Elangovan muthiyah
Via Facebook
2017-01-13
மிக முக்கியமான பதிவு. அவசியம் படிக்கவும்.
========================================
கடந்த சில தினங்களாக ஜல்லிக்கட்டு தொடர்பான ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் தமிழகமெங்கும் நடக்கின்றன. மதுரையிலும் நடந்தது. இனிமேலும் நடக்கும். நம் அனைவரின் கவனமும் அந்தப் போராட்டங்களின் மீதுதான் குவிந்து கிடக்கின்றது. ஆனால் இங்கு நான் அதைப் பற்றிப் எழுதப் போவதில்லை.
மதுரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மிகப் பெரும் மக்கள் திரள் திரண்டிருந்த கோரிப்பாளையத்திற்கு மிக அருகில் தான் அரசு ராஜாஜி மருத்துவமனை உள்ளது. அங்கு சத்தமில்லாமல், நம் யாருடைய கவனத்திற்கும் தெரிய வராமல் ஒரு விஷயம் நடந்து கொண்டிருக்கிறது.
கடந்த வாரத்தில் மட்டும் இரண்டு குழந்தைகள், ஒரு இளம் வயதுப் பெண், ஒரு ஐம்பது வயதுப் பெண் என எனக்குக் கிடைத்த தகவல்களின் படி மட்டுமே நான்கு பேர், வெறிநாய்க் கடிக்கான (ரேபிஸ்) சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போயிருக்கிறார்கள்.
நாய்க்கடி பட்ட சில மணிநேரங்களில் மரணம். குறைந்த பட்சம் ஆறு மணி நேரத்தில். அதுவும் மிகக் கொடூர சித்திரவதையான மரணம் என்கிறார் எனக்குத் தகவல் சொன்னவர். அதிகப் பட்ச இதயத்துடிப்பு, கடும் இரத்த அழுத்தம், வாயில் எச்சில் ஒழுகுதல் மேலும் வெறி நாய்க்கடிக்கே உரிய Hydrophobia என்று சொல்லக் கூடிய, தண்ணீரைப் பார்த்தால் கடுமையான பயம் ஆகிய அறிகுறிகளோடு, ”ரேபிஸ் செல்” எனப்படும் இரும்புக் கம்பிகளால் அடைக்கப் பட்ட தனி அறைகளில், தீவிர சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே இறந்து போயிருக்கிறார்கள்.
இந்தத் தகவலைச் சொன்னவருக்கு நான்கு மரணங்கள்தான் தெரிந்திருக்கிறது. அவரது கவனத்துக்கு வராத மரணங்களின் எண்ணிக்கை சற்று கூடுதலாகத்தான் இருக்கும் என்பதை அவரே ஒத்துக் கொள்கிறார். மதுரையிலேயே இருந்தாலும் எனக்கு இப்படி ஒரு விஷயம் நடந்து கொண்டிருப்பதே தெரியாது. சாதாரணமாகவே இது நாய்களின் இனப்பெருக்கக் காலம். அவற்றிற்கு வெறி பிடிக்கும் காலமும் இதுதான். நம் அனைவருக்கும் இது தெரியும்.
ஆனால் எத்தனை பேருக்கு Anti Rabies Vaccine என்று ஒன்று உண்டு. அரசு மருத்துவமனைகளில் அது இலவசமாக அளிக்கப் படுகிறது என்பது தெரியும். அதுவும் ஒன்றல்ல, நான்கு டோஸ்கள் எடுத்துக்கொள்ள வேண்டுமாம். அப்பொழுதுதான் அது வேலை செய்யும் என்கிறார்கள்.
வெறிநாய்க்கடி என்பது நாய் கடிப்பது மட்டும் அல்ல, நாய் நம்மை லேசாகக் கீறினாலும் போதும். இறந்த ஒரு சிறுவனுக்கு லேசான கீறல்தான் என்று சொல்கிறார்கள். மதுரையில் மட்டும் ஐந்து மரணங்கள் என்று எடுத்துக் கொண்டோமேயானால் (உண்மையான எண்ணிக்கை இதை விட அதிகமாகத்தான் இருக்கும் என்பதை நான் சொல்லித்தெரிய வேண்டிய அவசியமில்லை) தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்த பட்சம் நூறாவது இருக்கும் என்பது என்னுடைய அனுமானம். அது தவறாகவே இருக்கட்டும் எனப் பிரார்த்திப்போம். ஆனாலும் இந்த எண்ணிக்கை நிச்சயமாக அபாயகரமான ஒன்றுதான்.
