Tuesday, December 25, 2018

பிற மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கள் - லபீஸ்

Lafees Shaheed
2018-12-25

பிற மதப் பண்டிகைகளுக்கு(உதாரணமாக கிறிஸ்துமஸ்) வாழ்த்துக்கள் சொல்லக் கூடாது என்று 'நேரடியாக' மற்றும் 'திட்டவட்டமாக' அல் குர்ஆனில், ஸுன்னாவில் தடையுத்தரவு வரவில்லை.

பிற மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்துக் கூறுவது இபாதாக்கள் எனப்படும் வணக்க வழிபாடுகள் சார்ந்த ஒரு விடயம் அல்ல. மாறாக அதுவொரு சமூக உறவுகள் சார்ந்த விடயம்.

வணக்க வழிபாடுகளை பொறுத்தவரையில் ஒரு வணக்கத்தை செய்வதற்கு அடிப்படையில் ஒரு ஆதாரம் இருக்க வேண்டும். அப்படி ஆதாரம் இருப்பின் தான் குறித்த வணக்க வழிபாடு ஏற்றுக் கொள்ளப்படும். அப்படி ஆதாரம் இல்லாத பட்சத்தில் அது மறுக்கப்படும்.

சமூக உறவுகள் விடயத்தில் இதற்கு மறுதலையாக அடிப்படையில் தடுக்கப்படாத எந்தவொரு சமூக உறவும் ஏற்புடையதே. குர்ஆன், ஸுன்னா தடையுத்தரவு பிறப்பித்த சமூக உறவுகள், கொடுக்கல் வாங்கல்கள், கலாசார நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒரு முஸ்லிமுக்கு அனுமதி இல்லை.

தவிர பிற மத பண்டிகைகளுக்கு வாழ்த்துக் கூறுவது நம்பிக்கை கோட்பாடுகள் சார்ந்த 'அடிப்படை 'அம்சம் அல்ல. மாறாக அது பிக்ஹு சார்ந்த 'கிளை' பிரச்சனை.

அடிப்படை அம்சங்களில் உறுதியாகவும், கிளையம்சங்களில் நெகிழ்ந்தும் கொடுப்பது தான் இஸ்லாமிய ஷரீஆவின் தனித் தன்மை. பொதுவான இலக்குகள் மற்றும் அல் குர்ஆனிய கண்ணோட்டங்கள் சுட்டிக் காட்டிடும் உண்மை.

பிற மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்துக் கூறுவதை தடை செய்பவர்கள் அதனை 'திட்டவட்டமான' வசனங்களை முன் வைத்து கூறுவது இல்லை. மாறாக 'பல்வேறுபட்ட கருத்துக்களுக்கு இடம்பாடான' நெகிழ்வுத் தன்மை கொண்ட சட்ட வசனங்களை வைத்து 'ஆய்வு ரீதியாக' தான் அதனை முன் வைக்கிறார்கள்.

இந்த பிரச்சினையை புரிந்து கொள்ள இந்த எளிய அறிமுகம் போதுமானது.

என்னைப் பொறுத்தவரையில் மூன்று அடிப்படையில் பிற மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்துக் கூறுவது கூடும்.

பரஸ்பர ஒத்துழைப்புடன் இயங்கக் கூடிய மனித சமூகம் எனும் வகையில்

தஃவா கண்ணோட்டத்தின் அடிப்படையில்

சிறுபான்மை வாழ்வமைப்பு எனும் வகையில்

இவற்றை கொஞ்சம் சுருக்கமாக பரிசீலிக்கலாம்.

1. இஸ்லாம் நீதியான சமூக சமத்துவ அமைப்பினை கட்டுவதற்கு உலக மாந்தர்கள் அனைவரையும் நோக்கி பொது அழைப்பு விடுக்கிறது. கூடவே விசுவாச சுதந்திரத்தையும், விரும்பிய மதத்தை பின்பற்றும் உரிமையையும் மக்களுக்கு இஸ்லாம் அளித்திருக்கிறது. ஆக தங்களுடைய சொந்த தேர்வுகளுக்குள் நின்று கொண்டே பொதுவான இலக்குகளை நோக்கிய பயணத்திற்கு இஸ்லாம் மக்களை அழைக்கிறது என்பது தெளிவு (உதாரணமாக அரசியல் அடக்கமுறையை நீக்குதல், பொருளாதார சுரண்டலை அழித்தல்).

