ப கீழ்வெண்மணி குறித்து நண்பர் ஒருவர் அண்ணா ஏன் நேரில் செல்லவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தார்
கீழவெண்மணி படுகொலை அண்ணாவினுடைய வாழ்வின் கடைசி காலகட்டத்தில் நடந்த படுகொலை
டிசம்பர் 25 1968 கீழவெண்மணி படுகொலை நடக்குது பிப்ரவரி 3 1969 இல்ல அண்ணா இறக்கிறார்
அமெரிக்காவில் சிகிச்சை பெற்று விட்டு திரும்பி உடல் நலம் குன்றி இருந்த காலகட்டம் அது
படுகொலை நடந்து 35 நாள் தான் உயிரோடு இருந்தார். அவருடைய வாழ்வின் மிக அந்திம காலம் அது
ஆனாலும் அவர் ஏதோ இந்த படுகொலையை மறைக்கிறவோ அல்லது கொன்றவர்களுக்கு சாதகமான ஒரு நிலைப்பாட்டை எடுக்கவோ செய்யவில்லை
"கீவளூருக்கு அருகிலுள்ள வெண்மணி நிகழ்ச்சி குறித்து சட்டம் தன் பணியினை செய்திடும். இந்த நிகழ்ச்சிகளுக்கு காரணமானவர்கள் அனைவரையும் அடக்கியே தீர்வதென்றும் அரசு உறுதி கொண்டிருக்கிறது" - இது 27/12/1968 அன்று விடுதலையில் வெளியான அண்ணாவின் பேட்டி
"இந்தக் கோரமான நிகழ்ச்சிகள் குறித்து தஞ்சை மாவட்டம் கீவளூரில் இருந்து எனக்கு கிடைத்துள்ள செய்திகள் என்னை அதிர்ச்சியடைய செய்துள்ளன. உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் ஜெனரல் இந்த நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு விரைந்து சென்றுள்ளார், தஞ்சை மாவட்ட கலெக்டருடனும் அந்த மாவட்ட போலீஸ் தலைமை அதிகாரியுடனும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் உயிரிழந்தோர் அனைவரது குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த தூக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்
அங்கு திரு கோபாலகிருஷ்ணன் என்ற மிராசு கைது செய்யப்பட்டிருப்பதாக செய்தி கிடைத்தது, மேலும் பலர் கைதாகக் கூடும் இந்த நிகழ்ச்சிகள் குறித்து எனது துயரத்தையும் மனவேதனையும் வெளியிட எனக்கு வார்த்தைகள் வரவில்லை. ஏனெனில் நடந்துள்ள நிகழ்ச்சிகள் அத்தனை கோரமானவை மிருகத்தனமானவை"
இது 28/12/1968 அன்று விடுதலையில் வெளியான அண்ணாவின் பேட்டி
அதுமட்டுமில்லாம உடனடியாக அமைச்சரவையிலிருந்து 2 முக்கியமான அமைச்சர்களை அனுப்புகிறார். பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கலைஞரையும் சட்டத்துறை அமைச்சராக இருந்த மாதவன் அவர்களையும் பாதிக்கப்பட்ட இடத்திற்கு அனுப்பினார்
அவங்க 28ஆம் தேதி அந்த பகுதிகளை ஆய்வு செய்தார்கள். ஆய்வு செய்துவிட்டு 28 டிசம்பரில் "நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு கொடுமை நடந்து விட்டது" என்று கலைஞர் பேட்டியளிக்கிறார்
ஆய்வு முடித்துவிட்டு அவர்கள் 12 மணிக்கு சென்னை திரும்பி அண்ணாவை சந்திக்கிறார்கள். அண்ணா அவர்களுக்கு ஆலோசனை நடத்துகிறார், அதற்குப் பிறகு நள்ளிரவு 1:30 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். இந்த காலகட்டத்தை கவனிக்க வேண்டும் அவருடைய மரணத்திற்கு 30 நாட்களுக்கு முந்தைய காலம் ஆனால் அந்த நேரத்திலும் நள்ளிரவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த செய்தி உண்டு
மறுநாள் காலையில் கணபதியாப்பிள்ளை தலைமையில விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று அண்ணா அறிவித்தார்
இதற்கிடையில் இது நீதி விசாரணையாக அணுகுவதா, கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவதா என்ற கேள்வி ஒன்று பெரிய அளவில் எழுந்தது.