ஆனால் இந்தத் தகவல்கள் எல்லாம் நம்மிடமிருந்து திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன, அல்லது நமது கவனம் வேறு திசையில் திருப்பிவிடப்பட்டிருக்கிறது என்றே நான் கருதுகிறேன். ஒரே ஊரில், ஒரே காரணத்தினால் நடந்த ஐந்து மரணங்களை எந்த ஒரு பத்திரிக்கையும் அல்லது காட்சி ஊடகமும் இது வரை வெளியே கொண்டுவரவில்லை. நியாயப்படி அரசு மருத்துவமனையும், சுகாதாரத் துறையும் முறையான அறிவிப்பையோ எச்சரிக்கையையோ இன்னேரம் மக்களுக்கு அறிவித்திருக்க வேண்டும். அது நடக்கும் என்கிற நம்பிக்கை எல்லாம் எனக்குக் கிடையாது. ஏன் இவ்வளவு ஆணித்தரமாகச் சொல்கிறேன் என்றால்,
மதுரையில் இறந்து போன நான்கு பேரின் உடல்களையும், அரசு மருத்துவமனை உறவினர்களிடம் ஒப்படைக்காமல் மாநகராட்சித் துப்புறவுப் பணியாளர்களின் மூலம் மரணம் சம்பவித்த சற்று நேரத்திலேயே எரித்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
மேலும், வெறிநாய்க் கடிக்காக தினசரி மருத்துவ மனைக்கு வரும் கூட்டம் அஞ்சக்கூடிய அளவுக்கு அதிகரித்தபடியே இருக்கிறது எனவும், உண்மையில் ரேபிஸிற்கு மருத்துவத் தீர்வு கிடையாது எனவும் சொல்லப் படுகிறது. உடலில் வெறிநாய்க் கடிபடும் இடத்தைப் பொருத்து சில நாட்களிலோ, சில மணி நேரங்களிலோ மரணம் சம்பவிப்பதைத் தடுக்க முடியாது என எனக்குத் தெரிந்த மருத்துவ நண்பர்கள் கூறுகிறார்கள்.
மதுரை மட்டுமல்ல, தமிழகத்தின் எல்லா நகரங்களிலும் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. இரவு நேரங்களில் வீடு திரும்பும்போது கூட்டமாகத் துரத்திவரும்போது குலை நடுங்கத்தான் செய்கிறது. மாநகராட்சிக்கு தெரு நாய்களைப் பிடிக்க அழுத்தம் கொடுக்கலாம்.
இந்த இடத்தில் ப்ளூ க்ராஸ், விலங்கு நல ஆர்வலர்கள் உணர்ச்சி வசப்படாமல் கொஞ்சம் யதார்த்தத்தை யோசிப்பது நல்லது. அதையும் மீறி விலங்குகளின் நலனே முக்கியம் என்றால், மனிதர்களையும் பாதிக்கப் படும் ஒரு விலங்காகக் கருதிக்கொண்டு, பாதிக்கப்படும் ஒரு விலங்கினத்தின் சார்பான, சர்வைவல் கோரிக்கையாக இதை அணுகும்படி கேட்டுக்கொள்கிறேன். நான் சார்ந்திருக்கும் விலங்கினமா, இல்லை தெரு நாய்களா என்று வந்தால் என்னுடைய சர்வைவல் உணர்வு, நான் சார்ந்திருக்கும் இனத்தின் பக்கமே இருக்கும்.
ஒரு மனிதன், மூச்சிறைத்து, கடைவாயில் எச்சில் ஒழுக, தண்ணீரைக் கண்டால் பயந்து அலறி, மருத்துவமனையின் தனி செல்லில் மரணிப்பதையும், இறந்தவரின் உடல், எந்த இறுதிச் சடங்குகள் செய்வதற்கும் அனுமதிக்கப் படாமல் உடனடியாக அரசின் மூலமே எரிக்கப்படுவதையும் கற்பனை செய்து பார்க்கவே பயமாயிருக்கிறது.
