உங்கள் கேள்விகளும் கருத்துக்களும்
பண மதிப்பிழப்பு – அதிகம் எதிர்படும் கேள்விகள்.
நவம்பர் 8 பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு தனிப்பட்ட முறையில் ஒரு நடத்தை மாற்றத்தை பெற்றிருக்கிறேன். சந்திக்கும் எல்லா தரப்பு மக்களிடமும் வலியப் பேசி அவர்களது அனுபவத்தை அறிந்துகொள்வதுதான் அம்மாற்றம். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நல்ல விளைவு எதுவுமே இல்லையா எனும் பரிதாபகரமான பக்தர்களின் கேள்விக்கு என்னால் இந்த மாற்றத்தை மட்டுமே குறிப்பிட முடிந்தது. கையறு நிலையிலும், பதிலளிக்க முடியாத கோபத்திலும், ஒரு சாதகமான செய்தியாவது கிடைக்காதா எனும் எதிர்பார்ப்பிலும் அக்கேள்வி எழுப்பப்பட்டது. இதனைப்போலவே குறிப்பிடத்தக்க சில கேள்விகளை எல்லா தரப்பில் இருந்தும் எதிர்கொள்ள நேர்ந்தது. அவற்றையும் அவற்றுக்கான பதில்களையும் தொகுக்கவே இப்பதிவு.
பண மதிப்பிழப்பு கருப்புப் பணத்தை ஒழிக்காது என எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்?
பல தளங்களிலும் விவாதிக்கப்பட்ட செய்தி இது. பணத்தாள் என்பது பரிமாற்றத்துக்கான கருவி மட்டுமே. ஒரு மனிதனின் அன்றாட வாழ்வுக்கு பலநூறுவகையான உழைப்பு அவசியப்படுகிறது. ஆனால் ஒரு தனிமனிதனால் அவற்றில் ஒன்றிரண்டை மட்டுமே சுயமாக செய்துகொள்ள இயலும். ஆகவே நம்மால் தரமுடியும் உழைப்பை கொடுத்து நமக்கு தேவையான உழைப்பை பெற வேண்டியிருக்கிறது. கொடுப்பதற்கும் பெறுவதற்குமான முரண்பாட்டை சமன் செய்யும் ஏற்பாடுதான் பணம். உதாரணமாக, உங்களால் பாடம் நடத்த முடியும் ஆனால் விவசாயம் செய்ய முடியாது என்று வைத்துக்கொள்வோம். அப்போது நீங்கள் பாடம் கற்கவேண்டிய நபர்களிடம் உங்கள் உழைப்பை தரவேண்டும். அதற்கு மாற்றாக உங்களுக்கு தேவையான விளைபொருளை விவசாயிகளிடமிருந்து பெற வேண்டும். ஆனால் அந்த விவசாயிக்கு உங்கள் பாடம் சொல்லிக்கொடுக்கும் உழைப்பு தேவையில்லாவிட்டால்…. நீங்கள் இருவரும் உங்கள் உழைப்பை பரிமாறிக்கொள்ள முடியாது இல்லையா?.
பணம் எனும் ஊடகம் உங்கள் உழைப்பையும் அந்த விவசாயியின் உழைப்பையும் எல்லா இடத்திலும் செல்லத்தக்க ஒரு செலாவணியாக மாற்றி நமது வாழ்வியலை எளிமைப்படுத்துகிறது. கிருட்டிணகிரியில் உற்பத்தியாகும் காய்கறிகள் சென்னை போன்ற தொலைதூர நகரத்தில் வசிக்கும் மக்களின் தேவையை உத்தேசித்து விளைவிக்கப்படுபவை. அப்பொருளை 300 கிலோமீட்டர் நகர்த்திக் கொண்டுவர பலரது பங்கேற்பு தேவைப்படுகிறது. இன்னாரென்று தெரியாத ஒருவருக்காக உற்பத்தி செய்யப்படும் பொருள் பல கைகள் மாறிச் செல்கையில் அந்த செயல்பாட்டை நம்பகமானதாகவும் எளிமையானதாகவும் மாற்றுவது ரூபாய் நோட்டுக்கள்.
அந்த கருவியை நீங்கள் பதுக்கவோ சேமிக்கவோ முடியும் என்பது உண்மையே, ஆனால் அதன் எல்லை மிகவும் சிறியது. இந்தியாவில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் வெளிநாடுகளுக்கு செல்லும் செல்வத்தின் மதிப்பு 36 லட்சம் கோடி. அது மொத்தமும் மிண்ணனு பரிமாற்றமாகத்தான் வெளியேறுகிறது. மறுபுறம் ஒட்டுமொத்த இந்திய மக்களும் ஆண்டுதோறும் பயன்படுத்தும் மொத்த பணத்தாளின் மதிப்பு 17.5 லட்சம் கோடி ரூபாய்தான், அப்படியானால் இருமடங்கு பணம் வெளியேறுவது எப்படி சாத்தியம்?
