சமணர்களைக் கழுவேற்றியது மட்டும் பொய்யா? - அருணன்
"காலச்சுவடு" கட்டுரைக்கு பதில்:
"சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா?" எனும் தலைப்பில் பி.ஏ.கிருஷ்ணன் என்பார் "காலச்சுவடு" ஏட்டில் (நவம்பர், 2013) ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதிலே அவர் வருகிற முடிவு: "சமணர்கள் கழுவேற்றப்பட்டார்கள் என்பது புராணக் கதை. ஜைன நூல்களிலோ, கல்வெட்டுகளிலோ அல்லது அப்பர், சம்பந்தர் பாடல்களிலோ இந்தக் கதைக்கு ஆதாரம் கிடையாது".
புராணங்களை எல்லாம் இப்படிக் "கதை" என்று இவரைப் போன்றவர்கள் முடிவு கட்டிப் பிரகடனப்படுத்தி, அதை இந்து மதவாதிகளும், மடாதிபதிகளும் அங்கீகரித்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்! பெரிய புராணத்தில் வரும் 63 நாயன்மார்களுக்கும் விக்கிரகங்கள் செய்து சிவன் கோயிலில் வைத்துக் கும்பிடுகிறார்களே, அறுபத்தி மூவர் திருவிழா நடத்துகிறார்களே, மதுரை சித்திரைத் திருவிழாவின் போது சமணர் கழுவேற்றிய படலத்தை இப்போதும் மக்கள் மத்தியில் ஒலி பெருக்கி மூலம் பாடுகிறார்களே, அவற்றையெல்லாம் நிறுத்த வேண்டியிருக்கும்! அட, அவ்வளவு வேண்டாம், பெரிய புராணத்தில் வரும் கூன்பாண்டியன், மங்கையர்க்கரசி, குலச்சிறையார் போன்றறோர் எல்லாம் சரித்திர புருஷர்கள் அல்ல, அவர்களைச் சம்பந்தர் சந்தித்தார் என்பதும் வரலாற்று உண்மை அல்ல என்று மட்டும் சொன்னால்கூடப் போதுமே! சொல்லுவார்களா?
அதற்குள் எல்லாம் போகவில்லை இந்தக் கட்டுரையாளர். மதுரையிலே சமணர்கள் கழுவேற்றப்பட்டார்கள் எனப் பெரிய புராணத்தில் வருவது மட்டும்தான் "கதை"! மற்றதெல்லாம்? அதெல்லாம் தெரியாது. எங்களுக்கு இடைஞ்சலான பகுதிக்கு மட்டுமேதான் நாங்கள் இதர ஆதாரங்களைக் கேட்போம். இல்லையென்றால் வெறும் கதைதான்- புராணக் கதைதான்!
ஏழாம் நூற்றாண்டில் நடந்த பலவற்றில் இந்தக் கழுவேற்றத்திற்கு மட்டும் கல்வெட்டு ஆதாரம் கேட்கிறார்! "சமணத்தின் அடையாளங்கள், குறிப்புகள், கலாச்சாரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன என்று கூறுவது முற்றிலும் தவறு" என்று எடுத்த எடுப்பிலேயே ஓங்கிச் சொன்னவர், பின்னர் சமணர்களைப் பற்றி சம்பந்தரும் ஆழ்வார்களும் கரித்துக் கொட்டியிருப்பதைப் பட்டியலிட்டுவிட்டு, அதை நியாயப்படுத்தும் வகையில் "சமணர்களும் இவற்றைப் போலப் பல `வசவு' ப் பாடல்களை எழுதியிருக்கலாம். அவை அழிந்துவிட்டன என்று கமில் சுவலபில் கருதுகின்றார்" என்று தன்னையறியாமல் உண்மையின் இன்னொரு முகத்தைக் காட்டிவிடுகிறார்.
அதுமட்டுமல்லாது, "படுகொலை நடந்ததாகக் குறிப்பிடப்படும் இடத்தில் சுமார் அறுநூறு ஆண்டுகளுக்குக் (கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரை) கல்வெட்டுகள் ஏதும் இல்லை என்கிறார்" பால் முண்டாஸ் எனும் ஆய்வாளர் என்றும் கட்டுரையாளர் கூறுகிறார். கூடவே, "சமணர்கள் அந்த இடத்திலிருந்து துரத்தப்பட்டிருக்கலாம் அல்லது அவர்களாகவே வெளியேறி இருக்கலாம்" என்று அதற்கொரு காரணத்தையும் கூறியிருக்கிறார்.
