Saturday, January 21, 2017

இந்துத்துவாவும் கார்ப்பரேட்டும் இணையும் புள்ளியே – பீட்டா

பகிர்வு பதிவு எழுதியவர்: நக்கீரன்

இந்துத்துவாவும் கார்ப்பரேட்டும் இணையும் புள்ளியே – பீட்டா

1982 நவம்பரில் பிரிட்டனின் அப்போதைய பிரதமராக இருந்த மார்க்கரெட் தாட்சருக்கு ஒரு கடித வெடிகுண்டு அனுப்பபட்டு அது அவரது அலுவலகத்தில் வெடித்தது. உயிர்ச்சேதம் ஏதும் இல்லையெனினும் அதுவொரு பரபரப்பான நிகழ்வாக அமைந்தது. ARM (Animal Rights Militia) என்கிற விலங்குரிமை தீவிரவாத அமைப்பின் பெயரில் அது அனுப்பட்டிருந்தது. HSUS, PETA, ALF போன்ற விலங்குரிமை அமைப்புகள் இவ்வளவு தீவிரமாக இயங்குவதற்குக் காரணம் அவர்கள் உயிரினங்களின் மீது கொண்டுள்ள கருணை அல்ல. மரக்கறி உணவுவின் மீது அவர்கள் வைத்துள்ள பற்றே காரணம். பற்று என்பதைவிட வெறி என்று சொல்லலாம்.

மேற்குலகின் மரக்கறி உணவுக்கொள்கை என்பது நமது சமணம், பவுத்தம் சமயக்கொள்கையைப் போன்றதல்ல என்ற புரிதலோடு இதைத் தொடங்க வேண்டும். மேற்கில் மரக்கறி உணவுக்கொள்கை பரவுவதற்கு அடித்தளமிட்டவர் இங்கிலாந்தை சேர்ந்த ஹென்றி சால்ட் ஆவார். தொடக்கக் கால மனித இனம் வேட்டையாடி உண்டதை மறந்து, டார்வினின் தத்துவத்தை மரக்கறி உணவுக் கொள்கைக்கு மாற்றிப் பொருத்தியவர் இவர். ‘Animal Rights and A Plea for Vegetarianism’ என்கிற இவரின் புத்தகம் காந்தியை ஈர்த்த புத்தகமாகும். இதுவே மரக்கறி உணவுக்கொள்கையை மேற்கு நாடுகளில் தொடங்கி வைத்தது. ஓர் உண்மை என்னவெனில் Vegetarian என்கிற சொல்லுக்கும் Vegetables என்கிற சொல்லுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதன் வேர்ச்சொல்லான ‘Vegetus’ என்கிற இலத்தீன் சொல்லுக்கு ‘புத்தம்புதிய’ (Fresh), ‘முழுமை’ (Whole) என்பதே பொருள். ஆனால் படிப்படியாக இக்கொள்கை வளர்ந்து இன்று அங்கு மரக்கறி உணவு ‘வீகன்’ (Vegan) எனும் தீவிரவாத நிலைக்கு வளர்ந்துவிட்டது. உலகின் கொடுமையான பாசிசவாதியான இட்லரும் ஒரு வீகன்தான்.

இவ்வகையில் இந்தியாவில் வசிக்கும் மரக்கறி உண்ணுபவர்களை விட மேற்கு நாடுகளின் மரக்கறி உண்ணுபவர்கள் தீவிரமானவர்கள். எந்தளவுக்கு என்றால் இந்தியாவில் மரக்கறி உண்ணுபவர்களுக்குப் பால் என்பது மரக்கறி உணவு. ஆனால் வீகன்களுக்கு இது புலால் உணவு. பால் என்பது அவர்களுக்கு விலங்கு புரதம். அறிவியல் ரீதியில் இது உண்மையும் கூட. எனவே இவர்கள் வீகன் என்று அழைக்கப்பட இந்திய மரக்கறி உண்ணுபவர்கள் வெறும் வெஜிடேரியன் மட்டும்தான். இந்த வீகன்களின் தீவிரவாதத்துக்கு ஆங்கிலத்தில் ‘veganarchism’ என்கிற புதிய வகை ஆங்கிலச் சொல்லே தோன்றியுள்ளது. (மரக்கறி உண்ணுபவர்களின் அட்டூழியம் என இதற்குப் பொருள் கொள்ளலாம்). இப்படி மரக்கறி உணவு வெறிக்கொண்டு தீவிரவாதத்தில் ஈடுபடும் வீகன்களின் தாக்குதலை ‘veganarchism Jihad’ என்ற பெயரில் அழைக்கின்றன மேற்கத்திய ஊடகங்கள்.

