Wednesday, January 18, 2017

ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டு தானே

கேள்வி:
ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டு தானே?

பதில்:
ஜல்லிக்கட்டில் வீரமும் இல்லை. அது விளையாட்டும் இல்லை. அது ஒரு சடங்கு. அது ஒரு சம்பிரதாயம். அவ்வளவு தான்.

---

கேள்வி:
ஜல்லிக்கட்டு தடை நாட்டு மாடுகளை அழிப்பதற்காக தான் ஏற்படுத்தப்பட்டதா?

பதில்:
நாட்டு மாடு இனங்கள் ஜல்லிக்கட்டு தடைக்கு முன்னரே அழிவின் விளிம்பிற்கு சென்றுவிட்டன. பொருளாதார காரணிகளை வைத்துப் பார்த்தால் இனி பெருமைக்காக மட்டுமே நாட்டு மாடுகளை வளர்க்க முடியும். லேப்ரடார், பொமரேனியன் போல. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு தடை பெரிய மாற்றம் எதையும் கொண்டு வராது.

---

கேள்வி:
நாட்டு மாடுகளின் பால் சந்தையை கைப்பற்றும் முயற்சி தானே இது?

பதில்:
ஒரு நாளைக்கு அதிகபட்சம் இரண்டு லிட்டர் பால் கறக்கும் நாட்டு மாடுகளை வைத்து ஏழு கோடிப் பேரின் பால் தேவையை பூர்த்தி செய்ய எத்தனை கோடி மாடு கறக்கும் நிலையில் உள்ள மாடுகள் தேவை? இவை போக கன்றுகள், வயதான மாடுகளின் எண்ணிக்கையையும் கணக்கில் கொள்ள வேண்டும். இத்தனை கோடி மாடுகளும் மேய்வதற்கு மேய்ச்சல் நிலம் இருக்கிறதா? ஒரு லிட்டர் பால் இருநூறு ரூபாய் அளவிற்கு தான் விற்க முடியும். யோசித்துப் பார்த்தால் நாட்டு மாடுகளின் சந்தை என்பதே நடைமுறையில் சாத்தியமே இல்லாத கற்பனை தான்.

---

கேள்வி:
A2 பாலை விட நாட்டு மாடுகளின் A1 பால் தானே நல்லது?

பதில்:
கடந்த நானுறு வருடங்களில் A2 பாலை மட்டும் குடித்த ஐரோப்பியர்களின் உடல்நலம், சராசரி ஆயுட்காலம், அறிவியல் கண்டுபிடிப்புகள், சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வெல்லும் உடல் நலன் ஆகியவற்றை நாட்டு மாட்டின் A1 பால் மட்டுமே குடித்த இந்தியர்களோடு ஒப்பிட்டுப் பாருங்கள். உங்களுக்கே உண்மை தெரியும்.

---

கேள்வி:
ஜல்லிக்கட்டு நம் பாரம்பரியத்தை உலகிற்கு காட்டும் செயல் தானே?

பதில்:
இல்லை. நமது காட்டுமிராண்டித்தனத்தை காட்டும் செயல்.

---

கேள்வி:
குடும்பத்தில் ஒருவரைப் போல வளர்க்கும் காளையை தமிழர்கள் ஜல்லிக்கட்டில் கொடுமைப் படுத்துவார்களா?

பதில்:
காளையை விடுங்கள். கிளாடியேட்டர் போல சிலர் அமர்ந்து இரசிப்பதற்காக மனிதர்களை விலங்குகளோடு மோதவிட்டு கண்டுகளிப்பர்.

---

கேள்வி:
பிறகு ஏன் ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆதரிக்கின்றீர்கள்?

பதில்:
நான் எதை செய்ய வேண்டும், செய்யக்கூடாது என நான் தான் முடிவு செய்ய வேண்டும். என் மீது அதிகாரத்தின் மூலம் எது திணிக்கப்பட்டாலும் அதை எதிர்ப்பேன்.

---

No comments:

Post a Comment