அண்டை வீட்டுக்காரர் டிவியை அலறவிடுவதை சமாளிக்க உங்கள் காதுகளை செவிடாக்கிக்கொள்வது சரியான தீர்வு என நீங்கள் நம்பினால் இந்த டீமானிடைசேஷனையும் கருப்பு பணத்தை ஒழிக்கும் தீர்வு என நம்பலாம்.
ஆனாலும் பல இடங்களில் இப்போது பணம் பிடிபடுகிறதே, கடந்த 50 நாட்களில் 4000கோடி கைப்பற்றப்பட்டிருக்கிறதே?
வருமானவரி சோதனை என்பது அரசின் ஒரு செயல்பாடு. மாவட்டத்துக்கு ஒன்று என வருமானவரி அலுவலகம் இருக்கிறது. அவர்கள் அந்த கடமையை செய்தாகவேண்டும். அரசுக்கு தேவை ஏற்படும்போது இந்த நடவடிக்கை தீவிரமாகும். ஆனால் இவற்றால் உண்டான தீர்வுகள் என்ன என்பதை நாம் பரிசீலிப்பதே இல்லை. இந்திய மருத்துவ கவுன்சிலின் தலைவராக இருந்த கேதன் தேசாய் வீட்டில் நடத்தப்பட்ட ஆய்வில் 1500 கிலோ தங்கமும் 1800 கோடி பணமும் கைப்பற்றப்பட்டது. அவை 3 கண்டெய்னர் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டது. நீங்கள் உங்கள் அப்பாவுக்கோ மகனுக்கோகூட 20000 ரூபாய்க்கு மேல் பணமாக கடன் கொடுப்பது சட்டப்படி குற்றம். அப்படியென்றால் ஒரு சிறிய மாநிலத்தின் பட்ஜெட் மதிப்பை வைத்திருந்த தேசாய் அடுத்த ஜென்மத்தில்கூட சிறையில் இருந்தாக வேண்டும். ஆனால் அவர் இப்போது சர்வதேச மருத்துவக்கவுன்சில் தலைவராக இருக்கிறார். வருமானவரி சோதனைகளில் இதுவரை கைப்பற்றப்பட்ட பணம் என்னவானது என்பது யாருக்காவது தெரியுமா? அதனடிப்படையில் தண்டிக்கப்பட்டவர்கள் யாரையேனும் நீங்கள் அறிவீர்களா?
இந்த அமைப்பின் மீது நாம் நம்பிக்கை இழக்காமல் இருக்க சில ஏற்பாடுகளை அரசு வைத்திருக்கிறது. அதன் அடிப்படையில்தான் சகாயம், குன்ஹா போன்ற சில நேர்மையானவர்கள் பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள். தகவல் அறியும் உரிமைச்சட்டம் போன்றவை எல்லாம் மக்களை நம்பவைக்க உள்ள ஏற்பாடுகள். பெரும் குற்றவாளிகளை காப்பாற்ற பல்வேறு வாய்ப்புக்கள் இங்கே இருக்கின்றன. உங்களுக்கு அதிகபட்ச மனத்திருப்தியை கொடுப்பதற்காக பணக்காரர்களுக்கு ஒரு குறைந்தபட்ச சங்கடத்தை அரசு உருவாக்கி வைத்திருக்கிறது.
இதனால் கள்ள நோட்டும் அதன் காரணமாக தீவிரவாதமும் ஒழிந்துவிடாதா?
எது தீவிரவாதம் என்பதிலேயே நமக்கு பல குழப்பங்களும் தவறான வழிகாட்டல்களும் இருகின்றன. குண்டு வைத்த அல் உம்மா உறுப்பினர் தீவிரவாதி எனவும் அதே குண்டை வைக்கும் ஆர்.எஸ்.எஸ் காரர் ஆர்.எஸ்.எஸ் தொண்டர் எனவும் ஊடகங்களால் விளிக்கப்படுகிறார். ஆயிரக்கணக்கான இராக் மக்களை கொன்றவர் என்பது சதாம் ஹுசேன் மீதான குற்றச்சாட்டு. அவர் சர்வாதிகாரி என குறிப்பிடப்பட்டார். அதே இராக்குக்கு மருந்துகள் செல்லாமல் தடுக்கப்பட்டு 5 லட்சம் குழந்தைகள் நோயால் மடிந்தன. அதற்கு காரணமான அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் மெடோலின் ஆல்ஃபிரட், இது சதாமை ஆதரித்த குற்றத்துக்கு இராக் கொடுக்க வேண்டிய விலை என்று சொன்னார். அவரை தீவிரவாதி என அழைக்கக்கூட நமக்கு வாய் வருவதில்லை. தீவிரவாதம் என்பது பல்வேறு காரணிகளையும், பிரச்சாரங்களையும் அடிப்படையாக வைத்து வளர்வது.