இப்படி எதைப்பற்றியும் கல்வெட்டுகளே கிடைக்காத நிலையில்தான் கழுவேற்றத்திற்கு மட்டும் கல்வெட்டு ஆதாரம் கேட்கிறார் இந்தக் கட்டுரையாளர்! கல்வெட்டு ஆதாரம் இல்லாதது எல்லாம் வெறும் கதைதான் என்று முடிவு கட்டினால் சங்க இலக்கியம் தொட்டு பழந்தமிழ் படைப்புலகம் காட்டும் நிகழ்வுகள் எல்லாம் வெறும் கற்பனையே எனச் சொல்ல வேண்டியிருக்கும். கல்வெட்டு ஆதாரம் கிடைத்தால் கூடுதல் வலுதான். அது கிடைக்காத நிலையில் இலக்கியங்கள் காட்டும் சித்திரங்களிலிருந்து சரித்திரத்தை வடித்தெடுக்கிற முயற்சி நடக்கத்தான் செய்யும். அதிலே நுணுக்கமான கவனம் வேண்டும் என்று வற்புறுத்தலாமே தவிர அந்த முயற்சியே கூடாது என்றால் நமக்கு சரித்திர வெறுமையே மிஞ்சும்.
மிகுந்த ஆய்வுப் புலமையோடு "பல்லவர் வரலாறு" எழுதியவர் ம.இராசமாணிக்கனார். ஏழாம் அல்லது எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவர் எனக் கருதப்படும் திருமங்கை ஆழ்வார் "பல்லவன் மல்லையர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே" என்று பாடியிருக்கிறார். காஞ்சியில் உள்ள அந்த விண்ணகரத்தின் உட்சுவர் நிறையச் சிற்பங்கள் உள்ளன. அவற்றில் சில பல்லவ மல்லனின் சமயக் கொள்கையைக் குறிக்கின்றன. "அரசருக்கு எதிரில் துறவிகள் இருவர் கழுவில் ஏற்றப்பட்டுள்ளனர். இச்சிற்பத்திற்கு வலப்புறம் ஆழ்வார் சிலைகொண்ட கோவிலையும், அதன் வலப்புறம் வைகுந்தப் பெருமாள் கோவில் போன்ற கோவிலையும் குறிக்கும் சிற்பங்கள் காணப்படுகின்றன. ஆழ்வார் சிலை முதல் மூன்று ஆழ்வாருள் ஒருவரைக் குறிப்பதாகலாம். அவர் அக்காலத்தில் பூசிக்கப்பட்டவர் போலும். சமணர், புத்தர் போன்ற புறச் சமயத்தவரை அழித்து வைணவத்தை நிலைநாட்ட முயன்றதைத்தான் இச்சிற்பங்கள் உணர்த்துகின்றன" என்கிறார் இராசமாணிக்கனார்.
மாற்றுச் சமயத்தவரைக் கழுவில் ஏற்றுகிற பழக்கம் நடைமுறையில் இருந்திராமல் அது இப்படிக் கோயில் சுவரில் சிற்பங்களால் நின்றிருக்க வாய்ப்பில்லை. பல்லவ ராஜியத்தில் இருந்த இந்தப் பழக்கம் அந்நாளில் பாண்டிய ராஜியத்திலும் இருந்திருந்தால் ஆச்சரியப்பட ஏதுமில்லை. மதுரையில் சமணர்கள் கழுவேற்றப்பட்டது பற்றியும் இதே நூலில் இராசமாணிக்கனார் குறிப்பிட்டுள்ளார்.
