Tuesday, April 9, 2019

விதைக்காப்பீடும் வெள்ளாமையும்

RS Prabhu
2019-04-09

*********************

அன்பின் பிரபு,

நலம். நலமறிய ஆவல். உன்னுடைய மடல் கண்டவுடன் பதிலெழுத விழைந்தேன். ஆனால் கொஞ்சம் காப்பீடு தொடர்பான வேலைகளால் தாமதமாகிவிட்டது. இந்த வருட சூரியகாந்தி பயிரை காப்பீடு செய்ய ஏகப்பட்ட முயற்சி செய்தும் இயலாமல் போய்விட்டது. எப்படியாவது இந்த பயிர்க்காப்பீட்டுத் திட்டங்கள் சகலவிதமான இழப்புகளையும் ஈடுசெய்யுமளவுக்கு வந்தால்தான் நல்லது என்று தோன்றுகிறது. அதைப்பற்றி என்ன நினைக்கிறாய்? தள்ளுபடியில் ஒரு வண்டி வாங்கி, அதை ஓட்டிப் பழகியதில் நம்மாழ்வார் ஐயாவின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட முடியாமல் போய்விட்டது. அது ஒரு பெரிய கதை, வேறொரு நாள் விரிவாக சொல்லுகிறேன். அப்புறம் உன் வேலை எப்படி போகிறது? கடிதம் கண்டதும் உடன்பதில் எழுதவும்.

உன் மடலை எதிர்பார்க்கும்,
குமுதா.

*********************

எனதருமைக் குமுதா,

கடிதம் கண்டதும் மகிழ்ந்தேன். இவ்விடம் யாவரும் நலம். அங்கே அனைத்தும்  நலம்  என்றறியவே மனம்  விரும்புகிறது. பேனா நண்பர்களாகத் தொடங்கிய நம்  நட்பு, பேஸ்புக் நண்பர்களாகத் தொடர்வது நினைத்து பேருவகை கொள்கிறேன். Kids chat in WhatsApp, Men update status in Facebook, Legends write Letters. நேரு இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் அப்படித்தானே?

பயிர்க்காப்பீடு குறித்த உன் சிரமங்கள் எனக்கு புரிகிறது. ஆனால் என்ன செய்ய, வங்கிகளின் கடனுக்கு ஒரு பாதுகாப்பு ஏற்பாடு என்பதைத் தாண்டி அதில் சொல்லிக்கொள்ளும்படி ஒன்றுமில்லையே. எல்லாவிதமான இழப்புகளுக்கும் காப்பீடு இருந்தால் பரவாயில்லை என்று குறிப்பிட்டிருந்தாய். கேட்க நன்றாகத்தான் இருக்கிறது.

எல்லாவிதமான இழப்பு என்பதை எப்படி வரையறுப்பது? பயிர்ப்பெருக்கவியலில் GxE அதாவது Genetic Vs Environment என்ற குறுக்கீட்டின்படிதான் பயிரின் expression அமைகிறது. இதற்கிடையில் உள்ள பல நுண்ணிய காரணிகளை அளந்து quantify செய்து, அவற்றை முறையாக பதிவுசெய்து பராமரித்து வருவது விவசாயிகளின் வயல்வெளிச் சூழலில் சாத்தியமே இல்லை.

ஒருவேளை அவையனைத்தும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டாலும்கூட கடைசியில் அது விதையின் தரம் சரியில்லை என்று ஏதாவதொரு தனியார் விதை நிறுவனத்தை நோக்கி கையை நீட்டுவதைத் தாண்டி சொல்லத்தக்க வகையில் எந்த தீர்வும் கிடைக்காது. அதை நிரூபிக்கவும் முடியாது. கடைசியில் விதை நிறுவனங்கள் மொத்தமாக Liability Insurance எடுத்து வைத்துக்கொண்டு அந்த பிரிமியத்தை ஒவ்வொரு பாக்கெட்டின்மீதும் ஏற்றிவிடுவார்கள். யாரோ ஒருவருக்காக அத்தனை பேரும் அதை சுமக்கவேண்டியிருக்கும்.