இந்த ஆண்டு மட்டும் இந்திய ராணுவத்தின் பெல்லட் குண்டு தாக்குதலில் ஆயிரக்கணக்கான காஷ்மீரிகள் பார்வையிழந்திருக்கிறார்கள். வெறும் பணத்துக்காக நீங்கள் பார்வையிழக்க துணிவீர்களா? காடுகளில் வாழ்வை தொலைக்கும் மாவோயிஸ்ட் தலைவர்கள் பலர் மெத்தப் படித்தவர்கள். பணம்தான் அவர்களை செலுத்துகிறது என்று நம்புகிறீர்களா? நம் எல்லோருக்கும் தீவிரவாத நடவடிக்கையாக காட்டப்படுபவை எல்லாம் பாபர் மசூதி இடிப்புக்கு பிறகு உருவானவை. அவற்றின் மிகப்பெரிய பலனாளிகள் மோடியும் அவரது வானர கும்பலும்தான். ஆகவே இது ஒரு வாதமாக வைக்கப்படக்கூட தகுதியற்ற ஒரு காரணம்.
கேஷ்லெஸ் எக்கனாமி ஊழலை ஒழிக்கும் என்பதைக்கூடவா நீங்கள் நம்பவில்லை?
போல்பர்ட் ஆட்சியின்போது கம்போடியாவில் பணம் என்பதே தடை செய்யப்பட்டது. மக்கள் உள்ளூர் கம்யூன்கள் பணிக்கும் வேலையை செய்யவேண்டும். தனி சமையல்கூட தடைசெய்யப்பட்டு சமூக சமையல்தான் நடைமுறையில் இருந்தது. ஆனால் வேறு வடிவங்களில் அங்கேயும் லஞ்சம் இருந்தது. சோழர் காலத்தில் பணம் கொடுத்தால் தண்டனையில் இருந்து விலக்கு பெற வாய்ப்பு இருந்தது. லஞ்சம் வாங்கினால் மரண தண்டனை விதிக்கும் சீனாவில் இன்றுவரைக்கும் லஞ்சம் இருக்கிறது.
பெரும் தொகையாக கைமாறும் லஞ்சம் பணமாக தரப்படுவதில்லை. லஞ்சமும் ஊழலும் ஒழிக்கப்பட வேண்டுமானால் இரண்டு மாற்றங்கள் நடைபெற வேண்டும். சொத்து சேர்ப்பதற்கான கட்டுப்பாடு மற்றும் லஞ்சத்தை கண்காணிக்கவும் விரைவான உறுதியான தண்டனை அளிக்கும் நிர்வாக கட்டமைப்பு ஆகியவை இருந்தால் மட்டுமே இவற்றை கட்டுப்படுத்தலாம் (அப்போதும் ஒழிக்க முடியாது). லஞ்சத்தை ஒழிக்க எனும் பெயரில் துவங்கப்பட்ட இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு வங்கிகள் தயாராகும் முன்பே பழைய நோட்டுக்களை கமிஷனுக்கு மாற்றிக்கொடுக்க தரகர்கள் உருவாகிவிட்டார்கள். இங்கே லஞ்சத்தை கண்காணித்து தண்டிக்கும் அமைப்புக்களே ஊழல்மயமாகிவிட்டன. லஞ்சத்தை ஒடுக்க அமைக்கப்பட கர்னாடக லோக் ஆயுக்தாவின் நீதிபதி ஒருவரின் மகன் ஒருவர் லஞ்ச குற்றச்சாட்டில் பிடிபட்டிருக்கிறார். கேஷ்லெஸ் எக்கனாமி மட்டுமில்லை மோடி ஒரிஜினல் பிரம்மச்சாரியாவது சாத்தியமானாலும் ஊழல் ஒழிப்பு மட்டும் இங்கே நடக்காது.
பணமில்லா பரிவர்த்தனை மூலம் வரிசெலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும். அதனால் வளர்ச்சிப் பணிகள் செய்யலாம் என்கிறார்களே? இதன்மூலம் வருமானவரி விகிதம் குறைந்து வரி ஏய்ப்பும் குறையும் இல்லையா?
வரிசெலுத்துவோர் எனும் வாதம் மேட்டுக்குடி மக்களால் பயன்படுத்தப்படுவது. அவர்கள் வருமானவரி கட்டுவோரை மட்டுமே வரி செலுத்துபவராக கருதிக்கொள்வதால் வந்த வினை இது. இந்தியாவில் வரி செலுத்தாதவர் என்று யாரும் இல்லை. நாம் எல்லோரும் எல்லா நாளும் பல்வேறு வரிகளை செலுத்திக்கொண்டுதான் வாழ்கிறோம். இந்தியாவில் அதிகாரபூர்வமாக ரத்து செய்யப்படும் வரிகளால்தான் பெரிய இழப்பு ஏற்படுகிறது. பொருளாதாரப் பெருமந்தம் ஏற்பட்ட 2009களில்கூட இந்திய அரசால் பெருநிறுவனங்களுக்கு 5 லட்சம்கோடிக்கு வரிதள்ளுபடி செய்யப்பட்டது. நாம் நுகரும் பெட்ரோலுக்கு அடக்கவிலையைக் காட்டிலும் அதிகமாக வரி செலுத்துகிறோம். ஆனால் பெரும் பணக்காரர்களுக்கான செல்வவரி இப்போது 5% குறைக்கப்பட்டுவிட்டது. இருப்பவனுக்கு சலுகையும் இல்லாதவனுக்கு கூடுதல் சுமையும் தரப்படும் நாட்டில் கூடுதலான வரிவரம்பின் பலனையும் பணக்காரர்கள்தான் அனுபவிப்பார்கள்.
