Saturday, December 29, 2018

விசுவாச சுதந்திரம் குறித்த அல் குர்ஆனிய அணுகுமுறை - Lafees

Lafees Shaheed
2018-12-29

சிலர் மக்கா வெற்றியின் போதான நபிகளாரின் சிலை உடைப்பை "அதிகாரம் கிடைப்பதற்கு முன்னரான இறைதூதரின் செயல்பாடுகள்" மற்றும் "அரசதிகாரம் கிடைத்ததன் பிறகான செயல்பாடுகள்" - என்று இரண்டாகப் பிரிக்கிறார்கள்.

அதாவது "அதிகாரம் கிடைத்தல்" என்பது இவர்களைப் பொறுத்தவரையில் நபிகளாரின் வாழ்வில் ஒரு பிரிகோடு.

"இந்த பிரிகோட்டுக்கு முற்பகுதியில், அதாவது நபிகளாரின் மக்கா காலகட்டத்து வாழ்வில், அவர் கஃபாவில் இருந்த சிலைகளை உடைக்கவில்லை. ஆனால் பிரிகோட்டின் அடுத்த பக்கமாக மதீனா நகர அரசு உருவான பொழுது, நபிகளார் மக்கா வெற்றியின் பின்னர் கஃபாவில் உள்ள சிலைகளை உடைத்தார்கள்" - என்று இவர்கள் பொருள் கோடல் செய்கிறார்கள்.

ஆக பிரச்சனையை இவர்கள் 'விசுவாச சுதந்திரம்' என்று விரிவான சமூக உள்ளடக்கத்தில் வைத்து புரிந்து கொள்ளாமல் இஸ்லாத்திற்கு 'அதிகாரம்' கிடைத்தல் என்று சுருக்கிப் புரிந்து கொள்கிறார்கள்.

ஆனால் இந்தக் கருதுகோள் அல்குர்ஆனிய உலக நாகரீக கண்ணோட்டத்திற்கு முரணானது.

********************************************

கீழ் வருவது விசுவாச சுதந்திரம் குறித்த அல் குர்ஆனிய அணுகுமுறை பற்றியதான Manazir Zarook எழுதிய முக்கியமான பதிவு :

-----------------------------------------

இவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்;

எங்களுடைய இறைவன் ஒருவன்தான் - என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை);

மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும், கிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்;

அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்.

அல்குர்ஆன் (22:40)

-----------------------------------------

இந்த வசனத்தின் முதற்பகுதி விரும்பிய மதத்தினை ஒருவர் பின்பற்றலுக்குரிய பூரண விசுவாச சுதந்திரம் உலகில் நிலவ வேண்டும் என கோருகிறது... //“எங்களுடைய இறைவன் ஒருவன்தான்”// என்று கூறியது தான் முஸ்லிம்கள் தமது வீடுகளை விட்டு துரத்தப்படுவதற்கும், அவர்கள் மீது போர் தொடுக்கப்படுவதற்கும் காரணமாய் அமைந்தன.

அல்குர்ஆன் இவ்விடத்தில் முஸ்லிம்களது விசுவாச சுதந்திரத்தை உறுதிப்படுத்த போராடும் படி கூறும் பொழுது, அதனுடன் தனது போராட்டத்துக்கான நியாயத்தை வரையறுத்துக் கொள்ளாமல், முழு மனித சமூகத்தினதும் (அதாவது, முஸ்லிம் அல்லாத பிற மதத்தினரினதும்) விசுவாச சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடுகின்றது.

இஸ்லாம் ஏனைய மதங்கள், கோட்பாடுகள் பற்றி வேறுபட்ட நோக்கு கொண்டுள்ள போதிலும், அவர்களுக்கு தமது நம்பிக்கைக் கோட்பாட்டுப் பகுதியை பின்பற்றுவதற்கு பூரண விசுவாச சுதந்திரம் உலகில் நிலவ வேண்டும் என அல்குர்ஆன் பணிக்கிறது.

அதற்காக உழைப்பது அல்குர்ஆனிய நோக்கில் முஸ்லிம் சமூகத்தினது முன்னனிச் செயற்பாடுகளில் ஒன்று. உலகில் விசுவாச சுதந்திரத்தை பேண முடியாத நிலை காணப்படுவது, அக்கிரமச் செயற்பாடுகளில் உள்ளடங்குவது.

இன்னொரு வகையில், மத வழிபாட்டுத் தலங்களை அழிப்பது (அது எந்த மதமாயினும்) அக்கிரமம் செய்யும் கூட்டத்தினரின் செயல் என்று அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.

அல்லாஹூ அஃலம்!"
#விசுவாச_சுதந்திரம்

********************************************

மனாஸிரின் கருத்துக்கள் ஷெய்க் ரஷீத் ரிழா, ஷெய்க் ஷல்தூத், இமாம் முஹம்மத் அபூஸஹ்ரா, ஷெய்க் அப்துல்லாஹ் தர்ராஸ் தொடக்கம் இன்றைய தாரிக் ரமழான், ஷெய்க் முஃதார் அல் ஷன்கீதி வரை தொடரும் ஒரு சிந்தனைப் பள்ளியின் நிழலோட்டத்தை உள்ளீடாக கொண்டவை. குறித்த பதிவை ஆஷிக்கீன்கள் பொறுமையாக கற்க வேண்டும்.

ஆக பிரச்சனை இஸ்லாத்திற்கு அதிகாரம் கிடைப்பது அல்லது கிடைக்காமல் பலவீனமாக இருப்பது என்பது அல்ல. அல்குர்ஆனிய உலக நாகரீக கண்ணோட்டத்தின் சிறப்பான கூறான விசுவாச சுதந்திரம் தான் இந்த பிரச்சனையின் அடிப்படை.

அனைத்து மதங்களுக்கும் பூரண விசுவாச சுதந்திரம் நிலவும் ஒரு சமூக அமைப்பில் தான் உண்மையான ஏகத்துவ நம்பிக்கை, ஈமான் தழைக்க முடியும். நிர்ப்பந்தப்படுத்தி நம்பிக்கை கொள்ள வைப்பது இறைவனுக்கே உவப்பான ஒரு விடயம் அல்லாத பட்சத்தில் நாம் ஏன் அப்படியான ஒரு காரியத்தில் இறங்க வேண்டும்...?!

#இங்கிருந்து அறிவோம்
#பாதையை_செப்பனிடல்
#விடுதலை_இறையியல்

https://m.facebook.com/story.php?story_fbid=1153174638194630&id=100005063134008

No comments:

Post a Comment