Raj Siva
2019-04-11
நிகழ்வெல்லைத் தொலைநோக்கியும், ஐன்ஸ்டைனும்
உங்களால் இதை நம்ப முடிகிறதா? உங்கள் அப்பாவின் அப்பாவின் அப்பா அதாவது உங்கள் பூட்டன், தன் இளமைக் காலத்தில், அதைச் செய்தேன், இதைச் செய்தேன் என்று சொன்னால், அது எவ்வளவு பழமையானதாக உங்களுக்குத் தோன்றும்.
இன்றைய உலகின் அனைத்து நவீனக் கருவிகளையும் கைக்கொண்டிருக்கும் நீங்கள், இயற்கையை மட்டுமே துணையாகக் கொண்டிருந்த, அந்தப் பூட்டனின் சாதனையை ஒரு ஏளனச் சிரிப்புடனே பார்ப்பீர்கள்.
அவரிடம் என்ன இருந்திருக்கும்? கணணி இல்லை. மொபைல் போன் இல்லை. எதுவுமே இல்லை. இருந்ததெல்லாம் இயற்கையில் கிடைக்கும் பொருட்கள் மட்டுமே! அந்தக் காலத்தைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்?
அப்படியான ஒரு காலத்தில், கிட்டத்தட்ட நூற்றி நான்கு வருடத்திற்கு முன்னர், 1915ம் ஆண்டு அல்பேர்ட் ஐன்ஸ்டைன் என்னும் ஒருவர், வெறும் கணிதத்தை மட்டும் வைத்துக் கொண்டு, விண்வெளி பற்றிய ஒரு கோட்பாட்டை உருவாக்கினார்.
அப்போது, அவரிடம் கணணி இருக்கவில்லை. கால்குலேட்டர் இருக்கவில்லை தொலைக்காட்சியும் இருக்கவில்லை. இன்றுபோல உடனுக்குடன் சொல்லி விடக்கூடிய மீடியாக்களும் இல்லை.
தன் மூளையில் விண்வெளிபற்றிய எண்ணங்களைப் படமாகச் சித்தரித்துக் கணிதச் சமன்பாடுகளை மட்டும் வைத்துக்கொண்டு அந்தக் கோட்ப்பாட்டை உருவாக்கினார்.
*விண்வெளியிலிருக்கும் அதி எடைகொண்ட ஒரு பொருளானது, அந்த விண்வெளியில் ஒரு குழியை உருவாக்கும். எல்லையில்லா எடை கொண்டதாக அந்தப் பொருள் இருந்து விட்டால், அதனால் ஏற்படும் குழியானது ஒருமைப்புள்ளியொன்றை அடையும் வரை ஆழமாகிச் செல்லும். அந்தக் குழியிலிருந்து ஒளிகூடத் தப்பிச் செல்ல முடியாது* - என்றார்.
இதை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு குழியை நாம் உருவாக்க வேண்டுமென்றால், எங்கே உருவாக்க முடியும்? பூமியின் மண் தரையில் ஒரு குழியை உருவாக்க முடியும். எந்தவொரு திடமான பொருளிலும், ஏதோவொரு விதத்தில் நம்மால் குழியை உருவாக்கிவிட முடியும்.
கடல் நீரில் ஒரு குழியை உருவாக்க முடியுமா? முடியாதல்லவா? அதை உங்களால் கற்பனை செய்து பார்க்கவே முடியாது. ஆனால், ஒரு கப்பலைக் கடலில் விடும்போது, அது நிற்குமிடத்தில், அதன் எடைக்கேற்பத் தண்ணீர் குழிகிறது. இப்போது யோசித்துப் பாருங்கள். தண்ணீரில் நம்மால் குழியை உருவாக்க முடியுமா? முடியுமென்றுதானே தோன்றுகிறது. கப்பல்களின் எடை அதிகரிப்புக்கு ஏற்ப அது ஏற்படுத்தும் குழியும் ஆழமாக இருக்கும்.