அப்போது அன்றைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடைய தலைவராக இருந்த தோழர் பி.இராமமூர்த்தி அவர்களுடைய ஆலோசனையின் அடிப்படையில் கொலை வழக்காக நடத்துவது என்று முடிவாகிறது ஆக என்ன வழக்கா நடத்த வேண்டும் என்பதைக்கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரின் ஆலோசனையின் பேரில்தான் முடிவெடுத்தார். இந்த செய்தி கோ.வீரய்யன் எழுதிய செங்கொடியின் பாதையில் நீண்ட பயணம் என்ற நூலில் பதிவாகி இருக்கிறது
அடுத்தது இந்த படுகொலையை கண்டித்து ஒரு பெரும் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்த முற்படுகிறது, ஆனால் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி 144 தடை உத்தரவு தஞ்சை மாவட்டம் முழுக்க பிறப்பிக்கப்படுகிறது. தோழர் பி ஆர் தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கிறார், அதை தொடர்ந்து நேரடியாக முதலமைச்சரே தலையிட்டு போராட்டத்திற்கான அனுமதியை, கூட்டம் நடத்துவதற்கான தடை நீக்கத்தை வழங்குகிறார். பிறகு தான் 30/12/1968 மாபெரும் போராட்டம் ஒன்று நடக்கிறது இந்த செய்தி வெண்மணித் தீ என்ற நூலில் கோ.வீரய்யன் அவர்களால் பதிவு செய்யப்படுகிறது
"திருமதி தாரகேஸ்வரர் சின்கா தஞ்சையில் கீழ்வெண்மணி சம்பவத்தைப் பற்றி குறிப்பிட்டார். ஆம் அங்கு ஒரு கொடுமையான சம்பவம் நடந்தது உண்மை அது நடந்தபோது நாங்கள் எர்ணாகுளத்தில் இருந்தோம் அதுபற்றி வானொலியில் செய்தி கேட்டோம். இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட அந்த நிமிடமே தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணா கண்ணீர் விட்டார், மறுநிமிடமே அந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்தார் அதற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கை விட்டார் அவர் உடல் நலமற்று இருந்ததால் அமைச்சர்களை உடனே நிகழ்விடத்திற்கு அனுப்பி நிலைமைகளைப் பற்றி அறிந்து வரச் செய்தார். வெண்மணி நிகழ்ச்சி பற்றி கேள்விப்பட்டு நான் சென்னை சென்றவுடன் அங்கே அண்ணாவின் செய்தி காத்திருந்தது, "உடனே வருக" என்பதே அந்த செய்தி நான் சென்று சேர்ந்த உடன் அதிகாலையிலேயே அவரை பார்ப்பதற்காக நான் எழுப்பப்பட்டேன். அந்த பிரச்சனையில் என்ன செய்வது என்று பேசினோம் சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் போலீஸ் அதிகாரிகளை மாற்றி வழக்கை நடத்தும் பொறுப்பை வேறு புதிய அதிகாரிகளிடம் விடுவதென்றும் முடிவு ஏற்பட்டது தமிழ்நாட்டில் உள்ள எல்லா கட்சிகளிலும் காங்கிரஸ் கட்சி ஒன்று தான் வெண்மணி நிகழ்ச்சிக்காக கண்ணீர் விடாத கட்சி அந்த சம்பவத்தை அவர்கள் கண்டிக்க முன்வரவில்லை" - இந்த செய்தி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி தாரகேஸ்வரி சின்கா நாடாளுமன்றத்தில் வெண்மணி விவகாரம் தொடர்பாக திமுகவை விமர்சித்து பேசிய போது இராமமூர்த்தி அவர்கள் பதில் அளித்து பேசியவகைகளாக கலைஞருடைய நெஞ்சுக்கு நீதி இரண்டாம் பாகத்தில் பதிவாகியிருக்கிறது
இந்த செய்தி எல்லாம் சொல்வது ஒன்று தான். அந்த படுகொலைக்கு எதிராகவே அரசு செயல்பட்டிருக்கிறது. குற்றவாளிகளை தண்டிப்பதே அரசின் நோக்கமாக இருந்திருக்கிறது
தடுத்திருக்கலாமே என்றால், செய்திருக்கலாம் தான் ஆனால் ஒன்றுமே செய்யவில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது. அந்த பிரச்சனை தொடர்பாக நடந்த எல்லா பேச்சுவார்த்தைகள் குறித்தும் பேசும்போது தான் அரசின் நிலைப்பாடு புரியும்
மரண வீட்டின் அழுகுரலுக்கு எதிர்வினைகள் ஆற்றுவது அறமல்ல என்பதால் இதையெல்லாம் பெரிதாக பேசுவதில்லை ஆனால் அரசியலுக்காக அவை பயன்படுத்தப்படுகிற போது கொஞ்சம் நெருடுகிறது
விரிவான தகவல்களுக்கு வாசிக்க வேண்டிய நூல்கள்
கோ.வீரய்யன் எழுதிய வெண்மணித் தீ மற்றும் செங்கொடியின் பாதையில் நீண்ட பயணம்
பத்திரிக்கையாளர் திருமாவேலன் அவர்களின் ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா நூலில் வெண்மணி குறித்த கட்டுரை
நெஞ்சுக்கு நீதியில் வெண்மணி குறித்த செய்திகள்
- சூரியமூர்த்தி
https://www.facebook.com/100006274564260/posts/2260715380814259/
No comments:
Post a Comment