ஆழி செந்தில்நாதன்,
தன்னாட்சித் தமிழகம்.
ஏப்ரல் 12, 2019
*பாஜக பூச்சாண்டி காட்டுகிறோமா?*
தமிழ்த்தேசியர்களுக்கு ஒரு பதில்
(விரிவான பதிவு. கொஞ்சம் நேரமெடுத்துப் படியுங்கள்)
இந்த நேரத்தில் பாடம் எடுத்து என்ன பலன் என்பதால் ஒரு முக்கியமான குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்லாமலேயே விட்டுவிட்டேன்.
ஆனால் ஒரு காலத்தில் மார்க்சிய லெனினிய இயக்கத்தில் இருந்த, பல்லாண்டுகள் தன் அரசியல் செயல்பாடுகளுக்காக சிறைசென்றிருந்த, தமிழர்களுக்காக குறிப்பாக இஸ்லாமியர்களுக்காக போராடிவருகிற ஒரு நண்பர், அன்பு மச்சானாக பழகிய ஒரு நண்பர், நாம் தமிழர் ஆதரவாளர் (அல்லது உறுப்பினர்) நேற்று எழுப்பிய சில கேள்விகளுக்கு பதில் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது.
அத்துடன் கடந்த சில வாரங்களாக நாம் தமிழரில் இல்லாத வேறு பல தமிழ்த் தேசியவாதிகளும் எழுப்பிவரும் ஒரு கருத்துக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.
"நீங்கள்லாம் பாஜக பூச்சாண்டி காட்றீங்க. பாஜக பூந்துரும் பூந்துரும் சொல்லி காங்கிரஸ், திமுகவை ஆதரிக்கிறீங்க" என்பதுதான் அந்தக் கருத்து. குற்றச்சாட்டு. முகநூலில் பாய்ந்து குதறுவதற்கென்றே நேரத்தைச் செலவழிக்கும் நாம் தமிழர் தம்பிகள்தான் இப்படியென்றால், நன்கு படித்த, அரசியல் அனுபவம் உள்ள, நாலு விஷயம் தெரிஞ்சிருப்பாங்க நாம் நம்புகிற வேறு சில மூத்த தோழர்களும் இப்படித்தான் எழுதுகிறார்கள்.
இது எந்த அளவுக்கு வந்திருக்கிறது என்றால், பாஜக பூச்சாண்டி காட்டாதே. என்கிற கருத்தே இப்போது பிரதானப்படுத்தப்பட்டு, அது பாஜகவை காப்பாற்றும் அளவுக்குச் சென்றுவிட்டது.
திமுக - காங்கிரசுக்கு ஓட்டுப்போடாதே என்று சொல்வதையும், அவர்கள் பாஜகவுக்கு மாற்று அல்ல என்று சொல்வதையும் ஓர் அரசியல் நிலைப்பாடு என்று கருதலாம், அப்படி சொல்வதற்கு உரிமையும் உண்டு, காரணமும் உண்டு.
ஆனால் "பாஜக பூச்சாண்டி காட்டாதே. பாஜக பூந்துரும்னு சொல்லாதே" என்று மூச்சுக்கு முப்பத்தெட்டு முறை அலறுகிறார்களே அது என்ன அரசியல் நிலைப்பாடு?
இப்படியா மொத்த பூனைக்குட்டிகளும் பன்றிக்குட்டிகளைப் போல ஒரே நேரத்தில் வெளியே வருவது? Can't believe!!!
*எங்கள் நிலைப்பாடு என்ன?*
இந்தத் தேர்தலில் பாஜக அணி வீழ்த்தப்படவேண்டும் என்றும் அதுவே முதன்மையானது என்றும் அதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் அந்த அணி வேட்பாளரை தோற்கடிக்க வாய்ப்புள்ள பிரதான எதிர்க்கட்சிக்கு வாக்களிக்கவேண்டும் என்றும் தன்னாட்சித் தமிழகம் கருதுகிறது.
