டனை முறைமைகளையும், மீபொருண்மை சார்ந்த நம்பிக்கை கோட்பாடுகளையும் தன்னகத்தே பொதிந்தது இஸ்லாம்.
மதங்கள் என்ற வகையில் யூதம், கிறிஸ்தவம் போன்ற இப்ராஹிமிய வழிபாட்டு முறைகளும், பெளத்தம், இந்து போன்ற தத்துவங்களும் இந்த பரிமாணங்களில் சிலவற்றை கொண்டும், கொள்ளாமலும் இருக்கும்.
மேற்கு தத்துவங்கள், சமூகவியல் கோட்பாடுகளை விட்டும், கீழைத்தேய மதங்கள் மற்றும் மதமற்ற கலாச்சாரங்களை விட்டும் வித்தியாசமானது/ வேறுபட்டது இஸ்லாம்.
ஏனைய சமூகங்கள் இந்த "வித்தியாசத்தை" அங்கீகரிக்க வேண்டும்.
இஸ்லாத்தை புரிந்து கொள்ள அது தோன்றிய காலப் பிரிவையும், நபிகளாரின் வரலாற்றையும், இஸ்லாத்தின் கோட்பாடுகளையும் படித்து தெரிந்து கொள்வதே முதன்மையான மற்றும் சிறந்த வழிமுறை.
ஏனைய கோட்பாடுகளில் இருந்து இஸ்லாத்தை புரிந்து கொள்ள 'முயற்சி' செய்யலாம். ஆனால் 'முழுமையாக' புரிந்து கொள்ள முடியாது. "அப்படி தானல்லாத, பிறிதான ஒரு கலாசாரத்தை, மக்கள் திரளை முழுமையாக புரிந்து கொள்ள முடியாது" - என்பதை நாம் ஒத்துக் கொள்வதே சமாதான, சகவாழ்வுக்கான வழி.
அதே நேரத்தில் இஸ்லாம் ஒரு மதமல்ல என்றாலும், முஸ்லிம்களில் பலரும் இஸ்லாத்துக்கு மத ரீதியான விளக்கத்தையே கொடுக்கிறார்கள்.
இஸ்லாத்தின் சமூகவியல் திட்டம், அரசியல், பொருளாதார பரிமாணங்களை ஏற்றுக் கொள்பவர்களும் கலை, இலக்கியம் என்று வந்து விட்டால் மதம் என்ற சட்டகத்திற்கு வெளியே இருந்து பார்க்க முடியாது அவற்றை புறந்தள்ளி செல்லுகிறார்கள்.
அலி இஸ்ஸத் பெகோவிச் கூறுவது போல மத்திய காலப் பகுதியின் இஸ்லாமிய நாகரிகம் வீழ்ந்து போனதன் பிறகான சிந்தனை வீழ்ச்சியே சமகால முஸ்லிம்களின் உளவியல் கட்டமைப்பை வடிவமைத்து இருக்கிறது.
இந்த உளவியல் கட்டமைப்பு தரும் ஆன்மிக நெருக்கடியை விட்டு வெளியேற முடியும். ஆனால் அதற்கு நிறைய பிரயத்தனமும், விமர்சன அறிவுப் பார்வையும் அவசியம்...
#முல்லா_பிரொஜக்ட்
#விடுதலை_இறையியல்
#இபாதத் மாபியா
No comments:
Post a Comment