பெரிய புராணம் எழுதிய சேக்கிழாராகிலும் 12ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். "திருத்தொண்டர் திருவந்தாதி" பாடிய நம்பியாண்டார் நம்பி 10ம் நூற்றாண்டைச் சார்ந்தவர். சம்பவம் நடந்து முந்நூறு ஆண்டுகளிலேயே இதே தமிழகத்தில் வாழ்ந்தவர். இவரைப் பற்றி இதே வரலாற்றாளர் கூறுவதைக் கேளுங்கள்: "இராசராசன் காலத்தவரான நம்பியாண்டார் நம்பி தாம் பாடிய சம்பந்தரைப் பற்றிய பாக்களில் பல இடங்களில் சமணர் கழுவேற்றப்பட்டனர் என்பதைத் தெளிவாக விளக்கியுள்ளார். இவர் எதனைச் சான்றாகக் கொண்டு இங்ஙனம் பல இடங்களில் குறித்தார்? இவர் காலத்தில் அச்செய்தி நாடெங்கும் பரவி இருந்திருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது அன்றோ?"
சேக்கிழாரின் பெரிய புராணத்தை முழுக்க முழுக்கப் படைப்பாளியின் கற்பிதம் என்று சொல்லிவிட முடியாது. அப்பர், சம்பந்தர், சுந்தரர், காரைக்காலம்மையார் போன்றோர் பற்றிக் கல்வெட்டு ஆதாரம் இல்லையென்றாலும் அவர்கள் பாடிய பாடல்கள் இருப்பதால் அவர்க்ள் மெய்யாலும் வாழ்ந்தார்கள் என்பது நிச்சயமாகிறது. இதுபோல மற்ற நாயன்மார்களும் மெய்யாக வாழ்ந்தவர்களாக இருக்கலாம். அவர்களது செயல்பாடுகள் கூடுதல் குறைச்சலான புராணமயப்படுத்தலோடு பதிவு செய்யப்பட்டிருக்கலாம். சமணத்திற்குச் சேவை செய்த 63 பேரின் வாழ்க்கைக் கதைகளை "ஸ்ரீபுராணம்" என எழுதப்பட்டிருக்க, அதற்குப் போட்டியாகவே சைவர்களின் சார்பில் சேக்கிழார் இந்தத் "திருத்தொண்டர் மாக்கதை"யை - பெரிய புராணத்தை - இயற்றினார் எனும் கூற்றிலும் உண்மை இருக்கலாம்.
அதனால்தான் வரலாற்றாளர்கள் இந்த இலக்கியச் சான்றுகளைச் சட்டென்று ஒதுக்கிவிடுவதில்லை. தமிழகத்து இராசமாணிக்கனார் மட்டுமல்லாது வடபுலத்து கைலாஷ் சந்த் ஜெயினும் இதையெல்லாம் கணக்கில் கொண்டுள்ளார். மூன்று பாகங்களைக் கொண்ட பெருநூல் அவருடைய "சமணத்தின் வரலாறு". அதில் "தமிழ்த் தேசம்" எனும் பகுதியில் இந்தக் கழுவேற்றத்தைக் குறித்துள்ளார். தங்களது முன்னோர்கள் இவ்விதமான கொடூரத்திற்கு ஆளாக்கப்பட்டார்கள் என்கிற வேதனையோடுதான் இன்றளவும் தமிழகத்துச் சமணர்களும் உள்ளனர் என்பதை அவர்களோடு பழகும் எவரும் உணருவர்.
காலச்சுவடு கட்டுரையாளர் அப்பர், சம்பந்தர் காலத்திற்கு முன்பு சமயப் பூசலே இல்லை என்று அடித்து விடுகிறார். மணிமேகலையிலும் இல்லை என்கிறார். அதில் சமய வாதத்திற்காகவே "சமயக்கணக்கர் தம் திறம் கேட்ட காதை" என்பது உள்ளதும், பவுத்த மணிமேகலை "நிகண்டவாதி" எனப்பட்ட சமணவாதியைச் சந்தித்து மோதியதையும் அவர் வாசிக்கவில்லை போலும். அங்கே வேதவாதியோடும் கருத்து மோதல் நடக்கும். சமண நூலாகிய நீலகேசியிலும் பவுத்தவாதி, வேதவாதி உள்ளிட்டோரோடு கடும் வாக்குவாதம் நடக்கும். இதன் தொடர்ச்சிதான் மூவர் தேவாரத்தில் சமண - புத்தம் பற்றி வரும் மிக மோசமான இழிமொழிகள். எனினும், மணிமேகலை - நீலகேசியோடு ஒப்பிடும் போது விவாதத்தின் தரம் மிகக் கீழானதாகவும், கருத்தியல் தளத்திலிருந்து இறங்கி சமண - பவுத்தர்களின் பழக்கவழக்கங்களைக் கேலி செய்வதாகவும் மாறிப் போயிருந்தது என்னவோ உண்மை.