உனக்கு ஒன்று தெரியுமா குமுதா. பேஸ்புக்கில் சொல்வது மாதிரி அத்தனை விவசாயிகளும் அப்பழுக்கற்ற தியாகத்  திருவுள்ளம் கிடையாது. உலகத்தின் அத்தனை வக்கிரங்களும் கிராமத்திலும் இருக்கிறது. நகரத்திலாவது பக்கத்து வீட்டில் என்ன நடந்தால் என்ன என்று இருந்துவிடுவார்கள். பக்கத்து தோட்டத்துக்காரர் ரொம்ப நல்லவர் என்று இதுவரை எந்த விவசாயியும் சொல்லிக் கேட்டதில்லை தெரியுமா?  அதேமாதிரி தனியார் விதை நிறுவனங்கள் என்றாலே சில விசைப்பலகை வீரர்கள் விரலை மடக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆனால் நடைமுறையில் சில தொழில்முனைவோர்களின் ஆயுட்கால உழைப்பில்தான் ஒரு நிறுவனம் உண்டாகிறது. ஒரு சீசனில் பெயர் கெட்டுவிட்டால் அடுத்த சீசனுக்கு அந்த ஊருக்குள் போகவே முடியாது என்பதால் கம்பிமீது நடப்பது மாதிரிதான் விதை வணிகம் நடைபெறுகிறது.

சாமர்த்தியமாக பேசுவதாக நினைத்துக்கொண்டு சில விவசாயிகள் அவ்வப்போது பெரும் தொந்தரவு தருவார்கள். அவர்களைப் பொறுத்தவரை நல்ல விளைச்சல் வந்தால் அது அவர்களின் அயராத உழைப்பின் பலன் மட்டுமே. மகசூல் இல்லையெனில் அதற்கு முற்றிலும் விதை விற்பனை செய்த நிறுவனம்தான் பொறுப்பு என்று இரகளை செய்வார்கள்.

அவ்வப்போது  சில கோக்குமாக்கான புகார்கள் வரும். ஊருக்குள் விசாரி்த்த வகையில் சம்பந்தப்பட்ட நபர் ஒருமாதிரி என்று தெரியவந்தால் விற்பனைப்பிரிவு அதிகாரிகள் கவனமாக கையாளுவார்கள். சிலநேரங்களில் ஆராய்ச்சிப்பிரிவுக்கு அந்த புகார்கள் வந்துசேரும். அந்த பிரிவின் நிலைய வித்வான் என்ற வகையில் நானே நேரடியாக அதை அணுகவேண்டியிருக்கும்.

இப்படித்தான் ஒருநாள் தர்பூசணியி்ல் செடி நன்றாக இருக்கிறது ஆனால் காய் பிடிக்கவில்லை என்று ஒரு புகார் வந்திருந்தது. அடுத்தநாளே நேரில் சென்று பார்த்தால் சுற்றுவட்டாரத்தில் ஒரு கிலோமீட்டர் அளவுக்கு புல்பூண்டுகூட இல்லாமல் காய்ந்து கிடந்தது. தர்பூசணியில் அயல் மகரந்தச் சேர்க்கை நடக்க தேனீ, குளவிகள் அவசியம் என்பது பள்ளிக்குழந்தைகளுக்குக்கூட தெரியும்தானே குமுதா? ஆனால் அவரோ போனவருடம் இதே இரகம் நன்றாக இருந்தது, இந்த வருடம் விதை சரியில்லை, கார்ப்பரேட் கம்பெனிகள் ஏமாற்றுகின்றன என்று பாட ஆரம்பித்துவிட்டார். தேனீக்கள் இல்லாததற்கு விதை நிறுவனம் என்ன செய்ய முடியும்? இதற்கு விதை விற்பனை செய்யும் நிறுவனம் இழப்பீடு தரவேண்டுமெனில்  காப்பீடு எடுப்பதா  அல்லது விதையுடன் சேர்த்து தேனீ பெட்டியும் விற்பதா?

