Lafees Shaheed
2018-04-12
அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் ஒன்று திரட்டும் கருத்தியல் எனும் வகையில் தேசியவாதத்தை ஓரளவுக்கு உடன்பாடான கண்ணோட்டத்துடன் அணுகியவர், இமாம் ஹஸன் அல் பன்னா. அவர் வாழ்ந்த எகிப்தில் Coptic கிறிஸ்தவர்களும் குடியினர் எனும் வகையில் மதத்தை முன் நிறுத்தாமல் நிலப் பிராந்தியத்தை முன் வைத்து தேசியத்தை பேசிய ஷெய்க் ஹஸன் அல் பன்னாவின் நுட்பம் குறிப்பிடத்தக்க அளவு நடைமுறை சார்ந்தது.
அநீதிக்கு எதிராக போராட்டம் எனும் வகையில் விழுமியங்கள், இஸ்லாத்தின் அகிலத்துவ மதிப்பீடுகள் சார்ந்த வகையில் தேசியம் எனும் குறிப்பான அரசியல் கருத்து நிலையை அவர் Articulate செய்து இருப்பது தான் அவருடைய மேதமையின் அடையாளம். இமாம் பன்னாவின் இத்தகைய சிந்தனைப் பங்களிப்புகளின் மீது புதிய வெளிச்சத்தை பாய்ச்ச வேண்டும். அதன் மூலம் நாம் கடந்து வந்த பாதைகள் குறித்த விமர்சன சிந்தனை கொண்ட பரிசீலனை எமக்குள் உருவாகும்.
தேசியம் என்பது ஒரு அரசியல் கருத்தாக்கம். இதற்கு மாறாக உம்மத் என்பது பண்பாட்டு ரீதியான ஒரு கண்ணோட்டம். ஒரே நம்பிக்கை, கோட்பாடு, மதிப்பீடுகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு மக்கள் குழுவினர் என்று உம்மத் கோட்பாட்டை வரைவிலக்கணம் செய்யலாம் (ஷெய்குல் அஸ்ஹர் இமாம் முஸ்தபா அல் மராகியின் வரைவிலக்கணம் இது). இதன் அடிப்படையில் இன, குல, மொழி மாச்சர்யங்களை மீறிய அகிலப் பொதுவான சகோரத்துவம் என்பதையும், சிந்தனை ஒருமைப்பாடு என்பதையும் நோக்கி இஸ்லாம் அழைப்பு விடுக்கிறது.
ஆனால் ஆதிக்க ஐரோப்பா கீழைத்தேய நாடுகளில் உருவாக்கிய தேசியவாதம் இஸ்லாம் வெறுக்கும் மத, இன வேறுபாடுகள் மூலம் மக்களை பிளவுபடுத்தும் தன்மை கொண்டது என்பதனால் தான் மகா கவி அல்லாமா இக்பால், இமாம் அபுல் அஃலா மௌதூதி போன்றவர்கள் தேசியவாதத்தை கடுமையாக நிராகரித்தார்கள். காலனித்துவத்திற்கு எதிராக மக்களை ஒன்று திரட்டும் சக்தி எனும் வகையில் தேசியவாதத்தை ஆதரித்த ஷெய்க் ஹஸன் அல் பன்னாவும் கூட தேசியவாதத்தின் எதிர்மறை இயல்புகளை, கீழ்மைகளை விமர்சனம் செய்திட தவறவில்லை. அறத்தை முன் வைத்த அரசியல் கண்ணோட்டம் ஹஸன் அல் பன்னாவினுடையது.