ஆனால், இதனைக் கொண்டு மதுரையில் சமணர்களுக்கும் சம்பந்தருக்கும் இடையே வாதமே நடந்திருக்காது என்று முடிவு கட்டிவிட முடியாது. மணிமேகலை - நீலகேசி பாணியில் அல்லாது ஏதோவொரு பாங்கில் அது நடந்திருக்கலாம் என்பதையே "அனல்வாதம்", "புனல்வாதம்" என்று பெரிய புராணம் செப்புவது உணர்த்துகிறது. அதன் முடிவில் தோற்றவர்கள் கழுவேறியிருக்கலாம் அல்லது ஏற்றப்பட்டிருக்கலாம். போட்டியில் தோற்றால் அதற்குரிய தண்டனையை ஏற்பது எனும் உறுதிமொழியோடு அதில் பங்கேற்கும் பாரம்பரியம் இந்த "புண்ணிய பூமி"யில் உண்டு. குறிப்பாக, வென்றவர் மதத்திற்கு மாற வேண்டியிருந்தது. அதைத் தாங்க முடியாதவர்கள் மரணத்தைத் தழுவத் தயாராவது அந்தக் காலத்தில் அதிசயம் அல்ல.
அந்த நிலப்பிரபு யுகத்தில் அரசானது மதச்சார்புள்ளதாகவும், அதற்கான பலாத்காரம் சார்ந்ததாகவுமே இருந்தது. கிறிஸ்து அஹிம்சை பேசினார். அவரது மதம் அரச மதமானதும் அதுவும் பலாத்காரத்தைப் பயன்படுத்தியது என்பதே நிலப்பிரபுத்துவ ஐரோப்பிய வரலாறு. பாரதத்தின் வேத மதமோ ஒரு பேச்சுக்குக்கூட அஹிம்சை பேசாதது. அதன் கிளைகளாகிய சைவமும் வைணவமும் ஹிம்சையை ஒரு கருவியாகக் கையில் கொண்டிருந்ததில் ஆச்சரியமே இல்லை.
தன்னோடு வாது செய்ய வந்த புத்த நந்தியின் தலையில் இடி விழட்டும் என்று சம்பந்தர் சொன்னதும், அவரது தலை அறுபட்டது என்று சீடர்கள் வந்து சொன்னதும் உற்சாகம் கொண்ட சம்பந்தர் "ஆ! ஆ!" என்று முழக்கமிடுங்கள் என உத்தரவிட்டார் என்கிறது பெரிய புராணம்! இதையும் "புராணக் கதை" என்று காலச்சுவடு கட்டுரையாளர் கூறினால் "வெறுப்போடு சமண முண்டர் விதியில் சாக்கியர்கள் நின்பால் / பொறுப்பரியனகள் பேசில் போவதே நோயதாகி/ குறிப்பெனக் கடையுமாகில் கூடுமேல் தலையை ஆங்கே/ அறுப்பதே கருமம் கண்டாய் அரங்க மாநகர் உளானே" என்று தொண்டரடிப் பொடி ஆழ்வார் கொலைவெறியோடு பாடியிருப்பதைத்தான் சமர்ப்பிக்க வேண்டும்.
அன்றைய மெய்யான சரித்திர வாழ்வை மனதில் கொள்ளாமல் இந்து மதத்தைக் கழுவேற்றம் போன்ற பழிகளிலிருந்து எப்படியாகிலும் காப்பாற்றி விடுவது எனக் கங்கணம் கட்டி அந்தக் கட்டுரையாளர் எழுதியிருப்பதால் இந்தச் சமர்ப்பணம் தேவைப்படுகிறது. கழுவேற்றத்திற்குக் கல்வெட்டு ஆதாரம் கேட்கிறவர் வலுவான ஆதாரங்கள் உள்ள உண்மைகளைக் கூடக் கூச்சமேயில்லாமல் மறைத்து எழுதுகிறார். நோக்குங்கள் இதை: "அரசர்களைச் சமண வழியிலிருந்து திசை திருப்ப ஒரு கூட்டணி உருவாகியது. இது பிராமண - வெள்ளாளக் கூட்டணி என்று பர் டன்ஸ்டெயின் கூறுகிறார். அப்பர் வெள்ளாளர், சம்பந்தர் பிராமணர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்தக் கூட்டணி அகிம்சையைப் போதிக்கவில்லை. ஆனால், வன்முறையில் ஈடுபட வேண்டிய தேவையும் இல்லை. சமண மதம் என்றுமே பொதுமக்கள் மத்தியில் அதிக அளவில் செல்வாக்கு பெற்ற மதமாக இருந்திருக்கும் வாய்ப்புகள் குறைவு."