வரிவிகிதம் குறைந்தால் பணக்காரர்கள் ஏமாற்றாமல் வருமானவரி கட்டுவார்கள் என்பது ஒரு அடிமுட்டாள்தனமான கற்பனை. இந்தியாவில் அதிகபட்ச வருமானவரி 90 சதம் வரைக்கும் இருந்தது. மேற்ச்சொன்ன வாதத்தை நம்பி அவ்விகிதம் இப்போது 30%ஆக குறைக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் வரி ஏய்ப்பு அதிகரித்துக்கொண்டிருக்கிறது. எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் எனும் வாய்ப்பு இருக்கும் நாட்டில் வரியை மட்டும் பணம் படைத்தவர்கள் ஏமாற்றாமல் கட்டுவார்கள் என நம்புவது மடத்தனம். வரிகட்டாமல் எப்படி தப்பிப்பது என சம்பளத்துக்கு ஆள்வைத்து யோசிக்கும் இந்த வர்கம்தான் தம்மை வரிசெலுத்துவோர் என அழைத்துக்கொள்கிறது.
பணமில்லா பரிவர்த்தனை என்பது வியாபாரத்துக்கான இன்னொரு வழி அவ்வளவுதான். அதனை ஒரு தீர்வாக கருதவோ வலியுறுத்தவோ முடியாது.
வங்கிப் பயன்பாட்டை எல்லா மக்களுக்கும் கொண்டு செல்வதில் என்ன தவறு? எல்லா மக்களையும் முறைப்படுத்தப்பட்ட வேலைக்குள் கொண்டுவர இது உதவுமே?
முறைப்படுத்தப்பட்ட வேலை எனும் பிரிவே இப்போது அழியும் நிலையில் இருக்கிறது. குறைந்தபட்ச பணிப் பாதுகாப்பு, ஓய்வுகால நிதி ஆகியவற்றுக்கான வாய்ப்புக்கள் அரசால் பறிக்கப்படுகிறது. இப்போது வெறுமனே அப்ரண்டிஸ் பணியாளர்களை மட்டும் வைத்து ஒரு நிறுவனத்தை சட்டப்படியே நடத்த முடியும். ஒரு வங்கிக்கணக்கால் முறைசாரா பணியாளர்களை முறைப்படுத்தப்பட்ட பணியாளர் வரம்புக்குள் கொண்டுவர முடியும் என நம்புவதற்கே அசாத்திய ஏமாளித்தனம் தேவை. அப்படி ஆலோசனை சொல்வதற்கு அதனைவிட அசாத்தியமான திமிர் தேவை.
வங்கிக்கான தேவை இருந்தால் அதனால் பலன் இருந்தால் மக்கள் அதனை இயல்பாக தெரிவு செய்வார்கள். பல நகரங்களில் ஆடைத் தொழிற்சாலைகளில் பணியாற்றியிருக்கிறேன். அங்கேயெல்லாம் தொழிலாளர்களின் சம்பளம் வங்கிக்கணக்கில்தான் செலுத்தப்படுகிறது. அந்த பணியாளர்கள் பெரும்பாலும் தங்கள் கணக்கு இருக்கும் வங்கிக் கிளை வாசலைக்கூட மிதித்திராதவர்கள் (ஏடிஎம் மட்டும் பயன்படுத்துவார்கள்). அவர்கள் சேமிக்கும் அளவுக்கு பொருளீட்ட இயலாதவர்கள். வங்கிக்கடன் வாங்குவது என்பது அவர்களை பொறுத்தவரை சாத்தியமற்றது. இவர்களை வங்கியை நோக்கி அராஜகமாக தள்ளுவதால் எந்த பயனும் கிடையாது. யாரோ ஒருவரது கோமாளித்தனமான உத்தரவுக்காக அவர்கள் தமது வழக்கமாக சம்பளம் பெறும் வழியை ஏன் சிக்கலுக்குள்ளாக்கிக்கொள்ள வேண்டும்?
பணமற்ற வர்த்தகம் என்பது ஒரு முன்னேற்றம். எப்படியானாலும் அது ஒருநாள் இந்தியாவிற்கு வரத்தான் போகிறது. அதனை இப்போதே கட்டாயப்படுத்துவதில் என்ன பிரச்சினை?