பரஸ்பர ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுக்கும் (இதனை அல் குர்ஆனின் இலக்குகளில் ஒன்று என்கிறார், யூசுஃப் அல் கர்ளாவி), மானுட குலத்தின் ஒருங்கிணைப்பு தான் இஸ்லாத்தின் இலட்சியம். இந்த எல்லைக்குள் தான் எந்த அரசியல், தத்துவ கோட்பாடுகளும் செயல்பட வேண்டும் / முடியும். இதற்கு பங்கம் விளைவிக்கும் மானிட நம்பிக்கைகள், அறிவுகள், பண்பாட்டு அசைவுகள், கோட்பாடுகள் என்று எல்லாவற்றையும் இஸ்லாம் மறுக்கிறது. மகா கவி இக்பால் (ரஹ்) போன்றவர்களின் தேசியவாதம் மீதான விமர்சனங்களை இந்த கோணத்தில் நின்று தான் புரிந்து கொள்ள வேண்டும். இக்பால் அவரே கூறியது போல ஒரு Pragmatic. முஸ்லிம்களுக்கென்றே ஒரு நவீனத்துவம் உருவாக வேண்டும் என்று கனவு கண்டவர் அவர். யதார்த்தத்தை புறக்கணித்த மட்டையடித் தனமான கலாச்சார மீட்டுருவாக்க நிலைப்பாடுகளுக்கு எதிரானவர் அவர்.
நாம் இப்போது தேசிய அரசுகள் எனும் புதிய அரசியல் கட்டமைப்புக்குள் வாழ்கிறோம். எமது சமூக கட்டுமானங்களின் அடிப்படை இந்த தேசியம் தான். இன்றைய நிலையில் உம்மத் எனும் பண்பாட்டு கருத்தாக்கத்தை தேசியம் எனும் அரச கட்டமைப்புக்குள் எவ்வாறு உள்ளீர்ப்பது என்று குறித்து நாம் சிந்திக்க வேண்டும். இதற்கு மிகச் சிறந்த நடைமுறை உதாரணம் இந்தியச் சிந்தனையாளரும், அரசியல் வாதியுமான மெளலானா அபுல் கலாம் ஆஸாத் (ரஹ்). இறையியலாளர், அல் குர்ஆன் வியாக்யானி, மொழி ஆய்வாளர், காங்கிரஸ் தலைவர், சுதந்திர இந்தியாவின் முதலாவது கல்வி அமைச்சர் போன்ற பன்முகப்பட்ட அடையாளங்களை கொண்டவர் அபுல் கலாம் ஆஸாத். சமய போதகர், இறையியலாளர் எனும் வகையில் உம்மத் எனும் பண்பாட்டு கருத்தாக்கத்தின் முக்கியத்துவத்தை பெரிதும் அகவயமாக உணர்ந்திருந்த ஆஸாத் அந்த அகவயமான உணர்வு வழிந்தோடும் புறச் செயல்பாடாக தன்னுடைய அரசியல் நிலைப்பாடுகளை, செயல்வாதங்களை அமைத்துக் கொண்டார். தேச அரசுகள் எனும் சமூக யதார்த்தத்தை உணர்ந்து கொண்ட அபுல் கலாம் ஆஸாத்துக்கு இஸ்லாமிய அரசு, முகலாயப் பண்பாட்டுத் தொடர்ச்சி போன்ற மீட்டுருவாக்க கற்பனைகள் இருக்கவில்லை.
தேசியவாதம் குறித்த ஆஸாத்தின் அரசியல் இலட்சியம் கிட்டத்தட்ட ஹஸன் அல் பன்னாவுக்கு நிகராக இருந்தது. பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்திற்கான அறைகூவல் தேசப்பற்று, தேசியவாதம் எனும் வடிவத்தில் தான் அபுல் கலாம் ஆஸாத்திடத்தில் வெளிப்பட்டது. தென்னாசிய நாடுகளின் தேச கட்டமைப்பு வளர்ச்சியுடன் இணைந்து வளர்ந்ததே மெளலானா அபுல் கலாம் ஆஸாத்தின் அரசியல் இலட்சியங்கள். இக்பால் அளவுக்கே நடைமுறை வாதி எனும் வகையில் ஆஸாத் உம்மத் கோட்பாட்டை நடைமுறையுடன் இணைக்க முயன்றார். அவருடைய வாழ்வின் பொருளே இதுதான்.
சிதறலான வடிவில் சில கருத்துக்களை முன் வைத்து இருக்கிறேன். தேசியத்தை புரிந்து கொள்ளல் எனும் இழையில் இவற்றை கோர்க்கலாம் என்று தான் கருதுகிறேன். உரையாடல் தொடர வேண்டும்....!
#இங்கிருந்து அறிவோம்
#பாதையை_செப்பனிடல்
#விடுதலை_இறையியல்
https://www.facebook.com/100005063134008/posts/1225922280919865/
No comments:
Post a Comment