எதை வைத்து இப்படியொரு அதி முக்கியமான முடிவுக்கு வந்தார்? சகலத்திற்கும் கல்வெட்டு ஆதாரம் கேட்கும் இந்த மேதாவி இதற்கு மட்டும் எந்த ஆதாரமும் காட்டவில்லை. அவர் சொன்னால் நாம் ஏற்க வேண்டியதுதான்! நல்லது. சமணம் அன்று அதிக செல்வாக்கு பெற்றதில்லை என்றால் வேறு எந்த மதம் அப்படி இருந்தது? அதையும் சொல்லவில்லை. ஆனால், இப்படி யொரு ஆதாரமற்ற முடிவுக்கு அவராகவே வந்து கொண்டு, ஆகவே வன்முறையில் ஈடுபட வேண்டிய தேவையும் இல்லை என்று பிரமாதமாகப் பிரகடனப்படுத்துகிறார்!
கல்கத்தா பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியராகிய அசிம் குமார் சாட்டர்ஜி "சமணத்தின் விரிவான வரலாறு - கி.பி.1000 வரை" என்று ஓர் ஆய்வுப்பூர்வமான நூலை எழுதியிருக்கிறார். அதில் காலச்சுவடு கட்டுரையாளரின் பிரகடனத்திற்கு மேர்மாறாக இப்படி உள்ளது: "இனித் தமிழ்நாடு பக்கம் நமது கவனத்தைத் திருப்புவோம். மிக ஆதி நாட்களிலிருந்தே இந்தியாவின் தெற்குப் பகுதிகளில் சமணம் செழிப்பான நிலையில் இருந்தது என்பதை ஏற்கனவே கண்டு வந்தோம். ஏழாவது நூற்றாண்டிலும் இந்த மதம் தமிழ்நாட்டில் தனது பெரும் பிரபல்யத்தைத் தக்க வைத்திருந்தது. இது யுவான் சுவாங்கின் வாக்குமூலத்தால் நேரடியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. சோழ, திராவிட, மல கூட எனும் இந்தியாவின் மூன்று தென் ராஜியங்களிலும் கணக்கற்ற திகம்பரர்களும், அவர்களது வழிபாட்டுத்தலங்களும் இருந்ததை அவர் கண்டார். ஒரு தீவிரமான பவுத்தரும், தனது மத விரோதிகளிடம் நடப்பில் எவ்வித மதிப்பும் கொண்டிராத ஒருவரின் இந்த வாக்குமூலம் மிக முக்கியமானது."
காலச்சுவடு கட்டுரையாளர் இது தொடர்பான வரலாற்றாளர்கள் என்று யார் யார் பெயரையோ குறிப்பிட்டிருக்கிறாரே தவிர இந்த சாட்டர்ஜியைக் கண்டுகொள்ளவில்லை. காரணம், அந்த ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தில் சமணமே தழைத்தோங்கியிருந்தது என்று அவர் குறிப்பிட்டது மட்டுமல்லாது, அதனாலேயே அதை ஒழித்துக் கட்ட அரசு பயங்கர வாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டார்கள் என்பதையும் அவர் கூறியிருக்கிறார். இதோ அந்த வரிகள்: "சில பல்லவ ராஜாக்களின் ஆட்சியில் ஒரு சில தீவிர சைவ - வைணவ ஆச்சாரியார்கள் பிரபுக்களையும் வெகு மக்களையும் சமணர்கள் - பவுத்தர்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டார்கள் எனச் சந்தேகிக்க காரணம் உள்ளது. சமணர்கள் தீர்த்துக்கட்டப்பட்ட அந்தக் கொடூர விபரங்களைப் பின்னாளைய சில வைணவ - சைவ படைப்புகள் உற்சாகத்தோடு வருணித்தன... தென்னிந்தியாவின் இலக்கியப் பாரம்பரியத்தின் படி தென்னிந்திய சைவ தத்துவாதிகாகிய அப்பரின் செல்வாக்கால் முதலாம் மகேந்திர வர்மன் சைவத்திற்கு மாறினான். இந்த மாற்றத்திற்குப் பிறகு இந்த ராஜா சமணர்களைத் தீர்த்து க்கட்டுகிறவனாக ஆனான்." சேக்கிழாரின் சித்திரத்தை வெறும் "புராணக் கதை" என்று இந்த வரலாற்றாளர் ஒதுக்கித் தள்ளவில்லை என்பதைக் கவனிக்கவும்.