இந்நிலையில் பிற மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கள் கூறுவது என்பது அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுதல் என்பதாக அமைகிறது. நன்மைகளின் பால் பரஸ்பர ஒத்துழைப்புடன் கூடிய சமூக அமைப்பை கட்டுவது என்பது இத்தகைய நல்லுறவுகள் மூலமாகவே சாத்தியப்படும்.

2. பிற மதத்தவர்களுடன் ஒரு நாட்டில், சமூக அமைப்பில், வேலைத் தளங்களில் மற்றும் பிற சமூக தளங்களில் இணைந்து வாழும் பொழுது முஸ்லிம்களின் பண்டிகைகளுக்கு அவர்கள் வாழ்த்துக் கூறுவார்கள் ; பரிசுகளை வழங்குவார்கள். ஆனால் நாம் அவர்கள் பண்டிகைகளின் பொழுது குறைந்த பட்சம் வாழ்த்துக்களை கூட தெரிவிக்க மறுக்கும் பொழுது அது மதம் சார்ந்த நல்லுறவை பாதிக்கும் ; இஸ்லாம் சகிப்புத்தன்மையற்ற மதம் எனும் பிம்பம் உருவாகும். இறுதியில் தஃவாவின் வாயில்களை அது அடைத்து விடும்.

நம்பிக்கை சாராத கிளை அம்சங்களில் இறுக்கமான நிலைப்பாடுகளை கைக் கொண்டு தஃவா எனும் உயர்ந்த இலக்கை சிதையவடையச் செய்வது சரிதானா?

3. சிறுபான்மை என்பது இயலாமை அல்ல. ஆயினும் பேரினவாதத்தின் அழுத்தம் சமூக மட்டத்தில் அனைத்து அங்கங்களிலும் பரவியிருக்கும் நிலையில் குறைந்த பட்சம் தரூராவின் - நிர்ப்பந்த நிலைச் சட்டங்கள் - கீழேனும் பிற மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கள் சொல்வதை நாம் அனுமதிக்க வேண்டும். ஏலவே கூறிய போல இது நம்பிக்கை கோட்பாடுகளுடன் தொடர்புறும் ஒரு விடயம் அல்ல. மாறாக சமூக உறவுகளுடன் தொடர்பு படும் நெகிழ்வான ஒரு அம்சம். இத்தகைய அம்சங்களில் இறுகி நின்று ஏனைய சமூகங்களை விட்டு அந்நியப் பட்டுப் போவது அறிவுடைமையான செயல் அல்ல.

என்னை கேட்டால் முதல் அம்சமே பிற மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கள் கூற அனுமதி அளிக்கிறது என்பேன். இரண்டாம், மூன்றாம் அம்சங்களுக்கு நாம் வர வேண்டிய அவசியமே இல்லை.

கருத்து வேறுபாடுகளின் மக்ஸத் - இலக்காக - ஆக 'ஷரீஆவை பின்பற்றலை இலகுபடுத்தல்' என்பதை முன்வைப்பார், இமாம் தாஹிர் இப்னு ஆஷுர் (ரஹ்).

அல்லாமா இப்னு ஆஷுர் முன் வைக்கும் 'இலகுபடுத்தல்' சார்ந்து பிற மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கள் கூறல் எனும் 'கருத்து வேறுபாடு' கொண்ட பிரச்சனையை மேற்குறிப்பிட்ட மூன்று அம்சங்களின் வெளிச்சத்தில் நோக்குவதே பொறுத்தமானது.

கலாநிதி யூசுஃப் அல் கர்ளாவி கூறுவது போல திட்டவட்டமான சட்ட வசனங்கள் இல்லாத அம்சங்களில் செய்யப்படும் இஜ்திஹாத்களில் பல்வேறுபட்ட கருத்துக்கள் வெளி வர முடியும் என்பதை புரிந்து கொண்டால் நாம் சமூகப் பிளவை தவிர்க்க முடியும்.

நன்மைகளின் பால் பரஸ்பர ஒத்துழைப்புடன் கூடிய மானுட சமூகத்தினை கட்டுவதற்கான காலத்தின் அறைகூவலை இஸ்லாத்தின் அழைப்புடன் இணைத்துப் புரிந்து கொள்ள வேண்டிய பிரச்னை இது..!

#இங்கிருந்து அறிவோம்
#பாதையை_செப்பனிடல்

https://www.facebook.com/100005063134008/posts/1150433065135454/

No comments:

Post a Comment