அதன் அடிப்படையிலேயே,
* சிதம்பரத்தில் தோழர் திருமாவுக்கும்
* மதுரையில் தோழர் சு வெங்கடேசனுக்கும்
* விழுப்புரத்தில் தோழர் துரை. ரவிக்குமாருக்கும்
நேரடியாக களத்தில் சென்று வாக்குச் சேகரிப்பிலும் ஈடுபட்டோம். ஆனால் இந்த நிலைப்பாட்டுக்கு வருவதற்கான காரணங்கள் என்ன என்பதைப் பற்றி விரிவாக இங்கே பேசவேண்டும்.
*என்ன காரணங்கள்?*
1 இது வழக்கமான தேர்தல் அல்ல.
2. பாஜகதான் பிரதான எதிரி.
3. இந்தியாவின் first past the post என்கிற தேர்தல் முறையில், முதலில் வருபவரே வெல்கிறார், மற்றவர்கள் அனைவரும் தோற்கிறார்கள். இந்த முறையில். இப்போதைக்கு பாஜகவுக்கு எதிராக அனைவரும் ஒன்று திரண்டு நிற்கவேண்டும்.
4. எதிர்க்கட்சி சார்பாக நிற்கும் வேட்பாளர்களில் எந்த வேட்பாளர் பாஜக-அதிமுக கூட்டணியைத் தோற்கடிக்க வாய்ப்பிருக்கிறதோ அந்த வேட்பாளர்க்கே எங்கள் ஆதரவு. காங்கிரஸ், திமுக, சிபிஎம் உள்ளிட்ட எல்லா எதிர்க்கட்சிகளின் மீதும் நமக்கு ஆயிரம் கருத்து வேறுபாடு இருந்தாலும்., முரண்பாடு இருந்தாலும், இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை அக்கூட்டணியால்தான் பாஜக-அதிமுக கூட்டணியை (தமிழ்நாட்டில்) வெல்லமுடியும் என்றால் அவர்களுக்கு வாக்களிப்பதே சரியானது. ஒரு தொகுதியில் அமமுகவோ வேறு கட்சியோதான் பாஜக கூட்டணியை வீழ்த்தமுடியுமென்றால் அதற்கும் வாக்களிக்கலாம்.
இதுதான் நமக்கு முன்புள்ள சவால். இந்தியாவில் விகிதாச்சாரப் பிரதிநிதி்த்துவ தேர்தல் முறை இருக்கமுடியுமானால் இப்படி ஒரு நிலைமை வந்திருக்காது. அல்லது இந்தத் தேர்தல் வழமையானதொரு தேர்தலாக இருந்தாலும் இந்த நிலைமைக்கு நாம் உள்ளாக நேரிட்டிருக்கிறது. இப்படி நிலைமை உருவானதை சோகமானது என்றே நாம் பார்க்கிறோம்.
நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மீண்டும் வெற்றிபெறுமானால் அது இந்தியாவில் ஜனநாயகத்தை முழுமையாக குழிதோண்டி புதைத்துவிடும் என்பதுதான் உண்மை, பாஜக என்பது வெறும் சர்வாதிகாரக் கட்சி மட்டுமல்ல, அல்லது பிற்போக்குக் கட்சி மட்டுமல்ல. அது ஒரு பார்ப்பன-பனியா-வடஇந்திய ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதையே குறிக்கோளாகக் கொண்டு இயங்குகிற, பாசிஸ்ட் தன்மையுள்ள ஒரு கட்சி. அத்துடன் இந்தியாவில் தற்போதுள்ள அறைகுறை நாடாளுமன்ற சனநாயகத்தைக் கூட ஒழித்துவிடவிரும்புகிற கட்சி.