இன்றைக்கு சைவம் - வைணவம் எல்லாம் கலந்த இந்து மதம் எனப்பட்டது தமிழகத்தில் பெரும்பான்மை மதமாக உள்ளது. அந்த ஏழாம் நூற்றாண்டில் நிலைமை அப்படி இல்லை. சைவம், வைணவம் எனப்பட்ட வேத மதங்கள் எல்லாம் சிறுபான்மையாக இருக்க சமணமே பெரும் பான்மையாக இருந்தது. பவுத்தம் கூடச் சிறு பான்மை மதமே. அதுமட்டுமல்ல, பல்லவ, சோழ, பாண்டிய மன்னர்கள் மூவரும் சமணர்களாக இருந்தார்கள். பெரிய புராணத்துச் சித்திரத்தின்படி பல்லவனை அப்பர் மாற்றினார். சோழனைத் தண்டியடிகள் மாற்றினார், பாண்டியனை சம்பந்தர் மாற்றினார். அப்படி ராஜாக்கள் மாறியும் முனிவர்கள் மாறாத நிலையில், அவர்களையும் மாற்றினால்தான் வெகு மக்களும் மாறுவார்கள் என்ற சூழலில் அரசு பயங்கரவாதம் பிரயோகிக்கப்பட்டது. இதற்கான முன்னறிவிப்பு தேவாரத்திலும், பாசுரங்களிலும் உள்ளது என்றால், அது செயல்வடிவம் பெற்றதன் புராணியப் பதிவு சேக்கிழாரின் நூலில் உள்ளது. பாதிக்கப்பட்ட சமணர்களின் பதிவு அல்ல, ஒடுக்கிய சைவர்களின் பெருமிதப் பதிவு! அதை ஏன் நம்பக் கூடாது?
தமிழகத்தில் சமணம் அன்று தழைத்தோங்கி இருந்த காரணத்தால்தான் அதை ஒழிக்க இருமுனைத் தாக்குதல் தொடுக்கப்பட்டது. ஒருபுறம் சமணத்திலிருந்த சில பலவீனங்களைச் சுட்டிக்காட்டி மக்களை சைவம் - வைணவத்தின் பின்னால் ஈர்க்கும் மிகப் பெரிய பிரச்சாரம் நடத்தப்பட்டது என்றால், மறுபுறம் தங்கள் பக்கம் முதலில் வந்துவிட்ட மன்னர்களைப் பயன்படுத்தி பலாத்காரத்தில் இறங்கும் வேலையும் நடந்தது.
"பாடலிபுத்திரத்தில் அமண் பள்ளியொடு பாழிகளும் / கூட இடித்துக் கொணர்ந்து குண பரவீச்சரம் எடுத்தான்" என்று பல்லவன் மகேந்திர வர்மனைப் புகழ்கிறார் சேக்கிழார். பழையாறை வடதளிக்குச் சென்ற அப்பர் அங்கிருந்த சமணப் பள்ளியை சிவன் கோயில் என்று வம்பு செய்தார். அதாவது, பாபர் மசூதி - ராமன் கோயில் போன்ற விவகாரம் அந்தக் காலத்திலேயே நடந்தது. அன்றைய அரசன் அப்பரின் சொல்லுக்கு ஆட்பட்டு அந்தச் சமணப் பள்ளியை இடித்துக் கோயில் கட்டி "அமணர் வேரறுத்தான்" என்கிறார் அவரே. திருவாரூரில் உள்ள கமலாலயம் குளத்தையொட்டி அந்தக் காலத்தில் சமணப் பாழிகள் இருந்தன. குளத்தை விரிவுபடுத்த அந்தப் பாழிகளை இடிக்க வேண்டும் என்றார் தண்டியடிகள். அதை எதிர்த்த சமணர்களின் கண்களைப் பிடுங்கி ஊரைவிட்டே துரத்தினான் சோழ ராஜா. "பாழி பள்ளிகளும் பறித்துக் குளம் சூழ் கரைபடுத்து மன்னவனும் மன மகிழ்ந்து வந்து தொண்டர் அணி பணிந்தன" என்று மேலும் உற்சாகமாய்ப் பாடியிருக்கிறார் சேக்கிழார். இவற்றுக்குப் பெயர்தான் "வன்முறையில் ஈடுபட வேண்டிய தேவையும் இல்லை" என்பதோ?