அது ஒரு முன்னேற்றமா அல்லது எளிமைப்படுத்தலா என்பதெல்லாம் தனிநபர் சார்ந்து மாறக்கூடிய அபிப்ராயம். இந்தியாவில் ஆதரவில்லாத நிலையில் (அதாவது அருகே மகனோ மகளோ இல்லாமல்) கோடிக்கணக்கான முதியவர்கள் இருக்கிறார்கள். அறிவுத்திறன் குறைபாட்டுடன் சுயமாக வாழக்கூடியவர்களும் பார்வையற்றவர்களும் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்களுக்கு பணமற்ற பரிவர்த்தனை என்பது ஒரு அச்சுறுத்தல். பணத்தாள் என்பது அவர்களால் எளிதாக கையாளக்கூடியது. ஆனால் அட்டைப் பரிவர்த்தனை அப்படியல்ல. கடந்த 50 நாட்களிலும்கூட இவர்களுக்கு எந்த சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. பத்துகோடிக்கும் மேலான மக்கள் குறித்து துளியும் அக்கறை இல்லாமல் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு மக்கள் விரோத செயல் என்பதை புரிந்துகொள்ள முடியும்.
இந்திய அரசு பெருமை பீற்றிக்கொள்ளும் ரூபே கார்டு பரிமாற்றம் பெரிய தலைவலியாக இருக்கிறது. பணம் கணக்கில் இருந்து எடுக்கப்படுவதும் அது கடைக்காரர் கணக்குக்கு வராததுமான பிரச்சினை எழாத இடமே இல்லை. இத்தகைய பரிமாற்றங்கள் தோல்வியுற்று பணத்தை இழந்த அனுபவம் எனக்கு இருக்கிறது, என்னைப்போல பலருக்கும் இருக்கிறது. அதனை மீளப்பெறுவதை உறுதி செய்ய எந்த சட்டப் பாதுகாப்பும் இங்கே இல்லை. இருமுறை கணக்கில் பணம் எடுக்கப்பட்டு பரிமாற்றம் நிராகரிக்கப்பட்ட காரணத்தால் குறைந்தபட்ச கையிருப்பு இல்லாமல்போய் 430 ரூபாய் தண்டம் கட்டியிருக்கிறேன். எஸ்.பி.ஐ உள்ளிட்ட வங்கிகளின் தகவல்களை திருடப்பட்ட காரணத்தால் சற்றேறக்குறைய 20 லட்சம் டெபிட் கார்டுகளை மாற்றிக்கொடுத்திருக்கின்றன இந்திய வங்கிகள். சர்வர் டவுன் எனும் பதில் செவ்வாய் வெள்ளி போல வாரம் தவறாமல் வங்கிகளில் கிடைக்கிறது. இப்படி ஆயிரம் ஓட்டைகளை வைத்துக்கொண்டு அதை முன்னேற்றம் என்று சொல்லி மக்களிடம் திணிப்பது முட்டைக்கு சவரம் செய்யும் வேலை.
இந்த நடவடிக்கையை பல பொருளாதார அறிஞர்கள் ஆதரிக்கிறார்களே?
இந்தியாவில் பொருளாதார அறிஞராவதுதான் மிகவும் சுலபமான பணி. சிகப்புத்தோல், ஆங்கிலத்தில் பேசும் திறன் மற்றும் பாஜக சார்புநிலை இருந்தால் யார் வேண்டுமானாலும் இங்கே பொருளாதார அறிஞராகிவிட முடியும். ஒருவேளை நீங்கள் நம்பும் பொருளாதார நிபுணர் ஒரு ஆடிட்டராகவோ அல்லது பங்குசந்தை ஆலோசகராகவோ இருந்தால் அவர்கள் பார்வையில் இந்த நடவடிக்கை சரியானதுதான். காரணம் இந்த வகை ஆட்கள் எல்லோரும் பணக்காரர்களுக்காக உழைப்பவர்கள். ஆகவே அவர்களது எந்த ஒரு நடவடிக்கையும் அவர்கள் அண்டிப்பிழைக்கும் மக்களுக்கு சாதகமானதாவே இருக்கும். ஒரு ஏழைக்கு சாதமானதா ஒரு நடுத்தர வர்க மனிதனுக்கு சாதகமானதா என்பதை அனுமானிக்க நம் தளத்தில் இருந்து சிந்திப்பவனால்தான் முடியும்.
உங்கள் பொருளாதார அறிஞர்களுக்கு இதனால் எந்த இழப்பும் இல்லை, ஆகவே அவர்களுக்கு மிகவும் இலகுவான மின்ணனு பரிவர்த்தனையை மற்றவர்களுக்கு பரிந்துரைக்கிறார்கள். ஆடிட்டர்களும், முதலீட்டு ஆலோசகர்களும் நாட்டு நலனுக்காக தினமும் அரை நாள் மளிகைக் கடையில் பொட்டலம் மடிக்கவேண்டும் என அரசு உத்தரவிட்டால் இந்த அறிஞர்கள் இப்படித்தான் எதிர்வினையாற்றுவார்களா?