நாடாளுமன்றம், நிர்வாகம், நீதி, ராணுவம் ஆகிய நான்கு தூண்களையும் கைப்பற்றி நிரந்தர வர்ணாஸ்ரம ஆட்சிமுறையை நிறுவுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்த ஆட்சிக்காலத்தில் அவர்கள் செய்யத்தொடங்கிவி்ட்டார்கள். ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்:
* தமிழர்களும் பிற தேசிய இனத்தவரும் கொண்டிருந்த கொஞ்சநஞ்ச இனவுரிமைகளையும் பறிக்கிறார்கள்.
* மதச் சிறுபான்மையரை முழுமையாக அரசியலிலிருந்து விலக்குவதில் வெற்றிபெற்றிருக்கிறார்கள்.
* தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவுக்கு வடநாட்டார் ஊடுருவலை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்,
* மாநிலத்தின் உரிமைகளை நேரடியாகவும் தங்கள் அடிமைகளைக் கொண்டும் பறித்துக்கொண்டிருக்கிறார்கள்.
* நமது பள்ளிக்கூடங்கள் முழுக்க காவிமயமாகிவருவதுடன் தமிழ் அடையாளமற்ற நிலையை நோக்கி இளஞ்சமூகத்தைச் செலுத்துகிறார்கள்.
* மதவாத, சாதியவாத சக்திகளுக்கு ஊக்கமளித்து தமிழ்நாட்டை மற்றுமொரு உத்தரப்பிரதேசமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
* அதிமுக என்கிற கட்சியை ஒரு சங் பரிவாரக் கட்சியாகவே மாற்றுவதில் வெற்றிபெற்றிருக்கிறார்கள்.
* திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள்கூட சிறுபான்மையரை தேர்தலில் நிறுத்த முடியாத அளவுக்கு ஒரு சூழலை உருவாக்கியிருக்கிறார்கள்.
நூற்றாண்டுப் போராட்டங்களினூடாக தமிழகம் பெற்றிருந்த அத்தனை உரிமைகளையும் வளர்ச்சியையும் இரண்டே ஆண்டில் நொறுக்கித்தள்ளியிருக்கிறார்கள். நீட், ஸ்டெர்லைட், எட்டுவழிச்சாலை, காவிரி, கெயில் என எத்தனை போராட்டங்களை இந்த மக்கள் நடத்தினார்கள்? இதெல்லாம் வீணாகப்போகவேண்டுமா?
இவ்வளவுக்கும் பிறகு, மீண்டும் பாஜக ஆட்சி ஏறினால் என்ன நடக்கும் என்று யோசித்தால், நாம் அச்சபப்படவேண்டியிருக்கிறதா இல்லையா?
அச்சப்படுதல் என்றால் பயந்து நடுநடுங்குவது அல்ல. அச்சப்படுவது என்றால் நமக்கு ஏற்படக்கூடிய இனவழிப்பிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்கிற எச்சரிக்கை உணர்வு. அதைத்தான் அச்சப்படுதல் என்று சொல்கிறேன். We aren't afraid of BJP, but we need to fear the consequences of the BJP's second term.
ஒட்டுமொத்த இந்தியாவே இன்று பாஜக வரக்கூடாது என்கிறது. அவர்களோ தேர்தல் கமிஷனோடு கூட்டுச்சேர்ந்துகொண்டு வாய்ப்பே இல்லாத வெற்றியை வென்றெடுப்போம் என நம்பிக்கையோடு சொல்கிறார்கள். பாஜகவின் முன்னாள் கூட்டாளிகள் கூட கூட்டணியிலிருந்து விலகுகிறார்கள். கலைஞர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் எல்லாம் துணிச்சலாக வெளியே வந்து பாஜகவுக்கு வாக்களிக்காதீர்கள் என்று கோரிக்கை விடுக்கிறார்கள்.
இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாடு அடைந்த தேசிய ஓர்மையை தில்லி ஏகாதிபத்தியம் தனது பலத்தைக் கொண்டு அடிமைகளைக் கொண்டும் அழித்துக்கொண்டிருக்கிறது. தமிழ்த்தேசியத்தை நேசிக்கிறவர் யாராவது இந்தப் போக்கைப் பார்த்துக்கொண்டு நிற்பாரா? அப்படி நிற்கிறவரை தமிழ்த்தேசியவாதி என்று சொல்லத்தான் முடியுமா?