கேட்டால் இவையெல்லாமே "புராணக் கதை" என்ற செப்பக்கூடும் காலச்சுவடு கட்டுரையாளர். இவருக்கு இடையூறான பகுதிகளை மட்டும் நிராகரிப்பது, பெரிய புராணத்தில் உள்ள மற்றவற்றை ஏற்றுக்கொள்வது எனும் ஒரு வினோத பகுத்தாய்வு முறையை பின்பற்றுகிறார் அவர். "மங்கையர்க்கரசி வளவர் கோன் பாவை சைவத்தை ஆதரித்ததால் பாண்டியநாட்டு மன்னன் நெடுமாறன் ஆதரவும், தந்தையான சோழ மன்னன் ஆதரவும் சைவத்திருக்குக் கிடைத்துவிட்டது" என்று புளகாங்கிதப் பட்டுக் கொள்கிறவர் அதற்கு சம்பந்தர் மங்கையர்க்கரசியோடு சேர்ந்து செய்த திட்டமிடலை மட்டும், அதன் காரணமாக முடிவில் நடந்த கழுவேற்றத்தை மட்டும் ஏற்க மறுக்கிறார்! ஏற்பது, ஏற்க மறுப்பது எல்லாவற்றுக்குமே உள்ளது இலக்கியச் சான்றுதான் என்பதை இங்கே மறந்து போனார்!
உண்மை என்னவென்றால்; தமிழகத்தில் சமணம் பெரிதும் செல்வாக்கு பெற்ற மதமாக இருந்ததால் மன்னர்கள் மாறிய உடனே மக்கள் மாறிவிடவில்லை. ஆங்காங்கே பலாத்காரத்தை அரசு பயன்படுத்த வேண்டியிருந்தது. அதற்கான சாட்சியங்கள்தாம் திருத்தொண்டர் திருவந்தாதியிலும், பெரிய புராணத்திலும் தட்டுப்படுபவை. சமணர்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தின் அளவில் வேண்டுமானால் உயர்வு நவிற்சி இருக்கலாம். உதாரணமாக, "எண்ணாயிரம்" என்பது மெய்யாலும் எண்ணிக்கையைக்குறிக்கிறதா அல்லது பலர் எனும் பொதுப் பன்மையைக் குறிக்கிறதா என்று சந்தேகம் வரலாம். ஆனால், மதுரையைச் சுற்றி சமணர்களின் எண்பெருங் குன்றங்கள் உள்ளன. அவற்றில் இப்போதும் சமணர் விட்டுச் சென்ற அடையாளங்கள் உள்ளன, அந்த எண் பெருங் குன்றங்களைச் சார்ந்த முனிவர்களே கழுவேற்றப்பட்டார்கள் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. அந்த அளவுக்கு இலக்கிய, பாரம்பரியச் சாட்சியங்கள் மண்டியுள்ளன. இதில் கழுவேற்றத்தை மட்டும் கத்தரித்து எடுத்துவிட்டு, பெரிய புராணத்தின் மற்ற கூறுகளை ஏற்கும் செலக்டிவ் அம்னீஷியா வியாதியை ஏற்க முடியாது.