வேளாண்மை விரிவாக்கக் கல்வியில் ஒரு விவசாயி வீட்டுக்குள் நுழையும்போதே அவருடைய தொழில்நுட்ப adoption level குறித்து கிரகித்துக்கொள்ள பழகவேண்டும் என்று பயிற்றுவிப்பார்கள். அந்தக்காலத்தில் விரிவாக்கவியல் துறை பேராசிரியர் ஒருவரின் காத்திரமான அன்புக்கு பாத்திரமான  செல்லப்பிள்ளை என்பதால் கொஞ்சம் தேவைக்கு அதிகமாகவே அதை பயின்றுவிட்டேன் குமுதா. ஒரு வீட்டில் வண்டியை விட்டு இறங்கும்போதே வாசலில் எத்தனை ஜோடி செருப்புகள் இருக்கின்றன, உள்ளே எத்தனை பேர் இருக்கிறார்கள், கொடியில் எத்தனை வேட்டி, உள்பாவாடை, பிளவுஸ் காய்கிறது அவர்களது வயது என்ன, அளவு என்ன என்றெல்லாம் கணிக்குமளவுக்கு தொழில் நேர்த்தி இருக்கிறது.

ஒருமுறை மக்காச்சோளத்தில் கதிர் வரவில்லை என்ற ஒரு புகாருக்கு நிலைய வித்வான் என்ற அடிப்படையில் பார்க்கச் சென்றிருந்தேன். பெயரளவுக்குக்கூட உரமோ, சாணமோ, எந்தவித பராமரிப்போ இல்லாத வெள்ளாமை என்பது பார்த்துவுடன் புரிந்துவிட்டது. அந்த விவசாயியை அழைத்துச் சென்று ஏழடி உயரம் இருந்த செடிகளில் கதிர் இருப்பதையும், மூன்றடி உயரம் உடைய செடிகளில் கதிர் இல்லாமல் இருப்பதையும் காட்டி ஊட்டச்சத்து நிர்வாகம், அயல் மகரந்தச்சேர்க்கை அது இது என பலவற்றையும் விளக்கினோம். அதே லாட் நம்பரில் பக்கத்து தோட்டங்களில் உள்ள மக்காச்சோளம் சிறப்பாக வந்திருப்பதையும் காட்டினோம்.

எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டவர் 'ஏழு அடி உயரம் வளந்த செடில அவ்ளோ பெரிய கருது(கதிர்) இருக்குன்னா மூனு அடி இருக்கற செடில அதுக்கு தக்கன கருது இருக்கனும்ல. ஆனா அப்படி இல்ல. அப்படின்னா வெதையில ஃபால்ட் இருக்குன்னுதான அர்த்தம்' என்றார். திரும்பவும் நான் முதலிலிருந்து ஆரம்பிக்க, அவரும் அதையே சொல்ல என வளர்ந்துகொண்டே இருந்தது. கார்கள் ஒரேமாதிரி தயாரிக்கப்பட்டாலும் திண்டுக்கல் சாலைகளில் வரும் பெர்ஃபார்மன்ஸ் கொடைக்கானலில் வராது என்று அடுத்த உதாரணம் சொன்னேன். அவர் புரியாத மாதிரியே நடிக்க ஆரம்பித்தார். காய்ச்சலுக்கு வந்த இரண்டு நோயாளிகளுக்கு மருத்துவர் ஒரே மருந்தைப் பரிந்துரைத்தாலும் இருவருக்கும் வெவ்வேறு கால அளவுகளில் குணமாகலாம், அதற்காக மருந்து சரியில்லை என சொல்ல முடியாது என்று புரியவைக்க முற்பட்டேன். அவரோ ஆரம்பித்த இடத்துக்கே வந்து சேர்ந்தார். இடையில் அவரது மனைவியும் சேர்ந்துகொண்டு ஜாடிக்கேற்ற மூடியாகப் பேசி வெறுப்பேற்றினார். விதை நிறுவனம் இழப்பீடு தரவேண்டும் என்பதைத் தாண்டி வேறு எதையும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்பது தெரிந்து.