பொருளாதாரம் தெரிந்தவர்களையே நம்பக்கூடாது என்றால் நீங்கள் சொல்வதை மட்டும் எப்படி நம்புவது?
எங்களை மட்டும் நம்புங்கள் என நாங்கள் சொல்லவில்லை. பிரச்சினையின் எல்லா பரிமாணங்களையும் பாருங்கள் என்றுதான் சொல்கிறோம். வெறும் விளம்பரங்களை மட்டும் பார்க்காமல் எதிர்தரப்பு வாதங்களையும் குறைந்தபட்ச நேர்மையோடு பரிசீலியுங்கள் என்கிறோம். வந்து சேரும் செய்திகளை மட்டும் பார்க்காமல் பிரண்ட்லைன், ஸ்க்ரோல், மிண்ட், தி வயர், வினவு என ஏராளமான செய்தித் தளங்களை தேடிப்போய் வாசியுங்கள் என்கிறோம். உறுதியான தரவுகளுக்கு பதிலாக வெறும் நம்பிக்கை வார்த்தைகளை சொல்கிறார்கள் இந்த பொருளாதார நிபுணர்கள். இரண்டு தரப்பில் யார் சொல்வது கள யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது என்று பாருங்கள் என்கிறோம்.
ரொம்ப மெனக்கெட வேண்டாம், இந்த பொருளாதார நிபுணர்கள் நவம்பர் 8 ஆம் தேதிவாக்கில் என்ன சொன்னார்கள் கடந்த இரண்டு மூன்று நாட்களாக என்ன சொல்கிறார்கள் என் ஒப்பிட்டுப்பாருங்கள். நீங்கள் எப்படிப்பட்ட கபடதாரிகளை நம்பிக்கொண்டிருக்கிறீர்கள் என்பது புரியும்.
இப்போது நிலைமை சற்று மேம்பட்டிருக்கிறது. இனிவரும் நாட்களில் இன்னும் சீரடையும் என்பது தெரிகிறது. இன்னமும் ஏன் பண மதிப்பிழப்பு குறித்து அச்சத்தை பரப்புகிறீர்கள்?
யாருக்கு சீரடைந்திருக்கிறது என்பதுதான் கேள்வி. மாத ஊதியக்காரருக்கு சூழல் சீரடைந்திருக்கலாம். ஆனால் முதியோர் உதவித்தொகை மூலம் வாழ்க்கையை நடத்தும் மூத்த குடிமக்கள் துயரம் மூன்றாவது மாதத்திலும் தொடர்கிறது. வேலையிழந்த தொழிலாளர்கள் இழப்பை யார் ஈடுகட்டுவது? இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் பட்டினிக்கு யார் பதில் சொல்வது? நடவும், அறுவடையும் பாதிக்கப்பட்டு பாதி வருடத்து வருமானத்தை இழந்து நிற்கும் விவசாயிகளுக்கு யார் இழப்பீடு கொடுப்பது?
இந்த சூழல் இன்னும் இரண்டு காலாண்டுகளுக்கு நீடிக்கும் என நிதியமைச்சரே சொல்லிவிட்டார். அதன் இழப்புக்களை எதிர்கொள்ளப்போவது யார்? பண மாற்ற நடவடிக்கையால் வங்கிகளுக்கு நாளொன்றுக்கு 3000 கோடி இழப்பு என கணக்கிடப்பட்டிருக்கிறது. இதுவரையான மனித ஆற்றல் இழப்பு, பணத்தாள் அச்சடிக்க ஆகும் இருபதாயிரம் கோடி கூடுதல் செலவு, இன்னும் சில மாதங்களுக்கு நீடிக்கப்போகும் பணத்தாள் தட்டுப்பாட்டால் ஏற்படப்போகும் இழப்புக்களை சுமக்கப்போவது யார்?
நவம்பர் 8, 10 தேதிகளில் வாக்களிக்கப்பட்ட மாற்றங்கள் ஏன் நிகழவில்லை, 50 நாட்கள் மக்கள் செய்த கட்டாய தியாகத்துக்கான பலன் என்ன? ஒட்டுமொத்தமாக 125 கோடிக்கும் மேலான மக்களை நிலைகுலையவைத்த, பெரும் இழப்புக்களுக்கு ஆளாக்கிய ஒரு முடிவின் பலன் பற்றி விளக்கமளிக்காமல் ரோமம் உதிர்ந்ததைப்போல ஒரு பிரதமர் அலட்சியமாக கடந்து போவதைவிட நாட்டு மக்களுக்கு வேறு அவமானம் இருக்க முடியுமா? மோடியே நேரடியாக வந்து கழுத்தை அறுத்தால்தான் அபாயத்தை ஒத்துக்கொள்வேன் எனும் மூடனாக இருப்பது உங்கள் உரிமை. அதற்காக எங்களை முட்டாளாக இருக்கச்சொல்ல உங்களுக்கு உரிமையில்லை. சிவனுக்கு பிள்ளையை படையல் வைக்கும் பக்தனாக நீங்கள் இருக்கலாம், அதனை வேடிக்கை பார்க்கும் சுயமரியாதையற்றவனாக இருக்க எங்களால் முடியாது.
