Saturday, December 8, 2018

மதகுருத்துவத்திலிருந்து வெளியேறுவோம்

M. Milhan Mohamed
2018-12-08

எமது செழுமை மிக்க வரலாற்றில் நூற்றுக்கு மேற்பட்ட மத்ஹப்கள் (சட்ட முறைமை, சட்ட வியாக்கியானம், பொருட்கோடல்) தோன்றின, அவர்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் விளைவு, சமூகத்தை அடுத்த கட்டத்தை நோக்கி, வளர்ச்சியை நோக்கி நகர்தினவேயன்றி, காழ்ப்புணர்வுகளுக்கோ, கருத்துரிமையை மறுப்பதற்கோ அவர்களை தூண்டவில்லை. பின்னய கால இஸ்லாமிய உலகின் துரதிர்ஷ்டம் நான்கு மத்ஹப்புக்குள் (உண்மையில் இந்ந நான்கு மத்ஹப்களும் ஒரே நேர்கோட்டில் வைத்து மதிக்கத்தக்க பேரறிஞர்களுடையவை) தம்மை சுருக்கிக்கொண்டது. அதற்கப்பால் கீழைத்தேயம் துரதிர்ஷ்டத்தின் விளிம்புக்குள் சென்று ஒரு மத்ஹப்புக்குள் தம்மை குறுக்கிக்கொண்டது. இதனுடைய மோசமான விளைவு இதற்கு வெளியில் சிந்திப்பவர்களை, வழிகேடனாக பார்க்குமளவு, பண்மைத்துவ இருப்பை அச்சுறுத்துமளவு பார்வைகளை, சிந்தனையை மங்கிப்போக செய்தது.

இந்த அங்கவீனம் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் நாடுகளை மிக மோசமாக தாக்கியது. இந்த காலங்களில் உருவான மதக்காவலர்களின்(?), அறிவு வெளி ஒற்றை மையமாக, ஒரு மத்ஹபைச் சுற்றியே இருந்தது. செக்குமாட்டைப் போல் ஒன்றையே சுற்றிவந்தவர்களால் இன்னொன்றின் இருப்பை அங்கீகரிக்க முடியவில்லை, அதற்கு செவிசாய்க்க கூட முடியவில்லை. இந்த மத்ஹபுக்கு வெளியே மக்களை சிந்திக்கத் தூண்டுவது, தமது இருப்பைக் கேள்விக்குறியாக்கிவிடும் எனும் அச்சம், மார்க்கத்தை (வாழ்க்கை நெறியை) மதமாக (செயலூக்கம் இல்லாத வெற்றுப் போதனைகளாக) மாற்றி அதனை செவிமடுத்தால் போதும், கேள்விகள் கேட்கக் கூடாது, இதற்கு வெளியே சிந்திக்கக் கூடாது என்ற கருத்துப் பதிவை மக்கள் மயப் படுத்தியது (உ-ம்: குர்ஆனை நேரடியாக அனுகுவது வழிகேட்டுக்கு இட்டுச்செல்லும்). மார்கத்தின் ஏகபோக உரிமையாளர்களாக, அனந்தரக் காரர்களாக இவர்களேயானார்கள், இவர்களுக்கு வெளியே நின்று யாரவது கருத்துச் சொன்னால் அவர் வழிகேடராக ஆகும் (ஆக்கப்படும்) அளவு நிலமை மோசமாக இருக்கிறது.

வரலாற்றில் கிறிஸ்த்துவம், மத குருத்துவத்தை நோக்கி நகர்த்தப்பட்டது. பொது மக்கள் கடவுளை தொடர்பு கொள்வதும் பாவமன்னிப்பை யாசிப்பதும், தேவாலயங்கள், திருச்சபைகள் ஊடாக மாத்திரமே முடியும் என்ற வறட்டுச் சிந்தனை போதிக்கப்பட்டது. இதற்கு வெளியில் கடவுளிடம் இடைத்தரகர் (பாதிரி, யூதம்-ரப்பி) இன்றி நேரடியாக பாவமன்னிப்பு யாசிப்பதும், தொடர்பு கொள்வதும் தெய்வக்குற்றமாக, கடவுள் நிந்தனையாக, மதத்துரோகமாக சித்தரிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார்கள், உண்மையில் தீயிலிட்டு பொசுக்கப்பட்டார்கள்.

இதிலிருந்து அவர்கள் வெளியேறும் போது, துரதிர்ஷ்டவசமாக மதத்தையும் வாழ்க்கையையும் வேறாக பிரித்து மதத்திலிருந்தே தூரமாகி விட்டார்கள்.