குமுதா, தூங்குபவர்களை எழுப்பலாம் ஆனால் தூங்குவதுபோல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்பதால் எனது கடைசி அஸ்திர கேள்வியை எடுத்து வீசினேன். " சரிங்கண்ணா, நீங்க சொல்றது மாதிரியே இருக்கட்டும். என்னோட கேள்விக்கு பதில் சொல்லுங்க.  காண்டம் தயாரிக்கிற கம்பெனி ஊர்ல  இருக்கற எல்லாருக்கும் ஒரே மாதிரிதான் காண்டம் தயாரிக்குது. இருந்தாலும் ஊர்ல இருக்கற எல்லாருக்கும் ஒரே மாதிரி பெர்ஃபார்மன்ஸ் இருக்கறதில்லை. அதுக்கு அந்த கம்பெனிகிட்ட இழப்பீடு கேக்கறது நியாயமாங்ணா? அக்கா, நீங்க சொல்லுங்க அது நியாயமா?" என்றதும் அத்தோடு அந்த உரையாடல் முடிவுக்கு வந்தது.

குறைசொல்லிப் பேசுவது மிகவும் எளிதல்லவா குமுது? அண்மையில் BSIII வாகனத்துக்கு விற்பனையாளர்கள் நீதிமன்றத் தடை வருவதால் ஏகத்துக்கும் தள்ளுபடி வழங்கினார்கள். நீ கூட ஒரு வண்டி வாங்கியதாக எழுதியிருந்தாய். அந்த தள்ளுபடியில் வண்டி வாங்கியவர்களை சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பவர்கள் என்று சமூக ஊடகங்களில் பலர் பரிகசித்ததைப் பார்த்திருப்பாய். 15000 ரூபாய் மாதச்சம்பளம் வாங்குபவர்களுக்கு தவணை முறையில்  ஒரு வண்டி வாங்குவது  பெரிய சாதனை. அவர்களுக்கு 15000-20000 தள்ளுபடி என்பது எவ்வளவு பெரிய விஷயம்? அந்த சூழல் அக்கறையாளர்களின் தோட்டத்தில் உள்ள இலவச மின்சார மோட்டாருக்கு கடைசியாக கிரீஸ் வைத்தது மோட்டார் தயாரித்த கம்பெனியிலாகத்தான் இருக்கும். அதனால் ஏற்படும் பல நூறு யூனிட் மின்னிழப்பும் அதன் மாசும் கணக்கில் வராது.

அரசுக்கு அத்தனை வரிகளையும் செலுத்தி முறையான வெள்ளைப்பணத்தில், சொந்தக்காசில் வண்டி வாங்குபவர்களை ஒரே வார்த்தையில் அவதூறு செய்கிறார்கள். கல்லூரி முடித்துவிட்டு ஏதாவதொரு வேலை கிடைக்காதா என்று தேடுபவர்களுக்கு பைக் இல்லாததால் வேலை மறுக்கப்படுவதையும், அவர்கள் கையறு நிலையில் கலங்கி நிற்பதையும் பார்த்து கனத்த மனதுடன் பலமுறை கடந்து சென்றிருக்கிறேன்.  அரசாங்கத்தின் இலவச மிதிவண்டி, பைக் திட்டங்களையும் அவர்கள் பரிகசிக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் யாருமே வாழ்க்கையில் கொஞ்சம் மேலே வந்துவிடக்கூடாது. அத்தகைய கோமான்கள் ட்ரம்பு - விசா சிக்கல் குறித்து கவலை கொள்வதை நாம் எப்படி பார்ப்பது? அதே கோமான்கள்தான் நம்மாழ்வார் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுகின்றனர். அதனால் நம்மாழ்வார் பிறந்தநாளைக் கொண்டாடவில்லையே என கவலைகொள்ளத் தேவையில்லை. அது உன்னையும், என்னையும் போன்ற உழைக்கும் மக்களுக்கு எந்த வகையிலும் தேவையோ அவசியமோ இல்லாதது.

உண்டு கொழுத்தவர்களுக்கு ஆர்கானிக்/சிறுதானிய/பாரம்பரிய/மரபுசார் உணவுத் திருவிழா என பலவுண்டு. நமக்கெல்லாம் உணவு கிடைப்பதே பெரும் திருவிழாதானே.

பிரியங்களுடன்,
பிரபு.

https://m.facebook.com/story.php?story_fbid=10154739846168773&id=595298772

No comments:

Post a Comment