இப்படிப்பட்ட வெறியூட்டல் பள்ளிக்குழந்தைகளிடம் இருந்தே அங்குப் பயிற்றுவிக்கப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இது திட்டமிட்டு நடத்தப்பட்டு வந்ததன் விளைவாக மூளைச்சலவை செய்யப்பட்ட அப்பள்ளிக் குழந்தைகள் இன்று வளர்ந்து தீவிரவாதிகளாக மாறியுள்ளனர். இச்செய்கை மத அடிப்படை வாதத்தோடு பொருந்துவதைக் காணலாம். வீகன்களின் இத்தீவிர மரக்கறி உணவுக் கொள்கைதான் இந்தியாவிலும், அய்க்கிய அமெரிக்காவிலும் வசிக்கும் பார்ப்பனர்களைப் பீட்டா போன்ற அமைப்புகளை நோக்கி ஈர்த்ததில் வியப்பொன்றுமில்லை.

இந்தியாவில் இயங்கும் பீட்டா அமைப்பு அப்படியே அமெரிக்க மாதிரியை பின்பற்றுவதாகத் தெரியவில்லை. அது இந்தியமயம் அல்லது இந்துமயம் ஆக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் ராதாராஜன் போன்ற ஒரு பீட்டாக்காரரால் தீண்டாமை கடைப்பிடிப்பதைப் பெருமையாகப் பேசமுடிகிறது. இந்தியாவின் ஏக உணவுக் கொள்கையைத் தீர்மானிக்கத் துடித்திடும் இவர்கள்தான் வெளிநாடுகளின் பீட்டா அமைப்பினர் மேற்கொள்ளும் பால் உணவு எதிர்ப்பை இங்குத் தீவிரமாக மேற்கொள்வதில்லை. இவர்களுக்குத் துணிவிருந்தால் பசும்பால் குடித்தால் புற்றுநோய் வரும் ஆகவே பால் உற்பத்தியை தடை செய்ய வேண்டும் என்கிற பீட்டாவின் பரப்புரையை இந்த இந்துத்துவ ஆட்சியிடம் வலியுறுத்தி தடை செய்யட்டும் பார்க்கலாம்.

மேற்குநாடுகளில் பால்பண்ணைத் தொழிலுக்கு எதிராகப் போராடுவது விலங்குரிமை நிறுவனங்களின் இலக்குகளில் ஒன்று. காரணம் செயற்கை ஹார்மோன், செயற்கை கருத்தரிப்பு என்பது பசுவுக்குக் கடும்வலியை ஏற்படுத்தும் என்பது அவர்கள் வாதம். ஆனால் பீட்டாவின் இந்தியப் பிரிவு ஏறுதழுவுதலுக்கு எதிராகக் காட்டும் இத்தீவிரத்தை தொழில்மயப்படுத்தப்பட்ட பால்பண்ணைளில் துன்புறுத்தப்படும் விலங்குகளுக்கு எதிராகக் காட்டுவதில்லை. ஏனெனில் இத்தகைய இந்துத்துவா ஆட்களுக்குப் பால் என்பது கோமாதாவின் புனித அமிர்தம். வற்றாது வழங்கும் காமதேனுவின் பரிசு.

கார்ப்பரேட் இணைவு

2010ல் அய்க்கிய அமெரிக்காவின் மேரிலாந்தில் அமைந்துள்ள டிஸ்கவரி சேனல் தலைமை அலுவலகம். அங்குத் திடீரென நுழைந்த விலங்குரிமை தீவிரவாதி ஒருவன் அங்கிருந்தவர்களைப் பிணைக்கைதிகளாகப் பிடித்துக்கொண்டு கோரிக்கை ஒன்றை வைத்தான். விலங்குகளை அழிக்கும், “இழிந்த மக்கள் தொகை பெருக்கத்தை’ நிறுத்த கோரும் கோரிக்கைதான் அது. பின்னர் அவன் காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டான் எனினும் பீட்டாவின் உலகத் தலைவர் இன்கிரிட் நியூகிர்க் என்கிற பெண்மணியும் இத்தகைய கருத்தை கொண்டவர்தான். ஒருமுறை மக்கள் தொகைப் பெருக்கம் பற்றி இவர் கூறிய கருத்துக் கூறியபோது, ‘அது புவியின் முகத்திலுள்ள மாபெரும் வெப்புநோய்’ என்றார். உலக அரசியலை அறிந்தவர்களுக்கு இக்கொள்கை ‘மால்தஸ் பாதிரியிடமிருந்து பரவிய’ தொற்று நோய் என்பது தெரியும். .

இயற்கைவள சுரண்டல் அரசியலின் பின்னுள்ள வல்லாதிக்க அரசுகளின் பங்கை மறைப்பதற்காக மக்கள் தொகை பெருக்கம்தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் என்கிற போலி கருத்தை முன்வைத்து பரப்பியதே மால்தசின் பணி. இங்கு மக்கள் தொகை பெருக்கம் என்பது ஏழை மக்களையே குறிவைத்தது. அதாவது இம்மக்கள் புவிக்குப் பாரமானவர்கள். இந்த எண்ணம் பீட்டாவுக்கு இருப்பதாலேயே தெருநாய்களைப் பற்றிக் கவலைப்படுமளவுக்கு நடைப்பாதையில் படுத்துறங்கும் மனிதர்கள் பற்றி அது கவலைப்பட்டதில்லை. மேற்கு நாடுகளில் எந்தவொரு நாயையும் தெருவில் விட அனுமதிக்காத பீட்டா இந்தியாவில் மட்டும் தெருநாயை பிடிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்பது முரண்பாடு. எளிய மனிதர்கள் கடிப்பட்டுச் செத்து மக்கள் தொகை குறையட்டும் என்ற எண்ணமும் காரணமாக இருக்கலாம். இப்படிதான் இந்துத்துவாவின் மரக்கறி உணவு அரசியலையும், கார்ப்பரேட்டின் முதலாளித்துவக் கொள்கையையும் பீட்டா இணைத்து வைக்கிறது.