அப்படியானால் மோடியை நம்பும் மக்கள் எல்லோரும் முட்டாள்களா?
சந்தேகம் இல்லாமல் முட்டாள்கள்தான். சாப்பாட்டுக்கு வழியில்லாத ஒரு பிச்சைக்காரன் வந்து உங்களுக்கு லட்சம் ரூபாய் கொடுக்கிறேன் என்று சொன்னால் நம்பி அவன் பின்னால் போவீர்களா? உருப்படியாக ஒரு காரியத்தையும் செய்திராத தற்பெருமை பேசுவதைத்தவிர வேறெந்த தகுதியும் இல்லாத ஒரு நபரை வெறும் விளம்பரத்தை மட்டும் நம்பி ஏற்றுக்கொள்பவர்கள் முட்டாள் இல்லாமல் வேறு யார்?. வார்த்தைகளில் மட்டும் இருக்கும் வளர்ச்சியை நம்பிக்கொண்டு நடைமுறையில் வளரும் வீழ்ச்சியை கண்டுகொள்ளாமல் இருப்பது முட்டாள்த்தனம்தான். ஒரு நடவடிக்கையில் சாதகம், பாதகம், அதற்கான வரலாற்று அனுபவங்கள் ஆகியவற்றை பரிசீலிக்காமல் வெறும் தேசபக்தி கோஷத்துக்கு மயங்கி தியாகம் செய்வேன் என கிளம்புவதும் அடுத்தவனை தியாகம் செய்யச் சொல்லி மிரட்டுவதும் முட்டாள்த்தனம்தான். எல்லாவற்றுக்கும் மேல் அறிவை தேடிப்பெற சோம்பல்பட்டு விளம்பரத்தை நம்பி தலைவனை தெரிவு செய்வது முட்டாள்த்தனத்தை மிஞ்சிய மானமற்ற விடயம்.
இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறிய அளவு நன்மைகூட விளையாது என்கிறீர்களா?
அப்படி சொல்லவில்லை. ஆனால் இதன் நல்விளைவுகள் சில முதலாளிகளுக்கு சாதகமாகவும் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு பெரிய சிரமங்களை தருவதாகவும் இருக்கிறது. 100% நல்ல விளைவுகளை மட்டும் கொடுக்கும் முடிவு 100% மோசமான விளைவுகளையும் கொடுக்கும் முடிவு என்று ஒன்று இல்லை. ஒரு செயலின் நல்விளைவுகள் குறைவாகவும் மோசமான விளைவுகள் அதிகமாகவும் சமாளிக்க இயலாததாகவும் இருந்தால் அதனை தெரிவுசெய்யக்கூடாது என்பது முடிவெடுத்தலின் அடிப்படை விதி. அந்த வகையில் இது ஒரு உச்சகட்ட சைக்கோத்தனமான முடிவு. தற்காலிக விளம்பர அரிப்புக்காகவும் சில பணமுதலைகளின் கஜானாவை நிரப்பவும் எடுக்கப்பட்ட முடிவு இது. இந்த நடவடிக்கையின் விளைவுகளை ஒழுங்காக கணிக்கக்கூட வக்கற்று கால எல்லையை திட்டமிடும் திறன் இல்லாமல் பின்விளைவுகளை சமாளிக்கவும் முடியாமல் அசிங்கமாக மோடி தோற்றிருக்கிறார். ஏதாவது நல்லது செய்வார் என நாக்கை தொங்கப்போட்டு நாய்போல காத்திருந்த பக்தர்களை ஏதாச்சும் செய்து தொலைத்துவிடுவாரோ என தெருநாய்க்கு பயப்படும் பாதசாரியைப்போல மாற்றியதுதான் இந்த நடவடிக்கையின் குறிப்பிடத்தக்க நல்விளைவு. ஆனால் அதற்கான விலையை இ.எம்.ஐ போல இன்னும் பல ஆண்டுகளுக்கு நாம் கொடுக்கப்போகிறோம்.
நடந்ததை மாற்ற முடியாது எனும்போது போராடுவதால் மட்டும் என்ன ஆகிவிடும்?
அதற்கு எந்த உத்திரவாதத்தையும் கொடுக்க முடியாது. ஆனால் போராடாமல் இருப்பதைவிட அது சிறந்த பலன்களைக் கொடுக்கும் என்பது நிச்சயம். ஒரு நார்சிஸ்டின் சுயமோகத்திற்கு ஒத்துழைத்த அடிமைகள் எனும் அவப்பெயரில் இருந்து போராட்டங்கள் நம்மை நிச்சயம் காப்பாற்றும். நம் அமைதியை தனக்கு தரப்பட்ட லைசென்ஸ் ஆக கருதிக்கொண்டு இன்னும் கொடூரமான கோமாளித்தனங்களை மோடி செய்யாமல் தடுக்க போராட்டம்தான் ஒரே வழி.