இதே அடிப்படையில், *விண்வெளியிலுள்ள கோள்கள், நட்சத்திரங்கள், கருந்துளைகள் அனைத்தும் விண்வெளியில் குழிகளை ஏற்படுத்துகின்றன* - என்று ஐன்ஸ்டைன் சொன்னார். இப்படி அவர் சொன்னதை எவராலும் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
நாம் பார்ப்பது வானம். வானத்தில் நட்சத்திரங்கள். அப்படி இப்படியென்று நினைத்துக் கொண்டிருக்கையில், "அங்கே வானம் என்ற ஒன்று இல்லை. இருப்பது, இரப்பர்பாய் போன்ற ஒன்றுதான். அந்தப் பாயிலேயே, நட்சத்திரம் போன்றவை இருக்கின்றன. அவை, அந்தப் பாயில் பெருங்குழிகளை ஏற்படுத்துகின்றன" - என்று ஐன்ஸ்டைன் சொன்னார்.
"என்ன, விண்வெளியில் குழியா? அது எப்படிச் சாத்தியம்? பூமியில் குழி இருப்பது சரி. ஏன் கடலில் கப்பல் குழி ஏற்படுத்துகிறது என்பதும் சரிதான். ஆனால், விண்வெளியில் குழியை எப்படி ஏற்படுத்த முடியும்? இவரென்ன இரப்பர் பாய், மென் சவ்வு, அது இது என்று சொல்கிறாரே! எந்தப் பாயையும் நாம் காணவில்லையே!” - என்று சொல்லி திகைத்து நின்றது உலகம்.
அத்துடன் ஐன்ஸ்டைன் சொன்ன இன்னொன்றையும் கேட்டு அறிவியல் உலகமே பதைத்துப் போனது. "350 வருடங்களுக்கு மேலாக நம்பிக் கொண்டிருந்த ஒன்றை இல்லையென்று சொல்கிறாரே இவர்" - என்று தடுமாறியது.
1680ம் ஆண்டளவுகளில், ஐசாக் நியூட்டனால் புவியீர்ப்புவிசைக்கான புரட்சிகரக் கருதுகோள் வெளியிடப்பட்டது. அந்தக் கருதுகோளையே மாற்றிச் சொன்னார் ஐன்ஸ்டைன். ஐசாக் நியூட்டன் சொல்லியிருந்த புவியீர்ப்புவிசை பற்றிய கோட்பாட்டையே நம்பிவந்தவர்களுக்கு, ஐன்ஸ்டைன் தடைக்கல் போட்டார்.
மேலே சொன்னதுபோல, அதி எடைகொண்ட ஒவ்வொரு பொருளும் விண்வெளியில் ஏற்படுத்தும் குழிவே, அப்பொருளை நோக்கிய ஈர்ப்பை உருவாக்குகிறது என்றார்.
உதாரணமாகப் பூமியானது, விண்வெளியில் ஏற்படுத்தியிருக்கும் குழிவின் வளைவுக்குள் அகப்பட்டுக்கொண்ட சந்திரன், அந்தக் குழியினுள்ளேயே சுற்றிக்கொண்டிருக்கிறது. இதுவே பூமிக்கும், சந்திரனுக்குமான ஈர்ப்புக்கான காரணம். இதுபோலவே, சூரியன் ஏற்படுத்தியிருக்கும் பெருங்குழியில், பூமி உட்பட ஏனைய ஏழு கோள்களும் அகப்பட்டபடி சூரியனைச் சுற்றுகின்றன.
நியூட்டனின் ஈர்ப்புவிசைக் கொள்கைக்கு மாற்றாக ஐன்ஸ்டைன் முன்வைத்ததை, ஏற்க முடியாமலும், விலக்க முடியாமலும் தவித்தது உலகம். காலம் செல்லச் செல்ல ஐன்ஸ்டைன் கூறிய ஈர்ப்புக் கோட்பாடு சரியெனப் புரிந்துகொண்டது உலகம்.
அதன் நீட்சியாக ஐன்ஸ்டைன் சொல்லியிருந்ததுதான் கருந்துளைகான வித்தாகியது. கருந்துளைக்கு எல்லையில்லா அதியீர்ப்பு உண்டு என்பதால், அது விண்வெளியில் நினைக்கவே முடியாத ஆழம்வரை பெருங்குழியை ஏற்படுத்தும். அந்தக் குழியின் முடிவு, ஒற்றைப் பரிமாணமுள்ள ஒருமைப்புள்ளியாக இருக்கும் என்றார்.