இங்கே நமது தமிழ்த்தேசியவாதிகள் சொல்கிறார்கள் - பாஜக பூச்சாண்டிக் காட்டாதே!
அட அறிவாளிக்கொழுந்துகளே., பாசிசம் என்றால் என்ன, மதவாத ஆட்சி என்றால் என்ன., ஒற்றையாட்சி என்றால் என்ன, இந்து ராஷ்டிரம் எப்படிப் பட்டக் கனவு என்பதையெல்லாம் முன்னறிந்து செயல்படக்கூடிய மூளை உங்களுக்கு இருந்தால் இப்படியெல்லாம் யோசிப்பீர்களா? வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள மாட்டேன் என்று அடம்பிடிக்கிறீர்களே, உங்களால் என்ன வரலாறு படைக்கமுடியும்? பாஜகவின் கள்ளக்கூட்டாளியாக - சித்தாந்தக் கூட்டாளிகளாக - இல்லாத பட்சத்தில் இதை நீங்கள் புரிந்துகொள்ளமுடியும்.
நீங்கள் ஆடுகிற அரசியல் களமே உங்களிடமிருந்து பிடுங்கப்படுகிறது. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும் என்றார் வள்ளுவர். அவர் அஜர்பைஜானி மொழியில் அவ்வாறு கூறியிருப்பதால் நமது தமிழ்த்தேசியர்களுக்கு அது புரியாமல் போயிருக்கலாம்.
பாஜக வழக்கமான கட்சியும் அல்ல. இது வழக்கமான தேர்தலும் அல்ல.
"முதலில் வருபவரே வெல்கிறார்" என்கிற அடிப்படையிலான இந்த தேர்தல் முறையின் காரணமாகத்தான் பிரதான எதிர்க் கட்சிகளுக்கு வாக்களிக்கும்படி கோருகிறோம். இதுவே விகிதாச்சார முறைத் தேர்தலாக இருந்தால், ஆளாளுக்கு நின்று வெற்றி பெற்றுவிடலாம். அப்போதுகூட நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் பிரதான எதிரியை எதிர்த்து floor coordination செய்யவேண்டியிருக்கும்.
இதனால் காங்கிரஸ், திமுக உள்ளிட்டக் கட்சிகளை முழுமையாக நாம் ஏற்கத்தேவையும் இல்லை, அவர்கள் மீதான எதிர்ப்பு, விமர்சனத்தை கைவிடவும் தேவையில்லை. இப்போது நாம் செய்வது ஒரு தற்காப்பு யுத்தம். தொடர்ச்சியாக நாம் செயல்படுவதற்கான குறைந்தபட்ச உத்தரவாதத்தைப் பெறுவதற்கான போராட்டம். தேர்தல் முடிந்த அடுத்த நாளில் நாம் வழக்கமான காங்கிரஸ், திமுக எதிர்ப்பை ஆரம்பித்துவிடலாம். தப்பே கிடையாது.
எதிரியின் வலிமையில் சம அளவில் அல்ல, ஓப்பீட்டளவில் நமக்கு வலிமை இருந்தால்கூட தாக்குதல் வியூகத்தில் இறங்கலாம். ஆனால் இன்று நாம் தற்காப்பு வியூகத்தில்தான் இறங்கமுடியும்.
இன்னும் சில அதியறிவாளிகள். தமிழ்நாட்டில் பாஜகவுக்கு என்ன பெரிய சக்தி இருக்கிறது என்று கேட்கிறார்கள்.
