Saturday, April 20, 2019

மாற்று அரசியல் ஆரோக்யமானது - Rafeek

Mohammed Rafeek R
2019-04-20

எல்லா காலங்களிலும் மாற்று அரசியல் உருவாகும். அதுவே ஆரோக்யமானதும் கூட

திமுக என்பது:

1) தென்னிந்திய நல உரிமைச் சங்கம்,
2) நீதிக்கட்சி,
3) சுயமரியாதை இயக்கம்,
4) திராவிடர் கழகம்,

என்று நாற்பதாண்டுகள் பயணித்து 1949 ல் தான் முழுமை பெற்றது. அதற்குப் பிறகும் கூட  சமூக நல  இயக்கமாகவே 8 ஆண்டுகள் வரை செயல்பட்டு 57 ல்தான் தேர்தல்  அரசியலுக்கு வந்தது. அதற்குப் பிறகு மெல்ல மெல்ல 15 சீட், 60 சீட்  என வளர்ந்து ஆட்சியைப் பிடித்தது. 

ஒரு சித்தாந்தம் முறையாக  ஆட்சிக் கட்டிலில்  அமர்வதற்கு அறுபது ஆண்டுகள் ஆனது  (சுதந்திரத்திற்கு முன்பு உருவான நீதிக் கட்சி ஆட்சியை நான் சேர்க்கவில்லை). இதற்கு இடையே

1) பத்திரிக்கை,
2) நூல்கள்,
3) மேடை நாடகங்கள்,
4) தெருப்பிரச்சாரங்கள்,
5) வாசக சாலைகள்,
6) திரைப்படம்,
7) மக்கள் போராட்டங்கள்,
8) இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி

என்று  பல்வேறு வகைகளில் மக்களை ஈர்த்தது. 

அண்ணாவைப் போல் அறிவாற்றல் படைத்த நூற்றுக்கணக்கான இரண்டாம் கட்டத் தலைவர்கள் உருவானார்கள். ஒவ்வொரு ஊரிலும் ஆயிரக்கணக்கான இளைஞர் கூட்டம் அரசியல் விழிப்புணர்வு பெற்றது. இதற்குப் பெயர்தான் மாற்று அரசியல். 

அதனால்தான் காங்கிரஸிற்கு மாற்றான திமுக வின் மாற்று அரசியலோடு எவரும் போட்டிக்கு வரவில்லை. ஏற்கனவே  இதே மாதிரியான சித்தாந்த வரலாறு கொண்ட கம்யூனிஸ்டுகள் மட்டுமே களத்தில் இருந்தனர்.

எம்ஜிஆரும் கூட  ஆரம்ப கால காங்கிரஸ்காரர். பிறகு 15 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து திராவிட  அரசியலின் முகமாக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதன் பிறகே கட்சி தொடங்கினார்.  சினிமா கவர்ச்சியை வைத்து எம்ஜிஆர் அரசியலுக்கு வரவில்லை. திமுக சித்தாந்தத்தை திரையில் பிரபலமாக்கி அதன் மூலமாகவே அரசியல் பிம்பத்தை உருவாக்கினார். 

தேர்தலுக்கு முதல் நாள் கட்சி தொடங்கி சிஎம் ஆகவில்லை. 

அந்தக் கட்சியிலும் அண்ணாவின் பெயர் , கொடியில் முகம் ஆகியவற்றை இடம் பெறச் செய்து தன்னை திராவிடத் தொடர்ச்சியாகவே காட்டிக் கொண்டார். கருணாநிதி எதிர்ப்பைத் தவிர  மற்ற விஷயங்களில் நானும் அதே ஆள்தான் என்கிற மாதிரி நடந்து கொண்டார்.   ஆட்சியிலும் கூட  அண்ணா, கலைஞரின் சமூக நீதிப் பார்வையையே பின்பற்றினார்.

ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசம்  திராவிட  அரசியலின் விபத்து என்றாலும் கூட  2004 தேர்தல் தோல்விக்குப் பிறகு அவர் முழுமையாகத் தன்னை மாற்றிக் கொண்டு திராவிட  அரசியலின் தொடர்ச்சியாகவே செயல்பட்டார்.  அதனால்தான் எம்ஜிஆராலும் , ஜெயலலிதாவாலும் கலைஞருக்கு மாற்றாக  இருக்க முடிந்தது.

இப்போது மாற்று  என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு எந்தக் கொள்கையும் கிடையாது. அவர்கள் நிர்வாகத்தையே ஆட்சி  என்று நம்புகிறார்கள். அதற்கெதற்கு அரசியல்வாதிகள்? ஐஏஎஸ் அதிகாரிகளே ஆண்டு விட்டுப் போவார்களே. நானும் கலைஞர் மாதிரி ஜெயலலிதா மாதிரி பிரபலம்தான்.  அதனால நான் ஸ்ட்ரைட்டா சிஎம் ஆகனும் என்று விரும்புகிறார்கள்.

ரஜினி, கமல், விஜய் ஆகியோருக்கு இந்த  ஆசை வெளிப்படையாகவும், வேறு சிலருக்கு மறைமுகமாகவும் இருக்கிறது. இவர்கள்  எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு ஆரம்ப காலங்களில் இருந்த  அரசியல் பின்ணணியை மறந்து விடுகிறார்கள்.  கொள்கையில்லாமல் விஸ்வரூபம் எடுத்து ஒன்றுமில்லாமல் ஆகி விட்ட  விஜயகாந்த்தை வசதியாக மறந்து விடுகிறார்கள். 