தொடக்கத்திலிருந்தே ஏக இந்திய பண்பாட்டுக்கு எதிராக எதிர்ப்பை தெரிவித்து வரும் மாநிலம் தமிழ்நாடு. வடகிழக்கு மாநிலங்களே ஏற்றுக்கொண்டுவிட்ட நிலையில் இந்துத்துவக் கொள்கையை இன்னமும் தன் ’கருப்பு நிலத்தில்’ கால் பதிய அனுமதிக்காத தமிழ்நாட்டின் குரலை முறித்துப் போடும் முயற்சிகளுள் ஒன்றே ஏறு தழுவுதலுக்கான தடை. உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு எனலாம். உச்ச நீதிமன்றத்தின் எத்தனை தீர்ப்புகளை நடுவண் அரசு மதித்திருக்கிறது? ஏறு தழுவுதலுக்குத் தடையாக இருக்கும் 2011ஆம் ஆண்டுக் காட்சிப்படுத்த கூடாத விலங்குகள் பட்டியலிலிருந்து காளையை நீக்கி புதிய அறிவிக்கை ஒன்றை வெளியிட்டால் போதும். இவ்வாறு நீக்குவதற்குச் சட்ட திருத்தம் ஏதும் தேவையில்லை. ஒரு சட்டத்தை மாற்றியமைக்கதான் சட்டத் திருத்தம் தேவை, திருத்தியமைக்க அல்ல என்கிறபோது மோடி அரசு இதைச் செய்யத் தயங்குவதற்கு வேறென்ன காரணம் இருக்க முடியும்?

இது தமிழ் பண்பாட்டுக்கு எதிரான இந்துத்துவாவின் வல்லாதிக்க முயற்சி என்பதில் துளியும் அய்யமில்லை. பீட்டாவில் உள்ள இந்துத்துவச் சிந்தனையாளர்களுக்குத் தமிழர்கள் என்றும் கீழானவர்களே. அதனால்தான் பாலியலோடு இப்போராட்டத்தை இழிவுப்படுத்திப் பேச அவர்களால் முடிகிறது. ஆனால் போராட்டக் களத்தில் இருக்கும் தோழர்கள் இந்துத்துவா – கார்ப்பரேட் கூட்டணியைத் தெளிவாகப் புரிந்துக்கொண்டு மிகத் தெளிவாக அவர்களுக்கு எதிர்ப்புக் குரல் தெரிவித்து வருவது பாராட்டுக்குரியது. கார்ப்பரேட் சாமியார்களின் ஆதரவையும் பாஜகவினரின் ஆதரவையும் முற்றாகப் புறக்கணிக்க வேண்டும்.

இது வெறும் ஏறுதழுவுதல் தடைக்கு எதிரான போராட்டம் அல்ல. ஒரு பாசிச அரசுக்கு தன் பண்பாட்டு வல்லாதிக்கத்தை (ஏகாதிபத்தியத்தை) நிலைநாட்டுவதே நோக்கமாக இருக்கும்.  அப்படி நிலைநாட்டிவிட்டால் போதும். அம்மக்களின் மனம் உடல் இரண்டையும் அடிமைப்படுத்தி விடலாம். இவ்வாறு அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் மனரீதியான கேளாத் தன்மையையும், பார்வையற்ற தன்மையையும் கொண்டிருப்பர். அதன்பின் தாம் எதைச் சொன்னாலும் அவர்கள் செய்துக் கொண்டிருப்பர் என்பதுதான் பாசிசக் கணக்கின் விதி. அவ்விதியை உடைத்திருக்கிறார்கள் தமிழக இளைஞர்கள்.

இது தொடக்கம்தான். மொழியை சமற்கிருதத்துக்கும், பண்பாட்டை இந்துத்துவாவுக்கும், நிலத்தை கார்ப்பரேட்களுக்கும் காவுக்கொடுக்க நினைக்கும் மதபாசிச சக்திகளுக்கு இப்போராட்டம் அதிர்ச்சியை தந்திருக்கிறது எனலாம். இப்போராட்டம் சாதி, மத, கார்ப்பரேட் அரசியலுக்கான எதிர்ப்பு என்று மெய்ப்பிப்பதில்தான் நம் உண்மையான வெற்றி அடங்கியிருக்கிறது. .

- நக்கீரன்

நன்றி: Madhumitha Mitha (for tagging me)

No comments:

Post a Comment