முதலில் இப்போது நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இங்கே அதிமுக, கமல், ரஜினி, பாமக, தேமுதிக என மிகப்பெரிய சங் பரிவார கூட்டணி நேரடியாகவும் மறைமுகமாகவும் அமைக்கப்பட்டுவிட்டது என்பதையும் புரிந்துகொள்ளுங்கள். எதிர்காலத்தில் ஒருவேளை பாஜகவினர் திமுகவிடம்கூட கரிசனம் கூட காட்டலாம் (ஏனென்றால் அவர்களது ஆதரவு தேவைப்படலாம், அத்துடன் அவர்கள் பெரிய கட்சி). ஆனால் தமிழ்த்தேசிய சக்திகளை தமிழ்நாட்டில் வேரறுக்க முயலாமல் இருக்கமாட்டார்கள்.
பாஜக யாருக்கு மிகப்பெரிய ஆபத்தென்றால் உண்மையான தமிழ்த்தேசியவாதிக்குத்தான்.
ஆனால் திமுகவை எதிர்க்கிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு பாஜகவுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள் நமது நண்பர்கள். ராத்திரி நிஜமாகமாகவே தூக்கம் உங்களுக்கெல்லாம்?
பாசிசம் என்றால் என்ன என்பதை நாம் புரிந்துகொள்வதில்லை. நாம் இதுவரை அரசு அடக்குமுறையைத்தான் எதிர்கொண்டிருக்கிறோம். அதிகபட்ச அடக்குமுறையை, எமர்ஜென்சியில் காங்கிரஸ் நடத்திய சர்வாதிகார ஆட்சியில், நாம் பார்த்திருக்கிறோம். திமுக, அதிமுக ஆட்சிகளில் போராடுபவர்கள் மீது ஏவிவிடப்பட்டிருக்கிற அடக்குமுறைகளைப் பார்த்திருக்கிறோம். கருப்புச்சட்டங்களை, ஆள்தூக்கிச் சட்டங்களை. அடி உதைகளை, லாக்அப் மரணங்களை பார்த்திருக்கிறோம். போலீஸ் ராஜ்யத்தைப் பார்த்திருக்கிறோம்.
ஆனால் முழுமையான பாசிச அடக்குமுறை என்பது மேற்கண்ட அடக்குமுறையை விட சொல்லமுடியாத அளவுக்கு மிகப்பெரியது. ஹிட்லரும் முசோலினியும் செய்தது போல ராணுவத்தை வைத்துக்கொண்டு செய்யவேண்டும் என்பதுகூட கிடையாது. அதை மிகவும் கமுக்கமாக சங் பரிவாரப்படைகளை வைத்தும் செய்யலாம்.
பாஜக பாசிஸ்ட் கட்சி., மதவாத கட்சி, கூட்டுக்களவாணி முதலாளித்துவக் கட்சி, இந்தி-இந்து-இந்துஸ்தான் என்கிற சித்தாந்தத்தோடு ஓர் இந்து ராஷ்ட்டிரத்தை உருவாக்கும் பணியில் இறங்கி முன்னேறிக்கொண்டிருக்கிற கட்சி.
இந்தக் கட்சியை பலரும் பலவிதமான காரணங்களோடு எதிர்க்கிறார்கள். காங்கிரசுக்கு ஒரு காரணம், கம்யூனிஸ்ட்டுக்கு ஒரு காரணம். திமுக அல்லது திருணமூலுக்கு ஒரு காரணம் இருக்கலாம். ஆனால் உண்மையான தமிழ்த்தேசியவாதி இந்த கட்சிகளோடு தற்காலிகமாக கூட்டுச் சேர்ந்து பாஜகவை ஒழிக்கவேண்டும் என்று முடிவெடுப்பாரே ஒழியே, பாஜக எதிர்ப்பணியை பலவீனப்படுத்தமாட்டார்.
இப்படி முடிவெடுப்பது தற்காலிகமானதும் உத்திசார்ந்ததும்தானே தவிர, இந்த எதிர்க்கட்சிகளோடு நிரந்தரமாக ஐக்கியமாகிவிடுவது அல்ல. இந்த கட்சிகளிடம்தான் தீர்வு இருக்கிறது என்றோ இவர்கள் ஆட்சிக்குவந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்றோ நாம் கூறவில்லை.