அப்படியானால் இவ்வளவு ஆனபிறகும் இடதுசாரிகள் ஏன் தீவிரமாக செயல்படாமல் இருக்கிறார்கள்?
அவர்கள் எப்படி தீவிரமாக செயல்பட முடியும், ஏன் அதனை செய்ய வேண்டும் என்று திருப்பி கேட்க எல்லா நியாயமும் அவர்களிடம் இருக்கிறது. கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருப்பவர்கள் பலர் உதிரித்தொழிலாளர்கள். ஒரு போராட்டம் என்பது அவர்களுக்கு பலநாள் தயாரிப்பும் ஒருநாள் வேலையிழப்பையும் உள்ளடக்கியது. கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டால் அந்த இழப்பு இன்னும் சில நாள் நீடிக்கும். கம்யூனிசத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்கு தினசரி வாழ்வே போராட்டமயமானதுதான். அவர்கள் ஒரு பிரச்சினையை கையாள ஆரம்பிக்கும்போதே அடுத்த பல பிரச்சினைகள் வரிசைகட்டி நிற்கும். போஸ்டர் ஒட்டுவதுகூட சிறைச்சாலைவரை கொண்டுசெல்லும் சூழலில் இருக்கும் ஒரு இடதுசாரியை நோக்கி கேள்வியெழுப்ப ஏழரை மணி செய்தியை பார்ப்பதைத்தவிர சமூகத்துக்காக எதையும் நகர்த்தியிராத நமக்கு என்ன தகுதி இருக்கிறது? பார்வையாளனாக, பங்கேற்பாளனாக, நிதியளிப்பவனாக, ஆதரிப்பவனாக என போலீஸ் லத்தி டிக்கியில் பட வாய்ப்பில்லாத செயல்பாடுகளுக்குக்கூட நாம் தயாரா இல்லையே? தோழனாக பார்ப்பவர்களை குறைசொல்லிக்கொண்டு தன்னை கடவுளாக கருதிக்கொள்ளும் மோடியை நம்பிய மிடில் கிளாஸ், ஏன் சும்மா இருக்கீங்க என கம்யூனிஸ்களிடம் கேட்பது என்ன நியாயம்?
இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்?
மோடியின் நடவடிக்கை ஒரு மோசடி என்பதையும், இது மக்கள்மீது தொடுக்கப்பட்ட இரக்கமற்ற தாக்குதல் என்பதையும் முதலில் ஒத்துக்கொள்ளுங்கள். இதனால் ஏதாவது பலன் இருக்காதா என ஏங்கி உங்கள் நம்பிக்கைக்கு பலன் வந்துவிடும் என அல்பத்தனமாக கற்பனை செய்துகொள்ளாதீர்கள். மலத்தில் அரிசி பொறுக்குவது அசிங்கம், அது உலகின் மிகப்பெரிய மாடலுடைய மலமாக இருந்தாலும் சரி. மோடி நம் எல்லோரையும் முச்சந்தியில் அம்மணமாக நிறுத்தியிருக்கிறார். அதனை உலகின் சிறந்த ஆடை என பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார். அம்மணத்துக்கு கூச்சப்பட்டு கண்ணை மூடிக்கொண்டு மோடியின் வார்த்தைகளை கேட்டு இன்புறாதீர்கள். அவமானமாக இருந்தாலும் ஆடை உருவப்பட்டதை ஒத்துக்கொள்ளுங்கள்.
சமூகம் பற்றியும் அரசியல் பற்றியும் சரியாக புரிந்துகொள்ள குறைந்தபட்ச உழைப்பை கொடுங்கள். இனாமாக கிடைக்கும் ஜியோ சிம்கார்டுக்கு மணிக்கணக்கில் செலவிட தயாராக இருக்கையில் நம் வாழ்வை தீர்மானிக்கிற விசயங்களில் அலட்சியமாக இருப்பது அறிவீனம். அறிவை டோர்டெலிவரி செய்ய முடியாது. அதனை வாசிப்பு, விவாதம், கற்பித்தல் என தொடர்ச்சியான மூளை உழைப்பை கொடுத்து பெற வேண்டும்.
குழுவாக இணையுங்கள். வசிப்பிடம், பணியிடம் என எல்லா இடங்களிலும் குழுவாக செயல்பட கற்றுக்கொள்ளுங்கள். கேட்கும் துணிவையும் எதை கேட்கவேண்டும் எனும் தெளிவையும் ஒரு குழுவாக இருக்கையில் பெற முடியும். நியாயம் என கருதும் போராட்டங்களில் பங்கேற்க முன்வாருங்கள். அதன் தேவைகளையும் போதாமைகளையும் சுட்டிக்காட்டுங்கள்.
இப்போதைக்கு இவை மூன்றையாவது செய்ய ஆரம்பியுங்கள், அடுத்து செய்ய வேண்டியதை அந்த உழைப்பே சொல்லிக்கொடுக்கும்.
No comments:
Post a Comment