கருந்துளைபற்றி இவ்வளவு விவரமாக விளக்கிச் சொன்னாரேயொழிய, அவர் இருக்கும்வரை அப்படியானதொன்று உண்மையில் இருக்கிறது என்பதை நிறுவவே முடியவில்லை. ஒருகட்டத்தில் கருந்துளை என்ற ஒன்று இல்லையென்ற சந்தேகம்கூட அவருக்குத் தோன்றியது.
ஆனால், இன்று நூற்றுநான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், அந்த மாமேதை சொன்ன கருங்குழியை, அவர் சொன்னபடியே கண்டுபிடித்திருக்கிறோம். இதுவரை அப்படியானதொன்று இருக்கிறது என்று அடித்துச் சொன்னாலும், அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்போது அதைக் கண்டுபிடித்து, அதன் உருவத்தையும் படமெடுத்திருக்கிறோம்.
மனித குலத்தின் மாபெரும் சாதனை அது. எப்படி அதைக் கண்டுபிடித்தோம்? அது இன்றைய விஞ்ஞானிகளின் அற்புதமான புரட்சிச் சிந்தனையால் சாத்தியமாயிற்று. எப்படி?
---
உலகிலேயே மிகப்பெரிய காணொளிப்பெட்டியை (Television) துபாய் மோலில் வைத்திருக்கிறார்கள். அது ஒரேயொரு காணொளிப் பெட்டியாக இருந்தாலும். சற்றே உற்று நோக்கினால், ஆயிரம் சிறிய காணொளிப் பெட்டிகளை ஒன்றிணைத்து உருவாக்கியது என்று தெரியவரும். அதாவது ஆயிரம் சிறிய காணொளிப்பெட்டிகள் சேர்ந்து ஒரு மிகப்பெரிய காணொளிப்பெட்டியாக மாறியிருக்கிறது.
இதுபோன்ற பெரிய திரைகளை நீங்களும் விழாக்களில் கண்டிருப்பீர்கள். சமீபத்தில் நீங்கள் பார்த்த ‘சூப்பர் டிலக்ஸ்’ படத்திலும் ஒன்று சொல்வார்கள். பல நுண்ணுயிரிகள் ஒன்றாகச் சேர்ந்து உருவாக்கப்பட்டவன்தான் மனிதன் என்னும் ஒரு உயிர் என்பார்கள்.
இவற்றைச் சரியாக நீங்கள் புரிந்துகொண்டால் போதும். கருந்துளையைக் கண்டுபிடிப்பதற்கான அடிப்படையையும் புரிந்துகொள்ளலாம். அதாவது 55 மில்லியன் ஒளி வருட தூரத்திற்கு அப்பால் இருக்கும் ஒரு கருந்துளையைப் பார்ப்பதென்றால், நாம் இதுவரை கண்டுபிடித்திருக்கும் எந்தத் தொலைநோக்கியாலும் சாத்தியமேயில்லாதது. அதற்குப் பூமியளவு பெரிய தொலைநோக்கி தேவைப்படும்.
அப்படியொரு தொலைநோக்கியையை நான் மேலே சொன்ன உத்தி முறையால் உருவாக்கியிருக்கிறார்கள். அந்தத் தொலைநோக்கிதான் ‘நிகழ்வு எல்லைத் தொலைநோக்கி’ (Event Horizon Telescope - EHT). இது உலகின் பல இடங்களில் பரந்துபட்டுள்ள எட்டு மிகப்பெரிய தொலைநோக்கிகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட மாபெரும் தொலைநோக்கி.
கட்டுரை மிக நீளமாவதால், இரண்டு பகுதிகளாகப் போடுகிறேன். நாளை இதன் அடுத்ததைப் போடுகிறேன். உங்களுக்கும் படிப்பதற்குச் சிரமமில்லாமல் இருக்கும்.
https://m.facebook.com/story.php?story_fbid=2187618357971846&id=100001711084852
No comments:
Post a Comment