Sunday, January 22, 2017

வாடிவாசல் நாட்டார் மரபின் கதவு*

Pitchimuthu Sudharar
Via Facebook
2017-Jan-23

*வாடிவாசல் நாட்டார் மரபின் கதவு*

காலம் எவ்வளவு விசித்திரமானது பாருங்கள்

அவர்கள் அந்த இரவு போராட்டத்தில் உங்களிடம் கெஞ்சிக் கேட்டது "ஐந்தே ஐந்து காளை மாடுகளையாவது வாடிவாசல் வழியாக அனுமதியுங்கள்".. அதுவும் கோவில் மாடுகளை.. அங்குள்ள "முத்தாலம்மன், முனியாண்டி காவல் தெய்வங்களுக்காக".

அது அவர்கள் காலம் காலமாய்  கடைபிடித்து வரும் நாட்டார் மரபு. மழை பொய்த்து போனதற்கு இதுதான் காரணமோ என அஞ்சும் கிராமத்து மனிதர்கள்.

ஆனால், உச்ச நீதி மன்றத்தில் இருக்கும் வழக்கை காரணம் காட்டி முடியவே முடியாது என மறுத்து விட்டீர்கள்.

இப்போது எல்லா மாடுகளையும் அவிழ்த்து விடுங்கள் வாடி வாசலை திறக்கிறோம் என நீங்கள் அவர்களை நோக்கி கெஞ்சுகிறீர்கள்.

சிறு தெய்வ வழிபாட்டில் இருக்கும் நம்பிக்கை மனிதர்கள் பலமற்றவர்கள் என எப்போதுமே ஒரு பொது புத்தி நம்மவர்களுக்கு உண்டு. இதே சிக்கல், ஆகம விதிப்படி நடைபெறும் பெருந்தெய்வ கோவில்களின் புனிதத் தன்மை பெற்றதாக நீங்கள் நம்பும் யானைகளுக்கோ, பசுக்களுக்கோ நேர்ந்தால் மத்திய அரசும், மாநில அரசும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்குமா?

பிறகு, ஏன் இந்த ஓர வஞ்சனை?

எதற்காக இந்த மக்களை நீங்கள் முட்டாள் ஆக்குகிறீர்கள்.

நம்பிக்கையில் பெரியது, சிறியது என்று ஒன்று இல்லையே.

அவர்கள் கேட்டபடி ஐந்து கோவில் காளைகளையாவது அனுமதித்து இருந்தால் இந்த அளவிற்கு அவர்கள் போயிருக்க மாட்டார்களே. உங்கள் செயற்கையான நீதிக் கதவுகளை திறக்கும் வரை பொறுத்துத்தானே இருந்திருப்பார்கள்.

இது ஒரு வித உளவியல் தாக்குதல், விலங்குகள் நல ஆர்வலர்கள் அமைப்புகளுடன் சேர்ந்து கொண்டு சிறு தெய்வ வழிபாட்டுக்காரர்களை காட்டுமிராண்டியாக சித்தரிக்கும் பிற்போக்கு தன்மை.

இந்த மேட்டுக்குடி தனத்தைத்தான் இந்த பொதுமக்கள் கூட்டம் அடித்து நொறுக்கியிருக்கிறது.

சனாதனங்களை தூக்கி பிடிக்கும் எல்லா அமைப்புகளையும் ஒரு நாள் இப்படித்தான் சிறு தெய்வ நாட்டார் மரபுகள் அடித்து நொறுக்கும்.

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். இந்த மண்ணின் நாட்டார் மரபில் கை வைக்கும் போது கிறிஸ்த்தவர், இசுலாமியர், இந்து என்ற எந்த வித்தியாசமும் பார்க்காமல் இறங்கி அடிக்கிறார்கள். இனியும் அடிப்பார்கள். ஏனெனின் இது அவர்களின் ஆணி வேர்.

இந்தக் கூட்டத்தினைத்தான் நோக்கித்தான் நீங்கள் பயங்கரவாதிகள் என்று கூச்சலிடுகிறீர்கள் என்றால் அவர்கள் பயங்கரவாதிகளாகவே இருப்பார்கள். ஏனெனில் அவர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள். அவர்கள் நம்பிக்கையில் கை வைக்கும் எல்லோருக்கும் இதுதான் என்று சொல்லாமல் சொல்லி உள்ளார்கள்.

"ஒரு மாட்டுக்காடா" இவ்வளவு சண்டை என‌ நினைத்தவர்களே, இப்பொழுதாவது புரிந்து கொள்ளுங்கள், உங்கள் அதிகார புறக்கணிப்பு, மேட்டுக்குடித் தனம் இவர்களை எந்த நிலைக்கு தள்ளி இருக்கிற‌து என நீங்கள் எளிதாக கண்டு கொள்ளலாம்.

"சமரசங்களோடு கூடிய வெற்றி என்பது சில நேரங்களில் போர்த் தந்திரங்களுள் ஒன்று. அவை உங்கள் வாளினை இன்னும் கூர்மையாக்க அவகாசம் தரும்".

இப்போதைக்கு நிலைக்கு திரும்புங்கள் தோழர்களே.

வெல்க தமிழ், வெல்க தமிழர் பண்பாடு

No comments:

Post a Comment