பாஜக கூட்டணியைத் தோற்கடிப்பது என்கிற ஒரே அடிப்படையில் இவர்களுக்கு வாக்களிக்கலாம் என்பதைத் தவிர வேறு எந்த நம்பிக்கையின் அடிப்படையிலும் நாம் பேசவில்லை. ஏனென்றால் இது இந்தத் தேர்தல் முறையின் சிக்கல்.
நமக்கு பாஜகவைத் தோற்கடிக்க வேறுவழியில்லை. இரங்கத்தக்க நிலைதான். அவமானகரமான நிலைதான், தோல்விகரமான நிலைதான். ஆனால் வேறு வழியற்ற நிலை அல்லவா?
பாஜக, காங்கிரஸ், இரண்டுமே இந்தியத் தேசியக் கட்சிகள்தான். பல விஷயங்கலில் இவர்கள் ஒரே மாதிரிதான் சிந்தித்தும் செயல்பட்டும் வந்திருக்கிறார்கள். ஆனால் முழுச் சித்திரத்தையும் எடுத்துப் பார்க்கவேண்டும். இவர்களுக்கு இடையிலான வித்தியாசங்களை புரிந்துகொள்ளவேண்டும். பாஜக இந்தியாவிலுள்ள மற்ற எல்லாக் கட்சிகளையும்விட வித்தியாசமானது. பாஜகவுக்கு ஜனநாயகத்தின் மீது சிறிது கூட நம்பிக்கை இல்லை. அதனோடு உறவாடமுடியாது, உரையாட முடியாது.
பாஜகவால் அழிவைத்தவிர வேறு எதுவும் சாத்தியமில்லை. ஆனால் காங்கிரசையும் அப்படிக்கூறமுடியாது. அவர்களோடு உரையாடமுடியும். சிபிஎம்மை எடுத்துக்கொண்டால் அவர்களோடு உரையாடமுடியும். இங்கே அதிமுக - திமுக விவகாரத்திலும் அப்படித்தான்.
இந்த நான்கு பேரும் வேண்டாம் என்பதுதான் என்பதால்தான் நாம் மாற்று அரசியலைத் தேடுகிறோம், ஆனால் நீங்கள் இப்படிச் சொல்கிறீர்களே என்று கேட்கலாம்.
ஆமாம், அதற்காகத்தான் நாமும் போராடுகிறோம். ஆனால் நான்கு பேரும் ஒன்றுதான் என்பதும் நான்கு பேரையும் ஒரே நிலையில் எதிரில் நிறுத்துவதும் முட்டாள்தனமான, வியூகமற்ற, அறிவற்ற செயல்பாடு. ஒரே நேரத்தில் எல்லா எதிரிகளையும் வீழ்த்துகிறேன் என்று கிளம்பினால் எல்லா எதிரிகளாலும் ஒரே நேரத்தில் நீங்கள் வீழ்த்தப்படுவீர்கள். வரலாற்றில் இதற்கு ஆயிரம் எடுத்துக்காட்டுகள் உண்டு.
ஒரே வேளை உங்கள் கட்சியின் வளர்ச்சிக்காக தனித்து நின்று செயல்பட்டாக வேண்டிய நிர்பந்தம், தனி்ததுபோட்டியிடவேண்டிய தேவை உங்களுக்கு இருக்கலாம். தப்பில்லை. அப்படியென்றால் நீங்கள் ஆட்சியிலுள்ள முதல் எதிரிகளை நோக்கித்தான் உங்கள் எதிர்ப்பு இருக்கவேண்டும்.
ஆனால் பாஜகவும் காங்கிரசும் ஒன்று அதிமுகவும் திமுகவும் ஒன்று என்று சொல்பவர்கள், சற்று அதிகமாக பதற்றமடையும்போது, எதிர்க்கட்சிகளை வசைபாடுவதில் இறங்கிவிடுகிறார்கள். பிரதான எதிரியின் வெற்றியைச் சுலபமாக்கிவிடுகிறார்கள்.
ஏன் இப்படி என்று கேட்டால், பாஜக பூச்சாண்டி காட்டதே என்கிறார்கள்! தெரிந்தோ அல்லது தெரியாமலோ பாஜகவின் வலையில் வீழ்கிறார்கள். அதன் பிறகு அறிவு வேலைசெய்வதில்லை. ஈகோ மட்டுமே வேலைசெய்கிறது. அல்லது வேறு ஏதோ உள்நோக்கம் வேலைசெய்கிறது.
இனப்படுகொலை செய்த காங்கிரஸ், துணைபோன திமுகவை மன்னிக்கவேண்டும் என்றோ மறக்கவேண்டும் என்றோ சொல்லமாட்டேன். ஆனால் இன்று நம் கண்முன்பாகவே தமிழ்நாட்டிலேயே ஒரு இனவழிப்புத் தொடங்கியிருக்கிறதே, அதற்கு என்ன பதில்? காரணகர்த்தா பாஜக, காரியகர்த்தா அதிமுக. ஆனால் நீங்கள் பாஜக பூச்சாண்டி காட்டாதே என்று கூறி எதிரிக்குத் துணைபோகிறீர்கள்.
பூச்சாண்டி காட்டவில்லை. எச்சரிக்கைச் செய்கிறோம்.
நாளை நம் மீது கட்டவிழ்த்துவிட வாய்ப்புள்ள ஒரு பெரும் அடக்குமுறையை சந்திக்கும் நிலையில் இங்கே யாருமே இல்லை. பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்!
நாம் நீண்ட தொலைவுக்குப் போகவேண்டியுள்ளது. உங்கள் மூடத்தனமான அரசியல் முடிவுகளால் உங்களுக்கு நீங்களே உலைவைத்துக்கொள்ளாதீர்கள். மக்களின் உரிமைகளையும் அழித்துவிடாதீர்கள். Don't sprint the marathon.
அரசியல் என்பது நாம் விரும்புகிற அனைத்தையும் அரங்கேற்ற வாய்ப்புள்ள நாடக மேடை அல்ல. அது யுத்த களம். தேர்தல் யுத்தம்தான் இந்தியாவின் பிரதான அதிராக யுத்தம்.
இங்கே தர்ம யுத்தம் என்று ஏதுமில்லை. யுத்த தர்மம் மட்டுமே உண்டு என்று ஒரு கவிஞர் எழுதியிருந்தார். அதுவே சரி. அமித் ஷா மட்டுமே கெட்டிக்காரனாக இருந்தால் எப்படி?
நமது எல்லா புரட்சிகளையும் விடுதலை வேட்கைகலையும் நான்கு கட்சிகளும் ஒன்றேதான் என்கிற மகத்தான கொள்கைகளையும் கைவிட்டுவிடவேண்டும் என்று கூறவரவில்லை தோழர்களே. அவையெல்லாம் அப்படியே பத்திரமாக இருக்கட்டும்.
இப்போதைக்கு பாஜகவை, அதிமுகவை, அந்தக் கூட்டணியை அடியோடு ஒழித்துக்கட்ட வேலைசெய்வோம்.
இது அச்சப்படவேண்டிய நேரம். அறிகுறிகள் முன்பே தொடங்கிவிட்டன. அதிமுக-பாஜக வெற்றிபெறுமானால், வெள்ளை வேன்கள் வரும், நமது இயக்கங்கள் தடைபடும், நமது தமிழ்நாட்டு அரசின் அலகுகள் முழுமையாக எதிரியிடம் சிக்கும், தங்குதடையின்றி கட்டுக்கடங்காமல் வடநாட்டார் புலம்பெயர்வது தொடரும், உள்நாட்டு வணித்தை முற்றமுழுதாக பனியாக்கள் கைப்பற்றும் பணி நடந்துமுடியும். ஏனென்றால் அவ்வளவு பெரிய துரோகக் கூட்டமொன்று - அதிமுக - சங் பரிவாரக் கட்சியாகவே மாறியிருக்கிறது.