93 வயது முதியவரான கலைஞர்  மருத்துவமனையில் நினைவிழந்து படுத்திருக்கும் போது உண்ணாமல்,  உறங்காமல் இரவெல்லாம் விழித்திருந்து அந்தத் தொண்டர்களை 'எழுந்து வா, எழுந்து வா' என்று கத்த வைத்தது எது? ஏன் அது விஜயகாந்திற்கு நிகழவில்லை? என்று யோசித்தாலே போதும்.  விடை கிடைத்து விடும். எனக்குத் தோன்றுவது இதுதான். இந்தப் போலி மாற்று பேசும் நடிகர்கள் எல்லாம் அவர்களுக்கு அவர்களே பிரச்சினையாக இருக்கப் போகிறார்கள் .

இந்தக் கேட்டகிரியில் சீமான் வரமாட்டார்  என்றாலும் அதுவும் நிஜமான மாற்று அரசியல்  அல்ல. அவர் குறித்து விரிவாக வேறொரு பதிவில் பேசுகிறேன்.

ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மாற்று அரசியல் என்பது ஆள் மாற்றம் இல்லை. சித்தாந்த மாற்றம். இது தப்புன்னு சொல்வது மட்டும் சித்தாந்தம் இல்லை. அதைக் குழந்தை கூடச் சொல்லும். அதற்கு மாற்றான நடைமுறைச் சாத்தியம் கொண்ட (இது ரொம்ப முக்கியம்) வேறொரு கொள்கையை கொஞ்சம் கொஞ்சமாக செயல்படுத்திக் காட்டுவதுதான் மாற்று . இருப்பதை கண்மூடி நிராகரிப்பது மாற்று அல்ல.

நடைமுறையில் உள்ள ஒரு சித்தாந்தத்தின் நவீனப்படுத்தலாகவும் மாற்று அமைய முடியும்.

1) காந்தியம்,
2) சோசலிசம்,
3) லிபரல் சோசலிசம்,
4) கம்யூனிசம்,
7) வலதுசாரி லிபரல் முதலாளித்துவம், 
8) கார்ப்பரேட் நவ முதலாளித்துவம்,
9) அம்பேத்கரியம்,
10) திராவிடம் (திராவிடத்தின் பொருளாதாரக் கொள்கைகள் சூழலுக்கேற்ப மாறுபவை),
11) தமிழ் தேசியம் (முறையான பொருளாதரக் கொள்கைகளை அவர்கள் பேசுவதில்லை)
12) வலதுசாரி இந்துத்துவ பாசிசம்
13) வஹாபியிசம் பொதுமக்களின் செல்வாக்கைப் பெறப்போவதில்லை என்பதால் அதைச் சேர்க்கவேண்டாம்

- ஆகியவற்றில் "நான் என்னவாக  இருக்கிறேன்? அல்லது எந்த சித்தாந்தத்தின் நவீன நீட்சியாக  இருக்கப் போகிறேன்?" - என்று சொல்லாமல் ஒருவன் அரசியலில் இறங்கினால் அவன் அயோக்கியன் என்றறிக.

அந்த சித்தாந்தங்களின் சமூக, பொருளாதார, பண்பாட்டு ரீதியான கொள்கைகளை அறியாமல் அவற்றை ஆதரிப்பது பிழையான பார்வை. 

*ஊழல் ஒழிப்பு என்பது கொள்கையல்ல.  நிர்வாக நடைமுறை. அதற்கும் கட்சி அரசியலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.* ஊழல் உலகெங்கும் உண்டு. அமெரிக்காவில் நிக்சன் செய்த 'வாட்டர் கேட்'  ஊழல் உலகெங்கும் பேசப்பட்டது. இந்தியாவில் போபர்ஸ், கார்கில் சவப்பெட்டி ஊழல், வியாபம் ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், ரஃபேல் ஊழல் குற்றச்சாட்டுகள் காங்கிரஸ் மீதும், பிஜேபி மீதும் உண்டு. கமல் ஆதரிக்கும் தீதி மம்தாவே ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்தான் .

அண்ணாவைத் தோற்கடிக்க காஞ்சிபுரத்தில் ஓட்டுக்குப் பணம் தரப்பட்டது. ராஜாஜி, பக்தவச்சலம் ஆட்சிகளின் முறைகேடுகளை காமராஜரே பேசியிருக்கிறார். ஆகவே ஊழல் ஒழிப்பு மட்டுமே கொள்கை என்று பேசுபவர்கள் உங்கள் காதுகளுக்குப் பக்கத்தில் பூவோடு நிற்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் .

கொள்கை சார்ந்த  கட்சிகள் வங்கிகளைப் போல. முறைகேடுகள் நடக்கும். ஆனால்  கேள்வி கேட்க  முடியும். கொள்கையில்லாத போலித்தனமான மாற்று அரசியலை முன்வைக்கும் கட்சிகள்  சீட்டுக் கம்பெனியைப் போல. திடீரென்று  ஒருநாள் திவாலாகி ஓடி விடும். நம்மை நாமே நொந்து கொள்ள வேண்டியதுதான். தேமுதிகவின் தொண்டனைப் போலவே நீங்களும் நிற்க விரும்புகிறீர்களா ?

கடவுளெல்லாம் காப்பாற்ற மாட்டார். உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

கதம்! கதம் !

https://m.facebook.com/story.php?story_fbid=1225534317623514&id=100005008711499

No comments:

Post a Comment