இப்போது நாம் செய்யக்கூடியது நம்மளவில் எச்சரிக்கையாக இருப்பதும், நமக்குத் தெரிந்தவர்கள், உறவினர்களை எச்சரிப்பதும், தேவையான விழிப்புணர்வை முடிந்தவரை அடுத்தவர்களுக்குக் கொடுப்பதுமேயாகும்.
ரேபிஸ் தடுப்பு மருந்தை முறையாக எடுத்துக் கொள்ளலாம். வீட்டில் நாய் வளர்ப்பவர்கள் அதற்குரிய தடுப்பூசிகளை அவ்விலங்குகளுக்கு முறையாகப் போடலாம், சிறுவர் சிறுமியர்களை விலங்குகளிடம் எச்சரிக்கையாக இருக்கச் சொல்லலாம். சில நேரங்களில் அவர்கள் பெரியவர்களுக்குப் பயந்து கொண்டோ, இது குறித்த அறியாமையினாலோ விலங்குகளால் ஏற்படும் சிறிய காயங்களை மறைத்து விடக்கூடிய வாய்ப்பு உண்டு. அவர்களிடம் இது குறித்து தெளிவாகச் சொல்லிப் புரிய வைக்கலாம்.
முக்கியமாக நாய்கள் கடித்தாலோ, அல்லது லேசான கீறலாகவோ இருந்தாலும், அலட்சியப் படுத்தாமல் உடனடியாக, மிக உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகலாம். மொத்தத்தில் அவ்வளவுதான் ஒரு தனிப்பட்ட மனிதன் செய்ய முடியும்.
இதைப் படிக்கும், செய்தி, ஊடகத்துறை நண்பர்கள், தமிழகத்தில் ரேபிஸின் தீவிரம் குறித்தும், மதுரை உட்பட அரசு மருத்துவமனைகளின் உண்மை நிலவரம் குறித்தும், பெருகி வரும் தெரு நாய்களைக் குறித்தும் பதிவு செய்தால், எழுதினால் உங்களுக்குக் கோடிப் புண்ணியம்.
மருத்துவத்துறை நண்பர்கள் எனது பதிவில் ஏதேனும் தவறு இருந்தாலோ அல்லது தகவல்கள் விடுபட்டிருந்தாலோ தெரியப் படுத்தும்படி அல்லது மேலதிகத் தகவல்களை உங்களது பக்கத்தில் பதியும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இந்தப் பதிவைப் பகிர வேண்டாம். காப்பி பேஸ்ட் செய்து, வாட்ஸப்பில் அனுப்பிக் கொள்ளுங்கள் அல்லது உங்கள் பக்கத்தில் நீங்கள் போடும் போஸ்டாகவே போட்டுக்கொள்ளுங்கள். ஏனென்றால் ஷேர் செய்வதையோ, அடுத்தவர் பெயர் போட்டு வரும் பதிவுகளையோ யாரும் முக்கியத்துவம் கொடுத்துப் படிப்பதில்லை, நான் உட்பட.
ரோம் பற்றியெரிந்தபோது மன்னனாகிய நீரோதான் ஃபிடில் வாசித்ததாக வரலாறு. அது எப்போதும் உண்டானதுதான். இங்கோ, மக்களும் சேர்ந்தல்லவா ஃபிடில் வாசிக்கிறார்கள்.
ஜல்லிக்கட்டு நடக்கும்போது நடக்கட்டும். அப்படி நடக்கும் ஜல்லிக்கட்டில் குத்துப்பட்டு குடல் சிதறிச் செத்தால் கூட வீரம் என வெற்றுப் பெருமை பேசிக்கொள்ளலாம். ஆனால் வெறி நாய் கடித்து, மனநிலை பிறழ்ந்து மரணிக்கும் போது அப்படிப் பெருமை கொள்ள முடியாதுதானே?
No comments:
Post a Comment