இன்னுமொரு விஷயம் ராஜாக்களின் இத்தகைய பயங்கரவாதச் செயல்களுக்குப் பிறகும் சமணம் தமிழ்நாட்டிலிருந்து முற்றிலுமாகத் துடைத்தெறியப்படவில்லை. 8-10ம் நூற்றாண்டுகளில் கூட பல்லவ, சோழ, பாண்டிய சாம்ராஜியங்களில் சமணம் பரவலாக இருந்ததை நிறைய கல்வெட்டுச் சான்றுகள் காட்டுகின்றன என்று சொல்லி, அவற்றைப் பட்டியலிட்டிருக்கிறார் அசிம் குமார் சாட்டர்ஜி. அதனால்தான் 12ம் நூற்றாண்டிலும் சேக்கிழார் போன்றவர்கள் கிளம்பி சமண எதிர்ப்பு இலக்கியங்களை ஆற்றியிருக்கிறார்கள், அவற்றின் வழியாக சமண ஒடுக்கு வரலாற்றுப் பதிவுகளைச் செய்து அவற்றை நினைவூட்டியிருக்கிறார்கள் எனலாம்.
மதமாற்றம் என்பது ஆட்சி மாற்றம் போலச் சட்டென்று நடந்து விடுவதில்லை. அதற்குப் பலமுனைத் தாக்குதல்கள் தேவை. சகலத்தையும் பயன்படுத்தித்தான் தமிழகத்தில் சமணம் - பவுத்தத்தை ஒழித்துக் கட்டி சைவம் - வைணவம் வளர்ந்தது. வளர்ந்தவுடன் சைவம் மற்றும் வைணவத்திற்கு இடையேயும் கடும் மோதல் வெடித்தது. இன்னும் வேடிக்கை என்னவென்றால், சைவத்திற்குள்ளேயும், வைணவத்திற்குள்ளேயும்கூட பிரிவுகள் தலைதூக்கின. வைணவத்திற்குள்ளே தென்கலை - வடகலை என்று உரசிக் கொண்டது வெகுகாலம் நீடித்தது. இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் இங்கே அரசியல் அதிகாரம் பெற்ற போதுதான் சைவமும் வைணவமும் தம் பூசலைச் சற்றே ஒதுக்கி வைத்து ஒன்றுபடத் துவங்கின. இன்று வேதமதவாதிகள் பெருமையாகப் பேசிக்கொள்கிற "இந்து மதம்" எனப்பட்டது பிற்காலத்தில் எழுந்த ஓர் ஒருங்கிணைப்பு ஏற்பாடுதான்.
இன்றைக்கும் முந்திய காலம் போல பழமைவாதிகள் கிளம்பி தங்களின் வேத மதத்தைக் காத்து நிற்கவும், அதற்கு வெள்ளையடித்து பளபளப்பாக்கவும் முனைகிறார்கள். அந்த வேலையில் தான் காலச்சுவடு கட்டுரையாளரும் இறங்கியிருக்கிறார். அதற்காக அவருக்கு திடீரென்று புராணீய நோக்கு மறைந்து "வரலாற்று நோக்கு" வந்திருக்கிறத! ஆனால், அந்த வரலாற்று நோக்கு இந்துப் பழமைவாத சார்பு நோக்காக இருப்பது தெளிவாக அம்பலமாகிறது. காத்தவராயனைக் கழுவேற்றியதும், அந்தக் கழுமரம் அவனது கோயில் தோறும் இருப்பதும் மத - சாதிய வாதிகள் தந்த கொடுந் தண்டனை முறைகளில் இதுவும் என்று என்பதற்கு நிலையான சாட்சியாய் இப்போதும் நம் கண்முன்னால் நிற்கிறது. அதைக் கண்ட பிறகும் பெரிய புராணத்தின் அந்தப் பகுதிளை மட்டும எப்படிப் பெரிய பொய்யாகக் கருதுவது?
தற்காலத்தில் நடந்த காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கில் வேண்டுமானால் நேரடி சாட்சியம் கேட்டு குற்றவாளிகள் தப்பித்து விடலாம். ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த படுகொலைகளுக்கு எந்த வரலாற்றுப் பின்புலத்தில் அவை நடந்தன எனும் சூழல் சார்ந்த சாட்சியமே கிடைக்கும், அதிலிருந்து குற்றவாளிகள் ஒரு நாளும் தப்பிவிட முடியாது என்பதை இந்துப் பழமைவாதிகள் உணர வேண்டும்.
Sunday, April 21, 2019
சமணர்களைக் கழுவேற்றியது மட்டும் பொய்யா? - அருணன் "காலச்சுவடு" கட்டுரைக்கு பதில்:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment