Sunday, April 21, 2019

முட்டாள் முன்னோர்களும், அறிவியலும் - அப்துல்லாஹ்

M. M. Abdullah
2019-04-21

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டில் இப்போது இருப்பதை விட நான்கில் ஒரு பகுதிதான் ஜனத்தொகை!! "முப்பது கோடி முகமுடையாள்னு" பாரததேவியை வர்ணித்து பாரதி எழுதுன பாட்டு நியாபகம் இருக்கா? அவ்வளவுதான் ஜனத்தொகை!!

அந்த சமயத்தில் தமிழ்நாட்டில் எல்லாருமே கிட்டத்தட்ட விவசாயம்தான் செஞ்சிட்டு இருந்தோம். அத்தனை ஆறுகளிலும் தண்ணீர் ஓடியது. "சோழ நாடு சோறுடைத்து!".. " மாடு கட்டி போரடிச்சா மாளாது செந்நெல்லு..யானை கட்டிப் போரடிச்ச அழகான தென் மதுரை" என குவிந்த விவசாய உற்பத்தி குறித்து பெருமிதம் எல்லாம் கேள்விப்பட்டு இருப்போம்!!

அந்தக் காலத்து சாப்பாட்டை சாப்பிட்டு எங்க தாத்தால்லாம் என்பது தொன்னூறு வயசு வரைக்கும் ஹெல்த்தியா இருந்தாராம் தெரியுமா!?" என்ற ஆச்சர்யப் பேச்சுக்களையும் அடிக்கடி கேட்டு இருக்கலாம்!!

இப்படியான ஒரு அருமையான பொற்காலத்தை இழந்து விட்டு  இருக்கிறோமே என்ற ஏக்கம் நம் மனதில் நம்மையும் அறியாமல் தோன்றி வாட்டும்.

"எங்க சார்.. எல்லா வயலையும்.பிளாட் போட்டாங்க! விவசாயம் எல்லாம் போச்சு சார். இனி எதிர்காலத்துல சோத்துக்கு என்ன பண்ண போறாங்கன்னே புரியலை சார்!!" என்ற வாட்டமான குரல்களைப் பல இடங்களில் கேட்டு இருப்போம். கேட்டு நாமும் கவலைப்பட்டு இருப்போம்.

விசயத்துக்கு வருவோம்...

வெறும் முப்பது கோடி பேர் வாழ்ந்த காலத்துல...அதாவது நாட்டுல வாழ்ந்த எல்லாருமே விவசாயத்தை மட்டுமே சார்ந்து வாழ்ந்த அந்தக் காலத்துல..ஆறு முழுக்க தண்ணி கரை புரண்டு ஓடுன அந்தக் காலத்துல.. பட்டினி சாவுகள் மிக சகஜம். வறுமை என்பது தீராமல் இருந்த காலம்! நாடு முழுவதும் விவசாயம் மட்டுமே செய்து கொண்டு இருந்த அந்தக் காலத்தில் தான் உணவுக்கு வழியின்றி பஞ்சம் பிழைக்க தமிழர்கள் கூட்டம் கூட்டமாக கப்பல் கப்பலாக ஏறி மொரிஷீயஸ், தென் ஆப்ரிக்கா, மேற்கிந்திய தீவுகளின் கரும்பு தோட்டத்திற்கு கூலிகளாகச் சென்றனர். மலேஷியாவின் ரப்பர் தோட்டங்களுக்கும், இலங்கையின் தேயிலை தோட்டங்களுக்கும் கூட்டம் கூட்டமாகக் கொத்தடிமைகளாக கப்பல் ஏறினர்!!

பர்மாவில் இருந்து துரத்தி அடிக்கப்பட்டு பல ஆயிரம் மைல்கள் நடந்தே வந்து சேர்ந்த பர்மா தமிழ் அகதிகளின் சோகக் கதைகள் நிழந்ததும் நாம் முழுக்க முழுக்க விவசாயம் பார்த்துக் கொண்டு இருந்த காலகட்டத்தில்தான்!!

ஊரே விவசாயம் பார்த்துக் கொண்டு இருந்த போது ஊர் மொத்தத்திற்கும் உணவு கிடைக்கவில்லை!! பஞ்சமும் பட்டினியும் வறட்சியும் மக்களைக் கொத்து கொத்தாக சாவில் தள்ளின!!

ஆனால் வயல்கள் எல்லாம் பிளாட்டாகிவிட்டதாக நாம் வருத்தப்படும் இந்தக் காலத்தில் பஞ்சம் இல்லை பசி இல்லை பட்டினி என்று யாரும் இல்லை!! எப்படி நடந்தது இந்த அதிசயம்?
இதற்கு  ஒரே வார்த்தையில் பதில் சொல்வதானால் அதன் பெயர் "அறிவியல்".

முன்பு நூறு ஏக்கரில் விளைந்த விளைச்சல் இன்று 20 ஏக்கரிலேயே வந்து விடுகிறது. நம் காலத்திற்குப் பிறகு அது 2 ஏக்கரிலும் பின்னர் ரெண்டு செண்ட் நிலத்திலும் கூட விஞ்ஞான ஆய்வின் முன்னேற்றத்தில் வந்து விடலாம்!

பழங்காலத்தில் பாலாறும் தேனாறும் ஓடியதாக சொல்வதெல்லாம் பச்சை பொய் என்பதற்கு நம்மிடம் சங்கப்பாடல்களில் இருந்து சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரான சரித்திரம் வரை சான்றாக இருக்கிறது! வயல்கள் பிளாட்டாகி கிராமங்கள் வேகமாக நகரமயமாகும் இந்தக் காலம்தான் உண்மையிலேயே பசி பட்டினி இல்லா பொற்காலம்!!

"எல்லாம் செரி சார். அப்ப விசமில்லாம நல்ல சோறு சார். இப்ப உரத்தை கொட்டி விசத்தை தானே சார் சாப்பிடுறோம்? " . இதுவும் கேக்க என்னவோ சரியா இருக்குற மாதிரி இருந்தாலும் இதோட உண்மை என்னன்னு பார்ப்போம்.

அந்தக் காலத்துல நம்ம தாத்தா விசமில்லாத சாப்பாட்ட சாப்ட்டு தொன்னூறு வயசு வரைக்கும் கல்லு மாதிரி இருந்தார்ல!  செரி.. நம்ம தாத்தோவோட கூட பொறந்தவங்க எத்தனை பேரு? கொறஞ்சது பத்தில் இருந்து பதினைந்து  பேராவது நம்ம தாத்தாவோட  கூட பிறந்திருப்பாங்க.

ஒரு புள்ளை ரெண்டு புள்ளை மட்டுமே பெக்குற இந்த முப்பது நாப்பது வருசத்துலயே ஜனத்தொகை மூணு மடங்கு கூடி 130 கோடிக்கு வந்திருச்சு!! ஆனா பத்து பதினைஞ்சு புள்ளைங்க நம்ம தாத்தா பாட்டியோட பிறந்த காலத்துல நாட்டுல ஜனத் தொகை ரொம்ம்ம்ப கம்மி!! என்னடா அதியசம் இது!! தோணுதா?

விசயம் ஒண்ணுமில்லை... தாத்தா தொன்னூறு வயசு வரைக்கும் இருந்ததை சொல்வாங்க. ஆனா தாத்தா கூட பொறந்த டிக்கெட் எல்லாம் என்னாச்சுனு நமக்கு சொல்லமாட்டாங்க. நான் சொல்றேன் இப்ப.

தாத்தா கூட பிறந்த பத்து பதினைஞ்சு பேர்ல ரெண்டு மூணு டிக்கெட் பிரசவத்திலேயே செத்து போயிருக்கும். அப்புறம் ஒரு ரெண்டு மூணு டிக்கெட் மூணு நாலு வயசுக்குள்ள வாந்தி பேதில புட்டுக்கும். இன்னும் ரெண்டு மூணு டிக்கெட் பதினாறு பதினெழு வயசுக்குள்ள "ஏதோ ஜூரம்னு படுத்துச்சு போயிருச்சு பாவம்னு" போய் சேர்ந்திருக்கும். கடைசியா தாத்தாவோட மூணு நாலு டிக்கெட் தான் மிச்சம் ஆகிருக்கும். அதுலயும் ஒண்ணு முப்பது முப்பத்தி அஞ்சு வயசுக்குள்ள கிளம்பிருக்கும். மிச்சம் உள்ள ரெண்டு மிஞ்சிப் போனா அறுபது வயசு வரைக்கும் தாக்கு பிடிச்சிருக்கும். இந்த ஒரே ஒரு டிக்கெட் மட்டும்தான் தாக்கு பிடிச்சு தொன்னூறுக்கு வந்திருக்கும்!   மத்ததும் அதே விசமில்லா சோத்தை தின்னதுங்கதானே? அப்புறம் ஏன் எல்லாம் தாத்தா மாதிரி தொன்னூறு வயசு வரைக்கும் இருக்காம முன்னாடியே கிளம்பிருச்சு?

இப்பல்லாம் ஒரு புள்ளை ரெண்டு புள்ளை பெத்தாலும் பெரும்பாலானவர்களுக்கு சராசரியா எழுபது வயசு வரைக்கும் கிடைச்சு போயிருது. சுகரு பிரஷூருன்னு ஆயிரத்தி எட்டு லொட்டு லொசுக்கு வந்தாலும் நாலு மாத்தரையை போட்டுகிட்டு ஜம்ம்னு வாழ்ந்துகிட்டுதான் இருக்கோம். இதற்கும் ஒரே வார்த்தையில பதில் சொல்லணும்னா "அறிவியல்".

அதுனாலதான் பத்து பதினைஞ்சு புள்ளைங்க பெத்த காலத்துல பஞ்சம் பசி பட்டினி பிரசவச்சாவுகள் வியாதினு ஜனத்தொகை கம்மியா இருந்துச்சு. இப்போ அதெல்லாம் போயி வாழ்நாள் நீட்டிப்பால குறைந்த மக்களைப் பெற்றாலும் ஜனத்தொகை கூடுது. குறைந்த இடமாக இருந்தாலும் விளைச்சல் கூடுது!!

இத்தனை கோடி மக்கள் தொகை ஏறும் போது அவர்களுக்கு விவசாய வேலை மட்டும் அளிக்க முடியவே முடியாது. தேவையும் கிடையாது.

ஆகவே யாராவது வந்து விவசாயத்தை மீட்போம்னு சொன்னாலோ, ஆடு மாடு மேய்க்கிறதை அரசாங்க வேலையாக்குறேன்னு சொன்னாலோ மெண்டலைப் பார்க்குற மாதிரி பாருங்க! " பாரம்பரியத்தை மீட்போம்! நாம் தமிழர்" அப்படினு சொன்னாக்கா "ஆமாம். நாம் தமிழர்கள்தான். ஆனால் நீ மெண்டல்" என சொல்லி விட்டு மெதுவாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுங்கள்.

புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா

https://m.facebook.com/story.php?story_fbid=10214496111345188&id=1492154081

No comments:

Post a Comment