மே 17 இயக்கம் ஒரு தெருமுனைக்கூட்டம் நடத்த ஐந்தாண்டு காலம் நீதிமன்றப்படியேற வேண்டிய நிலை வரலாம். இல்லை தோழர் திருமுருகன் தோழர் முகிலனைப் போல காணாமல் போவார். கூடங்குள நாட்களையே கணக்கில் கொண்டு தயங்கினால், ஏற்கனவே பாஸ்போர்ட்டை இழந்த தோழர் சுப. உதயகுமாரன் இனி பாஸ்வேர்டையும் இழப்பார். தோழர் மணியரசன் போன்றவர்கள் பத்திரிகைச் செய்தி கூட வெளியிடமுடியாது, வெளியிட்டாலும் யாரும் பிரசுரிக்கமாட்டார்கள். நாம் தமிழர் கட்சி உண்மையிலேயயே பாஜவின் B டீமாக இல்லாத பட்சத்தில் ஒழிக்கப்படும்.
உலகம் முழுக்க வீசிவரும் வலதுசாரி அலையின் கோர முகங்களை நீங்கள் இதுவரை பார்க்கவில்லை. ஒரே நாளில் ஒரே சட்டத்தில் சமூக ஊடகங்கள் அரசின் கட்டளைகளுக்கு பணிந்து, நமது அரசியல் வெளி காணாமல் போகும்.
சத்தியமாகச் சொல்கிறேன், எதிர்க்கட்சிக் கூட்டணி வெற்றி பெற்றால் இந்த நிலைமையிலிருந்து நாம் தப்பிப்போம். நாளைக்கு அவர்களே இதே மாதிரி செய்யமாட்டார்கள் என்று என்ன உத்தரவாதம் என்று கேட்பீர்கள். நான் உத்தரவாதம் தரமாட்டேன். எதுவும் நடக்கலாம். இப்போதைக்கு தப்பிப் பிழைப்பதற்கான உபாயம்தான் முக்கியமானது.
தண்ணீர் விட்டோ வளர்த்தோம், தமிழ்த்தேசியப் பயிரை ஈழத்தமிழர்களின் செந்நீராலும் தமிழ்நாட்டுத் தமிழர்களின் கண்ணீராலும் அல்லவா வளர்த்தோம்? கருகிவிட துணைபோகப் போகிறீர்களா தமிழ்த்தேசியர்களே!
ரொம்பவும் பயமுறுத்துகிறேனோ?
முன்னெச்சரிக்கையோடு இல்லாமல் இருப்பதைவிட பயப்படுவது நல்லது. ஏனென்றால், நமது மூடமண்டைகளுக்கு உறைக்கும் விதமாக திருவள்ளுவர் மற்றுமொரு இடத்திலும் கூறியிருக்கிறார்.
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை. அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்.
என்ன அர்த்தம்?
பயப்படவேண்டியதற்கு பயப்படாமலிருப்பது முட்டாள் தனம். அஞ்சவேண்டியதற்கு அஞ்சுவதே புத்தியுள்ளவர்களின் வேலை.
இவ்வளவு சொல்லியும் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள் என்றால், பாஜக உங்களை விழுங்கிவிட்டது என்பதுதான் உண்மை. உங்கள் எதிர்காலத்துக்கு நீங்களே ஆப்பு வைத்துக்கொண்டுவிட்டீர்கள் என்பதுதான் உண்மை.
ஆனால் ஒன்று, உங்கள் முட்டாள்தனத்தை நீங்கள் மெச்சிக்கொள்ளுங்கள். ஆனால் அதை தமிழ்த்தேசியம் என்று மட்டும் சொல்லிக்கொள்ளாதீர்கள்.
-
https://www.facebook.com/612219045/posts/10158335328019046/
No comments:
Post a Comment