நாமும் இப்போது தான் மதகுருத்துவத்திலிருந்து வெளியேற திமிரிக்கொண்டிருக்கிறோம்.

இதன் பிறகு தமக்குள்ளேய புதைந்து கொண்ட, வெளியே வந்தால் வழிகேடு என்ற முத்திரை குத்தப்படுவோம் எனப்பயந்த அத்தனை சிந்தனைகளுக்கும் மீள் பிரசவம் நடக்கப்போகிறது.

வார்த்தையில் மார்க்கமாகவும் வாழ்க்கையில் மதமாகவும் அல்லல் பட்ட இஸ்லாம், வாழ்க்கை நெறியாக மாறி செழித்தோங்க, எடுத்து  வைக்கப்படும் முதல் எட்டு இதுவாகும்.
குருத்துவப்பொறி தகறும் போது கிறிஸ்த்தவர்கள் மதத்தை விட்டு தூரமாகிவிட்டார்கள், மாற்றமாக நாம் காலத்தோடு இணைந்து பயணிக்கிற, வாழ்க்கையில் ஊடுபாவக் கூடிய இரண்டறக்கலக்கக் கூடிய பிரிகோடற்ற இஸ்லாத்தை பெறப்போகிறோம் இன்ஷா அல்லாஹ்.
...

இன்றய நிலமை உண்மையில் (உஸ்தாத் மன்சூர்) இஸ்லாத்துக்கே ஓரச்சுறுத்தல் என்றால், அதற்கெதிராக குரல் கொடுப்பது ஒவ்வொரு முஸ்லிமுடைய கடமை. தவ்ஹீத் ஜமாத், தப்லீக் ஜமாத், ஜமாதே இஸ்லாமி, ஸலாமா, அகில இலங்கை ஜம்மியதுல் உலமா மற்றும் ஏனய அத்தனை அமைப்புக்களும் ஒன்றாக குரல் கொடுக்க வேணடும். ஷியா, காதியானி பிரச்சினைகளின் போது ஒவ்வொரு அமைப்பும் அதனை எதிர்த்து அறிக்கைகள் வெளியிட்டது போல், சமூகத்தை விளிப்புணர்வு ஊட்டியது போல் இப்போதும் செய்திருக்க வேண்டும்.

மறுதலையாக எல்லா அமைப்புக்களும் கருத்துரிமையைப் பற்றி, சகிப்புத்தண்மையைப் பற்றி, கருத்து வேறுபாடுகளின் போது பேண வேண்டிய ஒழுக்கம் பற்றி பேசிக்கொண்டிருக்க, அக்குறனை ஜம்மியதுல் உலமா (அகில இலங்யை ஜம்மியா இதனோடு ஒட்டிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது) மட்டும், ஒரு வழிகேட்டை எதிர்ப்பது போல் எதிர்க்கிறது.

பள்ளிவாயலில் நிகழ்சிகள் நடத்த அவருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது, பொதுமக்களுக்கு அவரை ஒரு வழிகேடராக சித்தரிக்க முயல்கிறது, இதற்கு குத்பாவை கூட சூசகமான முறையில் பக்கச்சார்பான ஓர் ஊடகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.
பள்ளியில் பொதுமக்களை ஒன்று கூட்டி தமது கருத்தை சொல்லும் உரிமை ஜம்மியதுல் உலமாவுக்கு இருக்கின்ற அதே நேரம் மற்றவர்களுக்கும் இருக்கிறது. இந்த உரிமை விடயத்தில் பள்ளி நிருவாகம் பக்கச்சார்பின்றி நடந்து கொள்வது இறையச்சத்துக்கு மிக நெருக்கமானதாகும்.

இங்கு பேசுவது உஸ்தாத் மன்சூர் என்ற தனிநபருக்கன்றி ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உள்ள கருத்துரிமை நசுக்கப்படக் கூடாது என்ற ஆதங்கத்தில் தான். உஸ்தாத் மன்சூரின் எல்லா கருத்துக்களையும், ஒரு சராசரியனாக என்னால் ஜீரனிக்க முவில்லை, அப்படியான விடயங்களில் மற்ற அறிஞர்களை பின்பற்றுகிறேன், எனக்கு உடன்பாடு இல்லாவிடினும், கருத்துச் சொல்ல, ஒவ்வொரு தனிநபருக்கும் இருக்கும் உரிமையை மதிக்கிறேன்.

https://m.facebook.com/story.php?story_fbid=642723756180440&id=100013284637976

No comments:

Post a Comment